விழா பதிவுகள் – 4

நேற்றைய விழாவில் மிகவும் உணர்ச்சிகரமான பேச்சு என்று எல்லோரும் சொன்னது, நம்ப முடியாது, பத்ரி சேஷாத்ரி.  நம்ப முடியாது என்ற வார்த்தைக்கு பத்ரி மன்னிக்கவும்.  அவருடைய பேச்சு எப்போதும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலைக்கு எதிரான இடத்தில் சஞ்சரிக்கும்; அவருடைய பேச்சு எப்போதும்  அறிவார்த்தமாகவே இருக்கும்.  ஆனால் நேற்றைய பேச்சு இது பத்ரியா என ஆச்சரியமடைய வைத்தது.  நான் மட்டும் இல்லை; பல நண்பர்கள் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டனர்.

மனுஷ்ய புத்திரனின் பேச்சு பொதுவாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில், அந்தரங்கமான வெளியில் சஞ்சரிப்பதாக இருக்கும்.  நேற்று அவர் பேச்சு இன்றைய சூழலின் தேவைகளைப் பற்றியும் அதற்கான நம்முடைய செயல்பாடுகளைப் பற்றியும் மிகவும் அக்கறையுடன் பரிசீலனை செய்தது.  இதுவுமே என்னை ஆச்சரியப்படுத்திய பேச்சுதான்.  வேறு விஷயங்களைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்த்தேன்.  மனுஷ்ய புத்திரனின் நேற்றைய பேச்சை தேர்தலுக்குப் பிறகு அமையக் கூடிய அரசு கவனித்தால் கலாச்சார சூழலில் நல்ல மாற்றங்கள் நிகழலாம்.

லெனின் மிக நீண்ட நேரம் உரையாற்றக் கூடியவர்.  மற்றவர்கள் பேசுவதற்காகத் தன் நேரத்தை விட்டுக் கொடுத்து விட்டார் என்று தோன்றியது.  திருப்பூர் கிருஷ்ணனின் பேச்சு எப்போதும் போலவே என்னைக் கவர்ந்தது.  நிகழ்ச்சி பற்றிய ஒரு சிறு காணொளி.  நன்றி ஷ்ருதி டிவி.