அந்நியன்

இரண்டு தினங்களுக்கு முன்பு மனுஷ்ய புத்திரன் பேசினார்.  அதற்குப் பதிலாக அவரிடம் இன்று காலை பேசினேன்.  என்னுடைய புத்தகங்களை வெளியிட வேண்டும்.  சென்ற ஆண்டு புத்தக விழாவில் உயிர்மையிலிருந்து மூன்று புத்தகங்கள் வந்தன.  சாருஆன்லைனில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் எழுதி வரும் எதுவும் இன்னும் தொகுக்கப்படவில்லை.  தொகுத்தால் ஒரு டஜன் புத்தகங்கள் வரும்.  எனக்கு அதில் ஆர்வம் இல்லை.  முக்கியமான பிரச்சினை, இங்கே பிழை திருத்தம் செய்ய ஆட்கள் இல்லை.  நானே பிழை திருத்தம் செய்ய எனக்கு நேரம் இல்லை.  பிழைகளோடு புத்தகம் வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை.  இது புறவயமான காரணம். இன்னொரு அடிப்படையான காரணம் என்னவென்றால், எனக்குக் கிடைக்கும் வருடாந்திர ராயல்டி 1,20,000.  எல்லா பதிப்பகங்கள் மூலமும் கிடைக்கும் மொத்த தொகையே இவ்வளவுதான்.  மாதம் பத்தாயிரம்.  இதற்காக நாலு லட்சம் ரூபாய் செலவு செய்து புத்தக வெளியீட்டு விழா நடத்துவதெல்லாம் பைத்தியக்காரத்தனம் இல்லையா?  இரண்டு விஷயங்கள் எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்துகின்றன.  என் தெருவில் உள்ள தள்ளுவண்டி இஸ்திரிக்காரர்  ”ஆட்கள் தேவை, மாதச் சம்பளம் 20000 ரூபாய்” என்ற அட்டையை நிரந்தரமாகத் தொங்க விட்டிருக்கிறார்.  ஆளே கிடைக்கவில்லையாம்.  அதனால்தான் என் புத்தகங்கள் வெளிவருவதிலோ, புத்தக வெளியீட்டு விழா நடத்துவதிலோ எனக்கு ஆர்வமில்லாமல் இருக்கிறது.

இன்னொரு சமாச்சாரமும் உண்டு.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீயா நானா நிகழ்ச்சியில் வித்தியாசமான ஒரு நிகழ்வை நடத்தினார்கள்.  தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், சினிமா உலகப் பிரமுகர்கள் முப்பது பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது.  எல்லோருமே பிரபலம்தான்.  ஆண்டு முடிவு /புத்தாண்டின் தொடக்கம்.  ஒவ்வொருவரும் அந்த ஆண்டு தங்களுக்குப் பிடித்த நாவல், சினிமா, பத்திரிகைத் தொடர் என்று ஒரு பட்டியலைக் கொடுக்க வேண்டும்.  ஒவ்வொரு தலைப்பும் ஒவ்வொரு சுற்றாக வரும்.  அதில் இரண்டு ஆச்சரியமான விஷயங்களைக் கண்டேன்.  99 சதவிகித பிரமுகர்களுக்கும் பிடித்த தொடர் ராஜு முருகன் விகடனில் எழுதியதாக இருந்தது.  அத்தாச்சி, அத்தான், அக்கா, சின்னம்மா என்று ’செண்ட்டி’யாக வரும்.  படித்தால் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும்.  அவ்வளவு உணர்ச்சிகரம்.  நூறு வாரங்களுக்கு மேல் தொடராக வந்தது.  ஆயிரம் வாரம் கூட தொடர்ந்திருக்கலாம்.  என்னவோ பாதியில் நின்று விட்டது.  விடுங்கள்.  எல்லோருக்கும் பிடித்த நாவல், அஞ்ஞாடி.  99 சதவிகிதம் என்று ஏன் சொன்னேன் என்றால், அந்தக் கூட்டத்தில் என்னைத் தவிர எல்லோருக்குமே பிடித்த தொடர் ராஜு முருகன்; எல்லோருக்குமே பிடித்த நாவல் அஞ்ஞாடி.  அந்த நாவலை என்னால் ஒரு பக்கம் கூட படிக்க முடியவில்லை.  ஆனால் அங்கிருந்த எல்லோருக்குமே பிடித்த நாவல் அஞ்ஞாடி. எங்கேயோ பிரச்சினை இருக்கிறது என்று புரிந்தது.

