புதிய தலைமுறை இதழில் ஆறு மாத காலம் எழுதிய பத்தியின் தொகுப்பு வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள். சமீபத்தில் ஒரு இலக்கிய இதழில் ஒரு அறிஞர் உம்பர்த்தோ எக்கோ பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியிருந்தார். ஃபாஸிஸம் பற்றியெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் அதில் உண்டு. ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், அதை எழுதிய அறிஞர் தன் வாழ்வில் ஒரு ஃபாஸிஸ்டாகவே நடந்து கொள்வார். அதுதான் என் அனுபவம். 1980-இல் தில்லியில் ஒருநாள் மாலை ஐந்து மணிக்கு ஒரு இடத்துக்கு வரச் சொன்னார். ஐந்து மணிக்குப் போனேன். ஆனால் அவரோ வரவில்லை. ஆறு மணி வரை காத்திருந்து பார்த்து விட்டு, சரி, பெரிய அறிஞர், வர முடியாமல் போய் விட்டது என்று நினைத்துத் திரும்பி விட்டேன். பிறகு அவரிடமிருந்து முழ நீளத்துக்கு ஒரு கடிதம் வந்தது. நீ ஒரு துரோகி, எதிர்ப் புரட்சியாளன், பெட்டி பூர்ஷ்வா, உன் ஊத்த வாயிலிருந்து உண்மையே வந்ததில்லை (அவர் என்னோடு ஒரே ஒரு நாள்தான் பழகியிருந்தார்!) இன்னபிற வசைகள். நல்லவேளை, இப்போதைய முகநூல் மாதிரி பு, சு எல்லாம் இல்லை. விஷயம் என்னவென்றால், அவர் நாலு மணிக்கே வந்து பார்த்து விட்டுத் திரும்பியிருக்கிறார். சமீபத்தில் கூட ஜெயமோகனோடு மோதி அவருக்குக் குழாய்ச் சண்டை பாணியில் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய அறிஞர் அவர். பெயரைச் சொன்னால் என் மீதும் கேஸ் போட்டுத் தொலைப்பார் என்பதால் பெயர் வேண்டாம்.
அவரைப் போன்ற சர்வாதிகார மனோபாவம் கொண்ட ஒரு மனிதரை என் வாழ்நாளில் கண்டதில்லை. அவர் எழுதுகிறார், ஃபாஸிஸம் பற்றி. நன்றாக வக்கணையாக எழுதுவார். அதில் குறைவே வைக்க மாட்டார். நல்ல படிப்பாளியும் கூட. அறிஞர் இல்லையா? என்ன பிரச்சினையென்றால், இந்த அறிவாளிப் புடுங்கிகளுக்கெல்லாம் வெள்ளைக்கார துரை எழுதினால்தான் எழுத்து. நாம் எழுதினால் டுபுக்கு. இதெல்லாம் அந்தக் காலத்தில் இருந்த தீண்டாமையை விடக் கொடூரமான இனவாதம். நான் உம்பர்த்தோ எக்கோவின் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அந்த மாதிரி எழுத தமிழிலும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்; எழுதுகிறார்கள். (நான் எக்கோவின் புனைகதைகளைச் சொல்லவில்லை. அது போன்ற நாவல்கள் தமிழில் இல்லை என்பது உண்மை.)
ஒரு இயக்குனர் என்னிடம் பாரிஸ் பற்றி எக்கோ எழுதிய ஒரு கட்டுரையைக் கொடுத்துப் படிக்கச் சொன்ன போது, படித்து விட்டுச் சொன்னேன். பாரிஸ் பற்றி இதை விடப் பல மடங்கு தரமான கட்டுரைகளை நான் எழுதியிருக்கிறேன் என்றேன். இயக்குனர் என்னோடு டூ விட்டு விட்டார். போயா, மாங்கா என்று நானும் வந்து விட்டேன். அது என்னய்யா அது, வெள்ளைக்காரன்னா காலைக் கழுவத் தயாரா இருக்கீங்க? நம்ம ஆள்னா நாக்கைத் துருத்துறீங்க?
போகட்டும். நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ஏதோ என்னால் ஆனது என்றெல்லாம் அசோகமித்திரன் மாதிரி தன்னடக்கமாக எல்லாம் சொல்ல மாட்டேன். தமிழின் மிகச் சிறந்த பத்தி கட்டுரைத் தொகுப்புகளில் இது ஒன்று. வாங்கிப் படியுங்கள். இது பற்றி என் நண்பரும் ஓவியருமான சுப்ரமணியன் எழுதியிருந்த கடிதம் இது:
வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் நூலை இன்று தான் படித்து முடித்தேன்.
தொடர்ந்து படித்தால் ஒரே நாளில் முடித்து விடலாம், ஆனால் நான் பொறுமையாகவே படித்தேன்.
நீங்கள் எக்ஸைல் நாவலை ஒரு user’s manual என்று சொல்லியிருந்தீர்கள், என்னைப் பொறுத்தவரை உங்களுடைய எல்லா புத்தகங்களும் வாழ்க்கையக் கொண்டாடுவதற்கான user’s manuals தான். அதனால் தான் இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு கட்டுரையைப் படிக்கும் போதும் குறிப்புகள் எடுத்து விட்டு அந்தக் கட்டுரையை படித்தவுடன் நான் எடுத்த குறிப்புகள் பற்றி இணையத்தில் கொஞ்சம் தேடிப் படித்துவிட்டுத்தான் அடுத்த கட்டுரைக்குச் செல்வேன். சில சமயம் ஒரு கட்டுரையை முடிக்கவே நான்கு, ஐந்து நாட்கள் கூட ஆகும்.
