கனவு, கேப்பச்சினோ, கொஞ்சம் சாட்டிங்…

தஸ்லீமா நஸ்ரினின் சமீபத்திய நாவலுக்கு எக்ஸைல் என்று பெயர் வைத்துத் தொலைத்திருப்பதால் என்னுடைய எக்ஸைல் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு வேறு தலைப்பு வைக்க வேண்டியிருக்கிறது.  மார்ஜினல் மேன் என்ற தலைப்பை நண்பர் சொன்னார்.  எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.   ரொம்ப நல்ல தலைப்பு என்றார்கள் தருணும் தருணின் மனைவி கீதனும்.  ஆனால் ஒரே ஒருத்தருக்குப் பிடிக்கவில்லை.  மேலே உள்ள தலைப்பில் உள்ள போதை இதில் இல்லை என்கிறார்.  Line of Mercy என்ற விரைவில் வர இருக்கும் ஒரு நாவலின் தலைப்பில் உள்ள ஈர்ப்பு மார்ஜினல் மேனில் இல்லை என்பது நண்பரின் வாதம்.  எக்ஸைல் நாவலைத் தமிழில் படித்த யாரேனும் அதற்கு ஆங்கிலத்தில் ஒரு தலைப்பு சொல்ல முடியுமா?  தலைப்பு என்றால் தமிழில் உள்ளதை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக வைக்க வேண்டும் என்று இல்லை.

உதாரணமாக, Rue de Retour என்ற ஃப்ரெஞ்ச் தலைப்பை Way of No Return என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள்.  Abdellatif Laabi என்ற ஃப்ராங்கோஃபோன் எழுத்தாளரின் நாவல் அது.  லாபி மொராக்கோவைச் சேர்ந்தவர்.  நெடுங்காலமாக பாரிஸில் வசிக்கிறார்.  அரபியிலும் ஃப்ரெஞ்சிலும் எழுதுகிறார்.  ரெத்தூர் என்றால் திரும்புதல்.  திரும்புதல் என்பதற்கே மூன்று ஃப்ரெஞ்ச் வார்த்தைகள் உள்ளதாம்.  உங்கள் சொந்த ஊருக்குத் திரும்புதல்; வேலைக்குப் போய் விட்டு வீடு திரும்புதல், கொஞ்ச நாட்களுக்கு மட்டும் ஒரு ஊருக்குப் போய் விட்டுத் திரும்புதல்.  இதெல்லாம் மொழிபெயர்ப்பில் போய் விடும் இல்லையா என்றார் நண்பர்.  குழந்தையிலிருந்து 90 வயது வரை ஒரு பெண்ணைக் குறிக்க ஒரு டஜன் வார்த்தைகளுக்கு மேல் தமிழில் உள்ளன.  இப்படி அதில் இல்லாததை இதில் எடுத்துக் கொள்ளலாம்.  இன்னொரு உதாரணம் கேளுங்கள்.  பெண்ணின், ஆணின் ஜனன உறுப்பைக் குறிக்க தலா ஆறு வார்த்தைகள் உள்ளன.  லாபிக்கு வருவோம்.  Rue de Retour என்றால் திரும்பும் வழி.  rue என்பது தெரு; ஆனால் இந்த இடத்தில் வழி.  ஆனால் ஆங்கிலத்தில் திரும்ப முடியாத வழி என்றே மொழிபெயர்க்கப்பட்டது.  ஃப்ரெஞ்ச் தலைப்பை விட ஆங்கிலத் தலைப்பே அந்த நாவலுக்கு அதிகம் பொருந்தும்.  ஏனென்றால், மொராக்கோவிலிருந்து பாரிஸ் வந்து விட்டால் ஒருவர் மொராக்கோவுக்குத் திரும்ப முடியாது.   ஏன், விமானம் போகாதா என்று கேட்கக் கூடாது.  இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பா போனவர்கள் இலங்கை திரும்பவில்லை அல்லவா?  அது போன்ற வழி அடைப்பைச் சொல்கிறார் லாபி.  பாரிஸ் போனால் லாபியைப் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை.  இந்தியாவிலிருந்து அவரைப் படித்த ஒருவரை அவர் இதுவரை பார்த்திருக்க மாட்டார்.  அதிலும் Rue de Retour படித்தவர்கள் ரொம்பக் கம்மி.  அவருடைய விக்கிபீடியா விபரத்தில் கூட அந்த நாவல் இருக்காது.

சரி, எனக்கு ஒரு நல்ல தலைப்பு சொல்லுங்கள்.  எதுவும் சிக்காவிட்டால் மார்ஜினல் மேன் தான்.

