உலக மாடுகளே ஒன்று படுங்கள்!

எஸ்.ரா.வின் வாதத் திறமை ஊர் அறிந்தது.  மற்றொரு ராம் ஜெத்மலானி.  அவரோடு போட்டி போடக் கூடிய ஒரே ஒரு எழுத்தாளர்தான் தமிழ்நாட்டில் உண்டு.  தினந்தோறும் தொலைக்காட்சியில் தோன்றி அதகளம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.  அம்மாதிரி இடத்திலெல்லாம் என்னைப் போன்ற சோனி சோப்ளாங்கிகள் பேச முடியுமா?  நேற்று புதிய தலைமுறையில் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு பற்றி கேள்வி வந்து விட்டது.  எஸ்.ரா. ஜல்லிக்கட்டு ஆதரவு.  சாமானியர்கள் பேசினால் புரிந்து கொள்ள முடிகிறது.  புத்திஜீவிகளும் எழுத்தாளர்களுமே மிருகவதைக்கு ஆதரவாகப் பேசுவதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.  எஸ்.ரா.வுக்கு என் எளிமையான பதில்களைச் சொல்லலாம் என நினைத்த போது விவாத நேரம் முடிந்து விட்டது.

ஜல்லிக்கட்டு தமிழ்க் கலாச்சாரத்தின் பாற்பட்டது, தமிழர்களின் சடங்கு என்றார்.  தலையை வெட்டி நரபலி கொடுப்பது கூடத்தான் ஆதி மனிதர்களின் சடங்காகவும் கலாச்சார விழாவாகவும் இருந்தது.  ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை சதி என்ற உடன்கட்டை ஏறும் பழக்கமும் நம் தமிழர்களின் கலாச்சாரமாக இருந்தது. கோவலன் இறந்ததும் கண்ணகி மறுமணம் புரிந்து கொள்ளவில்லை.  மதுரை எரித்து விட்டுக் கோவலனைத் தேடிப் போய் விட்டாள்.  78, 80 ஆண்டுகளுக்கு முன்பு கூட மூன்று நான்கு வயதுப் பெண் குழந்தைகளுக்கு விவாகம் நடந்தது.  பால்ய விவாகம்தான் அப்போது நம்முடைய கலாச்சாரம்.  அதெல்லாம் காலப் போக்கில் நாகரீக வளர்ச்சியில் காணாமல் போகவில்லையா?

எஸ்.ரா. பேசும் போது ஜல்லிக்கட்டு இல்லாவிட்டால் மாடுகள் எல்லாம் செத்துப் போய் விடும், யாளி போன்ற விலங்கினங்கள் மாதிரி மாடு இனமே இல்லாமல் போய் விடும், ஜல்லிக்கட்டுக்காக மாடுகள் எல்லாம் ஏங்கிக் கண்ணீர் வடிக்கின்றன என்பது போலப் பேசினார்.  ஜல்லிக்கட்டை எதிர்ப்பவர்களுக்கு எதிராக உலக மாடுகளே ஒன்று படுங்கள் என்பது போல் பேசினார்.  இதையெல்லாம் அவர் உச்சநீதி மன்றத்தில் பேசி ஜட்ஜுகளின் மனதை மாற்றி மாடுகளுக்கு ஒரு மறுவாழ்வு கொடுத்தால் தேவலாம் என்றுதான் தோன்றுகிறது.

எல்லா விஷயங்களையும் போலவே ஜல்லிக்கட்டு விஷயத்திலும் பொதுஜனம், புத்திஜீவி ஆகியோருக்கு எதிராகவே என் கருத்து அமைந்திருப்பது சற்று ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.