“எதற்காக எழுத வேண்டும்?  யார் படிக்கிறார்கள்?” சார்வாகன் (1929-2015)

image

ஜனவரி 3, ஞாயிறு மாலை 5:30 மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸில், சார்வாகன் இரங்கல் கூட்டம் நடைபெற இருக்கிறது. அடியேன் உரையாற்றுகிறேன். வாசகர் வட்ட நண்பர்கள் அவசியம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என வேண்டுகிறேன்.

முகவரி: Discovery Book Palace, No.6, Mahavir Complex, Near Pondicherry Guest House, Munusamy Salai, K.K.Nagar, Chennai – 600078

***

சென்ற ஆண்டின் துவக்கத்தில் புதிய நாவலை எழுதத் துவங்கும் முன்பு சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள் அத்தனை பேரையும் ஒருசேரப் படித்து விட வேண்டும் என்று முனைந்தேன்.  அப்போது நான் எடுத்துக் கொண்ட முதல் எழுத்தாளர் சார்வாகன்.  ஏற்கனவே 1993-இல் க்ரியா நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்ட “எதுக்குச் சொல்றேன்னா…” என்ற சார்வாகனின் தொகுதி என்னிடம் இருந்தது என்றாலும் அதை நான் வாசித்திருக்கவில்லை.  பிறகு 2013-இல் நற்றிணை பதிப்பகத்தால் வெகு அழகாகத் தொகுக்கப்பட்ட “சார்வாகன் கதைகள்” என்ற தொகுதியைக் கண்டு பிடித்துப் படித்தேன்.  மார்ச் 2015-இல் தினமணி இணைய இதழில் நான் எழுதத் தொடங்கிய ’பழுப்பு நிறப் பக்கங்கள்’ என்ற தொடரின் முதல் கட்டுரை சார்வாகன் என்று அமைந்ததன் பின்னணி இதுவே.  அந்தக் கட்டுரையின் இணைப்பு கீழே:

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/03/22/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/article2722817.ece

பொதுவாக இலக்கியச் சூழலில் சார்வாகனின் பெயரை யாரும் சொல்லி நான் கேள்விப்பட்டதில்லை.  அதனால் மேற்கண்ட கட்டுரையை சார்வாகன் படித்தாரா என்று அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன்.  பின்னர் துருக்கி பயணம் குறுக்கிட்டது.  அது மே 2015.  அந்தச் சமயத்தில் சார்வாகனிடமிருந்து நான் சற்றும் எதிர்பாராத ஒரு கடிதம் வந்தது.  பொதுவாக நான் எத்தனையோ சக எழுத்தாளர்களுக்கு நானே வலிந்து கடிதம் எழுதியிருக்கிறேன்.  ஆனால் என் வாழ்நாளில் எந்த ஒரு எழுத்தாளரும் தாமாகவே முன்வந்து எனக்குக் கடிதம் எழுதியதில்லை.  அதிலும் என்னை விட 24 வயது அதிகமான ஒரு மூத்த எழுத்தாளர் எழுதுவது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.  ஆச்சரியப்பட பல காரணங்கள் உள்ளன.  அதே ’பழுப்பு நிறப் பக்கங்கள்’ தொடரில் ஆ. மாதவன் பற்றியும் எழுதினேன்.  அவரைச் சந்திக்க வேண்டும் என்றும் விரும்பினேன்.  முயற்சித்தேன்.  என்ன முயன்றும் அவருடைய தொலைபேசி எண் கிடைக்கவில்லை.  சாகித்ய அகாதமி விருது கிடைத்த பிறகே அவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது.  என் கட்டுரையைப் படிக்க வாய்ப்பு கிடைத்ததா என்று கேட்டேன்.  கேள்விப்படவே இல்லை என்றார்.  ஆச்சரியமில்லை என்று நினைத்துக் கொண்டேன்.  மாதவனை விமர்சித்து எழுதியிருந்தால் அந்தச் செய்தி அன்றைய தினமே அவரை எட்டியிருக்கும்.  பாராட்டுகளைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?  இப்படிப்பட்ட சூழலில்தான் சார்வாகனின் கடிதம் என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.  அந்தக் கடிதம்:

மதிப்புக்குரிய திரு. சாரு  நிவேதிதா அவர்களுக்கு,

தாங்கள் மார்ச் 22 தினமணி ஜங்ஷன் பகுதியில் என்னைப் பற்றி எழுதியிருந்ததை இப்போதுதான் பார்த்தேன். என் கதைகளைப் படித்து அனுபவித்ததைஅன்பு மிகுதியாலும் உங்கள் பரந்த மனசினாலும்  பெரிய  பெரிய வார்த்தைகளால்   சொல்லியிருப்பது கண்டு என் மனம் நெகிழ்ந்தது என்பதையும் நீங்கள் சொல்லியிருப்பது எனக்கு மிகவும்  சந்தோஷமாகவும் இருந்தது என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள். இருந்தாலும் என் ‘சாதனை’ களின் குறுகிய பரிமாணங்களையும் பலஹீனங்களையும் நான் வெகுவாகவே உணர்ந்தபடியிருப்பதனாலே ‘புகழுரைகளுக்கு நான்  உண்மையாகவே தகுதியுள்ளவன் ‘ என்று  நல்ல காலமாக நினைத்துவிடாமலிருக்கும் நல்லறிவை அதிர்ஷ்டவசமாக ஆண்டவன் கொடுத்துவிட்டிருக்கிறான். இருப்பினும் உங்கள் நல்லுரைகளுக்கு மீண்டும் என் மனமார்ந்த வந்தனங்கள். என்ன  இருந்தாலும்  நானும் ஒரு சாதாரண மனிதன்தானே!

