ப்ளூ கிராஸில் விட்டு விடுங்கள்…

புத்தக வெளியீட்டு விழா நடத்துவதற்காகப் பணம் கேட்டு ஒரு பதிவு போட்டிருந்தேன்.  ஒருவர் கூட பணம் அனுப்பவில்லை.  அது எனக்குப் பெரிய பிரச்சினையும் இல்லை.  ஆனால் ஒரு விஷயம் எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்து கொண்டே இருக்கிறது.  அந்த ஆச்சரியத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை.  தலைக்கு மேல் வேலை இருக்கிறது.  அந்திமழைக்கும் தினமணிக்கும் கட்டுரை அனுப்ப வேண்டும்.  அதையெல்லாம் விட்டு விட்டு இதை நெம்பிக் கொண்டிருக்கிறேன்.  காரணம், அந்த அளவுக்கு ஆச்சரியம்.  பணம் என்ற விஷயத்துக்கு ஏன் மக்கள் இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்?   ஒரு மனிதனை நிர்ணயம் செய்வதற்கு, ஒரு எழுத்தாளனை விரும்புவதற்கு அல்லது வெறுப்பதற்கு பணம் என்ற ஒரே ஒரு விஷயத்தையே அளவுகோலாக ஏன் கொள்கிறார்கள்?  இதுதான் என் ஆச்சரியத்துக்குக் காரணம்.  அமெரிக்காவில் வசிக்கும் ஒரு அன்பர் எழுதியிருந்ததைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது.  தற்செயலுக்குக் காரணம் என்னவெனில், என்னைத் திட்டி வரும் கடிதங்கள் அதாகவே Spam-க்குச் சென்று விடுகின்றன.  இன்று சும்மாவேனும் குப்பைகளைக் கிளறிக் கொண்டிருந்த போது இந்தக் கடிதத்தைப் படித்தேன்.  அதில் அந்த அன்பர் ஏன் பணத்துக்குக் கஷ்டப்படுகிறீர்கள்?  உங்கள் பப்பு ஸோரோவை ப்ளூ க்ராஸுக்குக் கொடுத்து விட வேண்டியதுதானே?

அட லூசுப் பயலே, இந்த விஷயம் கூடத் தெரியாமல் நீயெல்லாம் எப்படி படித்து அமெரிக்கா வரை போய் டாலரில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறாய்?  சரி, கழுதை கூடத்தான் சம்பாதிக்கிறது.  வேசி சம்பாதிக்கிறாள்.  கடத்தல்காரன் சம்பாதிக்கிறான்.  நியாயவாதிகளும் சம்பாதிக்கிறார்கள்.  சம்பாதிப்பதற்கும் புத்திக்கும் – அதாவது பணத்துக்கும் நேர்மைக்கும், பணத்துக்கும் தர்மத்துக்கும் சம்பந்தம் இல்லை.  எனக்கு காஞ்சிப் பெரியவரின் தெய்வத்தின் குரல் ரொம்பப் பிடிக்கும்.  அதில் ஒரு விஷயம் வந்திருந்தது.  சரஸ்வதிக்கு ஏன் கோவிலே இல்லை?  சரஸ்வதி பிரம்மாவின் மனைவியாம்.  பிரம்மாவுக்கே கோவில் இல்லாத போது – அதாவது தன் பதிக்கே கோவில் இல்லாதபோது பதிவிரதையான சரஸ்வதி எப்படி கோவிலில் அமர்வாள்?  அட்டகாசம்.  அப்போதுதான் இந்த எழுத்தாளர்கள் – ஐ மீன், தமிழ் எழுத்தாளர்கள் – படைப்பிலேயே சபிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.  பிரும்மா படைப்புக் கடவுள்.  அவனுக்கே கோவில் இல்லை.  அப்படி இருப்பதால்தான் படைப்புத் தொழிலைச் செய்யும் எழுத்தாளனும் சிங்கியடிக்கிறான்.

