நேற்றைய சந்திப்பு மனநிறைவாக அமைந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் பேசியதாக நண்பர்கள் சொன்னார்கள். தண்ணீரே குடிக்காமல் பேசியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. வித்தியாசம் என்பதில் எல்லாம் அடக்கம். முன்பெல்லாம் பத்து நிமிடம் பேசுவதற்கே திணறுவேன். கொரில்லா என்று நான் குறிப்பிட்டது தவறு. கெரில்லா போராளி என்றே பேசியிருக்க வேண்டும். சுட்டிக் காட்டிய லதானந்த் அவர்களுக்கு நன்றி. தீவிரமான இலக்கிய வாசகரும் என் நண்பருமான ராமகிருஷ்ணன் வந்திருந்தார். போலீஸ் துறையில் உயர்ந்த பதவி வகிக்கும் அவர் சுதந்திர தின அலுவல் நெருக்கடிகளையும் மீறி சந்திப்புக்கு வந்தது எனக்கு அளிக்கப்பட்ட கௌரவம். அவருக்கு என் நன்றி. என்னுடைய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேச வேண்டும் என்பது என் அவா. மற்ற பல நிகழ்ச்சிகளில் அவருடைய இலக்கிய உரைகளைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். நண்பர்கள் லதானந்த், ஷங்கர் ராமசுப்ரமணியன், பாஸ்கர் சக்தி, அதிஷா, அம்மு, கார்த்திக், பிரபு காளிதாஸ், அவர் மனைவி (பெயர் மறந்து விட்டது, மன்னிக்கவும். அவரும் சிறந்த வாசகி) மற்றும் அராத்து, கணேஷ் அன்பு, செல்வகுமார், கருப்பசாமி, கணேஷ் ராம், ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன், இம்மானுவல், முருகேசன் என்று பலரும் வந்திருந்தனர். அனைவரும் இளைஞர்கள். அது எப்போதுமே எனக்கு உற்சாகத்தை அளிக்கக் கூடிய விஷயம். வழக்கமாக நவீன விருட்சம் கூட்டத்துக்கு 60 வயதுக்கு மேற்பட்டோர் தான் வருவர். அவர்களில் ஒருவர் தான் நேற்று வந்திருந்தார். அவர்தான் நவீன விருட்சம் ஆசிரியர் அழகிய சிங்கர். மற்றவர்கள் விடு ஜூட். இதெல்லாம் நவீன தீண்டாமை.
சந்திப்பு பற்றியும் அடியேனின் பேச்சையும் மிக அருமையாக வெளியிட்டிருந்த தினமலர் ஆசிரியருக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் என் நன்றி. அதன் இணைப்பு:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1319441
http://www.dinamalar.com/district_detail.asp?Id=1319656
பாருங்கள், டாக்டர் ஸ்ரீராம் பெயர் விடுபட்டு விட்டது. பெயர் விடுபட்டவர்கள் என்னை மன்னிக்கவும். ஸ்ரீராம்தான் தினமலர் செய்தியின் இணைப்பை அனுப்பி வைத்தார். மருத்துவமனையில் நாள் பூராவும் பணி புரிந்து விட்டு வீட்டுக்கு வந்த கையோடு அனுப்பி வைத்திருக்கிறார். அவர் அமெரிக்கா போய் விட்டால் இதையெல்லாம் எனக்கு யார் செய்வார் என நினைத்து இப்போதே கவலைப்படுகிறேன்.