காதலர் தினம்

இன்றைய தமிழ் வாழ்க்கை இரண்டு முக்கியமான கற்பிதங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.  ஒன்று, பழம் பெருமை.  இரண்டு, ஹைப்பர் ரியாலிட்டி என்ற மிகை எதார்த்தம்.  வீரம், காதல், அதிகாரம், பண்பாடு என்று எதை எடுத்தாலும் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே போய் விடுகிறது தமிழனின் சிந்தனை.  இது ஒரு பக்கம் இருக்க, மிகை எதார்த்தம் என்பது நம்முடைய வாழ்க்கையை நாமே வாழாமல் வேறு யாரோ வாழ்வதை திரையில் நிழல்களாகப் பார்த்து  அதை நம்முடைய மண்டைக்குள் திணித்துக் கொண்டு அந்த நிழல்களின் நிழல்களாக வாழ்வது.  இப்படிப்பட்ட நிழல் வாழ்க்கையில் நிஜமான காதலை எப்படி அனுபவிக்க முடியும்?  ஒரு இளைஞனுக்குக் காதல் என்பது முகம் தெரியாத ஐநூறு பேர் அமர்ந்திருக்கும் ஒரு இருண்ட அரங்கத்தில் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்தால் தெரியும்  அகலமான படுதாவில் அசையும் 6 pack ஆண் உருவங்கள் அரைகுறை ஆடை அணிந்த ஹீரோயின்களிடம் செய்யும்  சேஷ்டைகளாகவே அறிமுகமாகிறது.  ஐம்பது நூறு கோடி ரூபாய்களில் நடத்தப்படும் அந்த சேஷ்டைகளையே காதல் என்று தன் நினைவு தெரிந்த நாளிலிருந்து அறிந்து வரும் ஒரு இளைஞன் நிஜ வாழ்வில் காதலை எப்படி எதிர்கொள்வான், பாவம்?

பெண்களை எடுத்துக் கொண்டால் திருமணம் என்று சொல்லப்படும் நூதனமான சம்பவத்துக்குப் பிறகு தன்னிடம் சிக்கும் ஆடவனின் காவல் தெய்வமாக மாறி விடுகிறாள்.  .  கணவன், மனைவி, மகன் ஆகிய மூன்று பேரைக் கொண்ட என் நண்பர் ஒருவரின் குடும்பத்தை உதாரணமாகத் தரலாம்.  கணவன் மது அருந்தக் கூடாது என்பதிலிருந்து தொடங்கி நூறு கூடாதுகளை அவன் மீது சுமத்தியிருக்கிறார் அவர் மனைவி.    கிட்டத்தட்ட அந்த நண்பர் தன் மனைவியின் அடிமையாகவே வாழ்கிறார் என்று சொல்லலாம்.  இவ்வளவும் அந்த நண்பரின் நன்மைக்காகவே செய்கிறார் அவர் மனைவி.  காவல் தெய்வம் அல்லவா?  ”என் மனைவி நல்லவள்; எல்லாமே என்னுடைய நன்மைக்காக செய்வதாகவே சொல்கிறாள்.  உண்மையும் அதுதான்.  ஆனால்  எனக்கு ஒரு தங்கக் கூண்டில் இருப்பது போல் தோன்றுகிறது; அடிக்கடி தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது.”  இது கணவர்.  அன்னாரின் மகனுடைய நிலையோ அதற்கு நேர் எதிர்.  எங்கே வேண்டுமானாலும் போகலாம்.  என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.  கூடாது என்ற வார்த்தையே தாயாரிடமிருந்து வராது.  இது மிகவும் பாரபட்சமாக இருக்கிறதே; இது பற்றி உங்கள் மனைவியிடம் கேளுங்கள் என்று நண்பரை உசுப்பி விட்டேன்.  நண்பர் கேட்டார்.  அதிர்ச்சி தரும் பதில் கிடைத்தது.  ”அவனைக் கேட்கும் உரிமை அவனுடைய மனைவிக்கு மட்டுமே உண்டு!” இதை விட அதிர்ச்சியான விஷயத்தை அந்த நண்பர்  இன்னொரு நாள் சொன்னார்.  அவர் மகனுக்குப் பெண் பார்க்கிறார்கள்.  அப்போது அவன் சொன்னானாம்.  பெண், அம்மா மாதிரி இருக்க வேண்டும்!  ”என் மனைவியை அவனுக்கு அம்மாவாகத்தானே தெரியும்?  அதனால்தான் அப்படிச் சொல்கிறான்.  என் மனைவி மாதிரி அவனுக்குப் பெண் கிடைத்தால் இரண்டே நாளில் தற்கொலை செய்து கொள்வான்” என்றார் நண்பர் அழாக் குறையாக.

