63 வயதில் சால்ஸா கற்றுக் கொள்வது எப்படி? – அராத்து

நான் போகும் சால்ஸா வகுப்பில் நான் தான் அதிக வயது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஒரு 70 வயதுத் தாத்தாவும் இருக்கிறபடியால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது.  இது பற்றி அராத்து எழுதியதைப் படித்து ரொம்பவே ரசித்தேன்.  என்னைத் தாக்குவது போல் இருக்கிறது என்று தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.  பொதுவான நிலைமையைச் சொல்வதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் நம் வாசகர் வட்டத்தில் சாருவைக் கிண்டலடிக்கக் கூடாது என்று எந்தச் சட்டவிதியும் இல்லை. அவருடைய கணினியில் ‘க்’ என்ற எழுத்து இல்லை போல.  அதனால் அவருடைய ‘வாழ்கை’யை ’வாழ்க்கை’ என்றே படிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.  இப்போதெல்லாம் இளைஞர்களுக்கு வசதியாக ஒற்றெழுத்தே இல்லாமல் தமிழைத் தட்டச்சு செய்யும் முறையைக் கொண்டு வந்திருக்கிறார்களோ எனவும் சந்தேகமாக இருக்கிறது.

ஒரு முக்கிய விஷயம்.  அராத்துவை தொலைக்காட்சியில் சமூக ஆர்வலர் என்று போடுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  இது போன்ற கட்டுரைகள் நிறைய எழுதினால் சமூக ஆர்வலர் என்ற பெயரே நிலைத்து விடும்.  அராத்து கவனம்.  ஆனால் அதில் ஒரு அனுகூலமும் இருக்கிறது.  விகடன் நண்பர்கள் உங்களை தமிழருவி மணியனுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் சிந்தனையாளர் என்ற அடையாளத்தைக் கொடுத்து விடுவார்கள்.  அராத்து கவனம்.

இதெல்லாம் போக, நம் தமிழ்ச் சமூகம் பற்றி இவ்வளவு செறிவாக சிந்திக்கும் ஒருவருடைய பத்தி (column) ஏன் பிரபல பத்திரிகைகளில் வருவதில்லை என்ற ஆச்சரியமும் மேலோங்குகிறது.  இனி வருவது அராத்து. தலைப்பை மட்டும் மாற்றியிருக்கிறேன் அராத்து.

வுட்டதைப் புடிச்சிடுவோம் …….

வயதான பிறகும் வாழ்கை இருக்கிறது. நாங்கள் மிஸ் செய்ததையெல்லாம் இப்போது செய்யப்போகிறோம் என்ற அறைகூவல்களை சமீப காலமாக கேட்டுக்கொண்டு உள்ளோம். 70 வயது பாட்டி இப்போதுதான் பரதநாட்டியம் கற்றுக்கொள்வதையும் , 75 வயது தாத்தா தற்போதுதான் களறியோ சால்ஸாவோ கற்றுக்க்கொள்வதையும் சிலாகித்து எழுதிய கவர் ஸ்டோரிகளையும் புள்காங்கிதத்தோடு படித்திருப்போம். தாத்தாவும் பாட்டிக்கும் அள்ள அள்ளக் குறையா வாழ்கை இருக்கிறது என்பதோ , எதை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்பதிலோ மாற்றுக்கருத்து இல்லை. இந்த புதிய கற்றல்களை அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்கையை முழுவதுமாக அனுபவித்து கொண்டாட்டமாக கற்றுக்கொள்கிறார்களா அல்லது வீராப்பாக கற்றுக்கொள்கிறார்களா என்பதில்தான் இருக்கிறது மேட்டர்.

குடும்பத்துடன் , உறவினர்களுடன் , சமுதாயத்துடன் முற்றிலுமாக உறவு துண்டிக்கப்பட்டு அல்லது தன்னையறியாமலேயே துண்டித்துக்கொண்டு பின் வரும் வெறுமையை மறைக்கவும் , யாருக்கோ சிக்னல் காட்டவும் இதையெல்லாம் செய்வார்களெனில் ,பாவம். பரிதாபப்படவேண்டியதுதான்.

