நிர்வாண நகரத்தில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன். இப்போது எனக்கு அந்தப் பட்டம் கிடைத்துள்ளது. பரவாயில்லை. ஒரு அன்பர் என்னை அடிக்கப் போகிறேன் என்று எழுதியிருக்கிறார். இதுதான் இவர்கள் கலாமிடமிருந்து கற்றுக் கொண்ட பாடம் போலும். எத்தனையோ ஜனாதிபதிகள் வருகிறார்கள், போகிறார்கள். ஆர். வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்த போது நான் தில்லியில்தான் இருந்தேன். ஆனால் அவரெல்லாம் என்னை ஈர்க்கவில்லை. கலாம் ஈர்த்தார். எதிர்மறையாக. ஒரு விழா. கலாம் தான் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் துவக்கி வைக்க வேண்டும். குத்துவிளக்கு ஏற்ற அவரிடம் மெழுகுவர்த்தி கொடுக்கப்பட்டது. குத்துவிளக்கு ஏற்றியபின் கலாம் சொன்னார். நான் முஸ்லீம்; மெழுகுவர்த்தி கிறித்தவத்தைக் குறிக்கிறது; குத்துவிளக்கு இந்து. இதிலிருந்தே மத ஒற்றுமை தெரிகிறது பாருங்கள்.
கேட்டதும் நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். நிமிர்ந்த முதுகு இன்னமும் நிமிர்ந்தே இருக்கிறது.
ஒரு பத்திரிகையாளர் கலாமைக் கேட்டார். தமிழ்நாட்டில் உங்களைக் கவர்ந்த சிந்தனையாளர் யார்? விஞ்ஞானி கலாமின் பதில்: நடிகர் விவேக். விகடனில் வரும் கலாட்டா கேள்வி பதில் அல்ல; சீரியஸ் கேள்வி பதில்.
இன்னொரு சம்பவம். இது ஒரு சம்பவம் அல்ல. பலமுறை நடந்துள்ளது. கலாம் ஜனாதிபதியாக இருந்த போது ஒரு தமிழ்நாட்டு எம்.பி. என் நண்பராக இருந்தார். அவர் கலாமை சந்திக்கச் செல்லும் போதெல்லாம் எனக்கு ஒரு ஃபோனைப் போட்டு ஒரு திருக்குறள் சொல்லுங்கள் என்று பதற்றத்துடன் என்னைக் கேட்பார். ஏனென்றால், அவர் ஜனாதிபதியைப் பார்த்தவுடன் அவர் இவரை ஒரு திருக்குறள் சொல்லுங்கள் என்று கேட்பாராம். இப்படி அடிக்கடி எனக்குத் திருக்குறள் கேட்டு ஃபோன் வரவே “ஏங்க கஷ்டப்படுறீங்க… அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற ஈஸியான குறளைச் சொல்லி விட வேண்டியதுதானே?” என்று கேட்டேன். ”அட நீங்க வேற… ஒரு நாள் சொன்ன குறளை இன்னொரு நாள் சொன்னா பிரச்சினை ஆகிடும்” என்றார். இதில் பெரிய பிரச்சினை என்னவென்றால், நான் சொல்லும் குறளை நண்பர் மனப்பாடம் செய்ய வேண்டியிருந்ததுதான். நீங்களெல்லாம் அரசியல்வாதி என்றால் ஏதோ ரொம்ப சுலபமாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது எவ்வளவு பெரிய கொடுமையான வேலை என்பது திருக்குறளை மனப்பாடம் பண்ணிய தமிழ்நாட்டு எம்.பி.க்களுக்கும் மத்திய மந்திரிகளுக்கும்தான் தெரியும்.
கலாம் பற்றி யோசித்த போது இதெல்லாம் ஞாபகம் வந்தது. அவ்ளோதான்.