இலவசம், இலவசம், இலவசம்… (2)

இலவசம் என்ற கட்டுரையின் விஷயத்தை ரொம்ப நாளாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்து, திடீரென இன்று எழுதியதன் காரணம் ஒன்று உண்டு.  அதை எழுதத் தூண்டியதற்கு மே 29-ஆம் தேதி முத்துக்குமார் என்ற எனது நண்பரிடமிருந்து என் அலைபேசிக்கு வந்த ஒரு குறுஞ்செய்தியே காரணம்.   முத்துக்குமார் மாணவராக இருந்த போதிலும் அவரை நான் நண்பராகவே கருதுகிறேன்.  அந்தக் குறுஞ்செய்தி:

வணக்கம் சாரு.   உங்களது “பலஹீன இதயம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்…” என்ற பதிவைப் படித்ததில் இருந்து என்னவோ போல் உள்ளது  அந்தப் பதிவு அற உணர்வின் உச்சமாகத் தெரிகிறது.  அழுதே விட்டேன்.  உங்கள் போல் நீங்கள் ஒருவரே சாரு.  ஒரு மாணவனாக என்னால் எதுவும் செய்ய இயலாத நிலை.  பணம் கிடைக்கும் பொழுது உங்களிடம் வந்து தருகிறேன். நன்றி.

பணம் அல்ல நண்பர்களே விஷயம்.  அந்தக் குறுஞ்செய்தியில் கசியும் மனம்.  அதுதான் வேண்டும்.  அவர் கொடுத்தாலும் நான் வாங்கிக் கொள்ள மாட்டேன்.  ஒருசில ஆண்டுகளில் முத்துக்குமார் நிச்சயம் கலெக்டராகி விடுவார்.  அது போதும்.  அன்றாட வாழ்வின் அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிக்க ஒரு கலெக்டரோ ஒரு போலீஸ் அதிகாரியோ நண்பராக இருந்தால் அதுவே பெரிய துணை என்று நினைக்கும் அளவுக்கு ஆகி விட்டது இந்திய வாழ்க்கை.  ஒட்டு மொத்த நிர்வாகமே ஊழலில் மூழ்கி அழுகிக் கிடக்கும் போது நம்மைப் போன்ற எளியவர்களுக்கு யார் கதி?  திடீரென்று எனக்குக் கொலை மிரட்டல் வந்த போது என் நண்பரான டெபுடி கமிஷனரைத்தான் அணுகினேன்.  வேறு என்ன செய்ய?