கேள்வி பதில்

கேள்வி: எஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்திய தமிழ் இந்து பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்:

கேள்வி: நீங்கள், ஜெயமோகன், சாரு நிவேதிதா ஆகியோர் ஒரு கட்டத்தில் பெரும் பத்திரிகைகள் வாயிலாக வெகுஜன வாசகர்களையும் கணிசமாக ஈட்டியிருக்கிறீர்கள்… உங்களது எழுத்துகளை வாசகர்களின் தேவைக்காக எளிமைப்படுத்தியிருக்கிறீர்களா?

பதில்: தமிழில் எழுத்தாளன் எவ்வளவு பிரபலமானவனாக இருந்தாலும் மற்ற இடங்களை ஒப்பிடும்போது வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.

எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா மூவருக்கும் தனித்தனியாக ஐந்தாயிரமோ பத்தாயிரமோ வாசகர்கள் இருக்கலாம். நாங்கள் எழுதும் உள்ளடக்கம் வெகுஜன வாசகர்களை ஈர்க்கும் விஷயமல்ல. பொழுது போக்குக்காக எதையும் எழுதுவது கிடையாது. தீவிரமான மொழியில் எழுதாமல் மிதமான மொழியில் எழுதுகிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இங்கே ஒரு வெகுஜனப் பத்திரிகையிலிருந்து என்னிடம் கட்டுரையோ, பத்தியோதான் கேட்பார்கள், இலக்கிய ரீதியான கதையைக் கேட்பதில்லை. என்னால் ஒரு எளிய காதல் கதையை எழுத முடியாது.

http://www.sramakrishnan.com/?p=4630

எனது கேள்வி:

நீங்கள் வெகுஜனப் பத்திரிகையில் எழுதினாலும், மொழியின் சுவை மாறவில்லை என்பதே என் எண்ணம். இலக்கிய இதழுக்கும் வெகுஜன இதழுக்கும் உங்கள் எழுத்தில் நீங்கள் செய்யும் மாற்றம் என்ன?

டாக்டர் ஸ்ரீராம், சென்னை.

பதில்: ஸ்ரீராம், மருத்துவத்தில் உயர்நிலை ஆய்வுக்காக நாள் முழுதும் படிக்க வேண்டிய நிலையில் உள்ள உங்களுக்கு இதையெல்லாம் படிக்க எப்படி நேரம் கிடைக்கிறது என்றே தெரியவில்லை.  இந்து சித்திரை மலரில் வந்த எஸ். ராமகிருஷ்ணனின் பேட்டியை நானும் படித்தேன்.  பேட்டியில் என் பெயர் இருந்ததால் பேட்டி எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

மற்றபடி உங்கள் கேள்வி எனக்கு மிகவும் சிரமமாகவும் குழப்பமாகவும் தோன்றுகிறது.   பொதுவாகவே என் எழுத்து பற்றிப் பேசுவது எனக்கு சிரமமான வேலைதான்.  இருந்தாலும் கேள்விக்குப் பதில் சொல்லியே தீருவது என் கெட்ட பழக்கங்களில் ஒன்று என்பதால் அது பற்றி யோசித்துப் பார்க்கிறேன்.

வெகுஜன இதழ்களில் நான் எழுதியதில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.  விகடனில் ஆறு மாதம், குமுதத்தில் ஒன்னேமுக்கால் மாதம் எழுதியதெல்லாம் வெகுஜன இதழ்களில் எழுதியதாகுமா?  துக்ளக், நியூஸ் சைரன் இதழ்களை பக்கா வெகுஜன இதழ்கள் என சொல்லலாம்.  ஆனால் அவை அரசியல் பத்திரிகைகள்.  அந்திமழை, புதிய தலைமுறை, தினமணி ஆகியவற்றை வைத்துக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

திரும்பவும் எனக்குக் குழப்பம் ஏற்படுகிறது.  புனைகதை, கட்டுரை என்ற இரண்டு வகை எழுத்தில் என் புனைகதைகள் அனைத்தும் இலக்கிய இதழ்களில் வந்தவை.  வாசகர் என்பது பற்றியே யோசிக்காமல் தன்னிச்சையாக எழுதியவை.  ஆனால் கட்டுரைகள் அப்படி அல்ல.  ஏதோ ஒன்றை வாசகருக்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்படுபவை கட்டுரைகள்.  அந்தத் தேவையே கட்டுரையின் மொழியைத் தீர்மானித்து விடுகிறது.  ஆனால் அதிலும் உயிர்மை போன்ற நடுவாந்தரப் பத்திரிகைகளில் எழுதும் போது அதிகம் சுதந்திரம் எடுத்துக் கொள்ள முடிகிறது.  முக்கியமாக, இலக்கிய இதழ்களில் எழுதும் போது பக்க நிர்ணயம் இருப்பதில்லை.  வெகுஜன இதழ்களில் கட்டுரை என்றால் 1000 வார்த்தைகளைத் தாண்ட முடியாது.  இந்த அளவுகோல் எனக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

உண்மையில் வெகுஜன இதழ்களில் எழுதுவதுதான் கடினம்.  ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து அளந்து எழுத வேண்டியிருக்கிறது.  இஷ்டப்படியெல்லாம் எழுதுவதற்கான எழுத்துச் சுதந்திரம் தமிழ்ச் சமூகத்தில் இல்லை.  உதாரணமாக, ஜல்லிக் கட்டை எதிர்த்து வெகுஜன இதழில் நான் ஒரு கட்டுரை எழுத முடியாது.  அதேபோல், ஜாதி, மதம் போன்ற விஷயங்களில் நம் கருத்தைச் சொல்ல முடியாது.   ஆனால் இவற்றைத் தவிர்த்து விட்டு மக்களிடம் பேசுவதற்கும் உரையாடுவதற்கும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன.  ஏனென்றால், கல்விக்கூடங்கள் செய்ய வேண்டிய வேலைகளை இங்கே எழுத்தாளன் செய்ய வேண்டியிருக்கிறது.  மற்றபடி எப்போதுமே வெகுஜன இதழ்களில் நான் புனைகதைகள் எழுதியதில்லை.  எழுதவும் முடியாது.  கேட்கும் போது கூட அன்புடன் மறுத்து விடுவது என் வழக்கம்.  ஆனால் ராஸ லீலா மலையாளத்தில் கலா கௌமுதி வாரப் பத்திரிகையில்தான் தொடராக வெளிவந்தது.  அந்த நாவலை இரண்டு ஆண்டுகள் ஒவ்வொரு வாரமாக எழுதிக் கொண்டு வந்தேன்.  அதன் பிறகுதான் அது தமிழில் முழுநூலாக வந்தது.  கலா கௌமுதிக்காக என் நடையிலோ, உள்ளடக்கத்திலோ நான் எந்த மாற்றமும் செய்யவில்லை.

என் மொழியின் சுவை பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு நான் நாகூர் மண்ணுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

Comments are closed.