சினிமாவுக்கு வசனம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரு

பாரிசிலிருந்து வெளிவரும் சிற்றிதழ் ஒன்றில் உதவியாசிரியராக பணிபுரிகின்றேன்.  உங்களுடைய பெரும்பாலான புத்தகங்களை படித்திருக்கின்றேன்.  தினம்தோறும் உங்கள் வலைமனையை வாசித்தும் வருகின்றேன்.

எந்திரன் பாகம் இரண்டு தொடங்கிவிட்டார்கள்.  அதற்கு நீங்கள் ஏன் வசனம் எழுதவில்லை?  அது இருக்கட்டும்.  பொதுவாகவே நீங்கள் ஏன் சினிமாவில் வசனம் எழுதுவதில்லை?

நகுலேஸ்வரன்

டியர் நகுலேஸ்வரன்,

பதில் ரொம்ப சுலபம்.  அடிக்கடி இந்தக் கேள்விக்கு பதிலும் சொல்லியிருக்கிறேன்.

உலகிலேயே தமிழர்கள் மட்டுமே புத்தகங்களை வெறுப்பவர்களாக இருக்கிறார்கள்.  வெறுப்பு என்றால் அப்படி இப்படி இல்லை.  கொலைவெறி.  இங்கேதான் 500 புத்தகம் எழுதிய ஒருவர் ஒரு சினிமா இசையமைப்பாளரின் கால்களைத் தொட்டு வணங்க வேண்டியிருக்கிறது.  இது போன்ற காரியங்கள் எல்லாமே ஒரு செய்தியை சூகசமாக வெளிப்படுத்துகின்றன.  ஓ, இவர் ரொம்ப நல்ல மனிதர்,  பண்பட்ட மனிதர்,  சாந்தமானவர் என்பதே அச்செய்தி.   அரசியல்வாதி தன் தலைவரின் காலில் விழுவதோடு இதை ஒப்பிடக் கூடாது.  ஒப்பிடவும் மாட்டார்கள்.  அரசியல்வாதிகளின் காரியங்கள் ஆபாசம் என்று எல்லோருக்குமே தெரியும்.  ஆனால் எழுத்தாளன் அப்படிச் செய்யும் போது அது ஒரு சமிக்ஞை.  அந்த எழுத்தாளர் பற்றிய ஒரு நற்செய்தியை அது வழங்குகிறது.  ஆனால் நான் சொல்ல வந்தது அதை அல்ல.  500 புத்தகம் எழுதிய ஒரு எழுத்தாளர் ஒரு சினிமா இசையமைப்பாளர் காலில் விழுகிறார் என்றால் அது புத்தகங்களின் மதிப்பு தெரியாத ஒரு தேசத்தில் மட்டுமே நடக்கும்.  வேறு தேசமாக இருந்தால் அந்த இசையமைப்பாளர் பதறிப் போயிருப்பார்.  ஆனால் இங்கோ அதை அந்த இசையமைப்பாளர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட விஷயமாக எடுத்துக் கொண்டிருப்பார்.  நான் அவரைச் சந்திக்க நேர்ந்து அவர் காலில் விழாவிட்டால்தான் அவருக்கு ஆச்சரியமாக இருக்கும்.   ரமணர் ஒரு சினிமா இசையமைப்பாளரின் காலில் விழுவாரா?   எழுத்தாளன் என்பவன் ஒரு ஞானியைப் போன்றவன்.  அவனுக்குக் குடும்பம் கிடையாது.  அவனுக்குத் தன் எழுத்தைத் தவிர வேறு சொத்து எதுவும் கிடையாது.  அவனுடைய உயிர்மூச்சே எழுத்துதான்.  இப்படிப்பட்ட எழுத்தாளர்களே தமிழ்நாட்டில் வயிற்றுப் பிழைப்புக்காக அரசு உத்தியோகம், வங்கி உத்தியோகம் என்று ஏதோ ஒரு அடிமை வேலையைச் செய்ய வேண்டியிருக்கிறது.    மேலைநாட்டு எழுத்தாளர் யாரும் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக இப்படி எழுத்தைத் தவிர வேறு தொழில் செய்வதில்லை.  இந்தியாவிலேயே கூட பெரும்பாலும் இந்த நிலை இல்லை.  அமிதாவ் கோஷின் ஒரே வேலை எழுத்துதான்.

மேலே குறிப்பிட்ட அரசு வேலை, வங்கி வேலை ஒரு வேலைதான் வசனம் எழுதுவதும்.  மலையாளத்தில் எம்.டி.வாசுதேவனின் நாயரின் இரண்டு டஜன் கதைகள் சினிமாவாக மாறியிருக்கின்றன. அதற்கு அவர் வசனம் எழுதினார்.  அது வேறு.  இங்கே நடப்பது வேறு.  இங்கே ஒரு உதவி இயக்குனர் செய்வதையே மிகப் பெரும் எழுத்துலக ஆளுமைகள் செய்ய வேண்டியிருக்கிறது.  ஒரு உதவி இயக்குனர் எப்படி வசனம் எழுதுவாரோ அதே வசனத்தைத்தான் எழுத்தாளரும் எழுதுகிறார்.  இதில் கிடைக்கும் ஒரே அனுகூலம், அரசாங்க வேலையில் ஆயுள் பூராவும் உழைத்தாலும் இவ்வளவு பணம் கிடைக்காது.  சினிமா வசனத்தில் ஒரே படத்தில் சில லட்சங்கள் கிடைக்கும்.  ஆனாலும் சில ’பெரிய’ இயக்குனர்கள் சம்பளமே கொடுப்பதில்லை என்று கேள்விப்படுகிறேன்.  படத்துக்கு வசனம் எழுதுவதால் கிடைக்கும் விளம்பரமே சம்பளம் போல.  ஆனால் ஷங்கர் விதிவிலக்கு.   பேசிய சம்பளத்தைக் கொடுத்து விடுவார்.  சம்பளமும் அதிகம்.  மிக நேர்மையானவர்.  (படம்தான் குப்பை; அது வேறு விஷயம்.)