இன்னொரு சம்பவம்.  என்னுடைய நான்கு நண்பர்கள் ஆண்டு தோறும் ஒரு மலை வாசஸ்தலத்துக்குச் செல்வது வழக்கம்.  நால்வரும் என் வாசகர்கள்.  பெண்களுக்கும் நமது கொண்டாட்டங்களில் சம உரிமை அளிக்க வேண்டும் என்ற என் எழுத்தைப் படித்து விட்டு சென்ற ஆண்டு அவர்கள் தங்கள் மனைவியரையும் அழைத்துக் கொண்டு இன்பச் சுற்றுலா சென்றனர்.  வடிவேலு போலி சண்டியராக நடித்து நிஜ சண்டியர்களிடம் அடி வாங்கிக் கொண்டு ரத்த விளாராக வருவாரே அது போல் வந்து சேர்ந்தார்கள் நான்கு நண்பர்களும்.  பல நூறு சோகக் கதைகள்.  கமிஷனரும் கான்ஸ்டபிளும் சேர்ந்து சுற்றுலா சென்றது போல் இருந்தது என்றார் ஒரு நண்பர்.  காலையிலிருந்து உறங்கும் வரை செம பேரேடு நடந்திருக்கிறது.  காலையில் எழுப்பி விட்டு, குளிக்கச் சொல்லி கோவிலுக்கு அழைத்துப் போனார்களாம்.  மாலையில் ”மது உடம்புக்கு ஆகாது; எல்லோரும் ஆப்பிள் ஜூஸ் குடியுங்கள்” என்று ரகளை.  அதை விடக் கொடுமை என்னவென்றால், ஏழு மணி ஆனதும் ஒரு அம்மணி தன் கணவரிடம், ”எப்போதும்தான் ஆபீஸ் ஆபீஸ் என்று உயிரை விடுகிறீர்கள்.  இப்போதுதான் நாம் இருவரும் ஒன்றாக இருக்கிறோம்.  நிம்மதியாக உங்களோடு சீரியல் பார்க்கப் போகிறேன்” என்று சொல்ல எல்லா அம்மணிகளும் அவரோடு சேர்ந்து கொண்டு தத்தம் கணவரை டீவி சீரியலில் அமுக்கி கும்மாங்குத்து குத்தியிருக்கிறார்கள்.  ஜன்னல் ஆசிரியருக்கு அடியேனின் விண்ணப்பம் என்னவென்றால், இன்பச் சுற்றுலாவுக்குச் சென்று டிவி சீரியல் பார்த்த என் நண்பர்களிடம் சென்று காதல் பற்றிக் கேளுங்களேன் என்பதுதான்.

இதற்கிடையில் இந்த எழுத்தாளர்கள், கவிஞர்களின் லொள்ளு வேறு.  ஃபெப்ருவரி வந்தாலே கடைகளில் சங்க இலக்கியப் புத்தகங்களுக்கு கிராக்கி வந்து விடுகிறது.  அடித்துப் பிடித்து வாங்கிக் கொண்டு போய் விடுகிறார்கள்.  சங்க இலக்கியத்தில் காதல் கொட்டிக் கிடக்கிறதாம்.  இவர்கள் பேச்சைக் கேட்டு நானும் சங்க இலக்கியம் படித்தேன்.  எல்லாம் ஒரே பெண்ணடிமைத்தனம்.  ஒரு பாடலில் தோழி  பாடுகிறாள்.  தலைவன் வைப்பாட்டி வீட்டிலிருந்து தலைவி வீட்டுக்கு வருகிறான்.  அவனை இன்முகம் கொண்டு வரவேற்கிறாள் தலைவி. அதுதான் கற்புடைப் பெண்டிர்க்கு அழகாம்!   இதைப் பார்க்கும் தோழி, ’நல்லவேளை, நாமும் உயர்குடியில் பிறந்து இந்த வேதனைக்கு ஆளாகாமல் போனோம்’ என்று சொல்லிக் கொள்கிறாள்!  இன்னொரு பாடலில் வைப்பாட்டி பாடுகிறாள்.  தலைவன் அவள் வீட்டில் இருக்கிறான்.  இதை அறிந்து தலைவி கண்ணீர் விடுகிறாள்.  வைப்பாட்டிக்கு சாபம் விடுகிறாள்.  இதைத் தன் தோழிகள் மூலம் அறிந்த வைப்பாட்டி ‘அப்படியா சேதி?  விழாவுக்கு அவள் வரட்டும். ஒரு கை பார்த்து விடுகிறேன்’ என்று சபதம் போடுகிறாள்.