சில தாத்தா பாட்டிகள் கார்டனிங்க் கற்றுக்கொள்வது , போட்டோகிராஃபி கற்றுக்கொள்வது என்பதையெல்லாம் தாண்டி , ஜாவா கற்றுக்கொள்கிறேன் பேர்விழி என்று கிளம்பிய கூத்தெல்லாம் நடந்தது. போட்டோஷாப் , மீம்ஸ் கற்றுக்கொண்டாலாவது பரவாயில்லை. ஜாவா எல்லாம் கற்றுக்கொண்டு என்னய்யா செய்யப்போகிறீர்கள்? இதில் ஒரு தாத்தா ஒரு கையால் மௌஸை அழுந்த பற்றிக்கொண்டு , இன்னொரு கையால் அக்குபிரஷர் போல மௌஸை குத்திக்கொண்டு இருந்ததை ஒரு டிரெயினிங்க் செண்டரில் என்னுடைய பாழாய்ப்போன கண்ணால் பார்த்து இருக்கிறேன்.வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என்று வேறு அந்த தாத்தா நம்பிக்கொண்டு இருந்தார்.

இதெல்லாம் ஏன் நடக்கிறது ?

தங்கள் குழந்தைகள் தங்களை உபயோகப்படுத்திக்கொள்கிறார்கள் என்ற எண்ணம் சமீப காலமாக பெரியவர்களிடம் ஏற்பட ஆரம்பித்து இருக்கிறது.தாங்களே தங்களை தங்கள் பிள்ளைகளிடம் இருந்து சின்னச் சின்ன பிரச்சனைகள் மூலம் அந்நியப் படுத்திக்கொள்கிறார்கள்.வேலைக்கு சென்று ரிட்டையர் ஆன பெற்றோர்களிடம் கணிசமான அளவு கையிருப்பும் இருப்பதால் , முதியோர் இல்லத்தில் சென்று சேர்ந்து விடுகின்றனர். முதியோர் இல்லமெனில் பழங்காலம் போல அழுது வடிந்து கொண்டிருக்கும் சிறைச்சாலை என்றெல்லாம் எண்ணலாகாது. நல்ல 5 ஸ்டார் வசதிகளுடன் கூடிய இல்லங்கள் பெருகி விட்டன. இவைகளை சீனியர் சிட்டிசன் க்ளப்ஸ் என அழைப்பதே சாலப் பொருத்தமாகும்.

வேளைக்கு விதவிதமான உணவு , ரெகுலர் ஹெல்த் செக் அப் , பிசியோதெரபி டிரீட்மெண்ட் , ஸ்பா , நீச்சல் குளம் , விளையாட்டு மைதானம், சினிமா ஹால் , க்ளப் ஹவுஸ் என கலகலப்பாக பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கின்றன இதைப்போன்ற இல்லங்கள். விளையாட்டு , கேளிக்கை , பழங்கதை பேசுதல் என புதிதாக ஒரு லக்சூரி வாழ்கையைத் தொடங்குகின்றனர்.இது பிரச்சனையல்ல. பிள்ளைங்க என்னை முதியோர் இல்லத்துக்கு துரத்தி விட்டுட்டாங்க என அவதூறு பரப்புவதை ஒரு பொழுது போக்காக வைத்திருப்பதுதான் சிக்கல்.சிலர் தம்பதிகளாக இங்கே தஞ்சமடைகிறார்கள். பல வீடுகளில் ஒருவர் குடும்பத்துடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டு இருப்பார். இன்னொருவர் மட்டும் கோபித்துக்கொண்டு இங்கே வந்து தங்கி உறவினர்கள் இடையே சீன் போடுக்கொண்டு இருப்பார்.

