சமீபத்தில் ஒரு வாசகர் டியர் ஜிந்தகி என்ற படத்தின் கடைசிக் காட்சியின் காணொலியை அனுப்பி, அது தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இன்றைய சமூக எதார்த்தத்தை கண்ணாடி போல் பிரதிபலிப்பதாக இருப்பதாகவும், படம் முழுக்கவும் பார்க்காவிட்டாலும் இந்தக் காட்சியை மட்டுமாவது பார்க்குமாறும் எழுதியிருந்தார்.
குறிப்பிட்ட காட்சியைப் பார்த்த போது இரண்டு மனநோயாளிகள் பேசிக் கொள்வது போல் இருந்ததால், படத்தையும் முழுசாகப் பார்த்துத் தொலைத்து விடுவோம் என்று பார்த்தேன்.
வாசக நண்பர் சொன்னது உண்மைதான். மற்ற ஹிந்தி ஃபார்முலா கதைகளிலிருந்து மாறுபட்ட, இன்றைய சமூக எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் கதைதான். ஆனால் இன்றைய சமூகமே பெரும் மனநோய்க்கூடமாக இருப்பதுதானே பிரச்சினை?
ஏற்கனவே ஓருசில உறவு முறிவின் காரணமாக மனநல மருத்துவம் பெறும் கைரா (ஆலியா பட்) தனக்கு மருத்துவம் அளித்த ஷாருக் கானை காதலிக்கத் தொடங்குகிறார். அது சாத்தியம் இல்லை என மறுத்து விடுகிறார் ஷாருக். அப்போது ஆலியா பட் ஷாருக்கிடம் “இந்த உலகில் பர்ஃபெக்ட் ரிலேஷன்ஷிப் என்பதே சாத்தியம் இல்லையா?” என்று கேட்கிறார்.
இல்லை என்று சொல்லும் ஷாருக் அதை விளக்குகின்ற பதிலால்தான் நான் இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன்.
“எதற்காக பர்ஃபெக்ட் ரிலேஷன்ஷிப் இருக்க வேண்டும்? தேவையில்லை. ஒருத்தருக்கு இசையில் ஆர்வம் இருக்கலாம். உனக்கு இசை ஆர்வம் இருந்தால் அந்த நபரோடு நீ இசை பற்றிப் பேசலாம். இன்னொருவரோடு நீ காஃபி ஷாப்புக்குப் போகலாம். வெற்று அரட்டை அடிப்பதற்காக ஒருத்தரோடு பழகலாம். புத்தகங்களில் வாழும் ஒருத்தரோடு நீ புத்தகங்கள் பற்றிப் பேசலாம். இன்னொருத்தனை நீ ரொமாண்ட்டிக் உறவுக்காக வைத்துக் கொள்ளலாம். ஏன் ஒருவன் மீதே எல்லா பாரத்தையும் ஏற்றுகிறாய்?”
புத்தக வசனத்தைக் கேட்டபோது “செருப்பால் அடி நாயே” என்று நினைத்துக்கொண்டேன்.
இந்த வஜனத்தை ஷாருக் பேசும்போது திரையரங்கில் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டியிருப்பார்கள் என்றும், அதில் பெண்கள்தான் அதிகம் இருந்திருப்பார்கள் என்றும் யூகிக்கிறேன்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஆணாதிக்க வன்முறைக்கு எதிரான வசனம்.
எல்லாம் சரிதான். ஷாருக் சொல்கிறாற்போல் வாழும் பெண்களும் ஆண்களும் நாற்பது வயதிலேயே மனநோயாளிகளாக மாறி விடுகிறார்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டு விடுகிறார்கள்.
இந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்கு மலக்கிடங்கில் விழுந்து விட்டது போல் ஆயிற்று. நாற்றத்திலிருந்து விடுபட்டாக வேண்டும்.
என்ன செய்வது என்று யோசித்தேன். இந்த உலகிலேயே ஆகச் சிறந்த காதல் கதையை யார் சொல்லியிருக்கிறார்கள்? ரோமியோ ஜூலியட். பல முறை படித்தாகி விட்டது. அந்தக் கதையில் வந்த படங்களையும் பார்த்தாகி விட்டது. மட்டுமல்லாமல் அது பற்றி எழுதினால் போய்யா, நீ பழைய ஆள் என்று சொல்லி விடுவீர்கள். இப்போதைய கதையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கதையாக யோசித்தேன். லவ் இன் தெ டாய்ம் ஆஃப் காலரா. அற்புதமான காதல் கதை. ஆனால் அது ஒரு அமரக் காதல். ஆனால் எனக்கு வேண்டியது, ரத்தமும் சதையுமான ஒரு கதை. படுக்கையில் ஒருத்தரை ஒருத்தர் புசித்துத் தீர்க்க வேண்டும். அதை விட்டால் ஒருத்தருக்காக ஒருத்தர் உயிரை விட வேண்டும்.
