பெங்களூரில் ஒரு ஆஸ்திரேலிய இளைஞன் தன் காலில் எல்லம்மனின் படத்தைப் பச்சை குத்திக் கொண்டிருந்தது சிலருக்குப் பிரச்சினையாக இருந்துள்ளது. போலீஸ் அந்த இளைஞரை அழைத்துச் சென்று மன்னிப்புக் கடிதம் பெற்றுக் கொண்டு விட்டிருக்கிறது. அந்த இளைஞன் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் பற்றி மதச்சார்பின்மை என்பதை ஒரு நோயாகக் கொண்டு வாழும் நோயாளிகள் அலற ஆரம்பித்திருக்கிறார்கள்.
இது பற்றி என்னுடைய கருத்து இதுதான்: உலகம் எங்கும் வெள்ளைத் தோல் கொண்டவர்கள் நம்மைப் போன்ற பழுப்பு நிறத்தவர்களையும் கறுப்பின மனிதர்களையும் மிகத் தாழ்வாகப் பார்க்கின்றனர். அமெரிக்காவின் விமான நிலையங்களில் நடக்கும் பல இனவாத அவமானங்களை அனுபவித்த இந்தியர்கள் அநேகம். ஷாருக் கான் கூட தப்பவில்லை. ஒரு இந்தியன் இப்படி அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ இப்படி அவர்களுடைய மதக் கடவுளரின் உருவங்களைத் தம் பாதங்களில், தொடைகளில், தொப்புளுக்குப் பக்கத்தில் பச்சை குத்திக் கொண்டு போக முடியுமா? கொலை செய்து விடுவார்கள். ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்படும் இந்தியர்களைப் பற்றி நாம் அவ்வப்போது படித்துக் கொண்டுதானே இருக்கிறோம்? நான் ஜெர்மனி சென்றிருந்த போது கிழக்கு ஜெர்மனி பக்கம் தனியாக நடக்காதீர்கள்; மொட்டைத்தலை நியோ நாஜிகள் தாக்கக் கூடும் என்று பயமுறுத்தினார்கள். அவர்கள் சொன்னது உண்மைதான். நியோ நாஜிகளின் கண்களில் தெரியும் வெறுப்பை ஒருவர் பார்த்தால் முதுகுத் தண்டு சில்லிட்டுப் போகும்.
ஒரு அந்நிய தேசத்துக்குப் போகும் போது அங்கே உள்ள கலாச்சாரத்தைப் பற்றியும் பழக்க வழக்கங்களைப் பற்றியும் ஓரளவாவது தெரிந்து கொண்டு தான் போக வேண்டும். அது ஒரு பயணியின் கடமை. இவ்வளவுக்கும் அந்த ஆஸ்திரேலிய இளைஞன் கொடைக்கானலில் மூன்று ஆண்டுகள் கல்வி பயின்றிருக்கிறார். அப்படியானால் இது வெள்ளைத் திமிர் என்று தானே அர்த்தம்? இந்தியர்கள் இன்னமும் வெள்ளைக்காரர்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்றே வெள்ளைக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். நான் உன் கடவுளை என் காலில் பச்சைக் குத்திக் கொள்வேன்; நீ எனக்கு ஸலூட் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் வெள்ளைக்காரர்கள். நாளைக்கு ஸ்ரீராமனின் படத்தை ஒரு பெண் தன் மார்பகத்திலோ புட்டத்திலோ பச்சை குத்திக் கொண்டு மகாபலிபுரம் கடற்கரையில் குளிப்பார். அதைப் பற்றியும் யாரும் பேசக் கூடாது. பேசினால் மதவாதி; காட்டுமிராண்டி; இந்துத்துவவாதி!
இந்தியாவில் எழுத்தாளர்களைப் போன்ற மூட ஜென்மங்கள் வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறேன். மூத்த கன்னட எழுத்தாளர் மருளு சித்தப்பா “பாஜகவினரின் இத்தகைய செயல்பாடு சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். ஏ காட்டுமிராண்டி, வெள்ளைக்காரர்களாகிய எங்களுக்கு அடிபணிந்து நட; நாங்கள் என்ன செய்தாலும் எங்களுக்கு சலாம் போடு என்று சொல்வான் வெள்ளைக்காரன். அதை எதிர்த்தால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவாகி விடுமாம்! இவர் எழுத்தாளர்! ம்…
இப்படி எழுதுவதால் என்னை பிஜேபியோடு சேர்த்து விடாதீர்கள். பிஜேபிகாரர்களின் கலாச்சாரம் என்னைப் போன்ற transgressive எழுத்தாளனை உயிரோடு விட்டு வைத்திருப்பதே பெரிய விஷயம். இந்த விஷயத்தில் எனக்குப் பெரிய ஆபத்து, பிஜேபியும் கம்யூனிஸ்டுகளும்தான். காங்கிரஸ் தான் எழுத்தாளர்களின் ஆதரவுக் கட்சி. ’நாட்டைக் கொள்ளை அடிப்பதுதானே முக்கியம்? எழுத்தாளர்கள் என்ன பேசினால் நமக்கென்ன?’ என்பது ஊழல்வாதிகளின் சித்தாந்தம்.