வணக்கம்

இப்படிக்கு,

“சார்வாகன்”

(Dr. H. Srinivasan)

22.5.2015.

***

சார்வாகனின் மேற்கண்ட கடிதத்துக்கு உடனே பதில் எழுத நினைத்தும் முடியவில்லை.  பழுப்பு நிறப் பக்கங்கள் என்னை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டிருந்தன.  ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் ஒவ்வொரு வாரமும் எழுத ஆயிரக் கணக்கான பக்கங்களைப் படிக்க வேண்டியிருந்தது.  தினந்தோறும் எழுந்தவுடன் ஒரு பக்திமானைப் போல இன்றைய தினம் சார்வாகனுக்கு எழுதி விட வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.  இதில் நானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு சிக்கல் என்னவென்றால், கடிதம் எழுதி விட்டு அவரை நேரில் பார்க்கவும் விரும்பினேன்.  அவர் வசித்தது திருவான்மியூர் என்பதால் என் ஆர்வம் அதிகமாயிற்று.  இப்படியே இன்று எழுத வேண்டும் நாளை எழுத வேண்டும் என்று தினம் தினம் நினைத்து கடைசியில் 6.11.2015 அன்று அவருடைய கடிதத்துக்குப் பதில் எழுதினேன்.

என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சார்வாகன் அவர்களுக்கு,

வணக்கம்.  முதலில் நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  மே மாதம் வந்த உங்கள் கடிதத்துக்கு நவம்பரில் பதில் எழுதுவதற்காகத்தான் மன்னிப்புக் கோருகிறேன்.  உங்கள் கடிதம் வந்த போது துருக்கியில் இருந்தேன்.  பொதுவாக உடனுக்குடன் பதில் எழுதி விடும் நான் அப்போது பயணத்தின் ஜோரில் விட்டு விட்டதால் ஊருக்குத் திரும்பியதும் பழுப்பு நிறப் பக்கங்கள் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டது.  உங்கள் கால எழுத்தாளர்கள் எல்லாம் வண்டி வண்டியாக எழுதிக் குவித்திருக்கிறார்கள்; அத்தனையும் மாசு இல்லாத பொன் என்பதால் கடுமையாகப் படித்துக் கொண்டிருந்தேன்.  இதெல்லாம் பதில் எழுதாததற்குக் காரணங்கள் அல்ல.  என்றாலும் முழுமையாக இந்த நாட்கள் என்னைப் பழுப்பு நிறப் பக்கங்களில் மூழ்கடித்து இருந்தது.

இப்போது பழுப்பு நிறப் பக்கங்களில் க.நா.சு. வரை வந்திருக்கிறேன்.  அதுவரை ஒரு தொகுப்பாகப் போட வேண்டும் என்று இன்று ப்ரூஃப் பார்த்துக் கொண்டிருக்கும் போது உங்கள் கதை.  உடனே எழுதுகிறேன்.  சார், நான் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். திருவான்மியூரில்தான் இருப்பதாக நண்பர் சொன்னார்.  உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் வந்து உங்களைப் பார்க்கிறேன்.

என் தொலைபேசி எண்: —————————

பதில் எழுதாத என் பிழையை மன்னித்து, தங்களைச் சந்திப்பதற்கு அனுமதி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வணக்கமும் அன்பும்,

சாரு

6.11.2015.

***

அன்பார்ந்த திரு சாரு நிவேதிதா அவர்களுக்கு,

 

உங்கள் கடிதம் (முற்றிலும் எதிர்பாராத விதமாக) இன்று கண்டு  மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன் .அதிலும், சென்ற ஒரு மாதமாகத் தான்  நான் சென்னையில் இருக்கிறேன். அது வரை பெங்களூரில்  என் இரண்டாவது மகள் பாரதியின் வீட்டில் தங்கியிருந்தேன். என்  உடல் நிலை மோசமாகிவிடவே கடைசி காலத்தைச்  சென்னையில் கழித்துவிடலாம் என்று இங்கே வந்து சேர்ந்துவிட்டேன். வந்த பின்  உடம்பு இன்னும் மோசமாகப் போனது. ஆக, சுமார் 20 கிலோ எடை  குறைந்துவிட்டது. இப்போது நாலு நாட்களாகத்தான் தேறி வர ஆரம்பித்திருக்கிறது. ஒட்டு மொத்தத்தில் கடைசி காலம் இன்னும் வந்துவிடவில்லை என்று தோன்றுகிறது!   நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். பிற்பகலில் நான் தெம்புடன் இருப்பதாக நினைக்கிறேன். அந்தச் சமயம் வந்தால் உத்தமம்.

திருவான்மியூரில் வால்மீகி நகரில் முதல் SEAWARD ROAD-ல் 25ம்  நெம்பர்  (“Beach Residency”) வீட்டில் Flat No. 1 (ground floor)-ல் இருக்கிறேன்.