மைக்கேல் ஓண்டாஞ்ஜே (Michael Ondaantje) எழுதிய தெ இங்லிஷ் பேஷண்ட் நாவல் ஞாபகம் வந்தது. இந்த நாவல் அதே பெயரில் திரைப்படமாகவும் வந்து பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. அந்தத் திரைப்படத்தை நேற்று பார்த்தேன். படத்தின் கதை பற்றியெல்லாம் நான் இங்கே விவரிக்கப் போவதில்லை. ஒரு திரைக்காவியம் என்று சொல்லத்தக்க இந்தப் படத்தை நீங்களேதான் பார்த்து ரசிக்க வேண்டும்.
சஹாரா பாலைவனத்தில் நில ஆய்வாளனாக இருக்கும் லாஸ்லோ அல்மாஷி என்ற ஹங்கேரியனுக்கும் அந்த நிலப்பகுதிக்கு பயணியாக வரும் கேதரீனுக்குமான காதல் கதைதான் தெ இங்லீஷ் பேஷண்ட். அல்மாஷி ஹங்கெரியனாக இருந்தாலும் அவனுடைய ஆங்கில உச்சரிப்பு பிரிட்டிஷ் உச்சரிப்பாக இருப்பதால் அவனை எல்லோரும் ஆங்கிலேயன் என்று எடுத்துக்கொள்கிறார்கள்.
கதை நடப்பது இரண்டாம் உலக யுத்த காலகட்டம். கேதரீன் திருமணம் ஆனவள். அவள் கணவனும் அவளுடன்தான் இருக்கிறான். இருந்தும் கேதரீனுக்கும் அல்மாஷிக்கும் காதல் உண்டாகிறது.
இரண்டே இரண்டு தருணங்களைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். ஒருநாள் கலவி முடிந்து அல்மாஷியும் கேதரீனும் வழக்கமாக எல்லா காதலர்களும் பேசிக்கொள்வது போல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உனக்கு ரொம்பப் பிடித்தது என்ன? நீ வெறுக்கும் விஷயம் என்ன? இப்படி. “எனக்கு ஆகவே ஆகாத விஷயம் என்னவென்றால், ஓனர்ஷிப்” என்கிறான் அல்மாஷி.
புரியாமல் பார்க்கிறாள் கேதரீன்.
“எதையும், யாரையும் உடமை கொண்டாடுவது எனக்குப் பிடிக்காது. உதாரணமாக, சில நாட்களில் நீ உன் கணவனோடு இங்கிருந்து கிளம்பி விடுவாய். அதற்குப் பிறகு நீ என்னைத் தொடர்பு கொள்ளக் கூடாது. கொண்டால் அதுதான் ஓனர்ஷிப்.”
இப்படிச் சொன்ன அல்மாஷி வெகுசில தினங்களிலேயே கேதரீன் இல்லாமல் தன்னால் ஒரு நாள் கூட வாழ முடியவில்லை என்று சொல்லும் நிலைக்கு வந்து விடுகிறான். கேதரீனின் நிலையும் அதுதான். இந்த transformationதான் படத்தின் மையப்புள்ளியாக விளங்குகிறது. (உல்லாசம் நாவலின் மையமும் இதுதான். ரிஷி மற்றும் சஞ்ஜனாவின் ஆளுமைகள் தலைகீழாக மாறி இருவருமே வேறு மனிதர்களாக ஆகி விடுவதுதான் அந்த நாவலின் முக்கியப் புள்ளி.)
வெகு சீக்கிரத்திலேயே கேதரீனின் கணவனுக்கு விஷயம் தெரிந்து விடுகிறது. ஆனால் அவனுக்குத் தெரிந்து விட்டது என்பது கேதரீனுக்கும் அல்மாஷிக்கும் தெரியாது.
ஒரு சமயம், கேதரீனுடன் தன்னுடைய சிறுவிமானத்தில் பறந்து கொண்டிருக்கும்போது தரையில் நிற்கும் அல்மாஷியைப் பார்த்து விமானத்தை அவன் மீது மோதுகிறான் கேதரீனின் கணவன். மூன்று பேரும் சாக வேண்டும் என்பது அவனுடைய அப்போதைய முடிவு. அந்த முயற்சியில் கணவன் இறந்து விடுகிறான். அல்மாஷியும் கேதரீனும் பிழைத்துக்கொள்கிறார்கள். ஆனால் கேதரீன் காயமடைகிறாள். நடக்க முடியாத அவளைத் தூக்கிக்கொண்டு வந்து ஒரு குகையில் வைத்து விட்டு ராணுவத் தளத்தை நோக்கி வைத்திய உதவிக்காக நடக்க ஆரம்பிக்கிறான் அல்மாஷி.
