மறுபடியும் முதலில் இருந்து…

குமரகுருபரன் மற்றவர்களைப் போல் இல்லை.  இந்த வாக்கியத்துக்குப் பல அர்த்தங்கள் உண்டு.  ஜெயமோகனின் நண்பர்கள் என்னிடம் நெருங்கிப் பழகுவதில்லை.  அதைவிட என்னை என்னவோ வன ஜந்துவைப் போல் பார்ப்பார்கள்.  ஆனால் குமரகுருபரன் அப்படி அல்ல.  அன்பைத் தவிர அந்த மனிதனிடம் நான் வேறு எதையும் கண்டதில்லை.  சில சமயங்களில் ராக்ஷஸக் குழந்தை போல் பழகுவார்.  ஒரு உதாரணம்.  ஜெயமோகன் ஒரு நாள் இரவு பனிரண்டு மணி போல் தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.  ஜெ.வுக்கு அது மாலை நேரம்.  ஆனாலும் ஏதோ எடுக்கவில்லை.  மீண்டும் மீண்டும் அழைத்திருக்கிறார்.  ஏன் தெரியுமா?  ஜெயமோகனின் அலைபேசியில் உள்ள பாடல் மிகவும் பிடித்திருந்ததாம்!  எப்படி இருக்கிறது!  ஏன் ஐயா, அந்தப் பாடலை யூட்யூபில் போட்டுக் கேட்கலாமே என்று கேட்க நினைத்தேன். ஆனால் அதுதான் குமரகுருபரன்.  பின்வருவது கார்ல் மார்க்ஸ் தன் முகநூல் பக்கத்தில் எழுதியது. விழாவுக்கு நான் வர நினைத்தேன்.  ஆனால் சில நண்பர்கள் ஃபோன் செய்து வர வேண்டாம் என்று சொல்கிறார்கள்.  ஒரு நண்பர் நான் வந்தால் தீக்குளிப்பேன் என்றார்.  சந்தோஷமாக இருந்தது, இலக்கிய உலகம் கூட அரசியல் போல் கொந்தளிப்பாக ஆகி விட்டதை எண்ணி.

என் அன்புக்குரிய குமரகுருபரனை தூரத்திலிருந்து வாழ்த்துகிறேன்…

”இது அன்பா என்றால் அன்புதான். உன்மத்தத்தின் கீறலுடன் நம்மை நெரிக்கும் பேரன்பு. குமரகுருபரனின் கவிதையுலகம் நட்சத்திரங்களைத் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் இருட்குகையைப் போன்றது. மெல்லக் கசியும் அதன் தனிமைக்குள் நம்மைப் பழக்கும். நாம் நம்மைக் கைவிடும் தருணத்தில் சட்டென உயிர்த்து அண்டத்தை நிறைக்குமொரு பேரொளி. நாம் அதைக் கவிதையென்போம். இல்லை இது உன் வாழ்வென்று சிரிக்கும் அது. வாழ்த்துகள் Kumaragurubaran Jayaraman!! வெளியீட்டு விழாவில் கொண்டாடுவோம்!! சியர்ஸ்!!” கார்ல் மார்க்ஸ்