முகநூலில் எக்ஸைல் முன்வெளியீட்டுத் திட்டம் பற்றிய சில வசவுகளையும் ”அறிவார்த்தமான” சந்தேகங்களையும் படித்தேன். கிழக்கு பத்ரியும் சளைக்காமல் அதற்கெல்லாம் பதில் கொடுத்தபடி இருக்கிறார். சேட்டன் பகத்தின் புத்தகம் ரெண்டு வாரத்தில் ரெண்டு லட்சம், மூணு வாரத்தில் மூணு லட்சம் பிரதிகள் என்று பிய்த்துக் கொண்டு போகிறது. வாசிப்பவர்களெல்லாம் வாசித்து விட்டே திட்டுகிறார்கள். ஒருத்தர் கூட வாங்காமல் இருந்து விடவில்லை.
நான் விகடனில் மனம் கொத்திப் பறவை என்ற தொடரை எழுதினேன். விகடனை எத்தனை லட்சம் பேர் படிக்கிறார்கள் என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதில் அந்தத் தொடர் வந்த போது பெரிய பெரிய அரசியல்வாதிகளிடமிருந்து ஃபோன் வரும். பெரிய நடிகர்கள் அழைப்பார்கள். சென்ற இடமெல்லாம் என்னிடம் அந்தத் தொடர் பற்றிப் பேசுவார்கள்; கேட்பார்கள். எனக்கே கொஞ்சம் ஆகாயத்தில் பறப்பது போல் இருக்கும். ஆறு மாதம் சென்று தொடர் நின்றது. ஃபோன் வருவதும் நின்று போனது. இப்போது அந்தப் பெரிய தலைகளின் நினைவில் நான் இல்லை. காரணம், இங்கே எழுத்தாளன் முக்கியம் அல்ல; நிறுவனமே முக்கியம். அதே விகடனில் மனம் கொத்திப் பறவை புத்தகமாக வந்தது. மிகக் குறைந்த விலைதான். எத்தனை லட்சம் பிரதிகள் விற்றிருக்க வேண்டும்? மொத்தமே 4000 பிரதிகள்தான் விற்றது. அதோடு அந்த நூல் அச்சில் இல்லை. யாரும் கேட்பாரும் இல்லை. ஆக, உயிர்மையில் அல்லது கிழக்குவில் நான் புத்தகம் போட்டாலும் 4000 தானே விற்கிறது? அப்புறம் விகடன் எதற்கு? மனுஷ்ய புத்திரன் தான் ஒருமுறை ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார். குமுதம் புத்தகம் 15 ரூபாயில் கிடைக்கிறது. அது 160 பக்கம். ஆனால் நீங்கள் (உயிர்மை) போடும் புத்தகம் மட்டும் 160 பக்க புத்தகத்துக்கு 100 ரூபாய் ஏன் விலை வைக்கிறீர்கள்?
தமிழ் மக்களுக்கு புத்தகம் என்பதற்கும் பத்திரிகை என்பதற்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை என்று முடித்தார் மனுஷ்ய புத்திரன். இந்த நிலையில் விகடனில் வந்த என் புத்தகம் 4000 பிரதிகள் விற்றதே ஆச்சரியம் தான். இப்போது கூட எனக்கு அது மூவாயிரமா, நாலாயிரமா என்ற சந்தேகம் இருக்கிறது. ஆக, விகடனே பிரசுரித்தாலும் நாங்கள் பத்து ரூபாய், இருபது ரூபாய் விலை வைத்தால்தான் வாங்குவோம்; நூறு ரூபாய் என்றால் வாங்க மாட்டோம் என்பதே தமிழர்கள் நமக்குச் சொல்லும் செய்தி. ஆனால் வஞ்சிரம் மீன் அரை கிலோ 500 ரூ., சினிமா டிக்கட் 150 ரூபாய் என்று கொடுக்க யாருமே தயங்க மாட்டார்கள். விஷயம் என்னவென்றால், புத்தகம் படிப்பதை இங்கே பாபம் என்று கருதுகிறார்கள். அது தினசரியாக இருந்தால் கூட சரி. உலகில் உள்ள நாடுகளில் ஒரு தினசரியின் விலை என்ன தெரியுமா? 