பூமணியின் நூல் வெளியீட்டு விழாவை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடத்த முடியாது.  அதன் அளவு 900.  என் புத்தக வெளியீட்டு விழா நடந்த அன்று இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட் போட்டி.  அது ஒரு proxy war என்று உங்களுக்குத் தெரியும்.  உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தை விட முக்கியமான இந்தியா பாகிஸ்தான் போட்டி.  என் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்ற அன்று இன்னொரு பிரம்மாண்டமும் நடந்தது.  அன்றைய தினம் கடவுளின் ஆயிரமாவது படப்பாடல் கொண்டாட்ட நிகழ்ச்சி.  என் திரையுலக நண்பர்கள் யாராலும் வர இயலவில்லை.  நா. முத்துக்குமார் அந்த நிகழ்ச்சியிலிருந்து கொண்டே நாலைந்து குறுஞ்செய்திகள் அனுப்பினார்.  இப்படிப்பட்ட ஒரு தினத்தில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் என் புத்தக வெளியீட்டு விழா.  ஒரு இருக்கை கூட காலி இல்லை என்பதல்ல விஷயம்.  வந்திருந்த 90 சதவிகிதமும் இளைஞர்கள்.  அரங்கத்தின் நிர்வாகியே ஆச்சரியப்பட்டு சொன்னார், ராஜா அண்ணாமலை மன்றம் இதுவரை பல நிகழ்ச்சிகளில் அரங்கம் நிறைந்திருக்கிறது.  ஆனால் இன்றுதான் முதல்முதலில் இளைஞர்களால் நிறைந்திருக்கிறது.  இசை நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கம் என்பதால் பெரும்பாலும் முதியவர்களே செல்லும் இடம் அது.  அதனால்தான் அவர் அப்படி ஆச்சரியமடைந்தார்.

இது ஒரு பக்கம்.  இன்னொரு பக்கம் அடர்த்தியான இருட்டு.  தமிழில் முக்கியமான நாவல்கள் என்றோ, எனக்குப் பிடித்த நாவல்கள் என்றோ இதுவரை நூறு பேர் பட்டியலிட்டிருப்பார்கள்.  பா. ராகவனிலிருந்து அதிஷா வரை, இயக்குனர் வசந்திலிருந்து நடிகர் பிரகாஷ் ராஜ் வரை அந்தப் பட்டியலைப் போட்டிருக்கிறார்கள்.  அந்த நூறு பேரின் பட்டியலையும் பார்த்தேன்.  ஒரு பட்டியலில் கூட என் பெயரே இல்லை.  ஆனால் எல்லோருடைய பட்டியலிலும் தவறாமல் ஜெயமோகனும், எஸ்.ராமகிருஷ்ணனும் இடம் பெற்றிருக்கிறார்கள்.  ஜெயமோகனுக்கு நேர் விரோதமான   தலித் சிந்தனையாளர்களின் பட்டியலில் கூட ஜெயமோகனின் வெள்ளை யானை இடம் பெற்றிருக்கிறது.  எந்தப் பட்டியலிலும் என் பெயர் இல்லை.  திலகவதி ஐபிஎஸ் என் நீண்ட நாள் நண்பர். தூரத்து நண்பர் அல்ல; எங்கள் குடும்பத்துக்கே மிகவும் நெருங்கிய நண்பர்.  அந்திமழையில் அவருடைய பட்டியல் இருந்தது.  அந்தப் பட்டியலில் எல்லோருடைய பெயரும் – பிரபஞ்சன், தி.ஜானகிராமன் உட்பட – இருந்தது.  என் பெயர் இல்லை.  சரி, சிறுகதைகளின் பட்டியலை எடுப்போம்.  எல்லா பட்டியலிலும் தவறாமல் விமலாதித்த மாமல்லனின் பெயர் இருக்கும்.  என்னுடைய பட்டியலிலும் இருக்கும்.  ஆனால் எந்தப் பட்டியலிலும் என் சிறுகதைகளில் ஒன்று கூட இருக்காது.

அப்படியானால் நான் மனுஷ்ய புத்திரனின் வேண்டுகோளுக்கு ஏன் இணங்க வேண்டும்?  எந்தப் பட்டியலிலும் இல்லாத நான் ஏன் புத்தக விழாவுக்குப் புத்தகம் வெளியிட வேண்டும்?  என்னுடைய நண்பர்களுக்காக – ராஜா அண்ணாமலை மன்றத்தை நிரப்பும் என் இளம் வாசகர்களுக்காக என்னுடைய இணைய தளத்தில் எழுதிக் கொள்வேனே?  பணமும் கிடைப்பதில்லை; பெயரும் கிடைப்பதில்லை; இலக்கியத்திலும் இடம் இல்லை.  பிறகு எதற்குப் புத்தகம் போட வேண்டும்?