வாருங்கள், பேசலாம்.

அன்புடன்,

“சார்வாகன் ”

6.11.2015.

***

அன்பார்ந்த திரு சாரு நிவேதிதா அவர்களுக்கு,

உங்கள் வருகையும் பிரியமான பேச்சும் என் மனசைத்  தொட்டு நெகிழச் செய்துவிட்டன.   ஏதோ சம்பிரதாயத்துக்கென வந்து உரையாடாமல் உள்ளன்புடன் ரெண்டு மூணு மணி  நேரம் காலம் போவதே தெரியாமல் இருக்கும்படி நட்புறவுடன் உங்களுடன் இருந்தது   என் மனசுக்கு மிகவும் இதமாக இருந்தது. அதற்காக என் வந்தனத்தையும் உங்களுக்குத்  தெரிவிக்க விரும்புகிறேன். ‘செயலில்லா அன்பு செத்தது ‘ என்றொரு வசனம் உண்டு.   அதை என் வாழ்வில் நான் பல முறை,என் அறிவீ னத்தினால், அனுபவித்திருக்கிறேன்.  அத்தகைய தவறுகளைத் தவிர்க்க வும் என் வாழ்வின் கடைசிக் காலத்தில் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் வருகைக்கும் நட்புறவுக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

வணக்கம்.

அன்புடன்

“சார்வாகன் ” (எ) ஹரி. ஸ்ரீநிவாசன்

22.11.2015.

பி.கு.: பாரவியின் செல் நம்பர் : ——————— அவர் தாம்பரத்தில் இருப்பதாக ஞாபகம்.  இருந்தாலும் முக்கால்வாசி நேரம் சென்னையில்தான் எங்காவது இருப்பார்.

***

டியர் சார்,

என்னை நீங்கள் சாரு என்றே அழைக்கலாம்.  அவர்கள் எல்லாம் வேண்டாம்.  நான் உங்களை என் தந்தையாகவே கருதுகிறேன்.  உங்களைப் பார்த்து விட்டு வந்து சந்தோஷ மிகுதியில் நீண்ட நேரம் உள்ளுக்குள் அழுது கொண்டே இருந்தேன்.  ஏன் உள்ளுக்குள் அழுகை என்றால் உங்களை ஏன் நான் முன்னமே படிக்கவில்லை; முன்னமே சந்திக்கவில்லை என்று என்னையே கடித்து கொண்டு வருந்தினேன்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாவது நான் உங்களைச் சந்தித்திருக்க வேண்டும்.  என்னவோ தெரியவில்லை, எனக்கு எல்லாமே ரொம்ப ரொம்பத் தாமதமாகவே நடக்கிறது.  இன்னொரு நாவல் எழுதுவதற்கு முன் தமிழில் என் முன்னோடிகள் அனைவரையும் படித்து விட வேண்டும் என்று ஒரு சிலபஸ் போட்டுப் படித்த போது முதலில் எடுத்தது உங்களை.  மிரண்டே போனேன்.  நேற்று கூட உத்தரீயம் படித்து விட்டு கை கால் உதறல் எடுத்து விட்டது.  ஆனாலும் உங்கள் மீது சொல்லவொண்ணாக் கோபமும் ஏற்படுகிறது.  இப்பேர்ப்பட்ட சௌந்தர்யத்தை வைத்துக் கொண்டு எங்களுக்கெல்லாம் கொடுக்க மாட்டேன் என்கிறீர்களே, இது நியாயமா?  சொல்லுங்கள்… வாரம் ஒருமுறை வருகிறேன்… நீங்கள் சொல்லச் சொல்ல எழுதுகிறேன்.  மூன்று மணி நேரம் எழுதுகிறேன்.  லா.ச.ரா.வுக்கு முதிய வயதில் கையால் எழுத முடியாமல் போன போது அவர் மகன் சப்தரிஷி தான் முழுக்க முழுக்க எழுதினாராம்.  அப்பா நடுநிசியிலெல்லாம் எழுப்பி எழுதச் சொல்வார் என்றார்.  சப்தரிஷி லா.ச.ரா.வின் பரம ரசிகர்.  மகனே ரசிகனாக இருப்பதற்கு ரொம்பப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

என்னையும் தாங்கள் ஒரு மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.  எப்பேர்ப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு உங்கள் பெருமை தெரியாமல் இருக்கலாம்.  அல்லது ஒத்துக் கொள்ளாமலும் போகலாம்.  ஆனால் பணம்தான் கடவுள் என்று ஆகி விட்ட இன்றைய வாழ்க்கையில் உங்களை நான் ரமணர், பரமஹம்சர் போல் தான் பார்க்கிறேன்.  சிரிக்காதீர்கள்.  என் பக்கத்து வீட்டில் ஒரு டாக்டர் இருக்கிறார்.  வயது 75.  ஆனால் பார்க்க 60 போல் இருப்பார்.  நல்ல திடகாத்திரம்.  என் வாசகி ஒருவர் அவரைப் பார்க்கச் சென்றார்.  ஏதோ சின்ன பிரச்சினை.  ஒரே ஒரு நிமிடம் பார்த்தார்.  மருந்து எழுதினார்.  500 ரூ கட்டணம்.  இவ்வளவுக்கும் அந்த டாக்டர் பெரிய பக்திமான்.  மனைவி, மகன் எல்லாரும் டாக்டர்.  எப்போதும் வீட்டில் பெரும் கூட்டமாக இருக்கும்.  என் வாசகி ரொம்பவும் நம்ப முடியாமல் இதைச் சொன்னார்.

