மகாபாரத அணி Vs காமரூப அணி

இன்றைய தினம் அதிகாலை நான்கு மணி அளவில் ஒரு கனா.  கொடுங்கனா என்றும் சொல்லலாம்.  வேறு மாதிரியும் காணலாம்.  எப்படி அதிகாலை என்று தெரிந்ததென்றால், கனா முடிந்ததும் விழிப்பு வந்து விட்டது.  பார்த்தால் மணி நாலரை.  பலவிதமான வினோத ரசக் கலவை மனநிலையுடன் நடைப்பயிற்சி கிளம்பி விட்டேன்.

விஷயம் இவ்வளவுதான்.  எழுத்தாளர் சங்கத் தேர்தல் நடக்கிறது.  ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் எதிரெதிர் அணியில் நிற்கிறார்கள். மகாபாரத அணி Vs காமரூப அணி.  நாஞ்சில் நாடன், வெங்கட் சாமிநாதன், திலீப்குமார், கலாப்ரியா, தேவதச்சன், தேவதேவன், ஞானக்கூத்தன், எஸ். வைத்தீஸ்வரன், ஆ. மாதவன், பவா செல்லதுரை போன்ற பல எழுத்தாளர்கள் ஜெயமோகனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.  அசோகமித்திரன் யார் பக்கம் என்று பத்திரிகையாளர்கள் கேட்ட போது, சாரு நிவேதிதா நல்லவொ(ங்) ஆனா ஜெயமோகன் வல்லவனாச்சே, ஆமா அவன் எப்படி இவ்ளோ எழுதறான்?  எப்படி நேரம் கிடைக்கறது?  பை த வே, ரைட்டர்ஸ்க்கு எதுக்கு இந்த அநாவசிய வேலை?  இதெல்லாம் ரொம்ப தர்ம சங்கடமான விஷயம்… ஓட்டுப் போடறது… யாருக்கு ஓட்டுன்றது…  ரைட்டர்ஸ் எல்லாமே எக்ஸெண்ட்ரிக் தான்.  நைண்ட்டீன் செவெண்டி சிக்ஸ்ல இப்படித்தான் பிரேஸில்லேர்ந்து ஒருத்தன் வந்தான்…  அயோவா யூனிவர்ஸிட்டில…  ஜான்னு பேரு…  என்னோட ரூமுக்குள்ள வந்து ஏதோ ஒரு மாமிசத்தைக் குடுத்து இதை இப்பொவே சாப்டாத்தான் ஆச்சுங்கறான்.  என்ன பண்றது?  ரத்தச் சிவப்பா… ஒரே நாத்தம்… எனக்கு பூண்டே ஆகாது…  நாத்தமா நாறும்.  இது மாமிசம்.  மாடோ பன்னியோ என்ன கருமமோ?  முடியாதுன்னேன்.  கத்தியை எடுத்துட்டான்.  பிரேஸில்ல அவன் ஒரு ஃபேமஸ் ரைட்டர்.  என்ன பண்றது?

“ஐயோ, என்ன சார் பண்ணிங்க?”

“ம்…  லைஃப் இஸ் அப்ஸர்ட்…  கத்தியைப் பிடிச்சுண்டு நின்னவன் அப்படியே தடால்னு தரையிலே விழுந்து கை காலெல்லாம் வெட்டி வெட்டி இழுக்கறது… வாயெல்லாம் நொர…  ஏழு அடி உயரம்.  என்ன பண்றது?  ஆளையெல்லாம் வரவழைச்சு காப்பாத்தினோம்…”

“சார், உங்க ஓட்டு?”

முகத்தைச் சுளித்தபடி, “ரைட்டர்ஸுக்கு இந்த எலக்‌ஷன் அது இது எல்லாமே தேவையில்லாத விஷயம்… இப்படித்தான் 1946லே செகந்திராபாத்ல…” என்று ஆரம்பிக்கிறார்.

இரண்டு முன்னாள் கவர்ச்சி நடிகைகளிடம் செல்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.  ஹவ் ஆர் யூ மச்சான் என வரவேற்கிறார் நடிகை.  மகாபாரத அணி, காமரூப அணி பற்றி விளக்குகிறார்.

”காமரூபம்னா என்ன மச்சான்?”

பத்திரிகையாளர் விழிக்கிறார்.  ஆனால் அவருடன் சென்றிருந்த புதுமைப்பித்தன் தாசன் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறார்.  புதுமைப்பித்தன் தாசன் ஷேக்ஸ்பியரைத் தமிழில் மொழிபெயர்த்தவர்.  மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்று, சமீபத்தில்தான் அந்த விருதைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்.  அவர் நடிகையிடம், காமரூபம்னா செக்ஸ் விஷுவல் மேடம்” என்கிறார்.