சமயங்களில் நானே சந்தேகப்பட்டு விடுவதுண்டு.  நாம்தான் லூசுத்தனமாக நம்மை ஒரு எழுத்தாளன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ?  ரொம்ப ரொம்ப சராசரியோ நாம்?

இல்லை.  அடிப்படையில் நான் ஒரு வாசகன்.  சமீபத்தில்தான் ஹாருகி முராகாமியின் நார்வேஜியன் வுட் நாவலைப் படித்தேன்.  அதை விட நூறு மடங்கு நல்ல நாவல் ராஸ லீலா.  நார்வேஜியன் வுட் பொன்மலை என்றால் ராஸ லீலா இமயமலை.  பெருமை பீற்றிக் கொள்வதற்காகச் சொல்லவில்லை.  ஒரு வாசகனாக எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.  சரி, லிஃப்டுக்காகக் காத்திருக்கும் போது பக்கவாட்டில் தெரியும் நம் உருவத்தை நாமே அழகு பார்த்துக் கொள்வது போல் நம்முடைய நாவல்களை மதிப்பீடு செய்து கொள்கிறோமோ?  நல்ல கேள்வி.  ஆனால் பதில் எதிர்மறையாக இருக்கிறது.  வாணி கபில்தேவ் (Vani Capildeo) என்பவர் வி.எஸ். நைப்பாலின் உறவினர்.  கவிஞர்.  ஆங்கிலத்தில் வரும் சிறுபத்திரிகைகளில் எழுதுபவர்.  கவிஞர்களின் கவிஞர்களாகக் கருதப்படுபவர்.  அவர் எழுதுபவை மிகவும் கடினமானவை.  அவர் ஒரு விமர்சகரும் கூட.  அவர் என்னுடைய எழுத்தை நபக்கோவுடன் ஒப்பிடுகிறார்.  (நபக்கோவை வாசிக்கும் போது இவர் நம் ஆள் என்று எனக்குத் தோன்றியதுண்டு.  நான் வெறித்தனமாக வாசிக்கும் மரியோ பர்கஸ் யோசாவிடம் இந்த உணர்வை என்றுமே நான் அடைந்ததில்லை.  யோசாவின் உலகமே வேறு; என் உலகம் வேறு.)  வாணி என்னுடைய ஸீரோ டிகிரியையும் சிறுகதைகளையும் (ஆங்கிலத்தில்) படித்தவர்.

Vahni Capildeo places Charu Nivedita on par with Vladimir Nabokov and James Joyce, in her article on the Caribbean Review of Books.

http://caribbeanreviewofbooks.com/crb-archive/21-may-2010/questions-of-approach-3/

There was the concern for another species of telling in Charu Nivedita, the wickedly inventive Tamil writer whose blend of classical and slang styles would be the despair of any translator who could not channel the spirits of Joyce, Nabokov, and Jean Genet. Charu’s speech ranged from “the time of screaming and howls of two thousand five hundred years ago, of Medea” that “still exists” (massacres are not unknown to him) to poker-faced tall tales of his vagabondage that might or might not have documentary value in addition to their truth of shock — “Your job is called ‘catamite’ . . . Going to bed with a person you don’t love is the greatest tragedy, I realised. So I quit the job” — and pieces of work-based advice, for example that eating oxtail soup desensitises the body against beatings.

டேனல் ஆல்ஸன் என்று ஒரு பேய்க்கதைத் தொகுப்பாளர்.  அமெரிக்கர்.  நீங்கள் ஒரு பேய்க் கதை தாருங்கள் என்று எனக்கு ஒரு கடிதம் எழுதினார்.  எழுதி அனுப்பினேன்.  Gothic stories தொகுப்பில் அந்தக் கதையும் வந்தது.  அந்தத் தொகுப்பில் உலகின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் மட்டுமே எழுதியிருக்கிறார்கள்.  பிரிட்டனின் பிரபலமான பதிப்பகம் ஒன்று அதை வெளியிட்டது. Diabolically Yours என்பது அந்தக் குறுநாவலின் தலைப்பு.  அதன் தமிழ் வடிவம் உயிர்மையில் வந்தது.  டேனலிடம் உங்களுக்கு என்னை எப்படித் தெரியும் என்று கேட்டேன்.  ஸீரோ டிகிரி.