இது ஒரு வகை எனில் ,இன்னொரு வகை ஊர் ஊராக புனித யாத்திரை போகிறேன் பேர்விழி என கூத்தடிப்பது. ஊர்பட்ட வியாதிகளோடு திரும்பி மருத்துவமனையே கதி என கிடந்து விசிட்டர் ஹவரில் யார் யார் வந்து தன்னை பார்க்கிறார்கள் என சென்ஸஸ் எடுத்துக்கொண்டு இருப்பது.

தங்கள் காலத்தில் குடும்பத்துக்காக உழைக்கிறோம் என்ற எண்ணத்திலேயே பலருக்கும் வாழ்கை ஓடி முடிந்து விடுகிறது.தற்போதைய காலத்தில் கிடைக்கும் கேளிக்கைகளும் , வசதி வாய்ப்புகளும் பெரியவர்கள் காலத்தில் இல்லை. தங்கள் பிள்ளைகள் வாழ்கையை கொண்டாட்டமாக கழிப்பதை பார்ப்பதில் இருந்தே சிடு சிடுப்பு ஆரம்பமாகிறது. தாங்கள் மிஸ் செய்து விட்டோமோ என்ற ஏக்கம் ஆற்றாமையாக வெளிப்படுகிறது. அதிலும் இன்றைய இளைஞர்கள் தங்கள் மனைவியை சமமாக நடத்துவது , மருமகளுக்கு கிடைக்கும் உடை மற்றும் இன்ன பிற சுதந்திரம் , மகன் மருமகளுடன் உல்லாசமாக வெளியே செல்வது , பார்ட்டி , கெட் டுகதர்களுக்கு இருவரும் ஜாலியாக செல்வது போன்றவற்றை காணும்போது , அவர்களுக்கே தெரியாமல் குமைச்சல் அதிகமாகிறது.நாங்க வீட்டையும் குழந்தைகளையும் பாத்துக்கறதாலதானே நீங்க இப்பிடி கூத்தடிக்கிறீங்க என மனதுக்குள் கருவிக்கொள்கின்றனர்.

அந்தக்காலத்தில் தந்தையை விட அதிகமாக திடீரென பிள்ளைகள் சம்பாதிக்க முடியாது.படிப்படியாகத்தான் வளர்ச்சி இருக்கும். தற்போது பெற்றோர்கள் ரிட்டையர்மெண்ட் ஆகும்போது வாங்கிய சம்பளத்தை பிள்ளைகள் முதல் மாத சம்பளமாக வாங்குவதில் இருந்து அதிர்ச்சி ஆரம்பிக்கிறது. 50 வயதில் கஷ்டப்பட்டு சொந்த வீடு கட்டியதை இப்போதைய பிள்ளைகள் அநாயசியமாக 25 வயதில் ரெடிமேடாக லக்ஸூரி ஃப்ளாட் வாங்குவதை ஜீரணிக்க முடிவதில்லை. இந்த பொருளாதாரம் கொடுக்கும் பிள்ளைகளின் கட்டற்ற சுதந்திரத்தை பெற்றோர்கள் வெறுக்கிறார்கள். உண்மையில் தங்கள் பிள்ளைகளையே தங்களுக்கு போட்டியாளர்களாக நினைக்கிறார்கள். பொறாமை கொள்கிறார்கள். இதில் அன்பு , பாசம் , பிணைப்பு போன்றவற்றையெல்லாம் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. அது எல்லாம் மலை அளவு தங்கள் பிள்ளைகள் மேல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தங்களை விட உயர பறப்பதிலும் , தங்கள் கைக்கடங்காமல் போவதையும் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.இப்போதும் பார்க்கலாம் , தங்களை விட குறைவாக சம்பாதித்து , தங்கள் கைக்கு அடக்கமாக இருக்கும் பிள்ளைகளுடன் எந்த சச்சரவும் இல்லாமல் பெரியவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை.

