படச்சுருள் விழாவில்…

ஞாயிற்றுக்கிழமை மாலை அருணின் தமிழ் ஸ்டுடியோஸ்/ப்யூர் சினிமா அரங்கில் நண்பர்கள் அருண், ஜனநாதன், வஸந்த், மிஷ்கின் ஆகியோருடன் நானும் பேசினேன்.  படச்சுருள் பத்திரிகையின் முதலாம் ஆண்டு விழா.  நான் சுமார் 15 நிமிடங்கள் பேசினேன்.  இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்.  ஆனால் அதற்கு சற்று முன்னால் தான் நியூஸ் 18 என்ற சேனலுக்கு இரண்டரை மணி நேரம் சினிமாவும் இலக்கியமும் என்ற தலைப்பில் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தியிருந்தேன்.  அதையே திரும்பவும் அந்த விழாவில் பேசத் தெம்பு இல்லை.

மிஷ்கின் ஒன்றரை மணி நேரம் பேசினார்.  என் வாழ்வில் இத்தகைய ஒரு பேச்சை அதுவரை கேட்டதில்லை.  ஒரு ஜென் குருவாகவே மாறிப் போனார் மிஷ்கின்.  அன்றைய தினம் மிஷ்கினின் பேச்சைக் கேட்டவர்கள் பாக்கியசாலிகள் என்றே நினைக்கிறேன்.  மிஷ்கின் தன் பேச்சைத் தயாரித்திருக்கவில்லை.  அடுத்த சொல் என்ன வரும் என்று அவருக்குத் தெரியாது.  ஆனால் பேச்சின் உள்தர்க்கம் அந்த வார்த்தைகளை அடுக்கிக் கொண்டு சென்றது.  மிக ஆழ்ந்த வாசிப்பு அப்படி ஒரு பேச்சைக் கொண்டு வராது.  மிஷ்கினை விட அதிகம் படிக்கும் ஒரு நண்பரை எனக்கும் மிஷ்கினுக்கும் தெரியும்.  அப்படியெனில் மிஷ்கினின் அப்படிப்பட்ட அற்புதப் பேச்சுக்குக் காரணம் என்ன?  ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விடலாம்.  அன்பு.  அவருடைய பேச்சு யூட்யூபில் கேட்கலாம்.  ஆனால் அது எடிட் செய்யப்பட்டதாகவே இருக்கும்.  அதனால்தான் சொல்கிறேன்.  அன்றைய மிஷ்கினின் பேச்சை நேரடியாகக் கேட்டவர்கள் பாக்கியசாலிகள்.  பேசி முடித்த போது மிஷ்கின் பேச்சை சட்டென்று பாதியில் முடித்தது போல் தோன்றியது.  பிறகு நள்ளிரவு உரையாடலின் போது சொன்னார்.  நீங்கள் ஜனா அண்ணாவும் இருந்ததால் பாதியில் முடித்து விட்டேன் என்று.  இல்லாவிட்டால் அந்தப் பேச்சு மூன்று மணி நேரம் போயிருக்கும்.  ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் குரஸவாவும் வந்து போன அந்தப் பேச்சை மிஷ்கின் பேசவில்லை; டால்ஸ்டாயின் ஆவியே பேசியது என்று எனக்குத் தோன்றியது.  அருண் எழுதியது சரிதான்.  மிஷ்கினின் பேச்சைக் கேட்டது என் வாழ்வின் ஆகச் சிறந்த தருணங்களில் ஒன்று என்றே சொல்வேன்.  அவருடைய நூலகத்தில் அவர் இது போல் பலமுறை என்னிடம் பேசியிருக்கிறார் என்றாலும் அன்றைய விழாவில் அவர் பேசும் போது ஒருவித உன்மத்த நிலையில் இருந்தார்.  பேரன்பின் உன்மத்தம் அது.  கவித்துவத்தின் உன்மத்தம் அது.

பின்வருவது என் பேச்சு.