இப்படிப் போகிறது சங்க இலக்கியக் காதல்.

இந்தக் காலத்திய காதல், கால்கட்டு என்று சொல்லப்படும் கல்யாணத்துடன் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது.  திருமணத்துக்குப் பிறகும் காதல் பயிலும் தம்பதிகளை இதுவரை தமிழ்நாட்டில் நான் கண்டதில்லை.  காரணம், அதிகாரம்.  ஒன்று, மனைவி கணவனுக்கு அடிமையாக இருக்கிறாள்;  அல்லது, கணவன் அடிமையாக இருக்கிறான்.  ஆனால் நான் பல நூறு மேற்குலகத் தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன்.  இந்தியாவில் கூட லே, கோவா போன்ற சுற்றுலா ஸ்தலங்களில் கண்டதுண்டு.  எண்பது வயதுக்கும் மேற்பட்ட தம்பதிகள் படு ஜாலியாக கஃபேக்களில் அமர்ந்து பேசிக் கொண்டு உல்லாசமாக இருக்கிறார்கள்.

ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.  கடந்த ஆண்டு மே மாதம் நான் துருக்கி சென்றிருந்தேன்.  பல தேசங்களைச் சேர்ந்த ஒரு குழு அது.  அந்தக் குழுவில் 20-25 பேர் இருந்தோம்.  எல்லோருமே கணவன் மனைவி ஜோடி.  ஒரு அமெரிக்க ஜோடியின் வயது எண்பதுக்கு மேல் இருக்கும்.  அந்தக் குழுவில் இரண்டே இரண்டு ஜோடி மட்டும் தங்கள் குழந்தையோடு வந்திருந்தது.  ஒரு ஜோடியின் மகனுக்கு 15 வயதும் இன்னொரு ஜோடியின் மகளுக்கு 17 வயதும் இருக்கும்.  இந்த இரண்டு ஜோடியும் இந்தியா.  எல்லா அயல்நாட்டு ஜோடிகளும் தொள் மேல் கை போட்டபடி இழைந்து கொண்டிருந்தன.  ஒரு ஜோடி காதல் மிகுந்து முத்தமிட்டுக் கொண்டது.  அப்போது என் அருகில் இருந்த இந்தியத் தாய் தன் 15 வயது மகனுக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சினார்.  அந்தப் பெண்ணின் கணவன் ’காதலைத்’ தேடி பாங்காக் போகாமல் என்ன செய்வான்?

நம் தேசத்து காதல், கல்யாணம் ஆனதும் சிறார் வளர்ப்பு மையங்களாகி விடுகின்றன என்பதற்கு மேற்கண்ட சம்பவம் ஒரு உதாரணம்.

ஒரு பக்கம் எழுத்தாளர்கள் காதல் என்பதை சங்க இலக்கியத்தில் தேடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் காதல் ஜோடிகள் யாவும் விவாகரத்துக்காகக் குடும்ப நீதிமன்றங்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன.  குடும்ப நீதிமன்றங்களில் டவுன் பஸ்ஸைப் போல் கூட்டம் நெட்டித் தள்ளுகிறது.  உள்ளே நுழைந்தால் மூச்சு முட்டி விடும்.  அப்படி ஒரு கூட்டம்.

