கேசரி, போண்டா, காஃபி மற்றும் இலக்கியம்…

இப்போதெல்லாம் ராயர் கஃபே போவதில்லை.  கூட்டம்.  நெரிசல்.  முழுசாக வட இந்தியர்கள் அதை ஆக்ரமித்து விட்டனர்.  உட்கார்ந்து சாவகாசமாகப் பேசவும் முடியவில்லை.  இப்போதெல்லாம் நாரத கான சபாவுக்கு எதிரில் உள்ள பிள்ளையார் கோவிலை ஒட்டியுள்ள சந்தில் உள்ள சாயி மெஸ்ஸுக்குத்தான் போகிறேன்.  தினமும் அல்ல; எப்போதாவது.  தென்சென்னையிலேயே சுவையான டிஃபன் கிடைக்கும் இடம் என்றால் இப்போதைக்கு சாயி மெஸ்தான்.

ஃபெப்ருவரி 27 விழாவுக்கு வருபவர்களுக்குக் கொஞ்சம் காப்பி டீ கொடுக்க வேண்டாமா என்று கேட்டார் டாக்டர் ஸ்ரீராம்.  ஒரு வாரம் இருக்கும்.  கொஞ்சம் கடுமையான குரலில் வேண்டாம் என்றேன்.  பொதுவாக அப்படி நான் பேசுபவன் கிடையாது.  அன்றைய தினம்தான் பப்பு ஸோரோவுக்கு பெடிக்ரியும் ராயல் கேனனையும் தீர்ந்து போயிருந்தது.  புதிது வாங்கக் காசு இல்லை.  10000 ஆகும்.  பப்புவுக்குப் பின்னங்கால் சரியாக நடக்க முடியாமல் நொண்டி போடுவதால் எடையைக் குறைக்க ராயல் கேனைன் தான் கொடுக்க வேண்டும்.  ராயல் கேனைன் எல்லாம் சினிமா நடிகர்கள்தான் வாங்கிக் கொடுக்க முடியும்.  பணம் இல்லை.   பட்டினியா போட முடியும்?  யாரிடம் கேட்பது?  என்னவென்று கேட்பது?  என் நாய்களுக்கு உணவு இல்லை; பத்தாயிரம் வேண்டும் என்று கேட்டால் உதை அல்லவா கிடைக்கும்?  அதற்காகக் குட்டி ரெண்டு பட்டினி கிடப்பதா?  இதே கேள்வியை இதே சூழ்நிலையில் 30 ஆண்டுகளுக்கு முன் எதிர்கொண்ட போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எந்த யோசனையும் இல்லாமல் பிக்பாக்கெட் தொழிலில் இறங்கி விட்டேன்.  அப்போது நான் அனாதை.  இப்போது ஊர் அறிந்த பிரமுகர்.

இதுவரை கடனே கேட்டிராத ஒரு நண்பரை காலை ஏழரை மணிக்கு அழைத்து 10000 ரூ கடன் கேட்டேன்.  உடனே தருகிறேன் என்றார்.  அன்று முழுவதும் அவருக்குக் கடும் வேலை போல.  மறுநாள் வரை பொறுத்துப் பார்த்து விட்டு மறுநாள் காலை ஃபோன் செய்தேன்.  உடனே என் அக்கவுண்டுக்கு அனுப்பினார்.  நான் நினைத்தது போலவே முதல்நாள் அவருக்கு மூச்சு முட்ட முட்ட வேலை.  ஆனால் அன்றைய தினம் முழுவதும் எனக்குக் கடும் மன உளைச்சல்.  63 வயதில் இரண்டு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு.  கடவுள் கொடுத்தது.  முகம் சுளிக்கக் கூடாது.

ஆனால் டாக்டர் ஸ்ரீராம் சொன்னதைப் பிறகு யோசித்தேன்.  எத்தனையோ இலக்கியக் கூட்டங்களுக்குப் போய் நா வறண்டு பெருங்குடல் சிறுகுடலைத் தின்னும் அமிலத்தை உருவாக்கித் தின்று கொண்டிருக்க இலக்கிய உரைகளைக் கேட்டிருக்கிறேன்.  நம் வாசகர்களையும் அப்படிச் செய்ய வேண்டுமா?  ஸ்ரீராமை அழைத்து ஏதாவது சிற்றுண்டு கொடுக்கலாம் என்றேன்.  ஸ்ரீராமும் மகாத்மா.  என்னைச் சுற்றிலும் மகாத்மா கூட்டம்தான்.  ஒரு டாக்டர் நோயாளியிடமிருந்து பணம் வாங்குவதா?  சிகிச்சைக்கு பணம் வாங்குவது பாவம் இல்லையா?  இப்படி சார்வாகன் மாதிரி கேட்கக் கூடியவர் டாக்டர் ஸ்ரீராம்.