நீங்கள் ஒரு memoirs எழுத வேண்டும் என்பது என் ஆசை.  ஆனால் அதைச் சொல்வது உங்களைத் தொந்தரவு செய்வதாக ஆகி விடுமோ என்றும் தயங்குகிறேன்.  நீங்கள் சொல்வதை எழுத ஆள் வைத்துக் கொள்ளலாம்.  சுந்தர ராமசாமியும் அப்படித்தான் எழுதினார்.  ஆள் கிடைக்கவில்லை என்றால் வாரம் ஒருமுறை நான் வருகிறேன்.

உங்களுக்கு என்ன பிடிக்கும்?  அதாவது என்னவெல்லாம் சாப்பிட அனுமதி உண்டு?  வாங்கி வருகிறேன்.  உங்களுக்கு செய்ய பல உறவினர் இருந்தாலும் என்னையும் அதில் ஒருவனாக ஏற்கும்படி அன்புடன் கேட்கிறேன்.  பாதாம் பருப்பு, அக்ரூட் போன்றவையெல்லாம் சாப்பிடலாமா?

டைப் செய்ய சிரமமாக இருந்தால் ஃபோனில் அழையுங்கள்.  உங்களோடு இன்னும் அதிக நேரம் இருந்திருப்பேன்.  உங்களுக்குத் தொந்தரவாக (உங்கள் உடல்நிலைக்கு) இருக்குமோ என்றுதான் ஓடி வந்து விட்டேன்…

மிக்க அன்புடன்

சாரு.

22.11.2015.

***

அன்புத் தோழர் சாரு நிவேதிதா அவர்களுக்கு,

எவரையும் இப்படி விளித்தே பழக்கமாகிவிட்ட எனக்கு வேறு விதமாக அழைக்கக் கை வரவில்லை, மன்னிக்கவும்.

அன்பு மையில் தோய்த்து எழுதப்பட்ட உங்கள் கடிதம் என் மனசை உரு க்கிவிட்டது. நீர் வாழ்க !

நீங்கள் என்னைப் பற்றிக் கூறுவதெல்லாம் (மாப்பசான், பால்சாக், ரமணர், பரமஹம்சர் ) உயர்வு நவிற்சி என்று கொள்ளவேணுமே தவிர உள்ளது நவிற்சி என்று கொள்ளமாட்டேன். இப்படி உயர்வு நவிற்சியாகச் சொல்வதில் ஒரு பெரிய சங்கடம் என்ன வென்றால், வாசிப்பவர்களுக்கு உங்கள் எழுத்தின் நம்பகத்தன்மை (credibility) மிக மிகக் குறைந்துவிடும். “சாரு நிவேதிதாவா, அவர் அப்படித்தான், தனக்குப் பு டிச்சவங்களை இந்திரன் சந்திரன்னு சொல்வாரு, புடிக்காதவங்களை  நாயே பேயேன்னு திட்டுவாரு” என்று சொல்லி உ ங்கள் கருத்துகளுக்கு  உரிய மதிப்புத் தர மாட்டார்கள்.

போன வருஷம் உங்களை அறிந்திருந்தால்  உங்களை  என்னுடைய ‘எழுத்தாள’ ராக  மிக மிக மகிழ்ச்சியுடன் உபயோகித்திருப்பேன். Now it is too late. நாளுக்கு நாள், வேளைக்கு வேளை, என் உடல் நிலை மோசமாகிக்கொண்டு வருகிறது. இன்று ரெண்டு மூணு நிமிஷங்களுக்கு மேல் தோடர்ந்து பேசக்கூட முடியவில்லை. இந்த லக்ஷணத்தில் நான் எப்படி dictate செய்கிறது? Still, I thank you for your offer; it was a great moral booster for me.

வெகு சிலரே அ றிந்திருக்கும் என்னைப்பற்றிய ஒரு ரகசியத்தை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு ஆதர்ச புருஷர்கள் ரெண்டு பேர்; ஒருவர் ஓர் இலக்கியக் கதாநாயகர்; மற்றவர் தமிழ் நாட்டில் வாழ்ந்து காட்டிய மகா புருஷர். முன்னவர் எல்லோராலும் எள்ள ப்பட்ட  DON QUIXOTE. மற்றவர் மகா கவி சுப்பிரமணிய பாரதி.

DON QUIXOTE பற்றி ஸ்பானிய எழுத்தாளர் ஒருவர் அண்மையில் எழுதிய கட்டுரையின்  link URL ஒன்றை இத்துடன்  கொடுத்திருக்கிறேன். வாசித்துப் பாருங்கள்.

http://hudsonreview.com/2015/10/don-quixote-or-the-art-of-becoming/#.VlSeCBGtLKI.gmail

இது இப்போதுதான் வெளிவந்த கட்டுரை யானாலும் பலப் பல வருஷங்களுக்கு முன்னாலிருந்தே, DON QUIXOTE பற்றிய ருஷ்ய திரைப் படம் ஒன்றைப பார்த்தது முதல்,  அவர் என்னுடைய மானசிக ஹீரோ!

