ஆ. மாதவன்

தினமணி இணைய இதழில் இந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி ஆ. மாதவன் பற்றி எழுதியிருந்தேன்.  பிறகு உடனேயே அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் பலரிடமும் அவரது தொலைபேசி எண்ணைக் கேட்டேன்.  ஜெயமோகனைக் கூட தொடர்பு கொண்டு கேட்டேன்.  ஆனால் அவர் அப்போது கனடாவில் இருந்தார்.  அதற்குப் பிறகு பழுப்பு நிறப் பக்கங்களின் மற்ற எழுத்தாளர்களில் மூழ்கி விட்டேன்.  இருந்தாலும் அவ்வப்போது அவரைத் தொடர்பு கொள்வது சம்பந்தமாக முயற்சி செய்து கொண்டே இருந்தேன்.  திருவனந்தபுரத்தில் இருக்கும் என் நண்பரும் மலையாள எழுத்தாளருமான இந்துகோபனிடம் கேட்டேன்.  அவருக்கும் தெரியவில்லை.  இன்னும் பல மலையாள எழுத்தாளர்களைத் தொடர்பு கொண்டேன்.  யாருக்கும் ஆ. மாதவனின் பெயர் கூடத் தெரிந்திராததால் அவர்களிடம் கொஞ்சம் கடுமையாகவே பேசினேன்.  ”50 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் இருக்கிறார்.  மலையாளத்திலிருந்து முக்கியமான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.  அதைவிட தமிழின் மிக முக்கியமான படைப்பாளி.  உங்கள் ஊரில் வசிப்பர் பற்றியே உங்களுக்குத் தெரியவில்லையே?”  ஆனால் பத்திரிகைகள் மூலமாக எளிதில் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று இப்போது புரிகிறது.

இவ்வளவு தீவிரமாக அவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நான் தேடியதன் காரணம், நான் அவரைப் பற்றி எழுதியதை அவர் வாசிக்க வேண்டும் என்ற ஆசைதான்.  வாழ்நாள் பூராவும் அவரது இடம் அவருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.  ஆனால் அவருக்குத் தன் எழுத்து பற்றித் தீர்மானமான கருத்து இருக்கிறது.  அது என்னுடைய கருத்தோடு ஒத்துப் போகிறது.  தமிழில் விளிம்பு நிலை மக்கள் பற்றி எழுதிய தலையாய எழுத்தாளர் அவர்தான்.  அவருக்கு அடுத்துதான் ஜி.நாகராஜன், ஜெயகாந்தன் எல்லாம்.

கடைசியாக அவருக்கு சாகித்ய அகாதமி கொடுத்து விட்டார்கள்.  மறுநாள் இந்துவில் அவர் பேட்டியைப் பார்த்ததும்தான் அவருடைய ஃபோன் நம்பரைப் பிடித்தேன்.  ஒருநாள் பூராவும் engaged ஆக இருந்தது.  விருது கிடைத்ததற்காகப் பாராட்டுகிறார்கள் போல.  மறுநாள் கிடைத்து விட்டார்.  நான் நினைத்தது போலவே தினமணியில் அவர் குறித்து நான் எழுதியதை அவர் படித்திருக்கவில்லை.  அது அவருடைய பார்வைக்கே செல்லவில்லை.  என்ன வருத்தம் என்றால், அவரைப் பற்றி விமர்சனமாக  இருந்திருந்தால் மறுநாளே அவரிடம் தகவல் சொல்லியிருப்பார்கள்.  (சார், உங்களை அந்த சாரு திட்டியிருக்கான்)  ஆனால் பாராட்டை யார் பொருட்படுத்துகிறார்கள்?  அதில் என்ன த்ரில் இருக்கிறது?

இந்த மாதம் 30, 31 தேதிகளில் வர்கலா போக இருக்கிறேன்.  அப்போது நேரில் வருவதாகச் சொன்னேன்.  இப்போது ஜூன் மாதம் தினமணியில் எழுதிய கட்டுரையை உங்களுக்காகத் தருகிறேன்.