“ஐயோ, மச்சான் மச்சான்…  செக்ஸா…  என் வோட்டு நிச்சயம் மகாபாரத அணிக்குத்தான்.”

“என்ன மேடம் ஏமாத்திட்டீங்களே?  நீங்க காமரூப அணிக்குத்தான் சப்போர்ட் பண்ணுவீங்கன்னு நினைச்சோம்”

“ஐயோ, மச்சான் மச்சான்…  நான் ரொம்ப நல்லப் பொண்ணு…”

அடுத்த கவர்ச்சி நடிகையும் என் ஓட்டு ஜெயமோகனுக்கே என்கிறார்.  நீங்களும் ஜெயமோகன் பக்கமா என ஆச்சரியப்படுகிறார் பத்திரிகையாளர்.

“ஜெயமோகன் சேட்டன் அவ்ளோ பாப்புலரா இல்லாதப்பவே என்னோட மலையாளப் படத்துக்கு வசனம் எளுதியிருக்கார்…”

“என்னது, உங்க படத்துக்கு வசனமா?”

“ஏன், அதில் என்ன தப்பு?  மணி ரத்னம் படத்துகே வசனம் எளுதறப்போ என் படத்துக்கு எளுதக் கூடாதா?”

ஜெயமோகன் சார்பாக கமல்ஹாசன் பேட்டி:

“ஜெயமோகனை எனக்கு ரொம்ப காலமா தெரியும்.  மகாநதிக்கே வசனம் எழுதச் சொன்னேன்.  அவரோ ’என்னை விட நீங்களே நல்லா எழுதுவீங்க’ன்னு சொன்னார்.   என் கவிதையின் முதல் வாசகர் அவரே.  முதல் விமர்சகரும் அவரே.”

“என்னது, விமர்சகரா?”  அதிர்ச்சியுடன் பத்திரிகையாளர்.

“ஆமாம்.  ஜெயமோகன் என்னைக் கடுமையாக விமர்சிப்பார்.  ஆனால் அதெல்லாம் எங்கள் நட்பில் சகஜம்.  சமீபத்தில் கூட கண்ணோடு கண்ணை கலந்தாளென்றால் களங்கம் உள்ளவள் எச்சரிக்கை என்ற என் கவிதையில் காமம் தூக்கலாக இருக்கிறது என்று சொல்லி சண்டை போட்டார்.  காரை அனுப்பி அவரை என் அலுவலகம் வரச் சொல்லி நான்கு மணி நேரம் அந்தக் கவிதைக்கு விளக்கம் சொன்னேன்.  ஒப்புக் கொண்டார்.  இப்படி அடிக்கடி எனக்கும் அவருக்கும் சண்டை வரும்.  ஆனால் அதெல்லாம் கற்றறிந்தோர் சண்டை.  இலக்கியச் சண்டை.  சார்த்தரும் ஆல்பெர் காம்யூவும் சண்டை போட்டுக் கொண்டதில்லையா?  இரண்டு பேரில் யார் சார்த்தர் யார் காம்யு எனக் கேட்டு விடாதீர்கள்.  எனக்குத் தெரிந்தது நடிப்பு மட்டும்தான்.  ஆனாலும் வாசிப்பேன்…”

கனவில் கமல் இன்னும் நிறைய பேசினார்.  இங்கே நேரமின்மை கருதி பேட்டியை இத்துடன் ’கட்’ பண்ணுகிறேன்.

பாலா, மிஷ்கின் இருவரும் ஜெயமோகனுக்குத் தான் வெற்றி நிச்சயம் என்கிறார்கள்.  ”ஜெயமோகன் எழுத்தாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றால் இனிமேல் எழுத்தாளர்கள் யாரும் குடிக்கக் கூடாது; குடிப்பவர்கள் சங்கத்திலிருந்து விலக்கப்படுவார்கள் என்று அறிவித்திருக்கிறாரே?  இது பற்றி உங்கள் கருத்து?” என்று கேட்கிறார் பத்திரிகையாளர்.

”சினிமா கலைஞர்களைப் பற்றி அவர் அப்படிச் சொல்லவில்லையே, அது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?  மேலும் எழுத்தாளர்கள் ஏற்கனவே ரொம்ப நலிவடைந்த நிலையில் இருப்பதால் அவர்களுக்கு ரெமி மார்ட்டின் வாங்கக் காசு ஏது என்ற நல்லெண்ணத்திலும் சொல்லியிருப்பார்” என்கிறார் மிஷ்கின்.  பாலா புன்சிரிப்புடன் அமைதியாக இருந்தார்.

பத்திரிகையாளர்கள் சமஸ், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அரவிந்தன்  ஆகியோரும் ஜெயமோகனுக்கே எங்கள் ஓட்டு என்றனர்.  சங்கர ராமசுப்ரமணியன் புன்சிரிப்போடு நிறுத்திக் கொண்டார்.  பதில் சொல்லவில்லை.