20 ரூ குறைந்த பட்சம். ஆனால் இந்தியாவில் போட்டி போட்டுக் கொண்டு ரெண்டு ரூபாய்க்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது. விளம்பரத்தை வைத்து மட்டுமே தினசரிகள் இங்கே லாபம் பார்க்க வேண்டியிருக்கிறது. தினசரிகளுக்கே இந்த நிலை என்றால் எழுத்தாளனின் நிலை எப்படி இருக்கும்? இதில், நாங்கள் (எழுத்தாளர்) கன்ஸ்யூமர்களைத் (வாசகர்) திட்டுகிறோமாம். ஒரு எழுத்தாளனின் நூல் 1000 பிரதிதான் விற்கிறது என்றால் அது என்ன மாதிரியான சமூகம் என்று சொன்னால் அது வாசகனைத் திட்டுவதா? இங்கே வாசகன் என்ற ஒரு ஜீவி இருந்தால் தானே ஐயா திட்டுவது? வாசகன் என்ற ஜீவியே தமிழ்நாட்டில் இல்லாதபோது யாரைத் திட்ட முடியும்? காமராஜ் அரங்கின் கொள்ளளவு 2000 என்றால் அந்த 2000 பேரும் என் நண்பர்கள்தான். ஒருமுறை விகடனில் காமராஜ் அரங்கில் என் புத்தக வெளியீட்டு விழா என்று எழுதி (மனம் கொத்திப் பறவையில்தான்) அதன் முகவரி, விழா நடக்கும் தேதி, நேரம், அனுமதி இலவசம் என்று இவ்வளவு விபரத்தையும் எழுதினேன். (பொதுவாக இப்படிப்பட்ட இலவச விளம்பரங்களை விகடனில் அனுமதிக்க மாட்டார்கள். ஏதோ என்னுடைய அதிர்ஷ்டம் அப்படி நடந்தது!) ஆஹா, பத்து லட்சம் பேர் படிக்கும் பத்திரிகை ஆயிற்றே, காமராஜ் அரங்கமே அமளிதுமளி ஆகி விடும் என்று பார்த்தேன். வந்தவர்கள் அத்தனை பேருமே – ஞாநி, பாஸ்கர் சக்தி உட்பட – எல்லோருமே என் நண்பர்கள். ஒரு முகம் கூட எனக்குத் தெரியாத முகம் இல்லை. எப்படி இருக்கிறது கதை?
இன்று அரசியல் கூட்டங்களுக்குக் கூட கூட்டம் வருவதில்லை. புகழ் பெற்ற மைலாப்பூர் தேரடித் தெருவில் 300 நாற்காலிகள் போட்டிருக்கும். இருபது பேர் அமர்ந்திருப்பார்கள். மைலாப்பூர் பூராவுமே கேட்கும் மைக்கில் பொளந்து கட்டிக் கொண்டிருக்கும் கரை வேஷ்டி. கம்யூனிஸ்ட், நாஸ்திகக் கூட்டம் என்றால் கேட்கவே வேண்டாம். மைக் கட்டின பையன் மட்டும் நின்று கொண்டிருப்பான்.
இன்றைய தினம் காசு சம்பாதிக்கவும் கூட்டம் சேர்க்கவும் கூடிய ஒரே தொழில் ஆன்மீகம்தான். டப்பா, வெங்காயம், புடலங்காய், புண்ணாக்கு என்றெல்ல்லாம் திட்டக் கூடிய மொக்கை ஆசனத்தையும் தியானத்தையும் கற்றுக் கொடுக்க 8000 ரூ. நானே அவ்வளவு கொடுத்துப் பார்த்தேன். அதை நீங்கள் ஓசியில் யூட்யூபிலேயே பார்த்துக் கொள்ளலாம். நாரத கான சபா பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அங்கே உள்ள சிற்றரங்கில் காலையில் ஏழு மணிக்கு ஒருவர் ஆன்மீகச் சொற்பொழிவு செய்கிறார். 200 பேர் ஆஜர். ஒரு நாற்காலி கூட காலி இல்லை.