சரி, என் நாய்களை ப்ளூ க்ராஸில் விடலாம் என்று யோசனை சொன்ன அன்பருக்கு ஒரு கேள்வி.  அவருக்கு ஏதும் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு, அவரும் குழந்தைகளும் அனாதைகளாக ஆனால் குழந்தைகளை அல்லது அவர் வயதானவராக இருந்தால் அவரது பேரக் குழந்தைகளை அனாதை இல்லத்தில் கொண்டு போய் விட்டு விடுவாரா?  விளிம்புநிலையில் வாழும் பல பெண்கள், தங்களுக்குப் பிறந்த குழந்தைகளை அனாதை இல்லத்தின் வாசலிலோ குப்பைத்தொட்டியிலோ போட்டு விட்டுப் போவது பற்றி செய்தித்தாள்களில் படிக்கிறோம் இல்லையா?  அவர்கள் யார் என்றால் எனக்கு ப்ளூ க்ராஸ் யோசனை சொன்னவர்தான்.  இவருக்கு அப்படி ஒரு பிரச்சினை வந்தால் அவர் தன் குழந்தையை அனாதை இல்லத்திலோ குப்பைத்தொட்டியிலோதான் போட்டு விட்டுப் போவார்.  சந்தேகமே இல்லை.  படிக்காத ஒரு ஆள் இப்படி எனக்கு யோசனை சொல்ல மாட்டான்.  படித்தவனின் மூளை தான் இப்படி வக்கிரமாக மாறுகிறது.  அடேய் மூடா, நான் உனக்குக் கடிதம் எழுதி பணம் கேட்டேனா?  அமெரிக்காவில் நீ பார்த்ததில்லையா?  சாலைகளில் எத்தனையோ கலைஞர்கள் பாட்டுப் பாடுவார்கள்.  வாத்தியக் கருவிகளை இசைப்பார்கள்.  மால்களின் வாசல்களில், மெத்ரோ ரயில்களில், சாலை ஓரங்களில்.  அவர்கள் நம்மூர் மாதிரி unprofessional ஆக இருக்க மாட்டார்கள்.  ஒரு கச்சேரியில் பாடும் அளவுக்குத் தேர்ந்த கலைஞராக இருப்பார்கள்.  ஆனாலும் சாலையில் பாடிக் கொண்டிருப்பார்கள்.  அந்த இசையை ரசிப்பவர்கள் காசு போடுவார்கள்.  டேய் மூடனே, தியாகைய்யரே அப்படிப் பாடிக் கொண்டு போனவர்தானே, உனக்குத் தெரியாதா?  உன் பெயர் என்னவோ, அந்தப் பெயரைத்தானே பாடிப் பாடி உஞ்சவிருத்தி செய்தார்?  ஆனால் ஒன்று, அவர் பணம் சேர்ப்பதற்காகப் பிச்சை எடுக்கவில்லை…  அவருடைய நோக்கம் கடவுளைப் பாடுவது.  கடவுளை இசையால் காண்பது.  ஆனாலும் வயிறு பசிக்கிறது.  பிச்சை எடுத்தார்.  ஸ்ரீராமனைக் கோபித்துக் கொண்டார்.  உன்னையே நினைந்து நினைந்து பாடுகிறேனே, என்னிடம் ஏன் பாராமுகமாய் இருக்கிறாய்?

ஓ ராமா, என்னை நீ எப்படி மறந்தாய்?  அண்ட சராசரமெல்லாம் நிறைந்தவனே, பக்தர்களுக்கு அமிர்தத்தை வர்ஷிப்பவனே, இந்த எளிய பக்தனை ஏன் மறந்தாய்?

காணும் எல்லாவற்றிலும் நான் உன்னையே காண்கிறேன்; என் சிந்தனையின் அடி ஆழத்திலும் நீயே இருக்கிறாய்.  என் வாழ்க்கையே நீதான்; என் ஜீவனே நீதான்; உன்னையன்றி வேறு எனக்குச் சிந்தனையே கிடையாது.  இந்தத் தியாகராஜனால் பாடப்படும் என் ராகவா, நீதான் எனக்கு எல்லாம்… என்னை நீ காப்பாற்று!

மருகேலரா, ஓ ராகவா

மருகேல சராசர ரூபா

பராத்பர சூர்ய

சுதாகர லோசன

மருகேலரா ஓ ராகவா

அன்னிநேவனூகு அந்தரங்கமூன

தின்னகா வேதிகி தெலிசி கொண்டிநய்ய

நின்னகானி மதிநின்னஜால நொருலா

நன்னு ப்ரோவுமய்யா தியாகராஜனூடு

மருகேலரா ஓ ராகவா.

எனக்குத் தெலுங்கு தெரியாது.  அர்த்தப் பிழை, உச்சரிப்புப் பிழை, எழுத்துப் பிழை இருக்கலாம்.  மன்னியுங்கள்.   இந்தக் கீர்த்தனையில் தெரிவது என்ன?  தியாகராஜருக்கு சங்கீதம்தான் கடவுள்.  கடவுள்தான் சங்கீதம்.  அவருடைய ஜீவனும் சுவாசமுமே சங்கீதம்தான். அந்த சங்கீதத்தின் மூலம்தான் அவர் ஸ்ரீராமனைக் காண்கிறார்.

மஹாராஜபுரம் சந்தானம் மருகேலரா பாடுகிறார்:

https://www.youtube.com/watch?v=k25MAxdQdZQ

கடந்த ஜென்மத்தில் அந்த மகான் மிதித்த புழு பூச்சிகளில் ஒன்றாக நான் இருந்திருப்பேன் போலும்… அந்த மகானுக்கு சங்கீதமாக இருந்தது எனக்கு இலக்கியமாக இருக்கிறது.  அவ்வளவுதான் விஷயம்.  எனக்கு இலக்கியம் தவிர வேறேதும் தெரியாது.  இலக்கியம் சோறு போடவில்லை.  பிச்சை எடுக்கிறேன்.  உன் நாய்களைக் கொண்டு போய் நாய் சரணாலயத்தில் போடு என்று சொல்பவன் தனக்குப் பிறக்கும் குழந்தையைக் குப்பைத்தொட்டியில் போடும் மனநிலை உள்ளவன் தான்.  யாரோ என்றால் இதை எழுதியிருக்க மாட்டேன்.  ஸ்ரீராமன் பெயரைத் தாங்கிய, படித்துப் பட்டம் பெற்று, அமெரிக்காவில் குழந்தை குட்டியோடு வாழும் ஒரு மனிதன் எனக்கு இப்படி அறிவுரை கூறுகிறான்.

