விழா பதிவுகள் – 10

ஹாய் சாரு,

இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் பார்ப்பதா, இலக்கிய விழாவிற்கு போவதா என்று குழம்பி, நாஞ்சில்நாடனின் இந்த வரி “அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே” மனசாட்சியை உறுத்த விழாவிற்கு வந்தேன். ஒரு இலக்கிய விழாவிற்கு இவ்வளவு பேர் வந்திருந்தது சந்தோசமாக இருந்தது.

நீங்கள் சிறந்த பேச்சாளராகி விட்டீர்கள். விழாவில் பேசிய மற்ற அனைவரையும் விட உங்களது பேச்சு அருமையாக இருந்தது. முதல் இரண்டு நிமிடம் கொஞ்சம் தடுமாறுனாலும் பிறகு சரளமாக பேசினீர்கள். நதிக்கரையில் அமர்ந்து சலனமில்லாமல் ஓடும் நதியைப் பார்ப்பது போல் இருந்தது உங்களது பேச்சு.

பழுப்புநிற பக்கங்களை ஏன் உங்களது மனைவிக்கு சமர்ப்பணம் செய்கிறீர்கள் என்று சொல்லிய போதும், ஸ்டெல்லா மேரிஸ்க்கு எப்படி செல்ல வேண்டும் என்று சொல்லிய போதும், மனுஷ்க்கு கவுண்டர் கொடுத்த போதும் அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. மனுஷ் சொல்லியது போல்,  ஆன்மீக எழுத்தாளராகி விட்டீர்களோ (உங்கள் சகோதரனைப் போல) என்று கொஞ்சம் பயமாக இருந்தது. நல்லவேளை அடுத்த நாவலை உங்களது ஸ்டைலில் எழுதப் போவதாக சொன்னீர்கள். ஒருமுறை அதிஷா சொன்னது போல் “நீங்கள் பழைய பன்னீர் செல்வமாக” மீண்டும் வர வேண்டும்.

மேடையில் பேசிய மூவர் ஜெயகாந்தனைப் பற்றி குறிப்பிட்டார்கள். திருப்பூர் கிருஷ்ணன் பேசும் போது சொன்னது “நீங்கள் ஏன் இப்பொழுது எழுதுவதில்லை என்று ஜேகே விடம் கேட்ட பொழுது, நான் எழுதியதெல்லாம் நீ படித்து விட்டாயா? என்று திருப்பி கேட்டாராம். படித்து விட்டேன் என்று சொன்னால், படித்ததெல்லாம் புரிந்ததா? என்று கேட்டாராம்” ஜேகே விடம் இருந்த அந்த ஞானச்செருக்கை உங்களிடமும் பார்க்கிறேன். வயதான பிறகு ஜேகே மாறிவிட்டது காலத்தின் கோலம்.

சமஸ் பேசும் பொழுது ஜேகேவை மக்கள் கொண்டாடினார்கள் என்று சொன்னார். ஜேகேவின் புகழுக்கு பின்னால் விகடனின் பங்கு நிறைய இருக்கிறது. மனங்கொத்தி பறவையைத் தவிர உங்களுக்கு வேறு வாய்ப்பு தரவில்லை. சினிமா இயக்குனர்கள் மற்றும் பாடலாசிரியர்களின் கிளிசே தொடர்களுக்கே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

பத்ரி பேசும் போது “ஜெயகாந்தன் விளிம்புநிலை மனிதர்களை பற்றி எழுதினார் என்று சொல்கிறார்கள் நமக்கு தெரியாத அவர்களின் வாழ்க்கையை அவர் எழுதவில்லை” என்று சொன்னார். நீங்கள் பரிந்துரை செய்த உப்புநாய்கள் படிக்கும் போது தான், ஜேகே விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை எப்படி ரொமாண்டிசைஸ் பண்ணி எழுதியிருக்கிறார் என்பது புரிந்தது.

நீங்கள் பேசியதின் முக்கிய அம்சம், அதிகாரத்தை எப்படி கட்டுடைப்பது என்பதற்கும் பின்நவீனத்துவத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியது. எடிட்டர் லெனினைப் பற்றி சொல்லும் போது துறவினால் வரும் அதிகாரத்தையும் துறந்தவர் என்று சொன்னீர்கள். அரசியல்வாதிகளை விட துறவிகளே அதிக அதிகாரத்தில் இருக்கும் இந்த உலகத்தில் உங்களது உதாரணம் கிளாசிக்.

அதிகாரத்தை கட்டுடைப்பதை குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று சொன்னீர்கள். என் வீட்டில் எல்லா வேலைகளையும் நான் பகரிந்து தான் செய்கிறேன் சமையல் உட்பட. ஆனாலும் நான் சொல்வதை மனைவி கேட்காவிட்டால் “உன் நல்லதுக்கு தானே சொல்கிறேன், ஏன் கேட்கவில்லை” என்று கடுமையாக திட்டுகிறேன். எல்லா அதிகாரமும் “உன் நல்லதுக்கு தான்” என்று தானே தொடங்குகிறது :). கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

பழுப்புநிறப் பக்கங்களில் எனக்கு மிகவும் பிடித்தது எஸ் சம்பத்தின் பகுதி தான். இடைவெளி நாவல் மீண்டும் பதிப்பிக்க பட வேண்டும்.  நீங்கள் குறிப்பிட்டது போல் “எழுத்தாளனின் இண்டெலச்சுவல் ப்ராபர்ட்டி சமூகத்துக்கே சொந்தம் குடும்பத்துக்கு அல்ல” ஏனென்றால் அவன் உயிரை பணயம் வைத்து எழுதியது சமூகத்திற்காகத் தானே.

பின் குறிப்பு: கேசரியும், காபியும் சுவையாக இருந்தது.

அன்புடன்,

சரவணன்

***

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைக் கடந்த சில மாதங்களாகச் செய்த இரண்டு முக்கிய புள்ளிகள் டாக்டர் ஸ்ரீராம், ச.பா. முத்துக்குமார் இருவரும் புகைப்படத்தில்.  அமர்ந்திருப்பவர் ஸ்ரீராம்.  நின்று கொண்டிருப்பவர் முத்துக்குமார்.
IMG_3945