சு.ரா.வின் ஜே.ஜே. சில குறிப்புகள் ஆங்கிலத்தில் வந்துள்ளது.  ஏ.ஆர். வெங்கடாசலபதி மொழிபெயர்ப்பு.  அடித்துத் துவைத்திருக்கிறார் ஜெர்ரி பிண்ட்டோ.  இதுகாறும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பற்றி நான் எழுதியதையே பிண்ட்டோ எழுதியிருக்கிறார்.  நீங்கள் எழுதுவது நல்ல ஆங்கிலம் என்று நினைக்கிறீர்கள்.  ஆனால் ஆங்கில வாசகருக்கு அது ஒன்றுமே புரியவில்லை.  காதிலும் வாயிலும் ரத்தம் கக்கி எழுதியிருக்கிறார் ஜெர்ரி பிண்ட்டோ.  சலபதியின் மொழிபெயர்ப்பை ஒரு அமெரிக்க எடிட்டர் எடிட் செய்திருந்தால் இந்த அபத்தத்தைத் தவிர்த்திருக்கலாம்.  அதற்கு ஐந்து ஆறு லட்சம் செலவு செய்ய வேண்டும்.

http://www.thehindu.com/books/literary-review/jerry-pinto-reviews-ar-venkatachalapathys-translation-of-sundara-ramaswamys-jj-some-jottings/article9334053.ece

***

குமுதத்தில் கனவு, கேப்பச்சினோ, கொஞ்சம் சாட்டிங்… என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதி வருகிறேன்.  என்னுடைய நெருங்கிய நண்பர்கள் ஒருவர் கூட படிப்பதில்லை என்று அறிகிறேன்.  நல்லது.  அதில் சில வாரங்களுக்கு முன்னால் ஜெயமோகன் பற்றி எழுதியிருந்ததை இங்கே தருகிறேன்.

பூனாவில் ஒரு வங்கிக்குச் சென்றிருக்கிறார் ஒரு அன்பர்.  அங்கே கவுண்ட்டரில் இருந்த வயதான பெண்மணி ஸ்லோ மோஷனில் வேலை செய்ய, இவர் பொறுமை இழந்து விட்டார்.  பணத்தை வாங்கிப் போட்டு விட்டு ரசீதில் முத்திரை குத்திக் கொடுக்க வேண்டும்.  பணத்தை எண்ணுவதற்கும் எந்திரம் வந்து விட்டது.  இதைச் செய்து முடிக்க அதிக பட்சம் இரண்டு நிமிடம் ஆகலாம்.  ஆனால் அந்தப் பெண்மணி 15 நிமிடம் எடுத்திருக்கிறார்.  இந்தச் சம்பவத்தை அன்பர் தனது பிரியத்துக்குரிய எழுத்தாளருக்கு எழுத, எழுத்தாளர் தன் வலைப்பூவில் “அந்தக் கிழவியைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும் போல் இருந்தது” என்று எழுதி விட்டார்.  உடனே நம்முடைய முகநூல் போராளிகள் எல்லாம் சேர்ந்து எழுத்தாளரைக் கும்மி எடுத்து விட்டார்கள்.  எழுத்தாளரும் மன்னிப்புக் கேட்டு விட்டார்.

இந்தச் சம்பவம் எனக்குப் பல விஷயங்களை ஞாபகப்படுத்துகிறது.  பொதுவாக அரசு ஊழியர்கள் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?  எழுத்தாளரைக் கும்மி எடுக்கும் முகநூல் போராளிகள் ஒரு அரசு வங்கியில் போய் ஒரு காரியத்தை எந்தச் சிரமமும் இல்லாமல் செய்திருக்கிறார்களா?  வங்கி ஒன்பரைக்குத் திறக்கும்.  நீங்கள் பத்து மணிக்குப் போய் ஒரு கவுண்ட்டரில் நிற்பீர்கள்.  உள்ளே உள்ள கனவான் அல்லது சீமாட்டி தன் எதிரே ஒருவர் நிற்பதாகவே கண்டு கொள்ள மாட்டார்.  ஒரு ஐந்து நிமிடம் நின்று விட்டு, சார் என்றோ மேடம் என்றோ பவ்யமாகக் குரல் கொடுப்பீர்கள்.  அப்போதும் எதிரே உள்ளவரிடம் சலனமே இருக்காது.  மேலும் ஓரிரு நிமிடம் பார்த்து விட்டு கொஞ்சம் குரலை உயர்த்தி சார்/மேடம் என்கிறீர்கள்.  உடனே எதிர்த்தரப்பிலிருந்து ”என்ன சார், பார்த்துட்டு தானே இருக்கீங்க, இப்போதானே வந்தேன். கொஞ்சம் இருங்க” என்ற கடுமையான குரல் வரும்.  வாழ்நாளில் யாருமே உங்களிடம் இவ்வளவு கடுமையாகப் பேசியிருக்க மாட்டார்கள்.  எந்தக் கெட்ட வார்த்தையும் இல்லை.  ஆனாலும் அந்தக் குரலின் கடுமை கன்னத்தில் பளாரென்று அறை வாங்கியது போல் இருக்கும்.  போய் உட்கார்ந்து விடுவீர்கள்.  அதற்குப் பிறகு பத்து நிமிடம் ஆனாலும் அவர் உங்களை அழைக்க மாட்டார்.  பொழுது விடிந்ததும் யார் உங்களை அவருடைய மனநிலையைக் கெடுக்கச் சொன்னது?  நன்றாக அனுபவியுங்கள்.