ஆ. மாதவன்

First Published : 21 June 2015 10:00 AM IST

1934-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்து இப்போதும் அங்கேயே வாழ்ந்து வரும் ஆ. மாதவன் பள்ளி இறுதி வகுப்பு வரை மலையாளக் கல்வி கற்றவர். ஆதலால் தமிழோடு மலையாள இலக்கியமும் அறிந்தவர். 1974-ல் புனலும் மணலும் என்ற முதல் நாவல் வெளிவந்தது. அடுத்து வந்த கிருஷ்ணப் பருந்து என்ற நாவல் பலராலும் சிலாகிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். காரூர் நீலகண்ட பிள்ளையின் சன்மானம் (1974) என்ற நாவலையும், பி.கே. பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும் (2002) என்ற நாவலையும் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார்.

1985-ம் ஆண்டு ஒருநாள், கலைஞன் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த மாதவன் கதைகள் என்ற தொகுப்பை வாங்கினேன். வாங்கியவுடன் துரதிர்ஷ்டவசமாக அதன் முன்னுரையைப் படித்து விட்டு புத்தகத்தை மூடி வைத்து விட்டேன். பதினாறு பக்கங்கள் நீண்டிருந்த அந்த முன்னுரையில் ஆ. மாதவனுக்கு ஒரு பத்தி மட்டுமே. அதிலும் ‘புதுமைப்பித்தனுக்கும் ஜி. நாகராஜனுக்கும் இடைப்பட்ட ஒரு யதார்த்தவாதியாக ஆ. மாதவனைச் சொல்லலாம்’ என்று ஆரம்பித்தது அந்தப் பத்தி. சுந்தர ராமசாமி எழுதியிருந்த முன்னுரை. அதோடு அந்தப் புத்தகத்தை முப்பது ஆண்டுகள் கழித்தே திறந்தேன். முழுத்தவறும் என்னுடையதே. முன்னுரையைப் படித்து விட்டு முடிவுக்கு வந்திருக்கக் கூடாது. எனக்கு புதுமைப்பித்தனும் பிடிக்காது; ஜி. நாகராஜனும் பிடிக்காது என்பதால் நேர்ந்த விபத்து அது. இப்போது படிக்கும்போதுதான் எப்பேர்ப்பட்ட மகத்தான கலைஞனை நாம் தெரிந்து கொள்ளாமல் போய் விட்டோம் என்று நொந்து கொண்டேன். பிறகு ஆ. மாதவன் எழுதிய எல்லா நூல்களையும் வாங்கிப் படித்தேன். இன்னும் அவர் செய்த மொழிபெயர்ப்புகளை மட்டுமே படிக்கவில்லை.

மேலே குறிப்பிட்ட சுந்தர ராமசாமியின் முன்னுரை நீங்கலாக இதுவரை ஆ. மாதவன் பற்றி இரண்டே பேர்தான் விரிவாகவும் ஆழமாகவும் எழுதியிருக்கின்றனர். ஜெயமோகன், சுகுமாரன். எழுதியதோடு மட்டும் அல்லாமல் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் மூலம் மாதவனுக்கு விருது வழங்கியும் கௌரவித்திருக்கிறார் ஜெயமோகன். தமிழ்ச் சமூகம் செய்யத் தவறிய ஒரு காரியத்தைத் தனி ஒருவராகச் செய்து வரும் ஜெயமோகனுக்கு என் பாராட்டுக்கள். அதோடு மாதவனைச் சந்தித்து அவருடனான நீண்ட ஒரு நேர்காணலையும் வெளியிட்டிருக்கிறார் ஜெயமோகன். மாதவனின் எழுத்து உலகினுள் நுழைவதற்கு இந்த நேர்காணல் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தது. (பின் இணைப்பில் காண்க.) அந்த வகையிலும் நான் ஜெயமோகனுக்குக் கடன் பட்டிருக்கிறேன்.

ஜெயமோகனையும் சுகுமாரனையும் தவிர வேறு யாரும் மாதவனை சரியான முறையில் தமிழ் இலக்கியச் சூழலுக்கு அறிமுகம் செய்யவில்லை. தேர்ந்த உலக இலக்கிய வாசிப்பு உள்ள சுந்தர ராமசாமி தன் முன்னுரையில் மாதவனுக்குரிய நியாயத்தைச் செய்திருக்க வேண்டும். தவறி விட்டார். ஆனால் சு.ரா.வின் பள்ளியிலிருந்து வந்த ஜெயமோகன் அதைப் பிரமாதமாகச் செய்திருக்கிறார். மாதவனின் சிறுகதைகளில் ஆகச் சிறந்தது எட்டாவது நாள். மட்டுமல்ல; தமிழ் நாவலில் புயலிலே ஒரு தோணி எப்படி ஒரு சிகர சாதனையோ அப்படி ஒரு சாதனை எட்டாவது நாள். இதை மிகச் சரியாகப் பிடித்திருக்கிறார் ஜெயமோகன். மாதவனுடனான நேர்காணலில் ஜெயமோகன் எட்டாவது நாள் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்:

‘உங்களுடைய மிகச் சிறந்த குறுநாவல்களில் ஒன்று எட்டாவது நாள். சாளைப் பட்டாணியின் வாழ்க்கையும் மரணமும் தமிழிலக்கியத்தில் பதிவான உக்கிரமான இருத்தலியல் சித்தரிப்பு என்று நான் நினைக்கிறேன்.’

மாதவனின் கதைகளை அணுகுவதற்கு இது ஓர் ஆரம்பப் புள்ளி. ஜெயமோகன் எவ்வாறு இந்த முடிவுக்கு வந்தார் என்பதற்கு மாதவன் பற்றிய அவரது இன்னொரு கட்டுரையில் விடை இருக்கிறது. அந்தப் பகுதி:

‘ஆ.மாதவனை இயல்புவாத அழகியல் கொண்டவர் என்றேன். இயல்புவாதம் வாழ்க்கையைச் சுருக்கிப் பார்க்கிறது. முடிந்தவரை இறுக்கி அழுத்தி என்ன மிச்சமென்று பார்க்கிறது. உலகமெங்கும் அதன் விடை என்பது மனிதர்கள் காமகுரோதமோகங்களால் மட்டுமே ஆனவர்கள் என்பதே. மனிதன் என்ற விலங்கு தன் சமூகபாவனைகளுக்கு அடியில் அடிபப்டை விலங்கிச்சைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதே. ஆ.மாதவனும் அதையே தன் ஆக்கங்கள் வழியாகச் சொல்கிறார். அவரது கதைகள் அனேகமாக அனைத்துமே காமத்தாலும் வன்முறையாலும் பசியாலும் ஏமாற்று வித்தைகளாலும் தீர்மானிக்கப்படும் வாழ்க்கைத் தருணங்களாக உள்ளன.

இந்த மக்களைக் கவனிக்கையில் இவர்கள் அனைவருமே ஏதேனும் ஒருவகையில் வாழ்க்கையைக் கொண்டாடுகிறார்கள் என்ற எண்ணம் எழுகிறது. நேற்று இல்லாத, நாளை இல்லாத மக்கள். ஆகவே இன்று என்பது சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஒரு கொண்டாட்டம்தான். ஜாளி மணியன் என்ற பெயரே அந்தச் சித்திரத்தை மனதில் உருவாக்குகிறது. சாளைப் பட்டாணியின் வாழ்க்கை என்பதே எத்திச் சேர்க்கும் பணத்தைத் தின்றும் குடித்தும் போகித்தும் கொண்டாடித் தீர்ப்பதுதான்.’

கிட்டத்தட்ட இருத்தலியலின் சாரத்தை இந்த மேற்கோளிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளலாம். என்றாலும் ஜெயமோகனின் இந்த அவதானம் மாதவனின் கதாபாத்திரங்களுக்குப் பொருந்தாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், இருத்தலியலின் அடிப்படை ‘இந்தக் கணத்தைத் தீவிரமாக வாழ்’ என்பதாக இருந்தாலும் இருத்தலியல் முழுக்க முழுக்க அறம் (moralistic and ethical) சார்ந்தது. கடவுள் இறந்து விட்டார் (நீட்ஷே) அல்லது Existence precedes Essence (ஜான் பால் சார்த்தர்) ஆகியவற்றைப் பார்த்து விட்டு பலரும் இருத்தியல் அறத்துக்கு எதிரானது என்று நினைக்கின்றனர். ஆனால் இருத்தலியல் மிகத் தீவிரமான அறம் சார்ந்த சிந்தனை. அது உங்கள் மீது கடமையையும் குற்ற உணர்ச்சியையும் சுமத்துகிறது. சார்த்தர் சொல்லும் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு ஃப்ரெஞ்சுக்காரன் தன்னுடைய விதவைத் தாயைத் தனியாக விட்டு விட்டு விடுதலைப் படையில் சேர நினைக்கிறான். படையில் சேர்ந்தால் தாய் அனாதை. சேராவிட்டால் தேசத் துரோகி. நாடா? வீடா? இது போன்ற கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே போகிறார் சார்த்தர்.