பிள்ளைகள் பெரியவர்கள் மீது மரியாதை வைத்திருப்பது , அன்பு , பாசம் வைத்திருப்பது என்பதெல்லாம் வேறு . சுதந்திரமாக இருப்பது என்பது வேறு. இதில்தான் பெரியவர்கள் போட்டுக்குழப்பிக்கொள்கிறார்கள். மேலும் தற்போதைய ஹெல்த் அவேர்நெஸ் விளம்பரங்கள் அவர்களுக்கு கடுமையான இன் செக்யூரிட்டியை விதைத்துக்கொண்டு இருக்கின்றன. தங்கள் அனைத்து சேமிப்புகளையும் எதிர்கால மருத்துவ தேவைகளுக்கு என ஒதுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். பிள்ளைகள் மேல் கொஞ்சம் கூட நம்பிக்கை இருப்பதில்லை. இன்ஷூரன்ஸை நம்பும் அளவுக்கு பிள்ளைகளை நம்புவதில்லை. இரண்டு பெற்றோர்களும் சம்பாதிக்கும் குடும்பத்தில் , அப்பா ஒரு கட்டத்தில் குடும்பத்துக்கு செலவழிப்பதை நிறுத்தி விடுகிறார். அனைத்து சம்பாத்தியத்தையும் தன்னுடைய எதிர்கால மருத்துவ தேவைகளுக்கு சேமிக்க ஆரம்பித்து விடுகிறார். அம்மா வேறு வழியில்லாமல் குடும்பத்துக்காக செலவழித்து , கையில் சேமிப்பு இல்லாமல் விரக்தி நிலைமைக்கு வந்து கடும் கோபத்துடன் வாழ்ந்து வருகிறார். சேமிப்பு கரைந்தது ஒருபுறம் , அதற்கான அங்கீகாரம் கிட்டாதது மறுபுறம்.

மாறி வரும் லைஃப் ஸ்டைல் அனைத்தையும் அனைவரையும் போட்டு குழப்பி அடிக்கிறது. ஒரு குடும்பமாக இயங்கி வந்தவர்கள் தனி மனித வாழ்கை , தனி மனித சுதந்திரம் , தான் , தனக்கு என முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததால் , அனைவரையும் பதற்றம் தொற்றிக்கொண்டது. இன் செக்யூரிட்டி அதிகமாயிற்று.

மகனோ மகளோ பெற்றோர்களை தங்கள் வீட்டுக்கு அழைத்தால் , வேலை செய்ய அழைக்கிறார்கள் என்று பெற்றோர்கள் திட்டவட்டமாக நினைக்க ஆரம்பித்தார்கள்.பேரன் பேத்திகளை சிடுசிடுக்க ஆரம்பித்தார்கள். எனக்கு ஆர்த்திரிட்டீச் , சுகர் , பீபி என காரணம் சொல்லி , பேரன் பேத்திகளை தள்ளி வைக்க ஆரம்பித்து மனதில் வெறுமை சூழ்ந்து தள்ளாத வயதில் பரதநாட்டியம் கற்றுக்கொள்கிறேன் பார் என தையா தக்காவென குதிக்க ஆரம்பித்தார்கள்.பரதநாட்டியம் ஆர்த்தோ பிரச்சனையை சரி செய்து விடும் போலிருக்கிறது.

எவ்வளவுதான் பணம் இருந்தாலும் , கடைசி காலத்தில் தனிமையில் இருப்பது கொடுமை.சேர்த்து வைத்த பணம் நல்ல நர்ஸை வேண்டுமானால் உங்களுக்கு அளிக்கும்.நர்ஸால் உங்கள் உடல் நலத்தைதான் ஓரளவுக்கு பேண முடியும். மன நலம் பாதிக்கப்பட்டு , உடல் நலத்தை மட்டும் பேணி , வாழ்வை அர்த்தமில்லாமல் நீட்டிக்கொள்வதில் என்ன பயன் ?

இயற்கை ஒரு சிஸ்டம் போட்டு வைத்துள்ளது. ஒவ்வொரு வயதிலும் வயதிற்கேற்ற உறவு தேவை. குழந்தைக்கு அம்மா அப்பா , பதின்ம வயதில் தோழன்/தோழி , காதலன்/காதலி . காலா காலத்தில் கணவன் / மனைவி . அப்புறம் நடுவாந்திர வயதில் கொழுப்பெடுத்து கள்ளக்காதலன்/காதலி என வாழ்கை போகும் போக்கில் , வயதான காலத்தில் பேரன் பேத்திகளுடன் பழகுவது ஒரு கொடுப்பினை. குட்டிக்குழந்தைகள் உங்களை தாத்தா! பாட்டி!! என அழைத்து கட்டிக்கொள்வது ஒரு கிஃப்ட்.

பெரியவர்களை நீ என்னா பெரிய வீரனா தாத்தா ? உனக்கு என்னா பாட்டி புது ரைம்ஸே தெரியலை என்று மழலைகள் பெரியவர்களிடம் பேசி , அவர்களுக்கு அந்த வயதில் வரப்போகும் டிப்ரஷன் , அல்சைமர் , ஆங்க்சைட்டி போன்ற மன வியாதிகளை துரத்தி அடிக்கின்றன. குழந்தைகள் உண்மையில் அப்பா அம்மாவை விட தாத்தா பாட்டிகளிடமே உரிமையாக பழகுகின்றன.இவ்வளவு நாட்கள் பாறாங்கல் என சுமந்து வந்த ஈகோவை போட்டு உடைத்து சிதறடித்து பெரியவர்களை இலகுவாக்குகின்றன.சூது வாது , தந்திரம் ,குரோதம் போன்ற துர்குணங்களை பெரியவர்களிடம் இருந்து எடுத்து , தூக்கி கடாசி , வெள்ளந்தியாக சிரிக்க வைத்து அவர்களை மீண்டும் குழந்தையாக்குகிறது .

மலர்க்கூட்டம் தராத மன அமைதியை குழந்தைகளால் தரமுடியும். கார்டனிங்க் செய்வது , கோவிலுகுச் செல்வது என அனைத்தைக்காட்டிலும் குழந்தைகளுடன் பழகுங்கள், உலகை அவ்வளவு புத்துணர்ச்சியாக பார்ப்பீர்கள். நாய் வளர்க்கிறீர்கள் , அதற்கு எவ்வளவு சிரமப்படுகிறீர்கள் ? அதை மட்டும் எப்படி உங்களுக்கு இருக்கும் உடல் உபாதையிலும் கவனித்துக்கொள்ள முடிகிறது ?அது வாய் பேசாது என்பதாலும் , அதற்கென்று ஒரு கருத்து இல்லையென்பதாலும் , என்ன சொன்னாலும் கேட்கும் என்பதாலும் நாய் மேல் உங்களுக்கு ஈகோ இல்லை.

எல்லா உறவுகளும் நாய் போல இருக்க முடியாது. அப்படித்தான் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டால் , நீங்கள் பெற்றது என்ன என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். பிள்ளைகள் மேல் குற்றமே இல்லையா என நீங்கள் கேட்பது கேட்கிறது. நிச்சயம் இருக்கிறது. இது உங்களுக்காக எழுதப்படும் கட்டுரை.அதனால் பிள்ளைகள் குறைகளை இங்கே விவரிக்கவில்லை. பிள்ளைகளுக்கான வாழ்கை இது. கொஞ்ச நாட்கள் அவர்கள் மனம் போன போக்கில் வாழட்டும். விட்டுப்பிடிக்கலாம்.அப்படியே உங்கள் பிள்ளைகள் மேல் கோபமோ வெறுப்போ எரிச்சலோ எது இருந்தாலும் , அதை பிள்ளைகளோடு வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகளை விட்டு விலகிப் போகாதீர்கள். உங்களுக்கான தேவை குழந்தைகள்.

தாத்தா பாட்டிகள் குழந்தைகளை பார்த்துக்கொள்வதில்லை. உண்மையில் குழந்தைகளே தாத்தா பாட்டிகளை பார்த்துக்கொள்கின்றன.

அராத்து

அராத்துவின் மற்ற சிந்தனைகளுக்கு… பார்க்கவும்:

www.facebook.com/myaraat