பெட்டியோ வாசிப்பு அனுபவம்: வளன் அரசு

சாருவின் பெட்டியோ நாவலை மிகத் தாமதமாக வாசித்தேன். இப்படி ஒரு நாவல் வெளிவந்த பிறகு எப்படி பேசுபொருள் ஆகாமல் போனது என்று வியப்பாக இருந்தது. ஆனால் அப்படி பேசுபொருள் ஆகியிருந்தால் தமிழர்கள் வாழ்வியலில் அடுத்தகட்ட நகர்வு வந்துவிட்டார்கள் என்றாகிவிடும். ஆகவே பெட்டியோ இப்படி தண்ணீரில் கிடக்கும் கல்லாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

பெட்டியோ வாசித்தபோது சாருவின் நாவல்களில் இதுதான் சிறந்தது என்று சொல்லத் தோன்றுகிறது. ஸீரோ டிகிரி படித்த போது ஏற்பட்ட பரவசம் அப்படியே இந்த நாவல் வாசிக்கும் போதும் இருந்தது. அதைவிட மேலானதாகவே இருந்தது என்று சொல்லலாம். நயநதினியின் காதல் கடிதங்களிலும் நயநதினிக்கு எழுதப்பட்ட பதில் கடிதங்களிலும் காதல் ததும்பி வழிகிறது. பெட்டியோ ஒரு காவியம். சாருவின் பிறந்த நாள் அன்று பெட்டியோவை NFDயில் வாங்கினேன். வேலை மிகுதியாக இருந்ததால் அவ்வப்போது பத்து பக்கங்கள் வாசிப்பேன். கடந்த வாரம் ஃப்ளோரிடாவில் ஒரு வாரம் தங்க வாய்த்தது. மூன்று மணி நேரம் விமானப் பயணம். விமான நிலையத்தில் நுழைந்தவுடன் பெட்டியோ வாசிக்க ஆரம்பித்தேன். விமானம் ஏறியதும் நிறுத்தாமல் வாசித்துக் கொண்டிருந்தேன். கிட்டதட்ட விமானம் தரையிறங்கும் போது நாவலை வாசித்து முடித்துவிட்டேன். விமானம் தரையிறங்கும் போது டாம்பா விமான நிலையத்தில் இடியும் மழையுமாக இருந்ததால் விமானம் மீண்டும் பறந்து தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தது. பயணிகள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். அனைவருமே பதற்றமாக இருந்தார்கள். ஆனால் ஆச்சரியமாக எனக்குள் பேரமைதி. பெட்டியோவின் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. பெட்டியோவை வாசித்து முடித்த பரவசம் மட்டுமே எனக்குள் இருந்தது.

சாருவின் கதைகள் தொடர்ந்து இம்மாதிரியான மாற்றத்தை மனிதர்களுக்குள் ஏற்படுத்துகிறது. குறிப்பாக பெட்டியோவில் வரும் போர் குறித்த கதைகள் மரணத்தின் மீதான பயத்தை துடைத்துவிடுகிறது.போர் மற்றும் கொடூர மரணங்கள் குறித்த கதைகள் எப்படி சாந்தமான மனநிலையை ஏற்படுத்த முடியும்? அதை எனக்குச் சொல்லத் தெரியவில்லை, ஆனால் பெட்டியோவில் வரும் சுபூதி எனப் பெயரிடப்பட்ட நா மரத்தின் கதையை நீங்கள் வாசித்தால் நான் சொல்ல முனைவது புரியும். சுபூதி மரத்தின் கதையை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. என் தனிமையிலும் துயரத்திலும் மகிழ்ச்சியிலும் அந்த சுபூதியின் அடியில் அமர்ந்து கொள்ள விரும்புகிறேன். போர் சார்ந்த கதைகள் நனவோடை உக்திகளாகவே இருந்து வந்திருக்கிறது ஆனால் பெட்டியோ அதை அப்படியே திருப்பிப் போட்டுவிட்டது. துயரத்தின் கதைகளை இறந்த காலத்தில் எஞ்யிருக்கும் நினைவுகளாக சொல்லாமல் நிகழ்வின் அபத்தங்களாக சொல்லியிருப்பது மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