உதாரணமாக ‘இனிய உயிரைக் காக்க கொஞ்சம் கசப்பு உண்டால் என்ன?’ என்ற கட்டுரையில், நீங்கள் குறிப்பிட்டிருந்த விஷாகா ஹரி மற்றும் துஷ்யந்த் ஸ்ரீதரின் உபந்யாசம் பற்றிப் படித்ததும் அவர்களுடைய உபந்யாசகள் கொண்ட வீடியோக்கள் சிலவற்றை youtubeல் பார்த்து விட்டுத்தான் புத்தகத்தை மேலும் தொடர்ந்தேன். இப்படி நிறைய சொல்லலாம்.
எனக்கு யானை வளர்க்க ஆசை!
இந்தக் கட்டுரை ஒரு சிறுகதை போல் அருமையாக வந்துள்ளது.
உன்மை தரும் விடுதலை
ஒருவித கனத்த சோகத்துடன் தான் இந்தக் கட்டுரையைப் படிக்க முடிந்தது. 1880ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவமான – ஜட்ஜ் முத்துசாமி ஐயர் தன்னைச் சிறு வயதில் வளர்த்த அந்தக் கிழவியின் காலில் விழந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கும் சம்பவத்தை எழுதிவிட்டு நீங்கள் பின் வரும் விஷயத்தை சொல்கிறீர்கள் ,”விமானம், கணினி, ஆங்கில அறிவு, விஞ்ஞான வளர்ச்சி, அலைபேசி என்று எத்தனையோ இருக்கின்றன நம் கையில். மேலே பாருங்கள். சிறுவயதில் தன்னிடம் சாப்பிட்ட ஒருவரைக் காண கண் பார்வை மங்கிய கிழவி திருவாரூரிலிருந்து கும்பகோணத்துக்கு நடந்து வருகிறாள். தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக இருந்த ஒரு ஜட்ஜ் தன் மேலாடையைக் கழற்றி இடுப்பில் அணிந்துகொண்டு சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து அந்தக்கிழவியின் காலைத் தொட்டு நமஸ்கரிக்கிறார். 150 ஆண்டுகளில் நாம் எங்கே வந்திருக்கிறோம்?”
விஞ்ஞானம் அறத்தை அழித்ததுதான் உண்மை! holocaust war முதல் சமீபத்தில் வடகொரியா நிகழ்த்திய hydrogen bomb test வரை நடந்த அனைத்தும் விஞ்ஞானம் தந்த பரிசு தான். ஆனால் அறம், நுண்ணறிவு போன்றவற்றை எந்தப் பள்ளிகளும், கல்லூரிகளும் கொடுப்பதில்லை; எழுத்தாளர்கள்தான் அந்தப் பணியைச் செய்கிறார்கள்.
என் பெயர் சீஸர் கதையில் நீங்கள் சொன்னது போல் ”தர்க்கம் மனித குலத்தின் மீது விழுந்த சாபம். விஞ்ஞானம் மனிதனின்அகக் கண்களை மறைக்கும் திரை. ” இது தான் உண்மை.
இந்த வரி எனக்கு ஓவியர் Csontvary தான் ஞாபகப்படுத்துகிறது. ‘’நீ ரஃபேலை விடச் சிறந்த ஓவியனாகப் போகிறாய்’ என்று தனக்கு கேட்ட ஒரு மாயக் குரல் அவன் வாழ்க்கையே மாற்ற அவன் தனது பயணத்தைத் துவங்குகிறான், பிறகு மிகப்பெரிய ஓவியனாக மாறுகிறான்.
இதை தர்க்கமும், விஞ்ஞானமும் வைத்து அளந்தால் ஒரு மண்ணும் கிடைக்காது. உளன் எனில் உளன் இளன் எனில் இளன்!! அவ்வளவுதான்.
இப்படி எனக்கு ஒருவித baroque visualizationஐ ஏற்படுத்துகிறது உங்களுடைய எழுத்து.
உதாரணமாக, இளையராஜா ஒரு பத்திரிக்கையாளரை ‘உனக்கு அறிவு இருக்கா?’ என்று கேட்ட சமயம், நீங்கள் பத்திரிக்கையாளர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதில் இந்த உலகமே அழிந்தாலும் ‘நேற்று உலகம் அழிந்தது’ என்று செய்தியைச் சொல்லிவிட்டுத்தான் பத்திரிகையாளன் கிளம்புவான் என்று எழுதியிருந்தீர்கள். இந்த ஒரு வரியிலிருந்து ஒரு post-apocalypse movieக்கான கதையை எழுதிவிடலாம் போல தோன்றுகிறது.
வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் – ஒரு விருட்சத்திலிருந்து 26 விதமான கனிகள் கிடைத்தது போன்றது (26 கட்டுரைகள்)
நன்றி!
சுப்ரமணியன்
***
விலை: ரூ.130
கிடைக்குமிடம்:
உயிர்மை பதிப்பகம்
11/29 சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை -18.
தொலைபேசி 2499 3448 மின்னஞ்சல் முகவரி: uyirmmai@gmail.com
***
இணையம் மூலம் வாங்க: http://bit.ly/1KWSX66