இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூஸ் சைரன் என்ற பத்திரிகையில் வாராவாரம் ‘சாத்தான் பாதி, கடவுள் மீதி’ என்ற தலைப்பில் ஒரு பத்தி எழுதிக் கொண்டிருந்தேன். அது ‘கடைசிப் பக்கங்கள்’ என்ற தலைப்பில் கிழக்கு பதிப்பக வெளியீடாக ஜனவரி 9-ஆம் தேதி நடக்க இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் வெளியிடப்படும். விழா பாரிஸ் கார்னரில் இருக்கும் டெண்ட்டல் காலேஜ் அருகே உள்ள (ஃபோர்ட் ரயில்வே ஸ்டேஷன் எதிரில்) ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை ஆறரை மணி அளவில் நடக்கும். எடிட்டர் லெனின், பத்திரிகையாளர் சமஸ், மனுஷ்ய புத்திரன் பேசுவர். அடியேனும். அந்தப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி இது:
இந்திய மரபு காமத்தைக் கொண்டாடிய மரபு. சிவனும் பார்வதியும் காமத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது சிவனின் வாயிற்காப்போனாக இருந்த நந்தி அந்த உரையாடலைக் கேட்டு, காமம் குறித்து 1000 அத்தியாயங்கள் அடங்கிய காம சூத்திரத்தை எழுதியதாக ஐதீகம். இந்த நூலை கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் ஷ்வேதகேது 500 அத்தியாயங்களாகச் சுருக்கி எழுதினார். இதை மேலும் சுருக்கி எழுதினார் பாப்ரவியர். இந்த நூல்களெல்லாம் நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் இந்த நூல்களைப் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வாத்ஸ்யாயனரின் காம சூத்திரத்தில் குறிப்புகள் வருகின்றன. இன்னும் சரியாகச் சொன்னால் நந்தியின் நூல்தான் தன்னுடைய காம சூத்திரத்தின் மூல நூல் என்றும், அதன் சிறு பகுதியே இது என்றும் எழுதுகிறார் வாத்ஸ்யாயனர்.
இதோ ஸ்லோகம்:
“மஹாதேவானுசரஸ் ச நந்தீ சஹஸ்ரேத்யாயானாம் ப்ருடக் காமசூத்ரம் ப்ரோவாச.”
இதற்குப் பிறகு காம சூத்திரம் பற்றி சுமார் முப்பதுக்கு மேற்பட்ட நூல்கள் சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்டன. அவை எல்லாமே இப்போதும் கிடைக்கின்றன. காம சூத்திரத்தில் வாய்வழிப் பாலுறவு, பிருஷ்ட உறவு பற்றியெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. ‘ஔபரிஷ்டகம் நவமோ’ என்பது வாய்வழிப் பாலுறவு.
ஒருநாள் கொனாரக் சூரியக் கோவிலில் நின்று கொண்டிருந்தேன். எல்லோரும் கஜூரஹோ பற்றி மட்டும்தான் சொல்கிறார்கள். கொனாரக் கோவிலும் கஜூரஹோ அளவுக்குக் காம சிற்பங்களைக் கொண்டுள்ளது. அப்போது ஒரு டூரிஸ்ட் கைட் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணிடம் ஒரு சிற்பத்தைக் காண்பித்து, “திஸ் ஈஸ் வுமன் டு வுமன் மேடம்,” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.