charunivedita.com என்ற என்னுடைய ஆங்கில வலைத்தளத்துக்கு 31.1.2015 அன்று மதியம் மூன்று மணி அளவில் 600 பேர் வருகை தந்திருந்தார்கள். அன்று மாலை ஆறு மணி அளவில் 3500-க்கும் மேல் போய் விட்டது வருகை தந்து வாசித்தவர்களின் எண்ணிக்கை. ஆக, என்னுடைய ஆங்கில வலைத்தளத்தை ஒரு நாளில் குறைந்த பட்சம் 3000 பேர் படிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். முதல் நாளில் மூன்று மணி நேரத்தில் 3000 பேர் என்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. தொடர்ந்து ஆங்கிலத்தில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இதன் மூலம் வலுவடைகிறது. ஆனால் நான் என்ன செய்தாலும் அதைக் கண்டு கொள்ளவே கூடாது என்று சில நெருங்கிய நண்பர்கள் நினைக்கின்றனர். அவர்கள் தரும் கனத்த மௌனம்தான் எனக்கான ஊக்க மருந்து.
சூர்ய கதிர் மாத இதழில் என்னுடைய நேர்காணல் வந்துள்ளது. சமீபத்தில் வந்த நேர்காணல்களில் அது மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை நான் பேசி, அதை ஒருவர் மனதில் வாங்கிக் கொண்டு அவரே எழுதுவது என்பது என்னுடைய நேர்காணல் ஆகாது. சூர்ய கதிர் நேர்காணல் கேள்விகளைப் பெற்று நான் எழுதிக் கொடுத்தது. புதிய எக்ஸைல் பற்றி அதில் ஓரளவுக்குப் பேசியிருக்கிறேன்.