இன்றைய தமிழ் வாழ்வில் ஏன் காதல் இல்லாமல் போனது என்பதை இந்தக் காதலர் தினத்திலாவது நாம் சற்று யோசிக்க வேண்டும்.  எனக்குத் தெரிந்த ஒரு இளைஞன்.  பெண்கள் விரும்பாத எந்தப் பழக்கமும் இல்லாதவன்.  படித்தவன்.  அழகன்.  நல்ல வேலை.  ஆனாலும் பெண் கிடைக்கவில்லை.  எவ்வளவு தேடியும் கிடைக்காததால் சலித்துப் போய் இந்தியாவிலேயே மிக உயர்ந்த ஒரு கல்வி நிலையத்தில் எம்.பி.ஏ. படித்தான்.  கற்பனை செய்ய முடியாத சம்பளம்.  இப்போது அவனை நோக்கிப் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள் பெண்கள்.

காதலுக்கு எதிராக இத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் கள்ளக் காதல் மட்டும் கொடி கட்டிப் பறக்கிறது.  உலகப் புகழ் பெற்ற காதல் கதை ஒன்று இருக்கிறது.  அவனுக்குத் திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கின்றன.  புகார் ஒன்றும் இல்லை.  ஆனால் காதல் இல்லாத வாழ்க்கை.  ஒருமுறை வெளியூர் சென்றிருக்கும் போது ஒரு பெண்ணைச் சந்திக்கிறான்.  அது கடல் சூழ்ந்த ஒரு மலைப் பிரதேசம்.  அவள் ஒரு பேரழகி.  கூடவே ஒரு நாய்.  அவளோடு வேறு யாரும் இல்லை.  அவன் அந்த நாயோடு சிநேகம் பிடிக்கிறான்.  கடிக்காது என்று சொல்லும் போதே அவள் கன்னத்தில் வெட்கம்.  நாயை வைத்தே அவளையும் சிநேகம் பிடித்து விடுகிறான்.  தினமும் சந்திக்கிறார்கள்.  இருவருக்கும் எந்த வேலையும் இல்லை.  அவளும் விடுமுறையில் வந்திருக்கிறாள்.  காலையில், மாலையில், இரவில் அந்தக் கடற்கரையில் தனியே நடக்கிறார்கள்.  என் கணவர் ரொம்பவும் நல்லவர் என்கிறாள் அவள்.  வாழ்க்கையில் அவளுக்கு எந்தப் புகாரும் இல்லை.  ஆனால் காதல் இல்லை.  சொல்லும் போதே கண்ணீர் ததும்புகிறது.  அவளை அணைத்துக் கொள்கிறான்.  முத்தமிடுகிறான்.  அவளுடைய ஹோட்டல் அறைக்குச் செல்கிறான்.  நீங்கள் மிகவும் நல்லவர், மிகவும் மென்மையானவர் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறாள் அவள்.  அப்படி நான் உன்னிடம் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறான் அவன்; சொல்வதில்லை.

தன் கணவனுக்கு விடுமுறை கிடைக்காததால் தான் முன்னே வந்து விட்டதாகவும் ஓரிரு நாளில் அவன் வந்து அழைத்துச் சென்று விடுவான் என்றும் சொல்கிறாள்.  ஆனால் கணவனுக்குப் பதிலாக கடிதமே வந்தது.  நீ கிளம்பி வா, எனக்கு விடுப்பு கிடைக்கவில்லை.  ரயில் நிலையத்தில் பிரியும் போது இருவருமே ஒருவரை ஒருவர் இனிமேல் சந்திக்கப் போவதில்லை என்று தெரிகிறது.

அவன் சொந்த ஊர் திரும்பி விடுகிறான்.  ஒவ்வொரு நிமிடமும் அவள் நினைவே வந்து வந்து அவனைக் கொல்கிறது.  ஆறு மாதங்கள் இப்படியே செல்கின்றன.  அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவளுடைய ஊருக்குக் கிளம்பிச் செல்கிறான்.  அவளைச் சந்திக்கிறான்.  ஒரு நிமிடம் கூட உங்களை என்னால் மறக்க முடியவில்லை என்று கதறி அழுகிறாள் அவள்.  கிளம்பி அவனோடு அவன் ஊருக்கு வந்து விடுகிறாள்.

ரஷ்ய இலக்கிய மேதை ஆண்டன் செகாவ் 1899-ஆம் ஆண்டு எழுதிய கதை இது.  Lady with the Dog.

காதல் ஓர் அற்புதம் – பணம், அதிகாரம் போன்ற அற்ப விஷயங்கள் குறுக்கிடாவிட்டால்.

நன்றி: ஜன்னல்