தேர்தல் குறித்து மனுஷ்யபுத்திரன் பேட்டி:

“எழுத்தாளர் சங்கத் தேர்தலில் உங்கள் வாக்கு ஜெயமோகனுக்கா?  சாரு நிவேதிதாவுக்கா சார்?”

”மோடி ஆட்சியில் தேசமே தீப்பற்றி எரிகிறது.  எழுத்தாளர்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.  எங்கும் ரத்த வெள்ளம் ஆறாய் ஓடுகிறது.  இந்துத்துவவாதிகளின் ஃபாஸிஸ ஆட்சியில்…”

“சார்…  ஜெயமோகனா, சாரு நிவேதிதாவா? உங்கள் ஓட்டு?”

“அங்கே தான் வந்து கொண்டிருந்தேன்.  நீங்கள் இடையில் குறுக்கிட்டு விட்டீர்கள்.  நீங்கள் குறிப்பிட்ட இரண்டு பேருமே என் நண்பர்கள்.  இரண்டு பேரையும் நீக்கி விட்டு நீங்கள் சமகால இலக்கிய வரலாறை எழுத முடியாது.  ஆனால் என் தலைவர் கலைஞர் யார் பக்கம் கை காண்பிக்கிறாரோ அவருக்கே என் ஓட்டு…”

“உங்களை சாரு நிவேதிதா பாப்லோ நெரூடாவோடு ஒப்பிட்டுப் பேசுவாரே?  அவருக்குப் போட மாட்டீர்களா?”

“நட்பு வேறு;  இலக்கியம் வேறு என்று என் தலைவர் கலைஞர் நெஞ்சுக்கு நீதியின் ஒன்பதாம் தொகுதியில் குறிப்பிட்டிருக்கிறார்.  அதையே இப்போது உங்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.”

எஸ். ராமகிருஷ்ணன் ஒரு பாடல் காட்சிக்காக அண்டார்க்டிகா சென்றிருப்பதால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

காலச்சுவடு கண்ணன் வெளிநாட்டிலிருந்து கொண்டே “இந்தத் தேர்தல் செல்லாது” என்று சொல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.  என்ன காரணம் என்று கனவில் தெரியவில்லை.

தேர்தலுக்கு மூன்று தினங்கள் முன்பு வரை ஜெ. அணியில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த இருந்த லட்சுமி சரவணக்குமார் திடீரென்று சாரு நிவேதிதா அணிக்கு மாறி, களத்தில் இறங்கிப் பணியாற்றினார்.  அதனால் ஒரு பாரில் வைத்து அவரைத் தாக்கினார் ஒரு இளம் கவிஞர்.  லட்சுமி சரவணக்குமார் ”இது ஒரு திட்டமிட்ட கொலை முயற்சி” என்று தன் ப்ளாகில் எழுதியிருக்கிறார்.

பெண் எழுத்தாளர்கள் யாரும் இந்தத் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை.  ஆணாதிக்கவாதிகளால் ஆணாதிக்கவாதிகளுக்காக நடத்தப்படும் இந்தத் தேர்தலில் நமக்கு என்ன வேலை என்பது அவர்கள் கட்சி.

கிழக்கு பத்ரி எந்தப் பக்கம் என்று சொல்லாமல் குறும்புடன் சிரித்தார்.  பக்கத்தில் நின்ற பிரஸன்னாவிடம் கேட்கப்பட்ட போது, “’தேர்தல் முடிந்து ஜெயமோகன் வெல்லும் வரை ஒருக்கணமும் தூங்க மாட்டேன்’ என்று சபதம் எடுத்து வேலை செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.  அவர் கண்கள் கோவைப்பழம் எனச் சிவந்திருந்தன.

இவ்வளவுக்குப் பிறகும் தேர்தலில் சாரு நிவேதிதா வென்று விட்டார்.  ”கனவுதானேப்பா, ஆளை விடுங்கோ’ என்று கதறியும் யாரும் கேட்கவில்லை.  தேர்தல் முடிவில் சூது இருக்கிறது என்று ஜெ. தரப்பினர் சொன்னதால் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.  விசாரணை முடிவில் சாருவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.  ஆனாலும் தார்மீக ரீதியில் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது என்று பத்திரிகையாளர்கள் எழுதினார்கள்.  காரணம், ஃப்ரெஞ்ச் ஃபார்முலா.  தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் முன்பு பாரிஸைச் சேர்ந்த வெரோனிகா என்ற ஒரு அழகான இளம் மங்கை சாரு நிவேதிதாவுக்காக ஒவ்வொரு எழுத்தாளரையும் தனித்தனியாகச் சந்தித்து வாக்குக் கேட்டிருக்கிறார்.  அதுவே ஃப்ரெஞ்ச் ஃபார்முலா என அழைக்கப்படுகிறது.