பாஷோ – வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்

கடந்த இரண்டு நாட்களாக முகநூலில் ‘பாஷோ’ கவிதை இதழ் பற்றி நிறைய நிலைத்தகவல்கள். தாங்கள்தான், இதை முதன்முதலில் வெளியே சொல்கிறோம் என்ற போலி இறுமாப்புவேறு. சாரு நிவேதிதா புதிய தலைமுறையில் வெளியான வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் தொடரில், ஃபெப்ருவரி 19, 2015 அன்று எழுதியுள்ளதை கீழே கொடுத்துள்ளேன். வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள், உயிர்மை வெளியீடாக, ஃபெப்ருவரி 27, 2016 அன்று வெளியாகிறது.

– டாக்டர் ஸ்ரீராம்

 

***

 

“பாஷோ. ஜப்பானின் அதிமுக்கியமான ஹைக்கூ கவிஞன். பிறப்பு 1644. ஒரு சாதாரண சாமுராய் வீரனின் மகனாகப் பிறந்த பாஷோ ஜப்பானிய ஹைக்கூவின் தலைசிறந்த கவியாகக் கொண்டாடப்படுகிறார். அவர் 1689-ஆம் ஆண்டு கையில் ஒரு காசு எடுத்துக் கொள்ளாமல் ஐந்து மாதங்கள் நடந்தே 1200 மைல் தூரம் பயணம் செய்தார். பிரபலமான கவியாக இருந்ததால் அவரை அடையாளம் கண்டு கொள்ளும் மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் உணவு உட்கொண்டார். அந்தப் பயண அனுபவங்களை ஹைக்கூ ஆகவும் உரைநடையாகவும் பதிவு செய்திருக்கிறார். அதில் ஒரு ஹைக்கூ:

கொசுக்களும் பூச்சிகளும் கடிக்க

இரவு முழுதும் உறக்கம் இல்லை

தலைக்கு அருகில் ஒரு குதிரை மூத்திரம் பெய்கிறது.

இப்போதும் பாஷோ நடந்து சென்ற 1200 மைல்களையும் நடந்தே கடப்பதை பலரும் ஒரு புனித யாத்திரையாகவே மேற்கொள்கின்றனர். அதே பாதையில் என் கவி நண்பன் கவினோடு ஒருமுறை செல்ல வேண்டும் என்று எனக்கொரு ஆசை. இன்னும் கவினை நான் சந்தித்தது இல்லை. கவிதைகளை மட்டுமே வாசித்திருக்கிறேன். கவினின் கவிதைகளை வாசிப்பது ஒரு தியானத்துக்குள் சென்று நம்மை மறந்து விடுவது போன்ற அனுபவம். மாதிரிக்கு இரண்டு:

 

கல்லறை மேல்

அமரும் பறவைகள்

கனவுகளையெடுத்து

பறந்து போகின்றன

ஆகாயத்திற்கு அப்பால்.

***

ஒரு வானம் வைத்திருக்கிறேன்

ஒரு கோடி சிறகுகளும் வைத்திருக்கிறேன்.

***

கவின் இப்போது பாஷோ என்ற பெயரில் ஒரு வித்தியாசமான கவிதை இதழைக் கொண்டு வந்திருக்கிறார். இரண்டே பக்கம். மஞ்சள் மற்றும் பிங்க் வண்ணங்களில் வழவழ தாள். முழுக்கவும் ஹைக்கூ கவிதைகள். அதில் அய்யப்ப மாதவனின் ஒரு கவிதை:

புத்தனின் அசைவற்ற

மடியில் நிற்கிறது

அந்தரத்தில் அலைந்த காகம்.

முகவரி, கோவைக்கு அருகில் நடுப்பாளையம் கிராமம் என்று போட்டிருக்கிறது. ம்…  தமிழ் இலக்கியம் பட்டிதொட்டியெல்லாம் பரவிக் கிடப்பதில் எனக்குக் கன குஷி. பாஷோ படித்ததால் எனக்குத் தோன்றிய ஒரு குட்டிக் கவிதை:

அன்பைப் பொழி

ஆசையை ஒழி.”

 

***