படங்களுக்கு வசனம் எழுதுபவர்கள் சினிமா விமர்சனம் செய்ய முடியாது என்பதோடு பல குப்பையான படங்களையும் காவியம் ஓவியம் என்றெல்லாம் பொய் சொல்ல வேண்டும்.  அதெல்லாம் எனக்கு ஆகாது.  மேலும், ஷங்கரின் எந்திரனை நான் மிகக் கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறேன்.  கடைசியாக வந்த விக்ரம் நடித்த ஒரு குப்பையையும் குப்பை என்று திட்டி எழுதினேன்.  இப்படிப்பட்ட ஒருவனை வசனம் எழுத அழைப்பார்களா?  வசனம் எழுதுவது இருக்கட்டும்.  பல சினிமா பிரபலங்கள் என்னைக் கண்டாலே பார்க்காதது போல் ஒதுங்கிப் போய் விடுகிறார்கள்.  கமல், இளையராஜா போன்ற பெரிய பெரிய legends-க்கே ஆகாதவனும், அவர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டிருப்பவனுமான எனக்கு அவர்கள் வணக்கம் சொன்னால் அவர்களின் தொழிலுக்கு அது ஆபத்தாகி விடும்.  சமீபத்தில் ஒரு துணை இயக்குனர் ஹீரோவின் கையில் என் புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார்.  ஹீரோ படிக்கும் பழக்கம் உள்ளவர்.  நேர் வாழ்வில் அல்ல சாமி, படத்தில்.  உடனே அங்கு ஓடி வந்த இயக்குனர், உதவியிடம் ”ஏனப்பா, நான் நல்லா வளர்ந்து வருவது உனக்குப் பிடிக்கவில்லையா, நீ சாரு வாசகன் என்பது எனக்குத் தெரியும்; என் பொழைப்பைக் கெடுக்காதே, வேறு புத்தகம் இருந்தால் கொடு; ஜெயமோகன், எஸ்.ரா. புத்தகம் இருந்தால் கொண்டு வா” என்று சொன்னாராம்.  இப்படிப்பட்ட சூழலில் நான் வசனம் எழுதுவது என்பது கற்பனையில் கூட நடக்காத விஷயம்.

இன்னொரு முக்கியமான விஷயம்.  ஆங்கிலத்திலும் எல்லோருடைய புத்தகங்களும் லட்சக் கணக்கில் விற்பதில்லை.  ஆயிரங்களில்தான் விற்கின்றன.  ஆனால் ஒரு எழுத்தாளனின் 40 வயதுக்குள் முப்பது நாற்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள இலக்கியப் பரிசு கிடைத்து விடுகிறது.  காலச்சுவடு கண்ணன் ஒரு கூட்டத்தில் பேசினார்.  அவர் அடிக்கடி சர்வதேசப் புத்தகச் சந்தைகளில் கலந்து கொள்பவர்.  அவர் ஒரு வெளிநாட்டுப் பதிப்பாளரிடம் பேசிக் கொண்டிருந்த போது புதுமைப்பித்தன் பற்றிப் பேச்சு வந்துள்ளது.  அவர்கள் மொழியில் மொழிபெயர்ப்பு செய்வது குறித்து.  புதுமைப்பித்தன் பற்றி அவர் விசாரிக்கிறார்.  எவ்வளவு பரிசு வாங்கியிருக்கிறார்; எத்தனை லட்சம் விற்றிருக்கிறது.  எந்தப் பரிசும் வாங்கியதில்லை என்று கண்ணன் சொல்லவும் அவர், தமிழின் நம்பர் ஒன் எழுத்தாளர் என்கிறீர்கள்; எந்தப் பரிசும் வாங்கியதில்லையா?  என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

இதுதான் தமிழின் நிலை.  ஆ. மாதவனுக்கு அவருடைய 82-ஆவது வயதில் சாகித்ய அகாதமி பரிசு கொடுத்திருக்கிறது.  20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பரிசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

மீண்டும் உங்கள் கேள்விக்கே வருகிறேன்.  வசனம் எழுதினால் காசு கிடைக்கும்.  இப்படிப் பிச்சை எடுத்து வாழ வேண்டிய அவசியம் இராது.  ஆனால் அதற்கு நான் வாயையும் கையையும் மூடிக் கொண்டிருக்க வேண்டும். சினிமா பற்றி எதுவும் பேசக் கூடாது.  எதுவும் எழுதக் கூடாது.  பிச்சையை விடக் கேவலமான தொழில் ஏதாவது இருந்தால் கூட செய்வேனே தவிர எழுதாமலும் பேசாமலும் என்னால் இருக்க முடியாது.  பணத்தை விட சுதந்திரம் பெரிது.  ஆனால் சில பேருக்கு அவர்களது ரசனை உணர்வோடு தமிழ் சினிமா ஒத்துப் போகிறது.  பாலாவின் படங்கள் அவர்களுக்குக் காவியமாகத் தெரிகின்றன.  ஃபைன்.  எனக்கு அனுராக் காஷ்யப் தான் ஒத்துப் போவார்.  ஆனால் அதற்கு நான் மும்பையில் வசிக்க வேண்டுமே?  மேலும், ஒரு எழுத்தாளன் தன் பிழைப்புக்காக வசனம் எழுத நேர்வதை சமூக அவலம் என்றே கருதுகிறேன். சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.  அது எழுத்தாளனின் தவறு அல்ல; சமூக அவலம்.

சாரு