விழா பதிவுகள் – 27

எம்.எம்.அப்துல்லா, வாசகர் வட்டத்தில்:

பா.ராவின் அதி தீவிர ரசிகன் என்ற பெயர் எனக்கு இருந்தாலும் கடந்த பத்தாண்டுகளாக சாருவின் நிகழ்ச்சிகள் எதையும் தவறவிட்டதில்லை. அநேகமாக சாருவின் நிகழ்ச்சிக்கு கரை வேட்டியோடு வரும் ஒரே கீழ்மட்ட அரசியல்வாதி நானாக மட்டும்தான் இருப்பேன். சென்ற ஆண்டு சாருவை காமராஜர் அரங்கில் கோட்டு சூட்டோடு பார்த்த போது அடுத்த முறை வேட்டி இல்லாமல் பேண்ட் அணிந்து செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அப்படியே வந்தேன். ஆனால் கலர் சட்டை இல்லை. மக்கள் அரசியல்வாதிகள் மேல் நேரடியாக துப்ப தயங்குவது வெள்ளை சட்டைக்காகத்தான் என்ற உளவியலால் வெள்ளை சட்டையைத் தவிக்க முடியவில்லை.

நிற்க, வெளியீட்டு விழா தினத்தன்றுதான் திமுகவின் புதுக்கோட்டை மாவட்ட வேட்பாளர்களுக்கான நேர்காணல். அதுவும் மாலை 4 மணிக்கு. இந்த முறை நிகழ்வை விட்டுவிடுவேனோ என்று நினைத்தேன். நல்ல வேலையாக தலைவர் கலைஞர் இளைஞராக இருப்பதால் சரியாக 4 மணிக்குத் துவங்கி 6.30 க்கெல்லாம் நேர்காணலை மின்னல் வேகத்தில் முடித்துவிட்டார். 92 வயதில் சாருவும் இவரை போலவே இதே எனர்ஜியோடுதான் இருப்பார். நாமும் பார்ப்போம்!!

உள்ளே வந்த போது நிகழ்வு துவங்கி இருந்தது. அரவிந்த் பேசிக்கொண்டு இருந்தார். பத்ரி அண்ணா, சாரு உள்ளிட்டோர் மேடையில். பின்னர் மனுஷ், எஸ்.ரா இணைந்தனர். வழக்கம் போல் கலக்கல் நிகழ்ச்சி. ஆனால் சாருவின் பேச்சில் முன்பு நான் பாத்த சாரு இல்லை. ஜெகா, நிர்மல், நெல்சன், உமாமகேஷ்வரன், லக்கி, சிவராமன், மருத்துவர் அருணா, சந்தியா உள்ளிட்ட பலரையும் பார்த்ததில் மகிழ்ச்சி. பழைய டான் சாருவை அடுத்த நிகழ்வில் பார்ப்பேன். பார்த்தே தீருவேன்.