இன்னோரு விஷயம். நான் என் இயற்பெயரில் கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறேன் !  வெகு சிலவற்றையே பத்திரிகைகளுக்கு (தாமரை, எழுத்து, வானம்பாடி முதலிய ) அனுப்பிப் பிரசுரம் செய்திருக்கிறேன். சி சு செல்லப்பா என் கவிதைகளை ரசித்தது மட்டுமல்லாமல், “நீர் கதை எழுதாதேயும், கவிதை எழுதுங்கள் “என்று புத்திமதி வேறு எனக்குக் கூறியிருக்கிறார் ! அவற்றைத் தொகுத்துப புத்தக வடிவில் கொண்டுவரவேணுமென்று எனக்கு ஆசை. உங்களுக்குப் புத்தகப் பதிப்பாளர் எவரேனும் தெரியுமா? கவிதை என்றாலே எல்லாரும் தயங்குகிறார்கள் ! முழுத் தொகுப்பை இத்துடன் இணைத்திருக்கிறேன். முடிந்தபோது படித்துப் பாருங்கள். ( இவை எல்லாம் ரொம்ப உசத்தி என்று சொல்ல மாட்டேன். இவற்றிலும் சில நல்ல கவிதைகள் இருக்கக்கூடும் என்று நான் நம்புகிறேன்.) இவற்றை அச்சேற்ற உங்கள் உதவி பயன்படுமானால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

 

அன்பு கலந்த வணக்கங்கள்.

ஹரி. ஸ்ரீநிவாசன்.

26.11.2015.

***

dear sir

வாக்கிங் கிளம்புவதற்கு முன் ஒரு சுருக்கமான கடிதம்.

“நீங்கள் என்னைப் பற்றிக் கூறுவதெல்லாம் (மாப்பசான், பால்சாக், ரமணர், பரமஹம்சர் ) உயர்வு நவிற்சி என்று கொள்ளவேணுமே தவிர உள்ளது நவிற்சி என்று கொள்ளமாட்டேன். இப்படி உயர்வு நவிற்சியாகச் சொல்வதில் ஒரு பெரிய சங்கடம் என்ன வென்றால், வாசிப்பவர்களுக்கு உங்கள் எழுத்தின் நம்பகத்தன்மை (credibility) மிக மிகக் குறைந்துவிடும். ‘சாரு நிவேதிதாவா, அவர் அப்படித்தான், தனக்குப் பு டிச்சவங்களை இந்திரன் சந்திரன்னு சொல்வாரு, புடிக்காதவங்களை  நாயே பேயேன்னு திட்டுவாரு’ என்று சொல்லி உ ங்கள் கருத்துகளுக்கு  உரிய மதிப்புத் தர மாட்டார்கள்.”

மேற்கண்ட வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை.  அப்படித்தான் ஆகி விட்டது.  ஆனால் பிடிக்காதவர்களைத் திட்டுவதை முழுசாக நிறுத்தி விட்டேன்.  நிறுத்தி ஏழெட்டு ஆண்டுகள் ஆகி விட்டன.  ஆனால் பாராட்டுவதை நிறுத்த முடியவில்லை.  ஏனென்றால், அதைப் பாராட்டு என்றே என்னால் நினைக்க முடியவில்லை.  ஏழு அடி உயரமுள்ள ஒரு ஆளை மூன்று வயதான ஒரு குழந்தை அண்ணாந்து பார்த்து அங்கிள் ஆகாசம் வரை உயர்ந்தவர் என்று சொல்வது போல என வைத்துக் கொள்ளுங்கள்.  இன்னும் தர்க்கரீதியாகச் சொன்னால், சார்வாகனா, அவர் ஒரு டாக்டர் என்று சொல்வது போலத்தான்.  என்னை ரொம்பப் பேர் ரொம்ப சிம்பிளா இருக்கீங்களே என்று வியக்கும் போது, அடப் பாவிகளா, ஒரு மனுஷங்கிறவன் இப்படித்தானே இருக்க வேணும், இதைப் போய் வியக்கிறீர்களே என்று நான் தான் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுவேன்.