எப்படியும் சிற்றுண்டியும் டீ காஃபியும் கொடுத்து விடுவது என்று நினைத்து இன்று சாயி மெஸ்ஸில் கல் தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஆர்டர் கொடுத்து விட்டேன்.  எனவே, ஃபெப்ருவரி 27 அன்று மாலை ஐந்தரை மணிக்கு ராஜா அண்ணாமலை மன்றத்தில் உங்களுக்கு சாயி மெஸ்ஸின் கேசரியும், போண்டாவும், காஃபியும் கிடைக்கும்.  காஃபி வேண்டாம், டீ தான் குடிப்பேன் என்று சொல்பவர்களுக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  நிகழ்ச்சி ஆறரை மணிக்குத்தான் துவங்கும் என்றாலும் நீங்கள் ஐந்து ஐந்தரைக்கே வந்தால் கேசரியும் போண்டாவும் சாப்பிடலாம்.  நான் ஐந்து மணிக்கே வந்து விடுவேன்.

இன்று மாலை கேரளா கிளம்புகிறேன்.  நாளை காலை திரூரில் உள்ள மலையாளம் சர்வகலாசாலையில் ஒரு கருத்தரங்கம்.  பல ஊர்களிலிருந்து 40 எழுத்தாளர்கள் வருகிறார்கள்.  ஸாரா ஜோஸஃப் ஆரம்பித்து வைக்கிறார்.  ஏஷியா நெட்டுடன் தொடர்பு உடைய என் நண்பர் ஒருவர் – தமிழர் – சொன்னார்.  ஏஷியா நெட் நண்பர்கள் என்னை பால் ஸக்கரியா, எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் போன்றவர்களுக்குச் சமமாக வைத்துப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு மகிழ்ந்ததாகச் சொன்னார்.  கேரளம் எழுத்தாளர்களைக் கொண்டாடும் தேசம்.  நம் ஊரிலும் கொண்டாடுகிறார்கள்.  வாசகர்கள்.  நிறுவனங்கள் அல்ல.  நிறுவனங்கள் இங்கே எழுத்தாளர்களை அந்த நிறுவனங்களின் கடைநிலை ஊழியர்களை விட மோசமாக நடத்துகின்றன.  நான் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனத் தலைவர் என் ஃபோனையே எடுக்க மறுக்கிறார்.

நிறுவனம் என்றால் புரிகிறதுதானே?  உதாரணமாக, பல்கலைக்கழகம்.  ஒரு பிரபலமான பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் என்னை விஜய் டிவி நீயா நானாவில் பார்த்திருப்பதாகச் சொன்னார்.   ஆட்டோ ஓட்டுநர் இப்படிச் சொல்லலாம்.  பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொல்லலாமா?  இதுதான் தமிழ்நாடு.  கேரளத்தில் நான் பேசாத ஊர்கள் கம்மியாகவே இருக்கும்.  இரிஞ்ஞாலக்குடா என்ற ஊரிலேயே இரண்டு முறை பேசியிருக்கிறேன்.  வட கேரளத்தில் நான் பேசாத ஊர் கிடையாது.  கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சில சமயங்களில் பள்ளிகள்.  இங்கே தமிழ்நாட்டில் நான் இதுவரை பேசியிருக்கும் கல்லூரிகள் ரெண்டோ மூணோ இருக்கும். நாளை மறுநாள் – திங்கள்கிழமை – வந்து விடுவேன்.

ஞாயிறு காலை 9-இலிருந்து 10 மணி வரை, மக்கள் தொலைக்காட்சியில் பாலகுமாரனின் நேர்காணல் வருகிறது.  பழுப்பு நிறப் பக்கங்கள் குறித்தும் பொதுவாக என் எழுத்து பற்றியும் குறிப்பிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன்.  பாலாவுக்கு என் மனமார்ந்த நன்றி.

Balakumaran 14.2 (1)

Balakumaran 14.2 (2)

Balakumaran 14.2 (3)