சரவணன் சந்திரனின் ‘ரோலக்ஸ் வாட்ச்’ : ஒரு மதிப்புரை

 

அய்யா சரவணன் சந்திரன் அவர்களே…ரோலக்ஸ் வாட்ச் கொலைக்குத்து அய்யா…நாவல் படிக்கும்போது எப்படித் தெரியுமா இருந்தது….?
இப்படித்தான்…

https://www.youtube.com/watch?v=nYSDC3cHoZs

Metallica Band-ன் தீவிர ரசிகன் நான் என்கிற வகையில் அவர்களின் இசை வடிவத்தில் இருக்கும் ஒரு உக்கிரமான வெறித்தனத்தை உங்கள் “ரோலக்ஸ் வாட்ச்”-சில் பக்கத்துக்குப் பக்கம் இம்மி பிசகாமல் உணர முடிகிறது.

இப்படியா நாவல் முழுக்க விறுவிறுப்பாக எழுதி வைப்பது. நடுநடுவில் மருந்துக்காவது கொஞ்சம் தொய்வு ஏற்படுத்தியிருக்க வேண்டாமா…? என்ன போங்க…

Visual Language பயங்கரமாக இருக்கிறது. Fight Club படத்தை Narrative Voice Over-காக அந்தப் படத்தை ஒரு நூறுமுறை பார்த்திருக்கறேன். இனி அந்த லிஸ்ட்டில் “ரோலக்ஸ் வாட்ச்”சையும் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான். சரசரவென்று ஆற்றின் குறுக்கே கடக்கும் பாம்பு போல் கதை சொல்லும் விதம் புதுமையாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது.

இளைஞர்களின் emotional angst-ஐ மிக மிக நுட்பமாகப் பதிவு செய்கிறது இந்த நாவல். “Le Haine”, “Amores perros” போன்ற படங்களில் வரும் இளைஞர்களின் கொந்தளிப்பு மனநிலை போல் அப்படியே அச்சு அசலாக இந்த நாவல் வாழ்வின் அபத்தங்களைப் பேசுகிறது.

அவமானத்தையும், புறக்கணிப்பையும் அவ்வளவு எளிதில் கடக்க முடியாது என்று இருக்கும் ஒரு பொய்யான மாயக்கண்ணாடியை, “அதெல்லாம் ஒரு மயிரும் இல்லை” என்று கூவிக்கொண்டு தூக்கி போட்டு மிதிப்பது என்றால் சும்மாவா…? எத்தனை நாள்தான் கண்ணைக் கசக்கிக்கொண்டும் மூக்கு சிந்திக்கொண்டும் நாவல் படிப்பது. குறிப்பாக அந்த மொழிநடையின் வசீகரம்தான் உங்களிடம் மிகவும் பிடித்த விஷயம்.

“இந்தோ பாருங்கடா… என் எழுத்தை. படிச்சிட்டு உக்காந்து அழுவுங்கடா தம்பிகளா…” என்கிற தொனியில் எழுதாமல், ஒரு பறவை பறப்பது போல் இயல்பாக அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். பத்தாயிரம் அடி உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்தின் மேற்கூரையில் அமர்ந்து ஒரு mug பியர் அருந்தினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது நேற்று உங்கள் நாவலை ட்ரெயினில் படித்தபோது.

ட்ரெயினில் படிக்கும் சுவாரசியத்தில் சாப்பிட மறந்து களைத்துப் போய் கொஞ்சம் கண் அயர்ந்து விட்டேன். அரைமணிநேரம். ஒரு நாலு சீட் தள்ளி இருந்தவர் வாசிப்புப் பழக்கம் உள்ளவர் போல. நான் தூங்கிய நேரத்தில் அவர் “ரோலக்ஸ் வாட்ச்” எடுத்து வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். நாலு அத்தியாயம் படித்திருக்கிறார்.
அதற்குள் அவர் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டதால் நாவலை என் கையில் கொடுத்து, பின் அட்டைப்படத்தில் இருந்த உங்கள் புகைப்படம் பார்த்து, “இந்த தம்பி நல்லா எழுதிருக்கார்” என்றார். என் நண்பர் என்று சொன்னேன். “என் வாழ்த்து சொல்லிருங்க…” என்று சொல்லிவிட்டு உயிர்மை பதிப்பகம் என்பதையும் குறித்துக்கொண்டார்.
“நா சென்னைதான் தம்பி, ஊர் திரும்புன கையோட போய் வாங்கிர்றேன்..” என்று சொல்லி இறங்கிப் போய்விட்டார்.

திருகல் மொழி இல்லாமல் சுளுவான நடையால் “ரோலக்ஸ் வாட்ச்” மிளிர்கிறது.

***

சினிமாவில் நமக்குப் பிடித்த கதையை, காட்சியை அப்படியே எடுத்து நம் படத்தில் போட்டுக் கொள்கிறோம். கேட்டால் influence என்கிறோம்.  இசையில் கேட்கவே வேண்டாம்.  அப்படியே தூக்கிப் போட்டுக் கொண்டு இசைக் கடவுள் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம்.  ஸ்லம் டாக் மில்லியனருக்கு ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்தது அல்லவா, அந்தப் பாடல்கள் அனைத்தும் அறுபதுகள் எழுபதுகளில் வந்த ஹிந்திப் படப் பாடல்களின் அப்பட்டமான காப்பி.  அதையெல்லாம் கண்டிக்கிறோமா?

முகநூலில் மேற்கண்ட மதிப்புரையைப் படித்தேன்.  அட, மைண்ட் ரீடிங் தெரிஞ்ச ஆளா இருப்பார் போல இருக்கே, நாம் மனதில் எழுதியதை அப்படியே முகநூலில் எழுதி விட்டாரே என ஆச்சரியப்பட்டு அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி இங்கே போட்டு விட்டேன்.  யார் எழுதியது என்று கேட்கிறீர்களா, ம்ஹும்.  influence, influence.  ஆனால் ஒரு விஷயம் ஆசுவாசமாக இருக்கிறது.  இந்த மைண்ட் ரீடிங் சமாச்சாரத்தினால் என் வேலைப்பளு ரொம்பக் குறைகிறது.