நாவலில் வரும் காதல் கடிதங்களை படிக்கும் போது வாழ்க்கையை இந்தளவுக்கு யாரால் கொண்டாட முடியும் என்று தோன்றியது. கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. காதல் நம் காலத்தில் எப்படியெல்லாம் அர்த்தப்படுகிறது என்று சாருவும் அராத்துவும் மட்டுமே எழுதுகிறார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இருவரும் இரு துருவங்களில் காதலை கொண்டாடுகிறார்கள். அராத்து காதலை எங்குமே புனிதப்படுத்தியதில்லை. ஆனால் சாரு காதலில் கசிந்துருகிவிடுவார். பெட்டியோவை காவியம் என்று சொன்னேன் அல்லவா? பெருமாளுக்கும் நயநதினிக்கும் இடையில் இருக்கும் காதலில் தன்னை இழந்துவிடுகிறான். இப்படியான காதலை தமிழ் இலக்கிய மரபு இதுவரை பதிவு செய்திருக்கிறதா என்று தெரியவில்லை.

கதையில் வரும் பெருமாளின் வாழ்க்கை ஒரு பெரிய ஆய்வுக்குரிய பகுதி. பெருமாள் வாழ்க்கையை கொண்டாடுகிறான். நம்மில் பெரும்பலானவர்களுக்கு அது சாத்தியமில்லை. நமக்கு அடுத்த வேளை மேஜையில் உணவும் தலைக்கு மேல் கூரையும் உடுத்த உடையும் இருக்க வேண்டும். அதற்கு பிறகு வாழ்க்கையை கொண்டாடலாம். ஆனால் பெருமாளுக்கு வாழ்க்கை அந்தக் கணத்தை சார்ந்தது. இது புரிய மீண்டும் நாவலுக்குள் செல்ல வேண்டும். இலங்கை பயணத்துக்கு அழைப்புவிடுக்கும் கவிஞரை நம்பி பெருமாள் கிளம்பி வந்துவிடுகிறார். அதனால் அவருக்கு ஏற்பட்ட எல்லா தொல்லைகளையும் படித்துப் பாருங்கள். ஒரு விடுதியில் கதவை திறக்க முடியாமல் பெருமாள் சிரமப்படுவார். அந்த நேரத்தில் அது தானே முக்கியம்? பெருமாளுக்கு அந்தக் கதவை திறந்து உள்ளே சென்றாக வேண்டும் என்பதை தவிர வேறெந்த சிந்தனையும் இருக்காது.

வண்டியில் செல்லும் போது நாய்கள் அங்குமிங்கும் ஓடுகின்றன. பெருமாளுக்கு நாய்கள் என்றால் பிரியம். நாய்களுக்கு இரக்கப்பட்டு ஏதோ சொல்ல ‘நார்மல்’ மனிதர்கள் அதை வேறுமாதிரி புரிந்துக்கொண்டு கொலை மிரட்டல் விடும் அளவுக்கு போய்விடுகிறது. இப்படி பெருமாளின் வாழ்க்கை அபத்தத்தின் நாடகமாகப் போய் கொண்டிருக்கிறது.

பெருமாள் இழந்த எல்லாவற்றின் ஒட்டு மொத்த வடிவமாக நயநதினி வருகிறாள். நயநதினியை சுதந்திரத்தின் பெண் வடிவமாகப் பார்க்கிறேன். பெருமாள் நயநதினி மீது தீராத காதல் கொள்கிறான். பெருமாளின் சிக்கல்கள் உளவியலானவை. நயநதினியின் சிக்கல்கள் பௌதிகமானவை. பெருமாள் வைதேகியிடம் இழந்தவற்றை நயநதினியிடம் தேடுகிறான். இலங்கையில் நடக்கும் எல்லா பிரச்சனைகளையும் வைதேகியிடம் தான் அனுபவிப்பதைக் கொண்டு பொருத்திப் பார்த்து தேற்றிக் கொள்கிறான் அல்லது நக்கலடிக்கிறான்.