மார்க் என்பவரிடமிருந்து ஒரு கடிதம்.  நான் ஆர்ட் ரெவ்யூ ஏஷியா என்ற பத்திரிகையின் ஆசிரியர்.  காலாண்டிதழ்.

எங்கள் பத்திரிகைக்கு நீங்கள் ஒரு column எழுத முடியுமா?

அய்யய்யோ, எனக்கு ஓவியம் பற்றி எதுவும் தெரியாதே; நான் எப்படி எழுதுவது?

ஓவியம் பற்றி வேண்டாம்.  மற்ற விஷயங்களைப் பற்றி எழுதுங்கள்.

என்னை எப்படித் தெரியும்?

டோக்யோவிலிருந்து லண்டனுக்கு விமானத்தில் வந்து கொண்டிருந்த போது உங்களுடைய ஸீரோ டிகிரியைப் படித்தேன்.  அவ்வளவுதான்.

ஓ காட்!  யார் உங்களுக்கு ஸீரோ டிகிரியை அறிமுகப்படுத்தியது என்று நான் தெரிந்து கொள்ளலாமா?  தவறாக எண்ண வேண்டாம்.  ஆர்வத்தினால் கேட்கிறேன்.

அடடா, யார் என்று மறந்து விட்டேனே.  ஜப்பானில் நடந்த ஓவியக் கண்காட்சியில் ஒரு சீன எழுத்தாளர் சொன்னதாக ஞாபகம்.

நன்றி.

இப்போது மார்க் மட்டும் அல்ல; ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவின் ஆசிரியர் குழுவினர் அத்தனை பேருமே எனக்கு நண்பர்களாகி விட்டனர்.

நான் கேள்வியைத் தப்பாகக் கேட்டு விட்டேன்.  அந்த நாவல் உங்களுக்கு எங்கே கிடைத்தது என்று கேட்டிருக்க வேண்டும்.  ஏனென்றால், அதன் பதிப்பாளரும் மொழிபெயர்ப்பாளருமான ராகேஷ் கன்னா என்னோடு டூ விட்டு விட்டார்.  இனிமேல் அந்த நாவலை நான் மறுபதிப்பு செய்வதாக இல்லை என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார்.  பதிப்புரிமை அவரிடம் இருப்பதால் வேறு யாரும் பிரசுரமும் செய்ய முடியாது.

அவர் என்னோடு டூ விட்டதற்கு என் சமரசமற்ற வாழ்க்கை தான் காரணம்.  அதுதான் நான் பின்பற்றும் அறம் என்று  நினைக்கிறேன்.  Granta என்ற சர்வதேசத் தொகை நூலில் இந்திய இலக்கியத்துக்காக ஒரு தொகுப்பு கொண்டு வந்த போது இந்தி, வங்காளம், மலையாளம், கன்னடம் என்று எல்லா மொழிகளிலிருந்தும் தேர்ந்த இலக்கியப் படைப்பாளிகளின் எழுத்து மொழிபெயர்க்கப்பட்டு வந்தது.  தமிழில் மட்டும் பட்டுக்கோட்டை பிராபகர், ராஜேஷ் குமார் ஆங்கில மொழிபெயர்ப்பில் வந்தது.  Pulp fiction பற்றிய தொகுப்பாக இருந்தால் சரி.  ஆனால் தொகுப்போ இலக்கியத் தொகுப்பு.  சர்வதேச அளவில் என் பெயர் தெரிவதற்குக் காரணமாக இருந்தவராயிற்றே என்றெல்லாம் பார்க்கவில்லை; ராகேஷ் கன்னா சமகாலத் தமிழ் இலக்கியத்தின் மீது மூத்திரம் அடித்திருக்கிறார் என்று மிகக் கடுமையாக எழுதினேன்.  இப்படித்தான் எனக்கு யாருமே நண்பர்களாக இல்லாமல் போகிறார்கள்.  ராகேஷ் அதற்காக என்னை பிளாக்மெயில் செய்திருந்தார்.  இனிமேல் ஸீரோ டிகிரியை வெளியிட மாட்டேன்.  அப்படியானால் என்ன பொருள்?  கொலை.  யாருமே அதைப் பிரசுரிக்கவும் இயலாது.  பதிப்பு உரிமை அவரிடம் இருக்கிறது!