இதிலேயே இன்னொரு விஷயம் இருக்கிறது சார்.  ஒருநாள் என் நண்பரை அழைத்து அவர் எழுதிய கட்டுரையைப் பாராட்டினேன்.  அவர் சொன்னார்.  மற்றவர்கள் பாராட்டும் போது ஒரு இறுக்கமான குரலில், இவனைப் போய் பாராட்ட வேண்டியிருக்கிறதே என்ற கவலை தொனிக்க ஒரு வார்த்தையில் ரொம்ப முக்கியமான கட்டுரை என்று சொல்வார்கள்.  (சொல்லிக் காண்பித்தார்!)  ஆனால் நீங்கள் பாராட்டும் போது இதயத்திலிருந்து வருவது போல், நம் அம்மா நம்மைப் பாராட்டுவது போல் உள்ளது என்றார்.  இதிலிருந்து நான் தெரிந்து கொண்ட விஷயம் என்னவென்றால், சமூகத்தில் யாரையும் யாரும் பாராட்டுவது குறைந்து போய் விட்டது.  அல்லது, இல்லாமலே போய் விட்டது.  இன்னொரு பக்கம், பாராட்டு என்பது ஆபாசமாகி விட்டது.  ஒருவர் இன்னொருவரைப் பாராட்டினால் அது ஆதாயத்தை வைத்துத்தான் என்று ஆகி விட்டது. அரசியல்வாதிகள், பிரமுகர்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், இன்ன பிற.  எனவே பாராட்டு என்பதே இல்லாமலும், மலினமாகவும் ஆகி விட்ட இந்தச் சூழலில் என் பாராட்டு பகடி செய்யப்படுவது என்னை பாதிக்கவில்லை.  நகுலன், கரிச்சான் குஞ்சு, மௌனி, கு.ப.ரா., தஞ்சை ப்ரகாஷ், எம்.வி. வெங்கட்ராம், ஆதவன், அசோகமித்திரன் போன்றவர்களை என் 25 வயதிலிருந்து பாராட்டிக் கொண்டேதான் இருக்கிறேன்.  ஒருக்காலும் பாராட்டியவர்களைத் தாழ்த்திப் பேசியதில்லை.  இந்தப் பட்டியலில் ரொம்பத் தாமதமாக உங்களை வந்து சேர்ந்தேனே என்பதுதான் என் வருத்தம்.

மேலும், கடைசியாக, பணமே சுவாசம், பணமே கடவுள் என்று ஆகி விட்ட இந்த சமூகத்தில் யாரொருவர் பணத்துக்குப் பேயாய் அலையவில்லையோ, பணத்தைத் தன் தேவைக்கான ஒரு பொருள் என்று மட்டுமே கருதுகிறார்களோ அவர்கள் எனக்கு தெய்வத்துக்கு சமமானவர்கள்.  என்ன பண்ண, அது போல் நூற்றுக்குப் பத்து பேர் இருந்து விட்டாலே அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வந்து விடும். ஆயிரத்தில் பத்தாயிரத்தில் கூட ஒருவரை அப்படிப் பார்க்க முடியவில்லையே சார்.

ஆனாலும் பாராட்டும் போது கொஞ்சம் அளந்து அளந்து,  பார்த்துப் பார்த்து உப்புப் போடுவது போல் செய்ய வேண்டியதுதான். நம்பகத்தன்மை போய் விடுகிறது.  ஆனாலும் வாழ்க்கையில் அளந்து பேசுவதுதான் வர மாட்டேன் என்கிறது.  முயற்சிக்கிறேன்.

எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு உடம்பைப் பார்த்துக் கொள்ளவும்.  உங்களைச் சந்தித்த பிறகு அலோபதி மீது நான் கொண்டுள்ள அவநம்பிக்கை அதிகமாகி விட்டது; சர்ஜரி, அனெஸ்தீசியா, க்ரோசின், பென்ஸிலின் போன்ற பெரும் பெரும் சாதனைகளை அது கொண்டிருந்தாலும்.  இது பற்றி எழுதி சங்கடப்படுத்திக் கொள்ள வேண்டாம். நேரில் பேசுவோம்.

அன்புடன்

சாரு

26.11.2015.

இந்தக் கடிதத்துக்குப் பிறகு நேரில் போக வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டே இருந்தேன்.  அந்த நினைப்பு மழை மற்றும் வெள்ளத்தினால் கொஞ்சம் மட்டுப்பட்டது.

***

1929-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி பிறந்த சார்வாகன் 86 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார்.  ஊர்ப் பக்கத்தில் கல்யாண சாவு என்று சொல்வார்கள்.  ஆனால் சார்வாகனின் மரணத்தைக் குறித்து அப்படிச் சொல்ல முடியவில்லை.  ஏனென்றால், சார்வாகன் என்ற மகத்தான படைப்பாளி பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை.  அவரைக் கொண்டாடி இருக்கவில்லை.  இப்போது கூட அவரைப் பற்றிய தகவல்களை டாக்டர் ஹரி சீனிவாசன் என்ற அடையாளத்தில்தான் தேடி எடுக்க முடிந்தது.  மறுநாள் அவரது மரணச் செய்தி கூட அந்தப் பெயரில்தான் வந்தது.  ஏனென்றால் சார்வாகன் என்ற பெயர் நமக்குத் தெரியாது.

சார்வாகன் இரண்டு துறைகளில் சாதனை புரிந்தவர். ஒன்று, தொழுநோய் மருத்துவம்.  இன்னொன்று, இலக்கியம்.  தொழுநோயால் பாதிக்கப்பட்ட கைகளை மீண்டும் சரியாக்குவதில் சார்வாகன் கண்டு பிடித்த முறைகள்தான் இன்றும் உலக அளவில் அவர் பெயரிலேயே வழங்கப்படுகின்றன.  இதற்காக அவர் 31 ஆண்டுகளுக்கு முன்பே பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.

இலக்கியம் வாசிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து சார்வாகன் என்ற பெயரைத் தெரியும்.   ஆனால் படித்திருக்கவில்லை.  சென்ற ஆண்டு சமகால இலக்கிய முன்னோடிகள் பற்றித் தொடர்ச்சியாக ஒரு பத்திரிகையில் எழுதத் தொடங்கிய போது நான் முதலில் எடுத்த எழுத்தாளர் சார்வாகன்.  அதை ஒரு இன்ப அதிர்ச்சி என்றே சொல்ல வேண்டும்.  உலகச் சிறுகதை இலக்கியத்தில் நாம் யாரையெல்லாம் சாதனையாளர்கள் என்று கொண்டாடுகிறோமோ அதற்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் இருந்தன சார்வாகன் கதைகள்.

