மேலே உள்ள புகைப்படம் சும்மா போஸ் கொடுப்பதற்காக எடுத்தது அல்ல. மணாலியிலிருந்து லே (Leh) செல்லும் பாதையில் எடுத்த படம். ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டக் கூடாது; பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் ஹெல்மட் போட வேண்டும் என்பது என் கொள்கை. ஆனால் அந்த இடத்தில் என் தலை சைஸுக்கு ஹெல்மட் கிடைக்காததால் நான் ஹெல்மட் போடாமலே செல்ல நேர்ந்தது. (ஒருவேளை ஹெல்மட்டைப் போட்டு விட்டு கழற்ற முடியாமல் போனால் என்ன செய்வது என்ற பயத்தினால் முயற்சி செய்து பார்க்கவும் தயங்கினேன்).
மணாலி – லே பாதையை மரணப் பாதை என்றே சொல்ல வேண்டும். ஒரு சிறிய கார் மட்டுமே போகக் கூடிய வழி. Off road என்று சொல்லப்படும் பாதை. Off road என்றால் கடா முடா பாதை. நாம் வழக்கமாகக் காணும் தார் ரோடு அல்ல. இங்கெல்லாம் பிரமாதமாக சாலை போட முடியாது. போட்டால் ஒரு பக்கத்திலிருந்து மலை சரிந்து விழும். ஒரு பக்கம் வானளாவிய மலைகள். இன்னொரு பக்கம் அதல பாதாளம். விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது.
இப்படிப்பட்ட பாதையில் தான் நானும் அராத்துவும் இன்னும் இரண்டு நண்பர்களுமாக மோட்டார் சைக்கிளில் சென்றோம். எனக்கு சைக்கிளே விடத் தெரியாது என்பதால் பில்லியன் ரைடர் தான். பின்னால் டெம்போ ட்ராவலரில் ஏழு நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். பைக்கில் வருபவர்கள் களைப்படைந்தால் ட்ராவலரில் வரும் நண்பர்கள் பைக்குக்கு மாறுவார்கள். இப்படியாக ஏற்பாடு. ஆனால் அந்தப் பாதையை எப்படி வர்ணித்தாலும் புரிந்து கொள்வது கடினம். ஒரே பாறையும் கற்களுமான பாதை.
பயணத்துக்கு முன்பாக நான் மைலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன், சாயி பாபா, பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் ஆகியோரை நேரில் போய் தர்சித்து பிரார்த்தனை செய்து கொண்டேன். நாங்கள் அனைவரும் உயிரோடு திரும்பி வர வேண்டும் என்பதே பிரார்த்தனை. மழை வரக் கூடாது என்பது இன்னொரு பிரார்த்தனை. மழை வந்தால் அந்த மரணப் பாதையில் செல்வது கற்பனையே செய்து பார்க்க முடியாத கஷ்டம்.
நாங்கள் மொத்தம் பதினோரு பேர்.
(தொடரும்…)
Comments are closed.