விழா பதிவுகள் – 11

நண்பர் யுவ கிருஷ்ணா முகநூலில் எழுதியிருப்பது:

போன வார இறுதி ஆச்சரியம். சாரு நிவேதிதாவின் ஒன்பது நூல்கள் வெளியீட்டு விழா. ஓர் இலக்கிய விழாவில் இவ்வளவு பேர் கலந்து கொள்வது அரிதிலும் அரிதான நிகழ்வு. இத்தனைக்கும் அன்று இந்தியா – பாகிஸ்தான் மோதிய டி20 கிரிக்கெட் போட்டி வேறு.

சாருவின் புத்தக வெளியீடுகளில் 90% இளைஞர்கள்தான் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவும் விதிவிலக்கல்ல. இணையத்தளங்களில் அவர் மீது வெளிப்படும் வன்மம் எவ்வளவு போலியானது என்பதை ராஜா அண்ணாமலை மன்றம் நிரூபித்தது. போலவே, திரும்பத் திரும்ப சாரு சொல்லும், ‘எழுத்தாளனை சமூகம் மதிப்பதில்லை’ என்கிற க்ளிஷேவும் போலியானதுதான் என்பதற்கும் அந்த கூட்டமே சாட்சி.

ஆனால்-

கடந்த பத்தாண்டுகளாக சாருவின் நூல் வெளியீடுகளில் தவறாமல் கலந்து கொள்கிறவன் என்கிற முறையில் சொல்கிறேன். ஆரம்ப காலங்களில் சாருவின் மேடை என்றால் காரசாரமாகவும், இலக்கிய வெறியை தூண்டக்கூடிய வகையிலும் அமைந்திருக்கும். வருடங்கள் தேயத்தேய இலக்கிய கதாகாலேட்சபத்தை பார்ப்பது போல இன்றைய மேடைகள் ஆகிக் கொண்டிருக்கிறது.

IMG_4098

துக்ளக்கில் அவர் எழுதிய கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டிருக்கிறார். புரட்டிப் பார்த்தால் 2016க்கு எவ்விதத்திலும் relevant ஆகாதவை. ஆனால், பதினைந்து பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய ‘கோணல் பக்கங்கள்’ இப்போதும் அத்தனை சுவாரஸ்யமான வாசிப்பை தருகிறது.

இப்போதைய சாருவின் நூல்களை பார்க்கும்போது ‘அப்புறம் படிச்சிக்கலாம், படிச்சேதான் ஆவணுமா?’ என்கிற சலிப்பு வந்துவிட்டது. சாரு, இலக்கிய உலகில் தனக்கு ஏற்பட்டிருக்கும் mass mentalityயை எப்படி தக்கவைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் அவர் எதிர்கொள்ள வேண்டிய உடனடி சவால்.

இத்தனை ஆண்டுகளில் சாருவின் விழாக்களில் நான் ஒரு நூல் கூட வாங்காமல் திரும்பியது இப்போதுதான். காசே இல்லாத நிலையிலும் பர்ஸை துடைத்தெடுத்து அவர் நூல்களை ஆசையோடு வாங்கிய நாட்கள் நிழலாடுகிறது.