ஆனால் எட்டாவது நாளில் வரும் சாளப் பட்டாணிக்கு இது போன்ற எந்தக் கேள்விகளும் இல்லை. இன்று என்ற இருத்தலியல் தருணத்தில் வாழ்ந்து கொண்டாடும் மனிதன் தான் அவன் என்றாலும் அவனிடம் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை; எந்தக் கேள்வியும் கடமையும் இல்லை. கிட்டத்தட்ட 300 பக்க புத்தகமாக வரக் கூடிய அளவுக்குத் தேவையான தத்துவச் சிக்கல்களைத் தன்னில் கொண்டிருக்கும் 50 பக்கக் குறுநாவல் எட்டாவது நாள். அதில் வரும் சாளப் பட்டாணியின் வாழ்க்கையைப் பற்றி மாதவன் விவரிக்கிறார்:

‘நாப்பத்தி அஞ்சோ – நாப்பத்தியாறிலேயோ மொகரம் – பெறைக்கு, மேட்டுக் கடை ஊச்சாளி மைதீன் வந்து, ‘பட்டாணீ! கடுவா புலி வேஷம் போடுதீரா?’ன்னு கேட்டான். போடுதீரான்னு கேட்டா, அதிலெ பின்னெ மறுப்பென்ன இருக்கு? பெறை பத்து நாளும் கடுவா புலி வேஷமும் தண்ணியடியும். ஒருத்தரும் கேக்க மாட்டா, இஷ்டம் போல ஆடலாம். ஒன்பது கிடாய் ஆட்டைப் பல்லு கொண்டு கடிச்சு எறிஞ்சது அப்போதான். அன்னைக்கு எட்டாம் பெறை. பாளையத்திலிருந்தும், மேட்டுக் கடையிலிருந்தும் ஒவ்வொருத்தனும் வேஷங்களெப் போட்டுக் கொண்டு வந்து கடையிலே, அங்கனே இங்கனே நின்னு கொட்டி முழக்கீட்டு ஆடுதான். செண்டையும், சேங்கலையும் ஒரு பெகளம்தான். (பெகளம் – ரகளை)

ஆகாசமும் பூமியும் தொடாமெ பாஞ்சு பாஞ்சு ஆடினேன். ஊச்சாளியும் விடல்லே. ஒற்றைக்கு நின்னு தகர்த்து ஆடினான்… பாத்திரக் கடை நாயர் முதலாளி கிடாய்க்கு ஆள் அனுப்பி சம்பக் கடையிலிருந்து ரெண்டு கிடா வந்தது. இடுப்பளவு வரும் ஒவ்வொரு கிடாயும். கண்டா நேர்ச்சைக் கிடா மாதிரி ஒவ்வொண்ணும் ஒரோரு எருமை மாடு தண்டி உண்டும் – களி முறுக்கேறி நிக்கக் கூடிய வேகம். கிடாயைக் கொண்டு விட்டதுதான் தாமதம். ஒரே பாய்ச்சல்… அடக்கி முதுகிலெ ஒரு கவ்வல். கிடா ம்மேன்னு ஒரு விளி… ஆடு தலைக்கு மேலே ஒயர்ந்து பின்னாலே ஆறடி தள்ளீப் போய் விழுந்து பிடைக்குது.

அமீன் ஹோட்டல்காரன் ஓட்டலிலே எறச்சிக்காக நிறுத்தியிருந்த நாலு கிடாயைக் கொண்டு வந்து நிறுத்தினான். கிடா முன்னெ வந்ததுதான் தாமசம்… கறண்டு அடிச்சது போல, நாலெண்ணத்தையும் கை தொடாமே கடிச்சு எறிஞ்சேன். கூட்டத்திலே சடபுடான்னு கையடியும் சீட்டியடியும் பெகளம். செண்டை மேளம் வெளுத்து வாங்குது. பெறவென்னடான்னா ஒரு மணிக் கூறிலெ எண்ணிக் கொண்டு ஒம்பது கிடா கடிச்சு எறிஞ்சிருக்கேன்.’

