ஒன்று

சாரு,
 
புத்தகக் காட்சியில் உங்களிடம் பேச முடிந்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். உங்கள் எழுத்துக்கள் மூலமே உங்களை அறிந்த எனக்கு இது ஒரு வகையில் அதிர்ச்சியும் கூட. மன்னிக்கவும், இவ்வளவு சாதுவாக நீங்கள் பேசுவீர்கள் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
உங்களுக்கு முன் நானெல்லாம் ஒரு பூச்சி. எனினும் நான் பேசியதையும் கவனமாகக் கேட்டு பதில் கூறியது எல்லாம் கனவில் நடந்தது போல இருக்கிறது. 
 
இரண்டாம் நாளும் வேறு ஒரு புத்தகத்தில் கையெழுத்து கேட்கும் போது, “நேத்து நாம பேசுனோம்ல” என்று கேட்டு மேலும் அதிர்ச்சி கொடுத்தீர்கள். உங்கள் எழுத்துக்கு மட்டுமில்லாமல் கையெழுத்துக்கும் ரசிகனாகி விட்டேன். குறிப்பாக, தேதி எழுதும் போது ^ அம்புக் குறி மாதிரி போடும் அந்த 1 மிகவும் செக்ஸி.
 
கவர்ச்சியான ஆண்கள் என சிலரை நினைப்பேன். பஹத் பாசில் போல. இப்போது நீங்களும் தான்.  So manly.
 
கலக்குங்க சாரு.
 
அன்புடன்,
மூர்த்திஜி, பெங்களூரு.
அன்புள்ள மூர்த்திஜி,
பெண்களிடம் மட்டும்தான் பேசுகிறேன் என்று சிலர் சொல்வார்கள்.  அது தப்பு.  எல்லோரிடமும் பேசுவேன்.  நான் போடும் ஒன்றை ஒரு அழகான ஸ்வீடன் தேசத்துப் பெண்ணிடமிருந்து கற்றுக் கொண்டேன்.  2001 டிஸம்பர்.  பாரிஸில் உள்ள ஸ்வீடிஷ் தூதரகத்தில் ஸ்வீடன் செல்வதற்கு வீசா வாங்குவதற்காக நடுக்கும் குளிரில் காலை ஏழரை மணிக்குச் சென்றேன்.  ஒரு தேவலோகத்து மங்கை ஏன் ஸ்வீடன் செல்கிறீர்கள் என்று கேட்க, வாழ்நாளில் ஒரு முறையாவது சில்ஸ் மரியா பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவள் அது ஏன் என்று கேட்க, நான் நீட்ஷே வாழ்ந்த ஊர் ஆயிற்றே என்றேன்.  எழுந்து நின்று விட்டாள்.  அந்த ஊர் பற்றிப் பல விபரங்கள் சொன்னாள்.  வீசா எழுதும் போது அவள் போட்ட ஒன்றைப் பார்த்து ரசித்து அவள் ஞாபகமாக அதேபோல் போட ஆரம்பித்தேன். அநேகமாக ஐரோப்பியர் அனைவரும் அப்படித்தான் போடுகிறார்கள்.  ஆனால் அவள் இன்னும் கொஞ்சம் கூர்மை.
உங்கள் பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி…
அன்புடன்,
சாரு