***

சார்வாகனை சந்தித்து விட்டு வந்த அன்று என் வலைப்பதிவில் எழுதியிருந்த சிறு குறிப்பு இது:

”இன்று மாலை (நவம்பர் 21-ஆம் தேதி) நாலரை மணியிலிருந்து ஆறரை வரை சார்வாகனுடன் பேசிக் கொண்டிருந்தேன்.  கால எந்திரத்தில் ஏறி ஏதோ சத்ய யுகத்திலோ அல்லது த்ரேதா யுகத்திலோ போய் விழுந்தது போல் இருந்தது. அந்த இரண்டு மணி நேரத்தையும் என் வாழ்நாளில் மறக்கவே இயலாது.  அவரோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் எழுத்தாளர் மட்டும் இல்லை; அதற்கும் மேலே என்று தெரிந்தது. எத்தனையோ மகான்களைப் பற்றிப் படித்திருக்கிறேன்.  ஆனால் அன்று அப்படிப்பட்ட ஒருவரைச் சந்தித்தேன்.  தி.ஜானகிராமன் ’மோகமுள்’ளில் எழுதியிருக்கும் ரங்கண்ணாவைப் போன்ற ஒரு மகாத்மா சார்வாகன்.  ரங்கண்ணாவுக்கு சங்கீதம். சார்வாகனுக்கு மருத்துவம். இலக்கியத்தை விடவும் பெரிய விஷயங்கள் உலகில் இருக்கின்றன என்பதை இன்று தெரிந்துகொண்டேன்.”

பேசிக் கொண்டிருந்த போது அரசு ஊதியத்தைத் தவிர அவர் வேறு எந்த நோயாளிடமிருந்தும் கட்டணம் வாங்கியதில்லை என்பதை போகிறபோக்கில் சொல்லிக் கொண்டு போனார்.  நான் ஆச்சரியப்பட்டதைப் பார்த்து விட்டு, ”மருத்துவம் என்பது சேவை.  சேவை செய்ததற்காக ஒருவர் காசு வாங்க முடியுமா?” என்று அவர் என்னைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டார்.   பணமே பிரதானம் என்று வாழும் இந்தக் காலத்தில் எப்படி இதுபோல் உங்களால் இருக்க முடிகிறது என்று கேட்டேன்.  என் தமிழுக்கும் என் வாழ்க்கைக் கோட்பாடுகளுக்கும் காரணம் என் தாத்தா கிருஷ்ணய்யர்தான் என்றார்.  வேலூரில் காவல்துறையில் தமிழ் சுருக்கெழுத்தாளராக இருந்திருக்கிறார் கிருஷ்ணய்யர்.  ஒரு பிராமணர் காவல் துறையில் இருப்பதே அபூர்வம்.  அதிலும் அப்போது மேட்டுக்குடியினரிடையே தமிழ் நீசபாஷையாகக் கருதப்பட்ட காலம்.  சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் கூட மேடைப்பேச்சை ஆங்கிலத்தில் பேசிய காலம் அது.  திரு.வி.க. தான் முதன்முதலில் தமிழிலும் பேசலாம் என்பதை மேடையில் பேசி நிறுவிக் காண்பித்தார்.  அந்தக் காலத்தில் கிருஷ்ணய்யர் தன் சமூகத்தையே பகைத்துக் கொண்டு தமிழ் கற்றதை ஒரு கலகச் செயலாகத்தான் பார்க்க முடியும்.  பெரியதொரு நூலகமும் வைத்திருந்திருக்கிறார் கிருஷ்ணய்யர்.  ”அந்த நூலகத்தில் படித்ததுதான் இன்னமும் நிற்கிறது; என் கதையில் நீங்கள் ஒரு லகுவான மொழி நடையைப் பார்த்தால் அதற்குக் காரணமும் அந்த நூலகம்தான்.  தமிழ் மட்டுமல்லாமல் உலக இலக்கியம், வரலாறு என்று எல்லா வகையான நூல்களும் அதில் இருந்தன” என்றார் சார்வாகன்.  கிருஷ்ணய்யர் ஒரு காந்தீயவாதியும் கூட.   அதுதான் என்னிடமும் தொடர்கிறது என்று தான் அணிந்திருந்த கதர் வேட்டியைக் காண்பித்தார்.  அந்தப் புற அடையாளம் மட்டுமல்ல; அவரது எளிமைக்கும் அதுதான் காரணம் என்பதையும் அப்போது புரிந்து கொண்டேன்.  காந்தீயவாதத்தோடு இடதுசாரிச் சிந்தனையும் கொண்டவராக இருந்தார் சார்வாகன்.  (புனைப்பெயரை சார்வாகன் என்று வைத்துக் கொண்டது கூட அதனால்தான்.)

இவ்வளவு சாதனைகள் புரிந்தும் இத்தனை அடக்கமான ஒரு மனிதரை என் வாழ்நாளில் கண்டதில்லை.