நான் பலமுறை எழுதியிருக்கிறேன்.  பணம் வாழ்க்கைக்குத் தேவைதான்.  ஆனால் வாழ்க்கையே பணம் அல்ல.  குறைந்த பட்சம், எனக்கு அப்படி அல்ல.  நான் பணம் கேட்டு எழுதினால் மக்கள் ரொம்பவே பாதிக்கப்படுகிறார்கள் போல் தெரிகிறது.  அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு எனக்கு அறிவுரை கூறுகிறார், நாய்களை ப்ளூ க்ராஸில் விட்டு விடுங்கள் என்று.  இதுவாவது பரவாயில்லை.  என் நெருங்கிய நண்பரின் மனைவி என்னிடம் பலமுறை கூறி விட்டார்.  நானே நேரில் வந்து பப்பு ஸோரோவைக் கொலை செய்யப் போகிறேன் என்று.  அப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்கும் போதெல்லாம் என் மனம் அநிச்சையாகவே (canine reflex) உங்கள் குழந்தைகளை அப்படிச் செய்வீர்களா என்று கேட்கிறது.  அப்படிச் செய்யத் துணிவுள்ளவர்கள்தான் எனக்கு இப்படியெல்லாம் யோசனை சொல்வார்கள்.

எத்தனையோ தாய்மார்களைப் பார்த்திருக்கிறேன்.  குழந்தையைக் கொடுத்து விட்டு கணவன் இறந்து விட்டாலோ, விவாகரத்து செய்து விட்டாலோ அடுத்த கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள்.  ஏன், என்னுடைய மைத்துனரே திருமணமான இரண்டாம் ஆண்டு மனைவி இறந்ததும் அடுத்து திருமணம் செய்து கொள்ளவில்லை, தன்னுடைய மகள் மாற்றாந்தாய்க் கொடுமையை அனுபவிக்கக் கூடாது என்று.  அவரேதான் மகளை வளர்த்தார்.  இப்படிப்பட்டவர்களிடமிருந்துதான் நான் வாழ்க்கையின் அனுபூதிகளைப் பெற்றுக் கொள்கிறேன்.  புளூ க்ராஸில் கொண்டு போய் விடு என்று சொல்லும் நாய்களிடமிருந்து அல்ல.  (நாய்களை நேசிப்பவன் நான்; ஆனாலும் பன்றி என்று திட்டினால் போதிய அழுத்தம் கிடைக்க மாட்டேன் என்கிறது.  மேலும், நாய்களுக்குப் படிக்கத் தெரியாது என்பதால் கோபித்துக் கொள்ளவும் போவதில்லை.)

சமீபத்தில் நம்முடைய rape capital-இல் ஒரே நாளில் இரண்டு இடங்களில் நடந்த இரண்டு கற்பழிப்பு நிகழ்ச்சிகள் பற்றிப் படித்தேன்.  ஒன்றில், இரண்டரை வயதுக் குழந்தையை ஒரு கும்பலே கற்பழித்திருக்கிறது.  இன்னொன்றில், ஐந்து வயதுக் குழந்தை.  இப்படிப்பட்ட மிருகங்கள் வேறு யாரும் அல்ல; என்னுடைய பப்புவையும் ஸோரோவையும் ப்ளூ க்ராஸில் கொண்டு போய் விடச் சொல்லி ஆலோசனை வழங்கும் மிருகங்கள்தான்.

ஸோரோவுடன் அடியேன்.  புகைப்படம் பிரபு காளிதாஸ்.

 

IMG_8361

புத்தக வெளியீட்டு விழாவுக்காக யாரும் இதுவரை பணம் அனுப்பவில்லை.  சென்ற ஆண்டு இப்படி இல்லை.  இன்னும் சுறுசுறுப்பாக இருந்தது.  இன்னும் நான் தனித்தனியாக போன் செய்து கேட்கவில்லை.  அதுவும் காரணமாக இருக்கலாம்.  நேரம் இல்லை.

அந்த அமெரிக்க வாசகர் இன்னொரு கேள்வியும் கேட்டிருந்தார்.  பணம் கேட்டு எழுதும் பதிவுகள் மட்டும் ஏன் நீண்டு இருக்கின்றன என்று.  வேறொன்றுமில்லை.  நாம் க்ரியேட்டிவான வேலையில் ஈடுபடும் போது, எல்லாம் நீண்டு விடுகிறதல்லவா, அதுதான்.

பணம் அனுப்ப முடிந்தால் அதற்கான வங்கி விபரங்கள்:

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

ICICI account No. 602601 505045

Account holder’s name: K. ARIVAZHAGAN

T. Nagar branch.  Chennai

IFSC Code Number: ICIC0006026