உங்களுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாது.  மீண்டும் அவரிடமே போனால் திட்டு விழும் என்று எல்லா கவுண்ட்டர்களையும் ஒரு நோட்டம் விடுவீர்கள்.  ஒரு கவுண்ட்டரில் கொஞ்சம் சிரித்த முகத்தோடு ஒருவர் இருப்பார்.  அவரிடம் சென்று மீண்டும் சார்.  அவர் என்ன செய்வார் தெரியுமா?  தலையை நிமிர்த்தி உங்களைப் பார்க்காமலேயே வலது பக்கமோ இடது பக்கமோ சரியாக மூன்றே முக்கால் மில்லி மீட்டர் தலையைத் திருப்புவார்.  வாயைக் கூடத் திறக்காமல் தலையால் காட்டப்படும் அந்த சைகையின் அர்த்தம் அந்தக் கவுண்ட்டருக்குப் போங்கள்.  அதாவது, ஆரம்பத்தில் எந்தக் கவுண்ட்டரில் நீங்கள் ……. அடி வாங்கினீர்களோ அதே கவுண்ட்டர்.

இப்படியெல்லாம் நடந்தால் நீங்கள் லாட்டரி சீட்டில் கோடி ரூபாய் விழுந்தவரைப் போன்ற அதிர்ஷ்டசாலி என்பேன்.  அப்படியா?  ஆமாம், அப்படியேதான்.  ஒருநாள் என் நண்பர் ஒருவர் மாரிஸ் ஓட்டலில் காலை உணவுக்கு அழைத்தார்.  சாப்பிட்டோம்.  பிறகு பக்கத்தில் உள்ள கல்லூரியில் மகளுக்குக் கட்டணம் கட்ட வேண்டும்; ஒரு நிமிட வேலைதான்.  கட்டி விட்டு உங்களை வீட்டில் விட்டு விடுகிறேன் என்றார்.  ஸ்கூட்டரில் கிளம்பினோம்.  உள்ளே போன பிறகுதான் தெரிந்தது, அங்கே உள்ள வங்கியில்தான் கட்டணம் கட்ட வேண்டும் என்று.  பீதியில் எனக்கு நாக்கு உலர்ந்து விட்டது.  நான் கிளம்புகிறேன், ஆளை விடுங்கள் என்றேன்.  அட, சும்மா வாங்க என்று தைரியம் சொல்லி அழைத்துப் போனார். பெண்கள் கல்லூரி என்பதால் வங்கியில் அத்தனை பேரும் பெண்கள்.  நண்பருக்கும் மேலே சொன்னபடியே ஆயிற்று.  (எத்தனை முறை அனுபவித்திருக்கிறேன்!) அப்போது திடுதிப்பென்று எல்லா ஊழியர்களும் – மேனேஜர் உட்பட – எழுந்து வெளியே ஓடினார்கள்.  ஆமாம்.  ஓடினார்கள்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  பூகம்பம் என்றால் நமக்குத் தெரிந்திருக்குமே?  எதுவும் ஆடவில்லையே?  நானும் நண்பரும் வெளியே வந்து பார்த்தால் அட என் மகமாயித் தாயே!  பக்கத்துத் தெருவில் வசிக்கும் நம்முடைய தமிழக முதல்வர் காரில் செல்கிறார்.  இந்த வங்கி ஊழியர்கள் அனைவரும் முதல்வருக்குக் கை தூக்கி வணக்கம் சொல்கிறார்கள். முதல்வரும் சிரித்தபடி வணக்கம் சொல்கிறார்.  முதல்வருக்குத் தெரியுமா, இப்படி மொத்த வங்கியுமே வேலையை விட்டு விட்டு வெளியே வந்து நிற்கிறது என்று.

