முட்டாளின் வருத்தங்கள் தொடர்கின்றன…

முட்டாளின் கேள்விகள் தொடர்கின்றன.  மன்னியுங்கள்.  ஒரு நண்பர் என்னைக் கேட்டிருந்தார்.  உங்களிடமும் பலர் ஏடாகூடமாகக் கேள்வி கேட்கும் போது நீங்களும்தான் கோபப்படுகிறீர்கள்.  இசைஞானி கோபப்பட்டால் மட்டும் தப்பா?

கோபப்பட வேண்டாம் என்று யார் சொன்னது?  வன்முறையில் ஈடுபடலாமா என்பதுதான் கேள்வி.  வன்முறையா?  அவர் என்ன நிருபரை அடிக்கவா செய்தார் என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.   வசைச் சொல்லை நேரடியாக, முகத்துக்கு நேராகப் பிரயோகிப்பது மிகக் கடுமையான வன்முறை.  சொல்லுங்கள், அந்தச் செய்தியாளரால் தன் வாழ்நாள் முடியுமட்டும் இப்படி ஒரு பிரமுகரால் அசிங்கமாக பொதுவெளியில் நாலுபேர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதை மறக்க முடியுமா?  உங்களுக்கும் மற்றவருக்கும் சண்டை நடக்கிறது.  நீங்கள் திட்டுகிறீர்கள்.  அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது.  இங்கே என்ன சண்டையா நடந்தது?  நிருபர் ஒரு கேள்வி கேட்டார்.  அதிலும் தமிழ்நாடு முழுக்கவும் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயத்தைப் பற்றி.  அதுவும் இளையராஜா இயங்கும் இசை என்ற தளத்தில் நடந்த விஷயம் அது.  அதைப் பற்றிக் கேட்டாலே அறிவு இருக்கா, தகுதி இருக்கா என்றால் என்ன அர்த்தம்?  முதலில் ஒருவரைப் பார்த்து நீ என்று ஒருமையில் விளிக்க முடியுமா?  இதைத்தான் அதிகாரம் என்று குறிப்பிட்டேன்.

உணவு விடுதிக்குப் போனால் அங்கே பலரும் சர்வரைப் பார்த்து ஏ, இங்க வா என்று அதிகாரத்துடன் கூப்பிடுவதை நான் பலமுறை கண்டு முகம் சுளித்திருக்கிறேன்.  ஐரோப்பாவில் ஒரு சர்வரை அழைக்க வேண்டுமானால், மன்னித்துக் கொள்ளுங்கள் என்றுதான் ஆரம்பிக்கவே வேண்டும்.  மன்னித்துக் கொள்ளுங்கள், கொஞ்சம் என்னை கவனிக்க முடியுமா என்று பணிவுடன் கேட்க வேண்டும்.  இல்லாவிட்டால் உங்களைக் காட்டுமிராண்டி என்றே நினைப்பார்கள்.  அங்கேயும் போய் முரட்டுத்தனமாக நடந்து கொண்டு ‘இந்தியர்கள் பொது நாகரிகம் இல்லாதவர்கள்’ என்ற பெயரை எடுத்திருக்கிறார்கள்.  இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.  நீங்கள் சிக்னலில் நிற்கிறீர்கள்.  உங்களுக்கு எதிரே சிவப்பு விளக்கு.  உங்களைக் கடந்து செல்ல வேண்டிய கார் கடந்துதானே போக வேண்டும்?  அவ்வளவு போக்குவரத்து நெருக்கடி இல்லாத பட்சத்தில் காரில் இருப்பவர் காரை நிறுத்தி விட்டு உங்களைப் போகச் சொல்வார்.  அதிலும் உங்கள் கையில் பையோ, குழந்தையோ இருந்தால் அவ்வளவுதான்.  கார் தானாக நின்று விடும்.  ஆனால் நாமோ சிக்னலில் வாகனங்களுக்கு சிவப்பு விளக்கு எரிந்தாலும் முன்னே நிற்கும் வாகனக்காரருக்கு ஹாரனை அடித்து, ஏய் அறிவு இருக்கா, எதுக்குய்யா நிக்கிறே என்று கேட்கக் கூடியவர்கள்.  சிக்னல் விழலங்க என்று சொல்லிப் பாருங்கள்.  மேலும் திட்டு விழும்.  ஆமா, பெரிய பருப்பு, சிக்னல் விழலியாம்.  போய்யா என்பார்கள்.  சிவப்பு விளக்கைப் பார்த்து விட்டு வண்டியை நிறுத்தினாலே பின்னாலிருந்து திட்டு வாங்க வேண்டிய தேசம் இது.  எங்கு பார்த்தாலும் முரட்டுத்தனம்தான்.  எல்லோரும் கொலைவெறியோடுதான் வீட்டை விட்டே கிளம்புகிறார்கள்.  எவண்டா அகப்படுவான் என்ற நிலையில்தான் நாக்கில் கத்தியை வைத்துக் கொண்டு அலைகிறார்கள்.  மாட்டினால் தொலைந்தீர்கள்.  கேரளம் இன்னும் மோசம்.  சர்வரை ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் என்று சொல்லி அழைப்பார்கள்.  அதை விடக் கேவலமான ஒரு அழைப்பு இந்த உலகிலேயே கிடையாது.  என்னை அங்கே விரும்பிப் படித்தாலும் எனக்குக் கேரளம் பிடிக்காது.  முரட்டுத்தனம் மலையாளிகளின் ரத்தத்திலேயே இருக்கிறது.  (விதிவிலக்கு, முஸ்லீம்கள் அதிகமாக வாழும் மலபார் பகுதி.  அவர்களின் பேச்சும் பழக்கமும் இனிமை என்றால் அவ்வளவு இனிமை.)  நான் சொல்வது தென்கேரளம்.