இதுதான் சாளப் பட்டாணி. ஆறடி உயரம் கொண்ட கருத்த உருவம். இவனுக்கு இவன் கடித்தெறியும் கடா ஆடுகளும் ஒன்றுதான், பெண்களும் ஒன்றுதான் என்பதற்கு இன்னொரு காட்சி. ஒரு இரவில் பட்டாணி பஸ்ஸை விட்டு இறங்கி நடக்கும் பெண் ஒருத்தியைப் பார்க்கிறான். இவன் பேச அவளும் பேசுகிறாள். அவளை அழைத்துக் கொண்டு தன் சிநேகிதனின் அறைக்கு வந்து விட்டுவிட்டு அவனையும் அழைத்துக் கொண்டு, இடையில் இன்னொருத்தனையும் சேர்த்துக் கொண்டு மூவரும் சாராயத்தையும் இறைச்சியையும் வாங்கிக் கொண்டு அறைக்கு வரும் போது மணி ஒன்று. இனி பட்டாணியே சொல்கிறான்:

‘நான், கொச்சப்பி, மேனவன் – மூணு பேரும் சேர்ந்தாச்சு. வெளுக்க வெளுக்க ஒரோருத்தராயிட்டு மாறி மாறிப் போனோம். ‘வெள்ளமும்’ சோறும் எறச்சியும் – கேக்கணுமா? பின்னெ நடந்ததெல்லாம் தீபாளிதான்… நேரம் விடிய ஆரம்பிச்சு நான் பார்த்தப்போ சரக்குக்குப் போதமில்லே. போதமில்லாட்டா என்ன? கடைசியா ஒருக்கக் கூட நான் போனேன்… சங்கதியெல்லாம் முடிஞ்சு பெண்ணெ எளுப்பினப்போ… அவ்வளவுதான்! ஆள் இல்லே. குளோஸ்! தீர்ந்தது!

இப்போ ஆலோசிக்கும்போ ஒண்ணும் தோணலெ. வருஷமெத்தரை ஆச்சுது. இருவதுக்கு மேலே இருக்குமே. கடைசீல செய்த காரியம்தான் பயங்கரமான ரெண்டு மத்த காரியம். இப்போ அந்த மாதிரியொண்ணும் செய்துக்கிட முடியாது. போலீஸ் நாயும், சிஐடிகளும் எவ்வளவோ இருக்கு. அனங்கிக்கிட முடியாது. ஆனா அப்போ செய்தா செய்ததுதான். படைச்சவன் கூட அறியாம சங்கதியெ மறச்சிரலாம். சரக்கு பிரேதம் ஆயிப் போச்சுன்னு அறிஞ்சதும் கொச்சப்பி பின்னே ஆலோசிக்க நிக்கலே. நாய்களெ அடச்சுக் கொண்டு போகக் கூடிய வண்டியெ கொண்டு வந்தான். கருமடத்துலெ உள்ள ஒரு ஈச்சைக்குக் கூடெ சங்கதி தெரியாது. பிரேதத்தைப் பெட்டிக்குள்ளே வெச்சு – கறண்டடிச்சுக் கொல்லும் நாய்களெ குழிச்சு மூடியிடக் கூடிய குடப்பனைக்குன்னு மணல் தேரிக்குக் கொண்டு வந்தான். சூரியன் உதிச்சு, நல்ல வெட்டம் வெச்சு வந்தப்போ சங்கதியெல்லாம் மங்களம்!’ (கொச்சப்பு என்பவன் தெருநாய்களைப் பிடித்து மின்சாரம் பாய்ச்சிக் கொன்று புதைக்கும் நகரசபை வேலை செய்யும் கூலியாள்.)

