தமிழும் ஆங்கிலமும் : அறிவுஜீவிகளை முன்வைத்து…

பல காலமாக நான் எழுதி வரும் ஒரு விஷயம், தமிழ்நாட்டின் சீரழிவுக் கலாச்சாரத்துக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பவர்கள் – தமிழ் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டிருக்கும் புத்திஜீவிக் கும்பல்.  (இன்னும் மோசமான வார்த்தைகளில் திட்டத்தான் கை இழுக்கிறது.  லிங்கனையும் காந்தியையும் எண்ணிக் கொண்டு மனக்கட்டுப்பாட்டுடன் கும்பல் என்று மட்டுமே சொல்கிறேன்.  மற்றபடி நீங்கள் எல்லா கெட்ட வார்த்தைகளையும் போட்டுக் கொள்ளலாம்.)  மிக முக்கியமாக, அந்த ஆங்கில அறிவுஜீவிக் கும்பலின் முட்டாள்தனம் சகிக்க முடிவதில்லை.  அந்தக் கும்பலுக்கு எதுவுமே தெரியாது.  தெரிந்த ஒரே விஷயம், நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள்; தெளிவான ஆங்கிலம் எழுதுவார்கள்.  அவ்வளவுதான்.  அவர்களின் புத்தி, அறிவு எல்லாம் ரொம்ப ரொம்பப் பாமரத்தனமாக இருக்கும்.  அவர்கள் எழுதும் ’உலகப் புகழ்’ பெற்ற சினிமா விமர்சனங்கள், நாடக விமர்சனங்கள், இசை விமர்சனங்கள் எல்லாமே அதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை.

இதற்கு ஒரு கலாச்சார உதாரணமாக இருப்பது ஆங்கில ஹிந்து பத்திரிகை.  உலகக் குப்பையான ஒரு சபா நாடகம் மைலாப்பூரில் நடக்கும்.  அதற்கு நாடக விமர்சகர் ஆங்கில ஹிந்துவில் அரைப் பக்கத்துக்கு மதிப்புரை எழுதுவார்.  ஆனால் அதே ஹிந்து நிறுவனம் தமிழில் ஹிந்துவை ஆரம்பித்த போது ஆங்கில ஹிந்துவின் எந்த அசட்டுத்தனமும் இல்லாமல் தமிழ்க் கலாச்சார மறுமலர்ச்சிக்கு ஏற்ற பல புரட்சிகரமான மாற்றங்கள் அதில் நிகழ்ந்தன; நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  அதற்கு அந்தத் தமிழ் இந்துவின் ஆசிரியர் குழு காரணம்.  ஆசிரியர் அசோகனிலிருந்து அரவிந்தன், ஷங்கர ராமசுப்ரமணியன், சமஸ், சந்திர மோகன், ஆசை என்று எல்லோருமே இலக்கிய வாசிப்பில் தேர்ந்தவர்கள்.  ஷங்கர ராமசுப்ரமணியன் கவிஞர்.  அரவிந்தன் நாவலாசிரியர்.  ஆசை கவிஞர்.  இன்னும் பலர் அங்கே உண்டு. இவர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும் எப்போதுமே உண்டு.  என் தமிழை இவர்கள் எளிய மனிதர்களிடம் கொண்டு செல்கிறார்கள்.  (ஆனால் இவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் பெரும்பாலும் காலச்சுவடு குழுவைச் சேர்ந்தவர்கள் என்று வதந்தி நிலவுகிறது.  அது உண்மைதான் என்பது பொலவே அதில் வரும் புத்தக மதிப்புரைகள் தெரிவிக்கின்றன.  ஆனால் அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.  நான் இந்த கோஷ்டிப் பூசல்களுக்கெல்லாம் வெளியே நிற்கிறேன்.)

இப்போது இந்த விஷயத்தை எழுத என்ன காரணம் என்றால், நேற்று வந்த ஒரு செய்திதான்.  டாக்டர் சாந்தாவுக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் பத்ம விபூஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது.  இதை பெரும்பாலான பத்திரிகைகள் ரஜினியின் பெயரை முதலில் போட்டு, டாக்டர் சாந்தா பெயரை இரண்டாவதாகப் போட்டு வெளியிட்டன.

நோபல் பரிசு பெற்ற டாக்டர் சி.வி. ராமன், சந்திரசேகர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; உறவினர்கள்.  இருவருமே விஞ்ஞானிகள்.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு நோபல் பரிசு கிடைப்பது – அதுவும் ஒரே துறையில் – உலகில் வெகு அரிதாக நடக்கும் விஷயம்.  டாக்டர் சாந்தாவும் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.  சி.வி. ராமனுக்கும் சந்திரசேகருக்கும் உறவினர்.  அவருக்குத்தான் பத்மவிபூஷன் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.  அவர் வயது 87.  அறுபது ஆண்டுகளாக புற்றுநோய் சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார்.  தொண்டாற்றி வருகிறார் என்று சொல்வதே பொருத்தம்.  அவர் பெயரை முன்னால் போட வேண்டுமா, ரஜினி பெயரா?  ரஜினிக்குக் கிடைத்ததில் அரசியல் இருக்கிறது என்று எல்லோருக்குமே தெரியும்.  ஆனால் டாக்டர் சாந்தா விஷயம் வேறு.

இன்னொன்று, வயது விஷயமும் இருக்கிறது.  ஊடக நண்பர்கள் எப்போதுமே பிராபல்யத்தையே பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.  நிச்சயமாக டாக்டர் சாந்தாவை விட ரஜினிக்குப் பிராபல்யம் அதிகம்தான்.  சிறு குழந்தைக்குக் கூட தெரியும்.  ஆனால் மனித குலத்துக்குச் செய்யும் தொண்டு?  மின்சாரத்தைக் கண்டு பிடித்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் மனித குலத்துக்கு முக்கியமானவரா?  அல்லது, அவர் வாழ்ந்த பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பிரபலமாக இருந்த நாடக நடிகர் முக்கியமானவரா?

தமிழ் இந்து நாளிதழில் மட்டுமே டாக்டர் சாந்தாவின் முதலிலும் ரஜினிகாந்தின் பெயர் அடுத்ததாகவும் வந்திருந்தது.  உடனேயே ஆங்கில இந்துவை எடுத்தேன்.  அதைக் கையாலேயே தொடுவதில்லை என்ற சபதத்தையும் மீறி எடுத்தேன்.  பத்தாவது பக்கத்தில் ரஜினிகாந்தின் படமும் பெயரும் முதலிலும் அடுத்ததாக, இரண்டாவதாக டாக்டர் சாந்தாவின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

எப்பேர்ப்பட்ட மதி கெட்ட சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம் என்பதற்கு இந்தச் செய்தியை ஆங்கில இந்துவும் தமிழ் இந்துவும் போட்டிருக்கும் பாணியிலேயே தெரிந்து கொள்ளலாம்.  நடிகர்களை விட சிந்தனையாளர்களும், விஞ்ஞானிகளும், புத்திஜீவிகளும், எழுத்தாளர்களும் ஒரு சமூகத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள்; ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு நடிகர்களை விட சிந்தனையாளர்களும், விஞ்ஞானிகளும், புத்திஜீவிகளும், எழுத்தாளர்களும்தான் அவசியம் என்று புரிந்து கொண்ட ஒரு அற்புதமான இளைஞர் குழு தமிழ் இந்துவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  அவர்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.