கட்டுரை தடம் மாறிப் போகிறது.  தமிழ்நாட்டின் இலக்கியவாதிகள் பட்டியலில் பெயரே இல்லாத என்னைத் தமிழ்நாட்டுக்கு வெளியே யார் யாரெல்லாம் வாசிக்கிறார்கள், யார் யாருக்கெல்லாம் என் எழுத்து பிடித்திருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.   தருண் தேஜ்பால் நண்பனானதும் இப்படித்தான்.  ஒருநாள் ஒரு பெண்ணின் குரல்.  ரொம்ப நாள் பழகியது போன்ற தொனி.  தருண் உங்களோடு பேச வேண்டுமாம்.  இதோ கொடுக்கிறேன்.  தருண் ஒரு ஆர்ப்பாட்டமான பஞ்சாபி.  அதே ஆர்ப்பாட்டமான தொனியில் பேசினார்.  ஸீரோ டிகிரியைப் படித்தேன்.  உங்களை உடனே சந்திக்க வேண்டும்.

அதற்கு முன்னால் மூன்று முறை சந்தித்திருக்கிறோம்.  அதெல்லாம் தெஹல்கா ஆசிரியர், ஒரு தமிழ் எழுத்தாளர் என்ற அளவில்தான்.  தருண் கேட்டுக் கொண்டபடி உடனே சந்திக்க முடியவில்லை.  துரதிர்ஷ்டவசமாக அந்தச் சந்திப்பு கோவா ஜெயிலில் நடந்தது.  மறுபடியும் ஸீரோ டிகிரி.  நீயெல்லாம் ஒரு மாபெரும் கதைசொல்லி தருண் என்றேன்.  இருக்கலாம்.  ஆனால் நீ எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று தோன்றுகிறது.  உன்னை நெருங்குவது பற்றி யோசிக்கவும் முடியாது.  என்ன எழுத்து, என்ன எழுத்து.

இப்படிப்பட்ட நிலையில் தமிழ் மொழிக்கு வெளியே இருப்பவர்களுக்காக எழுதலாம் என்று முடிவு செய்தேன்.  எக்ஸைல் மொழிபெயர்ப்பு முடிந்து விட்டது.  இருந்தாலும் ஒவ்வொரு வார்த்தையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  ஒரு முக்கியமான விஷயம்.  தமிழில் உள்ள எல்லா எழுத்தாளர்களின் படைப்புகளும் ஆங்கிலம், ருஷ்யன், செக், ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்ப்பாகி விட்டது.  ஆனாலும் அங்கெல்லாம் இந்தப் படைப்புகள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லையே ஏன்?  பிரபஞ்சப் பிரதிவினை தான் காரணம்.  universal reaction என்றால் அதைப் பிரபஞ்சப் பிரதிவினை என்று மொழிபெயர்த்தார் அல்லவா ஒரு பேர்வழி, அதைப் போலவே தான் அசோகமித்திரன், ஜெயகாந்தன், எஸ். ராமகிருஷ்ணன், சுந்தர ராமசாமி போன்றவர்களின் படைப்புகளும் அயல் மொழிகளுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன.  உங்களால் நம்ப முடியாத விஷயம் ஒன்றைச் சொல்கிறேன்.  கையடித்துச் சாவதே வாழ்க்கையாகிப் போய் விட்டது என்பதை clapping hands என்று மொழிபெயர்த்திருக்கிறது ஒரு மொழிபெயர்ப்புத் திலகம்.  இல்லாவிட்டால் அசோகமித்திரனை விட நான் பெரிய ஆளா?  நிச்சயமாக இல்லை.  மொழிபெயர்ப்பு சரியில்லை.  மொழிபெயர்ப்பு என்ற பெயரில் குப்பைகளே அயல்மொழிகளில் சென்று கொண்டிருக்கின்றன.  சுந்தர ராமசாசியையெல்லாம் கொத்துப் புரோட்டா பண்ணியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

இப்போது நான் இந்தப் பிரபஞ்சப் பிரதிவினையையெல்லாம் சரி செய்து கொண்டிருக்கிறேன்.  அதனால் இப்போது எந்தப் புத்தகமும் வேண்டாம் ஹமீது என்று இன்று காலையில் சொல்லி முடித்தேன்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு, உங்கள் துயரம் புரிகிறது; இருந்தாலும் உங்களுடைய மூன்று புத்தகங்களைக் கொண்டு வருகிறோம் என்றார் மனுஷ்ய புத்திரன்.

சரி என்றேன்.