யூதர்களும் ஆரியர்களும் : பெரியார் : முகநூலில் அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜன்

முகநூலைப் பீராய்ந்து கொண்டிருந்த போது அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜனின் பின்வரும் பதிவைக் காண நேர்ந்தது.  இதை ஏன் இங்கே பகிர்கிறேன் என்றால், பெரியார் பற்றிய பல குறிப்புகள் ‘புதிய எக்ஸைல்’ நாவலில் வருகின்றன.  அது ஒரு நாவல் என்பதால் அப்படி அப்படியே நதிப் போக்கில் போய்க் கொண்டிருக்கும்.  அனந்த கிருஷ்ணன் கொடுத்திருக்கும் பெரியாரின் கட்டுரைப் பகுதியைப் படித்துக் கொள்ளுங்கள்.  பெரியார் மீது புதிய எக்ஸைலில் நான் வைத்திருக்கும் கடும் விமர்சனம் உங்களுக்குப் புரிய வரும்.  இனி வருவது அனந்த கிருஷ்ணன் பக்ஷிராஜன், முகநூலில்:

”ஆரியர்களின் யோக்கியதை” என்று பெரியார் 1936ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதினார். இந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகளைத் தருகிறேன். இந்தக் கட்டுரை ஜனவரி 1936ம் ஆண்டு எழுதப்பட்டது. யூதர்களை பொது வாழ்விலிருந்து வெளியேற்றுவதற்காக நாசிக் கட்சி கொண்டு வந்த நியூரம்பெர்க் சட்டங்கள் செப்டெம்பர் 1935ம் ஆண்டு நிறைவேற்றப் பட்டன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

”ஜர்மனியர்கள் யூதர்களை விரட்டியடிப்பதற்குச் சொல்லும் காரணங்கள் இந்தியர் ஆரியர்களை விரட்டியடிக்கலாம் என்பதற்கு பொருத்தமானதாகவே இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும்.

அதாவது ஜர்மனியர்கள் யூதர்களை விரட்டியடிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லுகிறார்கள்.

அவைகளில் ஒன்று, யூதர்கள் தங்களுக்கு என்று தேசமில்லாதவர்கள் என்றும், தேசமில்லாத (அதாவது ஜிப்ஸிமலை சாதியார்லம்பாடிகள் கூடாரத்தோடு திரிகிறவர்கள் போன்றவர்கள்) என்றும் அப்படிப்பட்டவர்களை ஒரு நாட்டில் வாழவிட்டால் அவர்கள் அந்த நாட்டின் வளப்பத்தையும் முற்போக்கையும் காட்டிக்கொடுத்து ஜீவிக்கிறவர்களாகிவிடுவார்கள் என்பது.

இரண்டாவது, யூதர்கள் சரீரத்தில் பாடுபடமாட்டாதவர்கள்.

சரீரத்தினால் பாடுபடாதவர்கள் ஊரார் உழைப்பைக் கொள்ளை கொண்டு வாழுபவர்களாவார்கள் என்றும், ஊரார் உழைப்பால் வாழுகின்றவர்கள் மனித சமூகத்துக்கு க்ஷயரோகம் போன்ற வியாதிக்கு சமமானவர்கள் என்பதோடு தங்கள் சோம்பேறி வாழ்க்கைக்கு ஆக நாட்டையும் மனித சமூகத்தையும் பிரிவிணையிலும் கலகத்திலும் தொல்லையிலும் இழுத்து விட்டுக்கொண்டு சமாதான பங்கத்தை விளைவித்து மிக்க குறைந்த விலைக்கும் எதையும் காட்டிக்கொடுப்பார்கள் என்பதாகும்.

இந்த இரண்டு காரணங்களும் இன்று நம்நாட்டில் ஆரியர் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்களாதியோரிடம் இருந்துவருகின்றன.

முதலாவது ஆரியர்களுக்கு இன்னதேசம் என்பதாகவே ஒன்று இல்லை என்பதோடு, ஆரியர்கள் என்பவர்கள் சரீரத்தினால்பாடுபடாமல் மதம், புரோகிதம் ஜாதி உயர்வு, அரசியல் உத்தியோகம், தேசியத் தலைமை என்கின்றதான சூக்ஷித் தொழில்களால் சிறிதும் சரீரப்பாடுபடாமல் மற்ற ஆரியரல்லாத மக்கள் உழைப்பினாலேயே வஞ்சக ஜீவியம் நடத்துகிறவர்களாய் இருக்கிறார்கள். இவர்களுக்கு தங்கள் வாழ்க்கை தங்கள் ஆதிக்கம் என்பதல்லாமல் மற்றபடி எந்த தேசத்தைப்பற்றியோ எவ்வித ஒழுக்கத்தைப் பற்றியோ எந்த சமூகத்தைப்பற்றியோ சிறிதும் கவலை இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்.

இந்தக் காரணத்தாலேயே நமது பழைய ஆதாரங்கள், அகராதிகள் ஆகியவற்றில் ஆரியர்கள் என்றால் மிலேச்சர்கள் என்றும், ஒருவிதக் களைக்கூத்தர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இதற்கேற்பவே ஆரியர்கள் இந்த நாட்டில் என்று காலடி வைத்தார்களோ அன்று முதல் இன்று வரை பலவித வஞ்சகங்களாலும், சூழ்ச்சிகளாலும் ஏமாற்றி அவர்களை சின்னாபின்னமாகப் பிரித்து ஆபாசக் கற்பனைகளையும் நடத்தைகளையும் வேதமாகவும் மோக்ஷ சாதனமாகவும் ஆக்கி இந்நாட்டு மக்களுக்கு அவர்களே ஆதிக்கக்காரர்களாகவும் “இகம்” “பரம்” இரண்டிற்கும் தர்மகர்த்தாக்களாகவும், சமுதாயம் அரசியல் இரண்டிற்கும் தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும், எஜமானர்களாகவும்கூட தங்களை ஆக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால் இவர்களது தர்மகர்த்தாத் தன்மையிலும், எஜமானத் தன்மையிலும், வழிகாட்டித் தன்மையிலும் இந்நாட்டுக்கு எந்தத் துறையிலாவது ஏதாவது கடுகளவு முற்போக்கோ, நன்மையோ ஏற்பட்டிருக்கின்றனவென்று யாராவது சொல்லமுடியுமா என்றுபார்த்தால் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியாவுக்கோ, இந்திய நாட்டு பழம் பெரும் குடி மக்களுக்கோ ஏதாவது ஒரு நன்மை சிறிதளவாவது ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப் படுமானால், அவற்றில் சிறிது முஸ்லீம் அரசர்களாலும், பெரும்பாலும் ஐரோப்பிய ஆக்ஷியிலும் ஏற்பட்டதென்றே சொல்லலாம்.”

இதில் பெரியார் பார்ப்பன ஆரியர்களை யூதர்களோடு மட்டுமன்று, ஜிப்ஸிக்கள், மலைசாதியினர், லம்பாடிகள், கூடாரத்தோடு திரிபவர் போன்றவர்களோடு ஒப்பிடுகிறார். இதே போன்றே ஆரியர்களை மிலேச்சர்கள், ஒரு விதமான கழைக்கூத்தாடிகள் என்று ஆதாரங்கள், அகராதிகள் குறிப்பிடுகின்றன என்றும் சொல்கிறார்!