முகநூலில் எழுதுவதன் மூலம் மட்டுமே யாரும் எழுத்தாளராகி விட முடியாது என்று பலமுறை நண்பர்களிடம் சொல்லி வருவதுண்டு. அதே சமயம் முகநூலில் எழுதியதன் மூலம் தனது தற்கொலைக் குறுங்கதைகள் என்ற தொடரை அராத்து தொகுத்த போது அது ஒரு நாவலாக வந்திருப்பதைக் கண்டு, அதற்கு ஒரு முன்னுரையும் எழுதினேன். உண்மையிலேயே தற்கொலைக் குறுங்கதைகள் ஒரு அபாரமான பின்நவீனத்துவப் பாய்ச்சல்தான். அதில் உள்ள sensibility-யைத் தொட இன்றைய தமிழ் எழுத்தாளர்களுக்கு மிக நீண்ட காலம் ஆகும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனாலும் அராத்துவிடம் நான் நீங்கள் எழுத்தாளர் இல்லை என்றே இதுகாறும் சொல்லி வந்திருக்கிறேன். ஏன், எப்படி என்றெல்லாம் சொன்னதில்லை. நீங்கள் எழுத்தாளர் இல்லை. அவ்வளவுதான். இன்றைய தினம் லேசாக முகநூலைத் திறந்தேன். பின்வரும் பதிவை அராத்து போட்டிருந்தார். படித்து அதிர்ச்சியாகி விட்டேன். மின்னல் தாக்கியது போல் உணர்ந்தேன். முகநூலில் எழுதுபவர்கள் உருப்படவே வாய்ப்பில்லை என்று தோன்றியது. சினிமா தமிழ்ச் சமூகத்தை மட்டும் அல்ல; இன்றைய இளைய சமுதாயம் முழுவதையுமே உருப்படாமல் ஆக்கி விட்டது என்று தெரிகிறது. இந்த இளைய சமுதாயத்தில் ஆங்கிலத்தில் படித்த ஒரு சாரார் இருக்கிறார்கள். அவர்கள் முற்றிலுமாக தமிழ்ச் சமுதாயத்திலிருந்தே விலகி விட்டார்கள். என் மகனும் அவனுடைய நண்பர்களையும் அப்படித்தான் பார்க்கிறேன். அவனால் இப்படி ஒரு பதிவை எழுத முடியாது. ஆனாலும் பயன் இல்லை. அவன் தமிழுக்கு வெளியே இருக்கிறான். தமிழுக்கு உள்ளே இருப்பவர்களோ இப்படி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். த்ரிஷா என்றால் யார்? அவருக்கு நிச்சயதார்த்தம் செய்தால் பத்திரிகைகளுக்கு என்ன வந்தது? சரி, பத்திரிகை தான் எழுதுகிறது என்றால் அராத்து போன்ற எழுத்தாளர்களுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அராத்து எழுதியதில் கடைசி வரிகளில் ஒரு ‘குத்து’ இருக்கிறது என்றாலும் இதற்காக நேரம் செலவிடுவதும் படிப்பதும் எழுதுவதும்… கடவுளே… தமிழ்ச் சூழலில் வாழ்வதே பெரும் பாரமாக இருக்கிறது.
கடந்த நான்கு நாட்களாக ஜாய்ஸின் யுலிஸஸ் நாவலின் கடைசி அத்தியாயத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதுவே ஒரு தனி நாவல். 25000 வார்த்தைகள். படித்து விட்டு இங்கே வந்தால் த்ரிஷா, நிச்சயதார்த்தம், அராத்து பதிவு… அடக் கடவுளே! அராத்துவின் பதிவை கீழே தருகிறேன். சமூகம் எந்த அளவுக்கு சினிமாவால் சீரழிகிறது என்பதற்கு இந்தப் பதிவு ஒரு உதாரணம்: இனி வருவது அராத்து:
தினத்தந்தி – திரிஷா
தினத்தந்தி முதன்முதலில் த்ரிஷா நிச்சயதார்த்த செய்தியை வெளியிட்டதும் , நானும் வீறுகொண்டு த்ரிஷாவைப்பத்தி ஒரு பதிவு போட்டேன்.
த்ரிஷா ட்விட்டரில் குதிகுதியென குதித்தார். ஃபேஸ்புக் போராளிகளும் த்ரிஷா வெறியர்களும் இது போலி நியூஸ் என பரப்பி சமூக கடமையாற்றினர்.
நான் அப்போது நண்பர்களிடம் சொன்னேன் – தினத்தந்தியை ,நிச்சயதார்த்தம் , காதல் , கள்ளக்காதல் , தொடுப்பு , செக்ஸ் , கல்யாண விஷயத்தில் எதை வேண்டுமானாலும் மூடிக்கொண்டு நம்பலாம். இந்த விஷயத்தில் அந்தப் பத்திரிக்கை அவ்வளவு நம்பிக்கைக்கு உரியது, இதுவரை இதைப்போன்ற எந்த செய்தியும் தவறானதில்லை.
கார்த்திக் – ராகினி , பிரபு – குஷ்பு திருமணம் , சூர்யா – ஜோதிகா காதல் , சிம்பு -நயன்தாரா , பிரபுதேவா – நயன்தாரா என அனைத்து விஷயங்களையும் முந்தி அளித்து , சம்மந்தப்பட்டவர்கள் முதலில் மறுத்து , கடைசியில் தினத்தந்தி சொன்னதுதான் நடக்கும்.
இன்று த்ரிஷா நிச்சயதார்த்த செய்தி போட்டோவுடன் அதே தினத்தந்தியில் வந்துள்ளது.
ஒருமுறை நான் நண்பருடன் சென்றிருந்த போது , ஹன்ஸிகாவை சந்திக்க நேர்ந்து , மரியாதை நிமித்தமாக கட்டிப்பிடிக்க வேண்டியிருந்தது. அதை தினத்தந்தி நிருபர் போட்டோ எடுத்தார். எங்கே அராத்து – ஹன்ஸிகா காதல் என்று தினத்தந்தியில் செய்தி வெளியாகி , அது உண்மையாகித் தொலைந்து என் வாழ்கையே லூஸுத்தனமாகி விடுமோ என மிரண்டு ,இரண்டு மாதம் டிப்ரஷனில் அலைந்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.