”அப்படியென்றால் வதந்திகளை எவர் உருவாக்குகிறார்கள்? ஏன் அவற்றை இவ்வளவு வெறியுடன் பரப்புகிறார்க்கள்? ஊடகங்களின் உண்மையான நோக்கம் என்ன? ஸ்க்ரோல் என்னும் இணைய மஞ்சள் பத்திரிகையில் ஒரு கட்டுரை. மக்கள் கூட்டம்கூட்டமாக ஏடிஎம் முன்னால் சாகிறார்கள், மாபெரும் கலவரம் வெடிக்கப்போகிறது என்று. என்னதான் உத்தேசிக்கிறார்கள்?”
இப்போதைய பணப் பிரச்சினை பற்றி ஜெயமோகன் கட்டுரையில் என்னை அசத்திய வரிகள் இவை! இன்னமும் ஜெயமோகன் அவருடைய 25 வயதில் எழுதிய வேகத்தில் எழுதுவது கண்டு ஆச்சரியம் அடைந்தேன். தம்பிக்கு முதுமையே வராது போல் இருக்கிறது. இந்த ஆண்டு போன ஆண்டு போல் இல்லாமல் ஜெயமோகனுக்கு பத்மபூஷன் பட்டம் கொடுப்பார்கள் என்பது உறுதி. ஜெயமோகனுக்கு சாகித்ய அகாதமி பரிசெல்லாம் இனிமேல் கிடைக்காது. அந்தக் கட்டத்தை அவர் தாண்டி விட்டார். எனவே, சாகித்ய அகாதமியின் தலைவராகப் பொறுப்பு அளிக்கப்படலாம்.
பத்மஸ்ரீ என்றதும் எனக்கு சென்ற ஆண்டு பத்மஸ்ரீ வாங்கியவர்களின் ஞாபகம் வருகிறது. அஜய் தேவ்கன், ப்ரியங்கா சோப்ரா, எஸ்.எஸ். ராஜ்மௌலி (தெலுங்கு இயக்குனர்) போன்றவர்களுக்கு பத்மஸ்ரீ கிடைத்தது. ஜெயமோகன் அதை மறுத்து விட்டார். அனுபம் கேருக்கு பத்மபூஷன்.
இப்போதைய பணப் பிரச்சினை பற்றி மிக விரிவாக எழுதியதாலேயே ஸ்க்ரால், இணையத்தின் மஞ்சள் பத்திரிகை என்றால் மோடியை விமர்சிக்கும் சாரு நிவேதிதா தேசத் துரோகி என்று ஜெயமோகன் எழுதாமல் இருக்க வேண்டும் என்று என் குருநாதர் பாபாவைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.