***

எதற்குக் கிசுகிசு?  மேலே குறிப்பிட்ட எழுத்தாளர் ஜெயமோகன் தான்.  அவரைத்தான் முகநூலில் அப்படிக் கும்மி எடுத்தார்கள்.  மன்னிப்புக் குறிப்பில் அவர் எழுதியிருந்த ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது.  ”தினமும் வசை தின்கிறேன்.  இன்றுதான் சரியான காரணத்துக்காகத் திட்டுகிறார்கள்.” ம்ஹும்.  அது சரியான காரணம் அல்ல.  திட்டிய யாருமே அவருடைய பெயரைச் சொல்லக் கூட தகுதி இல்லாதவர்கள்.  ஒருவர் சொல்கிறார், அவர் எழுத்தாளர் இல்லை என்பது எப்போதோ நிரூபணம் ஆகி விட்ட விஷயம்.  எப்படி இருக்கிறது கதை?  சுமார் 300 புத்தகங்கள் எழுதிய ஒருவர் எழுத்தாளர் இல்லையாம்.  யாரெல்லாம் ஜெயமோகனால் பாதிக்கப்பட்டவர்களோ அவர்கள்தான் இன்று ஜெ.வை அடிக்கிறார்கள்.  பழிக்குப் பழி என்பதைத் தவிர அவர்களிடம் வேறு எதுவுமே தெரியவில்லை.

ஜெயமோகன் அளவுக்கு சமகாலத் தமிழுக்குப் பணி செய்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  உதாரணமாக, ஞானக்கூத்தன் தமிழின் அதிமுக்கியமான கவிஞர்.  சமீபத்தில் தன் எழுபத்தெட்டாவது வயதில் காலமானார்.  ஆனால் வாழ்நாளில் அவருக்கு எந்தப் பரிசும் கொடுக்கப்பட்டதில்லை.  அரசும் மற்ற நிறுவனங்களும் பரிசுகளையும் விருதுகளையும் கொடுத்து கௌரவித்திருக்க வேண்டும்.  ஆனால் அவருடைய நீண்ட வாழ்நாளில் அவருக்குக் கிடைத்த ஒரே பரிசு ஜெயமோகனின் வாசகர் வட்டம் கொடுத்ததுதான்.  இப்படி ஒவ்வொரு முன்னோடியாகப் பார்த்துப் பார்த்து பரிசு வழங்கி கௌரவித்துக் கொண்டிருக்கிறார் ஜெ.

இன்னொரு சம்பவம்.  ஒரு சமயம் எனக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது. வெறும் புகழுரையாக இல்லாமல் சாதகம் பாதகம் இரண்டும் சேர்ந்து நடுநிலையாக எழுத வேண்டும்.  எழுத ஆரம்பிக்கும் முன் யாரெல்லாம் எம்.எஸ். பற்றி எழுதியிருக்கிறார்கள் என்று ஆராய்ந்தால் ஜெயமோகனின் நீண்ட கட்டுரை.  ஜெ. தனக்கு சங்கீதம் தெரியாது என்றே பல சமயங்களில் சொல்லியிருக்கிறார்.  இருந்தாலும் டி.ஜே.எஸ். ஜார்ஜ் என்ற புகழ்பெற்ற பத்திரிகையாளர் எம்.எஸ். பற்றி எழுதிய ஆங்கில நூலுக்கு ஜெ. எழுதிய மதிப்புரையே அது.  என்றோ ஒருநாள் சாரு நிவேதிதா குமுதத்தில் பாராட்டுவார் என்பதற்காகவா அத்தனை பெரிய ஆங்கிலப் புத்தகத்தைப் படித்து இருபது பக்கத்துக்கு மதிப்புரை எழுதினார் ஜெ.?  இப்படி எந்த முன்னோடியைப் பற்றி நான் எழுதப் புகுந்தாலும் அங்கே அவர் பற்றி ஒரு ஆய்வைச் செய்திருக்கிறார் ஜெ.  அப்படிப்பட்டவர் ஒரு தவறு செய்து விட்டார் என்பதற்காக (அது தவறு அல்ல என்பது என் கட்சி; அப்படியே அது தவறாக இருந்தாலும்) அவரைப் போட்டுக் கண்மூடித்தனமாகத் தாக்குவது…

இதனால்தான் எழுத்தாளர்களைக் கொண்டாடத் தெரியாத சமூகம் இது என்று சொல்கிறேன்.  கடைசியாக ஒரு விஷயம்:  ஜெயமோகனின் நாவல், சிறுகதைகள் எதுவும் எனக்கு விருப்பமானதல்ல!