குறிப்பாக சந்திரகுப்தா சீரியலில் வரும் அந்த லலல லாலாலா லலலாலலா இசை தரும் மெண்டல் டார்ச்சர் பகுதி வரும் போது கட்டுக்கடங்காமல் சிரித்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு பெரிய வன்முறை! எல்லாவற்றையும் இயல்பாக கடந்துவிடும் பெருமாள், வைதேகி விஷயத்தில் மட்டும் ஏன் ஒரு சராசரி பிரஜையை போல நடந்து கொள்கிறான் என்ற கேள்வி எழும் போது அதற்கான விடையையும் தன் அனுபவக் கதையின் மூலமாக சொல்லிச் செல்கிறான். இப்படி பெட்டியோ முழுவதும் ஒரு அற்புதமான அனுபவத்தைக் கொடுத்தது.

சாரு நிவேதிதாவின் ஔரங்ஸேப் நாவலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை என் அமெரிக்க நண்பர்கள் பலரிடம் கொடுத்தேன். புத்தகத்தின் அட்டையைப் பார்த்த மாத்திரத்தில் அசந்துவிட்டார்கள். படித்த ஒவ்வொருவரும் சுவாரசியமாக இருப்பதாக சொன்னார்கள். ஔரங்ஸேப் நாவலை பெட்டியோவுடன் ஒப்பிடவே முடியாது.

“பிரபஞ்ச வெளியிலே நட்சத்திரங்களும் கோள்களும் ஒருவித கணிதக் கோட்பாட்டுக்குட்பட்டு லயம் பிசகாமல் ஆடிக்கொண்டிருந்தன. நீயும் நானும் ஒன்றாகி அந்த அண்ட சராசரத்தின் நடன வெளியிலே ஊடுருவுகிறோம். நம்மிருவரின் உன்மத்த வெறி பிரபஞ்சத்தின் கணிதக் கோட்பாடுகளைக் குலைத்துப் போடுகிறது. நடசத்திரங்களும் கோள்களும் ஒன்றோடொன்று மோதிப் பிறழ்கின்றன. எங்குப் பார்த்தாலும் தீப்பிழம்புகளின் ஆவேசம்.”

இது முப்பத்தி நான்காவது அத்தியாயம். இதில் இருக்கும் அனுபவம் பிரபஞ்சம் முழுமைக்கும் பொதுவானது ஆனால் இதை ஆங்கிலத்திலோ வேறெந்த மொழியிலோ மொழிப்பெயர்த்தாலும் இதில் இருக்கும் சௌந்தரியம் இருக்குமா என்பது சந்தேகம்தான். அதே போல காதலின் உன்மத்ததில் தொய்த்து எடுக்கப்பட்ட இன்னொரு இடம்:

“நித்திய தரித்திரனுக்கு நிதிக் குவியல் கிடைத்தது போல் எனக்குக் கிடைத்த நின் உந்திச் சுழியில் முளைத்தெழுந்த ரோமப் பசுந்தாளில் என் நாவினால் இசை மீட்ட அவாவுறுகிறது மனம். நயநதினியின் அமுதக் கனி அதர பானமே என் மதுபானமெனக் கண்ட உன் அடிமை, பெருமாள்.”

இந்த நாவல் விற்பனையில் சாதனை புரியலாம் அல்லது மற்ற நாவல்களை போல கண்டுகொள்ளப்படாமல் போகலாம், ஆனால் பெட்டியோவுக்கு நிகர் பெட்டியோ மட்டுமே.

https://www.zerodegreepublishing.com/products/pettiyo-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-charu-nivedita-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-prebook?_pos=1&_sid=c480f9d0d&_ss=r

***