***

பல ஆயிரம் பக்கங்கள் வரக் கூடிய அளவுக்கு விஷயங்கள் வைத்திருந்தார் சார்வாகன்.  1954-இலிருந்து ஆறு ஆண்டுகள் இங்கிலாந்தின் மருத்துவமனைகளில் பணி புரிந்தார்.  அதுவும் தொழுநோய் மருத்துவராக. லண்டனில்தான் திருமணமே நடந்தது.  பிறகு எண்பதுகளில் மூன்று ஆண்டுகள் போர்ட்லண்ட் நகரில் இருந்தார்.  அதையெல்லாம் எழுதுங்கள் எழுதுங்கள் என்று நான் சொல்லிக் கொண்டிருந்த போது “எதற்காக எழுதணும்?  யார் படிக்கிறாங்க? இன்றைய தலைமுறைக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லையே?” என்று ஆழ்ந்த துயரத்துடன் கேட்டார்.  அப்போது அவருடைய பேத்தி அவரிடம் வந்து ஏதோ ஆங்கிலத்தில் சொல்லி விட்டுப் போனார்.  சார்வாகன் என்னைப் பார்த்துச் சிரித்தார்.

உள்ளுணர்வு என்ற ஒரு விஷயம் இருக்கத்தான் செய்கிறது போலும்.  அடுத்த தீபாவளிக்கு இருக்க மாட்டேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.  மேலும், டிசம்பர் பதினைந்தாம் தேதியிலிருந்தே சார்வாகனைப் பார்த்து விட்டு வர வேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.  இதோ இதோ என்று கிளம்பிக் கொண்டிருந்த போது 21-ஆம் தேதி மரணச் செய்தி.  ஐந்து நிமிடங்களுக்கு மேல் சார்வாகனின் உடலின் அருகே நிற்க முடியவில்லை.  வெடித்து அழுது விடுவேன் போலிருந்தது.  கல்யாணச் சாவு ஆயிற்றே?  இல்லை.  நம் எழுத்துலக முன்னோடி ஒருவர் அனாதையாக இறந்தது போல் தோன்றியது.    சார்வாகனின் பேச்சில் பாரவி பற்றி அடிக்கடி குறிப்பிட்டார்.  பாரவி தான் தன்னோடு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நண்பராக இருக்கிறார் என்றார்.  மரண வீட்டில் பாரவி என்னிடம் சொன்னார்.  ”சார்வாகனுக்குக் கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம் கொஞ்சம் கூடக் கிடைக்கவில்லை.  அவர் பெயரே யாருக்கும் தெரியவில்லை.”   அதனால்தான் எனக்கு அழுகை வந்தது.  எப்பேர்ப்பட்ட மேதைகளை நாம் அறிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து கொண்டும் அனுப்பி வைத்துக் கொண்டும் இருக்கிறோம்.    நான் அழுதது இன்னொன்றுக்காகவும்.  அறுபதுகளின் முற்பகுதியில் ‘எழுத்து’ காலகட்டத்தில் தான் எழுதிய ஐம்பது அறுபது கவிதைகளை எனக்கு அனுப்பி வைத்து ”உங்களைச் சந்தித்த பிறகு இதுவரை பிரசுரமாகாத இந்தக் கவிதைகளைப் பிரசுரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது; உங்களுக்கு யாரேனும் பதிப்பாளரைத் தெரியுமா?” என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.  55 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதைகள்!  அவருடைய சிறுகதைகளின் தொகுப்பை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.  அதெல்லாம் அவர் அறுபதுகள், எழுபதுகளில் எழுதியவை.  அதற்குப் பிறகு சுமார் நாற்பது ஆண்டுகளாக அவர் எழுதவில்லை.  காரணம், நாம் வாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை.

அழுகையை அடக்கி அடக்கி நெஞ்சு வலிக்க ஆரம்பித்த போது அருகில் நின்று கொண்டிருந்த அசோகமித்திரன் போகலாமா என்று கேட்டார்.  அசோகமித்திரனும் அழகியசிங்கரும் நானும் ஆட்டோவில் கிளம்பினோம்.  மைலாப்பூர் போய் இவரை விட்டு விட்டு தி.நகர் போங்கள் என்றார் அசோகமித்திரன் ஆட்டோ ஓட்டுநரிடம்.  எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை.  இடையில் என் ஃபோனை எடுத்து அவந்திகாவை அழைத்தேன்.  வெந்நீர் வைக்கச் சொல்ல வேண்டும்.  தோட்டத்திலேயே குளித்து விட்டு உள்ளே போகலாம்.  மரண வீட்டுக்குப் போய் விட்டு அப்படியே உள்ளே நுழையக் கூடாது என்பார்களே.  ஃபோன் கிடைக்கவில்லை.  “இந்த ஸ்மார்ட் ஃபோன்னாலே இப்படித்தான்.  சமயத்துக்குக் கிடைக்காது” என்றார் அசோகமித்திரன்.  ஏன் என்று தெரியவில்லை; என்னை வீட்டில் இறக்கி விட்டு விட்டு ஆட்டோ கிளம்பிய போது சட்டென்று அசோகமித்திரனின் கையை என் இரண்டு கைகளாலும் எடுத்து முத்தமிட்டேன்.