ஏற்கனவே எழுதியிருக்கிறேன் அல்லவா?  பப்பு நாய் ரோட்டில் கக்கா போய் விட்டது என்று ஒரு 30 வயது ஆள் என்னைப் பார்த்து வயசாச்சே அறிவிருக்கா என்று கேட்டார்.  சராசரி மனிதனே இப்படி என்றால், ஆன்மீகத்தில் பல தரிசனங்களைக் கண்டவர்,  உலகத்தையே தன்னுடைய இசையால் மயக்கியவர் என்ன ஆவார்?  நான் கடவுள்.  நீ அற்பன்.  என்னிடம் நின்று பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது?

அதிகாரத்தைப் பற்றி யோசியுங்கள்.  உங்கள் குழந்தைகளிடம் காண்பிக்கிறீர்கள்.  உங்களை விட பலஹீனமானவர்களிடம் காண்பிக்கிறீர்கள்.  ஏன், அந்த இளைஞன், ஏய் உனக்கு அறிவு இருக்கா, அதை முதல்ல சொல்லு என்று திருப்பிக் கேட்டிருந்தால் அந்த இடத்தில் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். பெரிய ரசாபாசமும் ரகளையும் ஆகியிருக்கும்.

எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.  முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு சமயம் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசினார்.  பிறகு சில தினங்கள் சென்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு.  ஒரு பத்திரிகையாளர் முதல்வர் பேசியதைக் குறிப்பிட்டு உங்கள் குடும்பத்தில் பெண்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லையே என்று கேட்டார்.  அப்போது கனிமொழி அரசியலுக்கு வந்திருக்கவில்லை.  கருணாநிதி அந்தப் பத்திரிகையாளரைப் பார்த்து உனக்கு அறிவு இருக்கா, என்னிடம் பேச உனக்கு என்ன தகுதி இருக்கு என்றெல்லாம் கேட்கவில்லை.  சிரித்துக் கொண்டே கனிமொழிதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்; கேட்டுச் சொல்கிறேன் என்றார்.  விஷயம் அதோடு போகவில்லை.  அடுத்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் அந்தப் பத்திரிகையாளர் சார், கனிமொழியைக் கேட்டீர்களா என்று கேட்டார்.  அப்போதும் கருணாநிதி சிரித்துக் கொண்டே கேட்டேன், விரைவில் வருவார் என்றார்.

சரி, இசைஞானி இந்த அளவு கோபப்படும் அளவுக்கு அந்தச் செய்தியாளர் ஏதாவது அந்தரங்கக் கேள்வியா கேட்டார்?  கருணாநிதியிடம் கேட்டது போல் குடும்பத்தைப் பற்றியா கேட்டார்?  உங்கள் புதல்வர் யுவன் இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்து விட்டாரே, அது பற்றி உங்கள் கருத்து என்ன என்றா கேட்டார்.  அப்படிக் கேட்டிருந்தால் கூட கோபப்பட்டிருப்பது நியாயம்.  அப்போது கூட நீ வா போ அறிவு இருக்கா என்றெல்லாம் பேச முடியாது.  பேசக் கூடாது.  என் குடும்ப விஷயத்தைப் பற்றி நான் பேச விரும்பவில்லை என்றே சொல்லலாம்.  ஏனென்றால், பொதுவாழ்க்கைக்கு வந்து விட்டாலே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள்.

இன்னொன்றும் சொல்கிறேன்.  எழுத்து என்பது அக்னியைப் போல.  எழுத்தில் வந்தாலே அதில் ரௌத்ரம் பொங்கி நிற்கும்.  ஆனால் நேர்ப் பேச்சு அப்படி அல்ல.  ஒருவருக்கொருவர் எழுத்தில் திட்டிக் கொள்பவர்கள் கூட நேரில் சந்திக்கும் போது கட்டித் தழுவிக் கொள்வதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்; நானே அனுபவித்தும் இருக்கிறேன்.  எனவே நேரில் நாம் யாரையும் எடுத்த எடுப்பில், எந்த முகாந்திரமும் இல்லாமல், எந்தத் தூண்டுதலும் இல்லாமல் அறிவு இருக்கா என்பதும் ஒருமையில் விளிப்பதும் கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாத விஷயம்.  அப்படி நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட செய்திருக்க மாட்டீர்கள்.  யோசித்துப் பாருங்கள்.   இன்னொரு முக்கிய விஷயம்.  அப்படியே கோபத்தில் பேசி விட்டாலும் கோபம் தணிந்ததும் மன்னிப்புக் கேட்பதே முறை.

ஆனால் நடந்திருப்பது ஆண்டான் அடிமை அதிகாரம்.  நான் ஆண்டை.  நீ அடிமை.  இன்னமும் நம் நாட்டில் நிலப்பிரபுத்துவ மனப்பான்மை பலரிடமும் நிலவி வருகிறது.  இன்னமும் நாம் ஜனநாயக மனோபாவத்துக்கு வந்து சேரவில்லை.  ஜனநாயக மனோபாவம் வந்து விட்டால் அடுத்த மனிதனையும் நமக்குச் சமமாக நினைக்கத் தோன்றும்.