தில்லியில் கிடைக்கும் தந்தூரி ரொட்டி மாதிரி சென்னையில் கிடைப்பதில்லை. என்னதான் பக்கா வட இந்திய ரெஸ்ட்டாரண்டாக இருந்தாலும் கூட தந்தூரி ரொட்டியில் சொதப்பி விடுகிறார்கள். தந்தூரி அடுப்பு தெரியுமா, பார்த்திருக்கிறீர்களா? ஒரு பெரிய பானை மாதிரி இருக்கும். கீழே விறகைப் போட்டு எரிப்பார்கள். ரொட்டியை உருட்டி ஒரு கையகல – அதை எப்படி உங்களுக்குச் சொல்வது? அந்தக் காலத்தில் தயிர்க்காரிகள் தலையில் பிரிமணை மாதிரி ஒன்றை வைத்து அதன் மேல் தயிர்ப்பானையை வைத்துக் கொண்டு வருவார்கள் அல்லவா, அந்த மாதிரி ஒன்று அது, அதில் உருட்டிய ரொட்டியை வைத்து லாகவமாக தந்தூரி அடுப்பின் உள்ளே விட்டு பக்கவாட்டுச் சுவரில் தட்டி விடுவார்கள். சிறிது நேரம் ஆனதும் ஒரு இரும்புக் கம்பியை உள்ளே விட்டு ஒரு குத்து குத்தி எடுப்பார்கள். மேல் பாகம் – அதாவது நேரடியாக நெருப்பில் வெந்த பகுதி நரநரவென்றும், அடுப்பின் சுவரைத் தொட்டபடி ஒட்டிக் கொண்டிருந்த பகுதி மென்மையாகவும் இருக்கும். நடுவில் கம்பி குத்தி எடுத்த துளை தெரியும். எண்பதுகளில் அது ரூபாய்க்கு நான்கு. இப்போது என்ன விலை என்று தெரியவில்லை. சென்னையில் ஒரு ரொட்டி பத்து ரூபாய். ஆனால் அந்த டெல்லி ரொட்டி அல்ல; இங்கே அது ராட்டி மாதிரிதான் இருக்கிறது. தந்தூரி ரொட்டியைச் சாப்பிடுவதில் ஒரு நுணுக்கம் இருக்கிறது. தமிழர்கள் – பொதுவாகத் தென்னிந்தியர்கள் அந்த ரொட்டியிலேயே சப்ஜியைப் போட்டுக் குழப்பி, சோற்றில் சாம்பாரைப் போட்டுப் பிசைவது போல், சாப்பிடுவார்கள். பார்க்கவே கண்றாவியாக இருக்கும். ரொட்டியை அப்படிச் சாப்பிடவே கூடாது. அது ரொட்டிக்கு அவமானம். ரொட்டியில் ஒரு துளி சப்ஜி படக் கூடாது. ரொட்டியைப் பிய்த்து சப்ஜியைத் தொட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். சப்ஜி கையிலும் படாமல் எடுத்துச் சாப்பிட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், சாப்பிட்டு விட்டு இரண்டு உள்ளங்கையையும் ஒரு தேய் தேய்த்து விட்டு எழுந்து விடலாம். கையை நீர் கொண்டு சுத்தம் செய்யத் தேவையில்லாத வகையில் சாப்பிட வேண்டும். இப்படியே பதினைந்து ஆண்டுகள் சாப்பிட்டதாலோ என்னவோ ரொட்டிக்கு அடிக்ட் ஆகி விட்டேன். ஆனால் சென்னையில் தந்தூரி ரொட்டிக்கு ஆசைப்பட முடியாது என்பதால் ருமாலி ஓகே. ருமாலி ரொட்டியும் தந்தூரி ரொட்டி அளவுக்கு எனக்குப் பிடிக்கும். ருமாலி ரொட்டி செய்வதற்குத் தந்தூரி அடுப்பு அளவுக்குப் பெரிய ஏற்பாடுகளெல்லாம் தேவையில்லை. மாவைப் பிசைந்து உருட்டி (மாவில் எண்ணையே சேர்க்கக் கூடாது) தவாவில் கொஞ்சூண்டு நேரம் போட்டு எடுத்து உடனே கேஸ் அடுப்பு நெருப்பின் மேல் நேரடியாகப் போட்டு எடுத்து விடலாம். பூரி மாதிரி உப்பும். சுலபமாக பத்துப் பதினைந்து சாப்பிடலாம்.
ஆனால் எங்கே சாப்பிடுவது? சென்னையில் ருமாலி ரொட்டி எங்கே கிடைக்கும்? இங்கே என் வீட்டுக்குப் பக்கத்தில் லஸ் முனையில் பாம்பே ஹல்வா என்ற கடையில் கிடைத்துக் கொண்டிருந்தது. எத்தனையோ ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக இருந்த கடை அது. ஆமாம், இருந்த கடைதான். கச்சேரி ரோடு இருக்கிறதல்லவா? அங்கிருந்து நடந்தால் பெரிய மசூதி, அதை அடுத்து கச்சேரி, அதையும் தாண்டிச் சென்றால் லஸ் முனை. நாற்சந்தி. இடதுகைப் பக்கம் திரும்பினால் மட் ரோடு. நேராகப் போனால் கார்ப் பிள்ளையார் கோவில். கார் வாங்கினால் அங்கேதான் முதலில் பூஜை போடுவார்கள். விபத்து ஆகாது என்று நம்பிக்கை. அதையும் மீறி விபத்து நடந்தால் அது விதி. கார்ப் பிள்ளையார் கோவிலைத் தாண்டித்தான் நாகேஸ்வர ராவ் பூங்கா. இந்த இரண்டு சாலைகளையும் விட்டு விட்டு வலது புறம் திரும்பினால் விவேக் அண்ட் கோ வலதுசாரியில் இருக்கும். நீங்கள் வலது சாரியை விட்டு விட்டு இடதுசாரியில் நடந்தால் பாம்பே ஹல்வா கடையைப் பார்க்கலாம். வாசலில் நூறு ஆண்டுகளையும் கடந்து நிற்கும் ஒரு தூங்குமூஞ்சி மரம் அடையாளம். ஹல்வா கடை என்ற பெயர் இருந்தாலும் ஹல்வா போன்ற இனிப்பு வகைகளை விட வட இந்தியப் பதார்த்த வகைகள்தான் அங்கே பிரபலம். தஹி பல்லா, பானி பூரி, பேல் பூரி இப்படி.