அவன் கிளம்பும் முன் “நிச்சயம் திரும்பி வருவாயா?” என்று கேட்கிறாள். “மிக நிச்சயமாக” என்று சொல்கிறான் அல்மாஷி. நான் வரவில்லையானால் உயிரோடு இல்லை என்று பொருள் என்று அவன் சொல்லியிருக்க வேண்டும். படத்தில் அந்த வசனம் இல்லை.
அந்த குகையிலிருந்து ராணுவத் தளம் மூன்று நாள் தூரத்தில் இருக்கிறது. மூன்று பகல், மூன்று இரவு நடக்க வேண்டும். நடக்கிறான். அதற்குப் பிறகு என்ன ஆகிறது என்பதைத் திரைப்படத்தில் கண்டு கொள்ளுங்கள். எல்லாவற்றையும் நானே சொல்லிவிடக் கூடாது.
கேதரீன், அதை விட விசேஷமாக அல்மாஷி – இருவரிடமும் உண்டாகும் ஆளுமை மாற்றம்தான் இந்தக் கதையை காவியமாக உயர்த்துகிறது.
டியர் ஜிந்தகி போன்ற படங்களிலும், இன்றைய உலக வாழ்க்கையிலும் அல்மாஷியைப் போல் தன் காதலிக்காக சஹாரா பாலைவனத்தில் மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் நடக்கும் மனிதர்கள் இருக்கிறார்களா? அப்படிப்பட்ட மனிதர்களை உருவாக்குவதுதான் என் எழுத்தின் லட்சியம். எழுத்து மட்டுமல்லாமல் என் வாழ்வின் மூலமாகவும் நான் அதற்கு சாட்சியமாக விளங்குகிறேன்.
படத்தின் என்னைக் கவர்ந்த இன்னொரு பாத்திரம், ஹானா. போர் தீவிரமடைந்த ஒரு கட்டத்தில் ஒருநாள் தீக்காயமுற்று அல்மாஷியின் உடல் முழுதும் உருகி ரப்பர் போல், ஒரு மெழுகு பொம்மை போல் மாறி விடுகிறது. அவனுக்கு சிசுருக்ஷை செய்கிறாள் ஹானா. அந்த இடமெல்லாம் இதுவரை உலக இலக்கியத்திலோ, திரைப்படங்களிலோ நான்படித்தே இராத, பார்த்தே இராத காட்சிகள்.
ஒருநாள் அல்மாஷி ஹானாவைக் கேட்கிறான், “ஏன் நீ என்னைச் சாகவிடாமல் சிசுருக்ஷை செய்து உயிரூட்டிக்கொண்டே இருக்கிறாய்?”
அதற்கு ஹானா ஒரு நொடியும் தாமதிக்காமல் சொல்லும் பதில்: “ஏனென்றால், நான் ஒரு நர்ஸ்.”
இதை கிறித்தவத்தில் ஊழியம் என்று சொல்வார்கள். காந்தி தன்னுடைய கடிதங்கள் எல்லாவற்றிலும் தங்களின் உண்மையுள்ள ஊழியன் என்றே எழுதிக் கையொப்பமிடுவார்.
நான் எப்போதுமே ஹானாவைப் போல்தான் உணர்ந்திருக்கிறேன். நான் கோவிலுக்குக்கூட செல்வதில்லை. அவந்திகாவுக்கும், என் நண்பர்களுக்கு மட்டும் அல்ல, எப்போதுமே வாசகர்களாகிய உங்களுக்கும் நான் ஊழியம் செய்துகொண்டேதான் இருக்கிறேன். அந்த வகையில் நானொரு மகத்தான ஊழியக்காரன் என்றே நம்புகிறேன்.
இரண்டொரு தினங்களுக்கு முன்பு நடந்தது.