இந்தச் சம்பவத்தில் குற்ற உணர்ச்சியோ, செய்யலாமா வேண்டாமா என்பது போன்ற அறம் சார்ந்த உணர்வுகளோ எதுவுமே இல்லை. செய்து முடித்த பிறகும் இல்லை. வனத்தில் காம இச்சையுடன் திரியும் மிருகம் கூட இஷ்டமில்லாவிட்டால் இணையோடு சேராது. எனவே பட்டாணியை மிருகத்தோடும் ஒப்பிட முடியாது. அவன் செய்யும் வேடிக்கையான விளையாட்டு இன்னொன்றைப் பாருங்கள்:

‘சம்பக் கடையிலுள்ள எறச்சிக் கடையிலே வெட்டுக்காரனா இருக்கும்போ எத்தரையோ எச்சில் நாய்களெ, எறச்சி வெட்டும் கத்தியினாலே – முதுகிலெயும் வாலிலெயும் வெட்டியிட்டுண்டும். அப்போ அது ஒரு ஜாலி. வெட்டுக் கொண்டதும் நாயி குய்யோன்னு விளிச்சுக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட ஓடிப் போறதைக் காணத் தமாஷாயிருக்கும். சம்பக் கடைக்கு மீன் வாங்க வரும் பொம்பிளைங்கள் எல்லாம், சாமதுரோகி… கை புழுத்துப் போகும்’பாங்க…’

மாதவனின் உலகத்தை ஜெயமோகனை விட சுகுமாரன் சரியாக அவதானித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. புனலும் மணலும் முன்னுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார் சுகுமாரன்:

‘தீமையும் மனித இயல்புதான் என்ற அடிப்படையில் உருவாவதுதான் மாதவனின் படைப்புகள்… தனது சமகால எழுத்தாளர்களிடமிருந்து ஆ. மாதவனைத் தனித்து நிறுத்தியது மனித மனதின் இருள் வெளிகளை ஆராயும் முனைப்புத்தான். இந்த நோக்கில் மாதவனின் படைப்புலகம் அவர் ஆற்றலுடன் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் அணுகப்படவில்லை. வெறும் நடப்பியல் எழுத்தாளராகவும் வட்டார வழக்கைப் படைப்பில் திறம்படக் கையாண்டவராகவும் மட்டுமே கருதப்பட்டிருக்கிறார். அவரது முழுக் கதைகளின் தொகுதிக்கு ஜெயமோகன் எழுதியுள்ள பின்னுரையே ஆ. மாதவனை மதிப்பிடும் முதலாவது விமரிசன முயற்சி. ஆனால் அறம் அறமின்மை அல்லது நன்மை தீமை என்ற கருத்து நிலைகள் பற்றிய தனது விளக்கங்களை உரைத்துப் பார்க்கத் தோதான கல்லாக மாதவனின் படைப்புலகை ஜெயமோகன் பயன்படுத்திக் கொள்ளுகிறார் என்ற சந்தேகத்தையும் குறிப்பிட்ட அணுகுமுறை ஏற்படுத்தாமல் இல்லை.

மாதவனின் படைப்புலகில் அறம் பற்றிய எந்த அலட்டலும் இல்லாமலேயே மனிதனின் சுபாவம் சித்தரிக்கப்படுகிறது. அது தீமை எனில் இயற்கை; நன்மை எனில் அதுவும் இயற்கை என்ற பாரபட்சமற்ற பின்னணியிலேயே உருவாகிறது அந்த உலகம்.’

ஒரே வாக்கியத்தில் சொல்வதானால் ஆ. மாதவனின் படைப்புலகை தீமையின் அழகியல் என்று சொல்லலாம். தீமையின் அழகியலை இதுவரை தமிழில் எழுதியவர்கள் எனக் கருதப்படுபவர்கள் ஜி. நாகராஜனும் ஜெயகாந்தனும். ஆனால் அவர்களிடம் உள்ள romanticism மாதவனிடம் இல்லை. மட்டுமல்லாமல் உலக இலக்கியத்தில் தீமையின் அழகியலை எழுதியவர்கள் என மூன்று பேரைச் சொல்லலாம். ஆங்கிலத்தில் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, அரபியில் முகம்மது ஷுக்ரி, ஃப்ரெஞ்சில் ஜான் ஜெனே. இந்த மூவரை விடவும் ஆ. மாதவன் முக்கியமானவர் என்று கருதுகிறேன். எப்படி என அடுத்த வாரம் பார்ப்போம்.

இணைப்பு:

திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை : ஆ. மாதவன் பேட்டி (1) http://www.jeyamohan.in/9383

திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை : ஆ. மாதவன் பேட்டி (2) http://www.jeyamohan.in/9385#.VXw8wDSz2wc

பேட்டியின் பகுதி (3) : http://www.jeyamohan.in/9389