அண்ணன் தம்பிகள் இருவர்தான் ஒருவர் மாற்றி ஒருவர் கடையை கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே சமயத்தில் இனிப்பையும் சாப்பிட வருபவர்களையும் கவனித்துக் கொள்வார்கள். ஒருநாள் ஒரு இளைஞன் ஆங்கிலத்தில் ஆர்டர் எடுத்தான். முதலாளியின் மகன் என்று பார்த்ததுமே தெரிந்தது. உடம்பு பூராவும் பணம் பேசியது. அப்போதே சந்தேகப்பட்டேன், கடை ரொம்ப நாள் நிற்காது என்று. மென் துறையில் இருந்தால் அவனே லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பான். இங்கே நாள் பூராவும் ருமாலி ரொட்டி கொடுத்தால் சிப்பந்திகளுக்கான ஊதியம் போக மாதம் அம்பதாயிரம் கூட நிற்காதே?
அடுத்த முறை போனபோது கடை இல்லை. இப்போது ருமாலி ரொட்டி கனவில் வந்து என்னைத் துன்புறுத்துகிறது. ஓ, முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்து விட்டேன் பாருங்கள். என் மனைவி இருக்கிறாளே பெருந்தேவி… அவள் என்னிடம் தீர்மானமாகச் சொல்லி விட்டாள். இதோ பார், உனக்கு நான் பன்றிக்கறி சமைத்துத் தருகிறேன், ஆட்டுக் கறி சமைத்துத் தருகிறேன், மாட்டுக்கறி சமைத்துத் தருகிறேன், மீன் கருவாடு எல்லாம் சமைத்துத் தருகிறேன். சப்பாத்தி மட்டும் கேட்காதே.
அது என்ன கருமமோ தெரியவில்லை. சப்பாத்தி போடுவது அவ்வளவு கஷ்டமாம். இவ்வளவுக்கும் சப்பாத்திக்கு மாவு பிசைவது நான். பிசைவதில்தான் நுணுக்கமே இருக்கிறது. தயவுசெய்து ரெண்டு அர்த்தம் வேண்டாம் நண்பர்களே. நான் இப்போது ரொம்பவே திருந்தி விட்டேன். சப்பாத்தியை உருட்டி அடுப்பில் போட்டு எடுத்துக் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதுதான் கஷ்டமாம். சரி, இவ்வளவு செய்கிற நீயே அதையும் செய்து கொள்ள வேண்டியதுதானே என்று நீங்கள் கேட்கலாம். அது மட்டும் சாத்தியமே இல்லை. சாப்பிட்டுக் கொண்டே சம்போகம் செய்ய முடியுமா? அடப்பாவி, இப்போதுதானே திருந்தி விட்டதாகச் சொன்னேன்? சரி, ஹேங்க் ஓவர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இன்னொரு பெரிய பிரச்சினை என்ன தெரியுமா? ருமாலி ரொட்டியையோ தந்தூரி ரொட்டியையோ ஆறின பின் சாப்பிட முடியாது. கிழவி முலை மாதிரி ஆகி விடும். தந்தூரி ரொட்டியாக இருந்தால் இன்னும் ஒரு விஷயம் கூடுதல். கரம் (சூடு) மட்டும் இல்லை; நரம் வேண்டும். கொஞ்சம் ஆறிப் போய் விட்டால் தந்தூரி ரொட்டி ரப்பர் மாதிரி ஆகி விடும். நரம் நரம் தேதோ பாய் என்பார்கள். (முறுகலாகக் கொடு சகோதரனே!) ருமாலியில் முறுகலுக்கு வேலை இல்லை. அது பதினெட்டு வயதுப் பெண்ணின் விரல் போல் மென்மையாக இருக்கும். ஆனால் சூடாக இருக்க வேண்டும். அதனால் ஒருவர் போட ஒருவர் சாப்பிடுவதுதான் முறை.
கொஞ்ச நாள் முந்தி என் நண்பரிடம் இதையெல்லாம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தேன். பூ, இவ்வளவுதானே, நாளை என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தார். சப்பாத்தி கண்ட இடம் சொர்க்கம். போனேன். அட பகவானே. ருமாலி என்று பெயர் வந்ததே மெல்லிய கைக்குட்டை போல் இருக்கிறது என்பதால்தான். ஆனால் நண்பர் வீட்டு ருமாலியோ தோசைக்கல் கணக்காக இருந்தது. கணவனும் மனைவியும் இந்த ருமாலி ரொட்டியைத்தான் டிஸ்கஸ் த்ரோ போட்டு விளையாடுவார்கள் போலிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து மாடு அசை போடுவது போல் மென்று சாப்பிட்டு விட்டு வந்தேன். இனிமேல் சப்பாத்தி, ருமாலி ரொட்டி, தந்தூரி ரொட்டி பற்றி யாரிடமும் வாய் திறப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.