இப்போது கோடை தொடங்கி விட்டதால் தினந்தோறும் காலையில் நடைப்பயிற்சி முடிந்து வந்து நீராகாரம்தான் சாப்பிடுகிறேன். அதற்கு செய்ய வேண்டிய முதல் கட்ட வேலை, முந்தின தினமே சோற்றில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். மறந்தால் நீராகாரத்தை மறந்து விட வேண்டியதுதான். தண்ணீரில் ஊறியிருக்கும் சோற்றை நன்றாகக் கை விட்டுப் பிசைந்து கொஞ்சம் உப்பு சேர்க்க வேண்டும். பிறகு பத்துப் பன்னிரண்டு சின்ன வெங்காயாத்தைத் தோல் உரித்து பொடிசாக நறுக்கி நீராகாரத்தில் போட வேண்டும். கொஞ்சம் கொத்துமல்லித் தழையையும் பொடிசாக நறுக்கிப் போடுவேன். பிறகு அதில் உள்ள சோற்றை மட்டும் எடுத்து பசுந்தயிரைச் சேர்த்து, அதில் கொஞ்சம் பச்சை மிளகாயை நறுக்கிப் போட்டு சாப்பிடுவேன். தண்ணீர்ப் பகுதி அவந்திகாவுக்கு. அவளுக்கு அதில் சோறு இருந்தால் பிடிக்காது. எனக்கும் நீர்ப் பகுதிதான் பிடிக்கும் என்றாலும் அவளுக்குத்தான் முன்னுரிமை தருவேன். அவளுக்குக் காரமும் தயிரும் அலர்ஜி என்பதால் அவளுடைய நீராகாரத்தில் இரண்டும் இருக்காது.
இரண்டு கிளாஸ் நீராகாரம் குடித்தால் பசி அடங்காது. இட்லி மாவு புளித்து விட்டதால் தோசை போடலாம் என்று முடிவு செய்தேன். பெரிய வெங்காயத்தை எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி தோசையின் மேலே தூவினேன். கொஞ்சம் கொத்துமல்லிக் கீரை. கொஞ்சம் தக்காளி எல்லாம் மேலே போட்டேன். சுற்றி வர நெய்யை விட்டேன். அடுப்பு முழுதாக எரியக் கூடாது. மிக மெலிதான நெருப்பில் நீண்ட நேரம் விட்டால் தோசை ஊத்தப்பமாக மாறி முறுகலாக இருக்கும். கருகியும் விடக் கூடாது. பதமாக முறுகின பிறகு அதைத் திருப்பிப் போட்டு சுற்றி வர நெய் வார்த்தேன். இப்படி அவந்திகாவுக்கு மூன்று ஊத்தப்பம் செய்தேன்.
இதைக்கூட எல்லோரும் செய்யலாம். இப்படிச் செய்தால் அவந்திகா சாப்பிட மாட்டாள். ஏனென்றால், பச்சை மிளகாயை வெட்டிய கத்தி, பச்சை மிளகாயை வெட்டிய கட்டை ஆகியவற்றில் வெங்காயம் நறுக்கினால் ஊத்தப்பம் கடுமையாக உரைக்கும். காரம் பிடிக்காதவர்களால் சாப்பிடவே முடியாது. அதனால் அவந்திகாவுக்கு வெங்காயம் நறுக்குவதற்கு கட்டையின் மற்றொரு பகுதியைப் பயன்படுத்தினேன். கத்தியும் வேறொரு கத்தி. அந்தக் கத்தியால் வெண்ணெய்தான் வெட்ட முடியும். இருந்தாலும் அதை வைத்தே சமாளித்து அவளுக்கு வெங்காயம் நறுக்கினேன்.
இதற்குப் பெயர்தான் ஊழியம். இப்படித்தான் பார்த்துப் பார்த்து உங்களுக்காகவும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்னுடைய ஊத்தப்பம் அதற்குப் பிறகுதான். அதில் வெங்காயம், கொத்துமல்லிக்கீரை, தக்காளி, அதற்கும் மேல் கொஞ்சம் இட்லி மிளகாய்ப் பொடி எல்லாவற்றையும் தூவி செய்ய வேண்டும். எனக்கு நல்லெண்ணெய்தான். நெய் தோசைக்கு நெய் பிடிக்காது. (ஆஹா, கேட்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறதே என்றாள் ஸ்ரீ.)
சாப்பிட்டு முடித்த பிறகு அவந்திகா சொன்னாள், “ஊத்தப்பத்தில் உன் அன்பைப் பொழிந்து பொழிந்து செய்திருக்கிறாய் என்று தெரிந்தது.”
காரணம், ஒவ்வொரு ஊத்தப்பத்துக்கும் ஒவ்வொரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கித் தூவியிருந்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூவக் கூடாது. ருசியில் நா தத்தளிக்க வேண்டும்.
”ஏன் என்னைச் சாக விடாமல் இப்படி இரவும் பகலுமாக சிசுருக்ஷை செய்து கொண்டேயிருக்கிறாய்?”
“ஏன் இப்படி இருக்கிறீர்கள் சாரு?”
“ஏனென்றால் நான் ஒரு ஊழியக்காரன்.”
***
இப்போதெல்லாம் நன்கொடையோ சந்தாவோ எதுவும் வருவதில்லை. நானும் நினைவுபடுத்தி எழுதுவதில்லை. இப்போது நினைவுபடுத்துகிறேன். வங்கி விவரம் கீழே:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai