இதை விட வேறு என்ன வேண்டும்?

http://charuonline.com/blog/?p=4356

மேலே கண்டுள்ள இணைப்பில் உள்ள கட்டுரையைப் படிக்காமல் இதைப் படித்தால் புரியாது.  எனவே அதைப் படித்து விட்டு இதைத் தொடரவும்.

சரவணன் சந்திரனின் ’ரோலக்ஸ் வாட்ச்’ நாவல் பற்றி எழுதப்பட்ட மதிப்புரையை பலரும் நான் எழுதியதாகவே நினைத்து விட்டனர்.  அதில் ”ஒரு நாலு சீட் தள்ளி இருந்தவர் வாசிப்புப் பழக்கம் உள்ளவர் போல. நான் தூங்கிய நேரத்தில் அவர் ’ரோலக்ஸ் வாட்ச்’சை எடுத்து வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். நாலு அத்தியாயம் படித்திருக்கிறார்.
அதற்குள் அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதால் நாவலை என் கையில் கொடுத்து, பின் அட்டைப்படத்தில் இருந்த சரவணனின் புகைப்படம் பார்த்து, ’இந்தத் தம்பி நல்லா எழுதிருக்கார்’ என்றார். என் நண்பர் என்று சொன்னேன். ’என் வாழ்த்து சொல்லிருங்க…’ என்று சொல்லிவிட்டு உயிர்மை பதிப்பகம் என்பதையும் குறித்துக்கொண்டார்.
’நா சென்னைதான் தம்பி, ஊர் திரும்புன கையோட போய் வாங்கிர்றேன்…’ என்று சொல்லி இறங்கிப் போய்விட்டார்” என்ற ஒரு பகுதி வருகிறது அல்லவா, அதில் வரும் ‘தம்பி’யைப் பார்த்து விட்டு, “உங்களைப் போய் தம்பி என்றாரா, ரொம்ப வயதானவரோ?” என்று பலரும் கேட்டனர்.  அந்தத் தம்பி நான் அல்ல.  பிரபு காளிதாஸ்தான் அந்தத் தம்பி.  தங்கக் கம்பி.

பிரபு எழுதிய ஒரு புத்தக மதிப்புரையை நான் எழுதியதாகவே பலரும் நினைக்கிறார்கள்; மேலும், ’ரோலக்ஸ் வாட்ச்’ பற்றி நான் என்ன நினைக்கிறேனோ அதையே ஒருவர் வார்த்தைக்கு வார்த்தை எழுதியிருக்கிறார் என்றால் இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்?

இது எனக்கு ரொம்பப் பெரிய விஷயமாகத் தோன்றுகிறது.  இதுதான் சாரு நிவேதிதா பள்ளி.  இதில் உள்ள சாரு நிவேதிதா என்ற வார்த்தைகள் முக்கியமல்ல.  இது ஒரு பள்ளி.  இந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஒரு பிரதியை இப்படித்தான் பார்க்கிறார்கள்.  பிரதி என்றால் எழுத்து மட்டும் அல்ல; சினிமா, விளம்பரம், அரசியல்வாதியின் பேச்சு எல்லாம் அடக்கம்.  இந்தப் பள்ளியின் பொதுத்தன்மை என்னவென்றால், perception.  ஒரு பிரதியை எப்படிப் பார்ப்பது?  அதற்கான உபகரணங்கள் என்ன?  என் எழுத்தையும் பேச்சையும் ஊன்றிப் பயில்வதன் மூலம் ஒருவர் கண்டடையலாம்.  மிகக் குறிப்பாக ஜி. கார்ல் மார்க்ஸ், பிரபு காளிதாஸ், சரவணன் சந்திரன் போன்றவர்களிடம் இந்தப் பண்பை காண்கிறேன்.  இன்னும் பலர் இருக்கிறார்கள்.  செல்வகுமார் எழுதியவை தொகுக்கப்பட்டால் அவரும் இதில் சேர்வார்.

பிரபுவிடம் சொன்னேன், இனிமேல் உங்கள் புத்தகங்களில் என் பெயரைப் போட்டுக் கொள்ளப் போகிறேன் என்று.  இது போன்ற அதிர்ச்சிகள் அவருக்குப் பழக்கம் என்றபடியால் சிரித்தார்.  உடனே நான் ”நீங்களும் என் புத்தகங்களின் மேல் உங்கள் பெயரைப் போட்டுக் கொள்ளலாம்” என்றேன்.

இப்படியெல்லாம் நான் எழுதுவதால் பிரபுவுக்குத்தான் பிரச்சினை ஏற்படும்.  இப்போதே நிறைய தர்ம அடி வாங்குகிறார்.  இனிமேல் இன்னும் அதிகமாகக் கிடைக்கும்.  வாசகர் வட்டத்தின் முக்கியமான அங்கமான கணேஷ் அன்புவுக்கே பிரபுவைப் பிடிக்காது என்று அறிந்தேன்.  கணேஷ் வள்ளலாரின் நடமாடும் உருவம்.  அவருக்கேவா?  மெத்த சரி.  பிரபு உண்மையிலேயே என் வாரிசுதான்.  ஏனென்றால், சீனியர் வள்ளலாரான வெளி ரங்கராஜனிடமே வசவு வாங்கிய பெருமைக்குரியவன் நான்.

ஒட்டு மொத்தத்தில் என் பளு குறைகிறது.  கார்ல் மார்க்ஸுக்கும் பிரபு காளிதாஸுக்கும் நன்றி.

கூடவே ஒரு விஷயம்.  பிரபுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பிரபுவின் குறைந்த ஒளியில் பற்றி அதிஷாவின் பேச்சு பிரமாதமாக இருந்தது.  இவ்வளவு நன்றாகப் பேசுவார் என்றால் என் புத்தகம் பற்றியும் அவரைப் பேச அழைக்க வேண்டியதுதான்.  ராஜா அண்ணாமலை மன்றத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 7-இல் அண்ணன் அதிஷா பேசுவார் என்று நோட்டீஸ் போட்டு விடலாம்.