அந்த நிகழ்ச்சி பற்றி முகநூலில் அருண் எழுதியிருப்பது:

படச்சுருள் இரண்டாமாண்டு கொண்டாட்டம் – பெரும் உத்வேகம்…

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வடபழனி பியூர் சினிமா அலுவலகத்தில் படச்சுருள் மாத இதழின் இரண்டாமாண்டு கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடந்தது. திரளான பார்வையாளர்கள் வந்திருந்து கூட்டத்தை சிறப்பு செய்தார்கள். படச்சுருள் இதுவரை என்னமாதிரியான பணிகளை செய்திருக்கிறது என்பதை முதலில் ஓர் காணொளி காட்சியாக திரையிட்டு, பின்னர் வாசகர்களின் கருத்தை பகிர்ந்துக்க கொள்ள அழைத்தோம். வாசகர்களில் உலக சினிமா ரசிகன், ஜெயராஜ் உள்ளிட்ட நண்பர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். சிறப்பு விருந்தினர்களின் இயக்குனர் ஜனநாதன் ஒரு பத்திரிகை நடத்துவதில் உள்ள சிக்கலை பேசத் தொடங்கி, படச்சுருள் இன்றியமையாமை, அதன் தேவை குறித்து பேசினார். ஜனநாதன் எப்போதும் ஒரு கருத்தை அதன் ஆழத்தில் இருந்து பேசக் கூடியவர். நேற்றும் அவ்வாறே பேசினார். பின்னர் இயக்குனர் வஸந்த் பேசத் தொடங்கினார். முன்னமே அம்ஷன் குமாருக்கு லெனின் விருது கொடுக்கப்பட்ட நேரத்தில் தமிழ் ஸ்டுடியோவின் பணியை வஸந்த் வெகுவாக பாராட்டி என்னையெல்லாம் அவ்வளவு பெருந்தன்மையோடு மேடையில் வைத்து மரியாதை செய்தார். நேற்று கிட்டத்தட்ட படச்சுருள் ஆசிரியர், பதிப்பாளர் என எல்லாமுமாக மாறி படச்சுருளுக்காக சந்தா செலுத்த சொல்லி பெரும் உவகையோடு, அன்போடு, செல்லக் கோபத்தோடு பேசினார். சாரு நிவேதிதா ஏன் பத்திரிகைகள் இங்கே அதிகம் விற்கப்படுவதில்லை, இங்கே இவ்வளவு கூட்டம் வருகிறது, ஆனால் பத்திரிகை விற்கப்படுவதில்லை என்பது தொடங்கி, படிக்க வேண்டியதன் அவசியத்தையும், படிப்பு எப்படி கலைஞர்களுக்கு கைக்கொடுக்கும் என்பது குறித்தும் சிறப்பாக பேசினார். பின்னர் இயக்குனர் மிஷ்கின் பேசத் தொடங்கியதும் பார்வையாளர்கள் ஒருவித ஜென் நிலைக்கே சென்றார்கள் எனலாம். கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரத்திற்கும் மேலாக பார்வையாளர்களை நல்ல சினிமா, நல்ல புத்தகங்கள் என்று பேசி வசியம் செய்தார். நேற்றைய கூட்டத்தில் நீங்கள் பங்கேற்று இருந்தால்,உங்கள் வாழ்நாளில் அதுவே ஆகச்சிறந்த தருணமாக இருந்திருக்கும். நேற்றைய கூட்டத்திற்கு வந்திருந்த நண்பர்கள் அனைவரும் பெரும்பாக்கியம் செய்தவர்கள் என்றே சொல்வேன். ஒரு மனிதனாக வாழ நாம் பழகிக் கொள்ளும் அந்த கணத்திலேயே பெரும் கலைஞனாக மாறிவிடுகிறோம் என்பதை நேற்று மிஷ்கின் தன்னுடைய பேச்சின் மூலம் நிரூபித்தார். தமிழ் ஸ்டுடியோவின் மேடைகளில் மட்டுமே மிஷ்கின் இந்த அளவிற்கு பெரும் பாய்ச்சலை நிகழ்த்துவது எனக்கு பெரும் பெருமையான, அங்கீகாரமாக தோன்றுகிறது. இப்படி வருடத்திற்கு பத்து கூட்டங்கள் நடத்தினால், பெரும் கொலைகளும், களவுகளும், சண்டை சச்சரவுகளும் நடக்காது என்றே தோன்றுகிறது. படிப்பதன் மூலம் முதலில் நாம் மனிதனாக, சக உயிரை நேசிக்கும் காதலர்களாக மாறுகிறோம் என்பதை தமிழ் ஸ்டுடியோவின் ஒவ்வொரு மேடையிலும் மிஷ்கின் வலியுறுத்துக் கூறுகிறார். நேற்றயக் கூட்டத்திற்கு நீங்கள் வரவில்லை என்றால், ஒரு பெரும் பாக்கியத்தை, மனிதனாக வாழ பழகி கொள்ளும் வித்தையை கற்றுக் கொள்ள தவறவிட்டீர்கள் என்றே சொல்வேன்.