செல்லாப் பணம் குறித்த ஒரு முக்கியமான கட்டுரையைப் படித்தேன். எழுதியவர் ஷங்கர் கோபாலகிருஷ்ணன். இந்த விஷயத்தில் கார்ல் மார்க்ஸ் போன்ற என் நண்பர்களே ஏதோ நல்லது நடக்கப் போவதாக கனவுலகத்தில் மிதந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. ஸ்க்ராலில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. தமிழாக்கம் செய்தவர் Shahjahan R.
பணத்தாள் நீக்கம் – ஏழைகளின் செல்வத்தை செல்வந்தர்களுக்கு நிரந்தரமாக மாற்றும் மரண அடி
(ஸ்க்ரோல்-இன் கட்டுரையின் தமிழாக்கம்)
பணத்தாள் நீக்கம் குறித்தான விவாதத்தில் பெரும்பகுதி, பொருளாதாரம் சீரடையும் அல்லது ரொக்கப் பணம் தேவைப்படாத நிலை வரும் என்பதைப் பற்றியே பேசுகிறது. இரண்டும் நடந்தால் நல்லது என்பது அதன் உள்ளடங்கிய அர்த்தம். ஆனால், பொருளாதாரத்தின்மீது ஒட்டுமொத்தமாக என்ன தாக்கம் ஏற்பட்டாலும் சரி, வளங்களின் பகிர்வின்மீது மிகப்பெரும் தாக்கம் ஏற்படும் என்பதைப் புறக்கணிக்கிறது. டீமானிடைசேஷன் என்பது பெரியதொரு வெற்றிடம் – சொல்லப்படுவதற்கு நேர் மாறாக – வலிமையற்றவர்களிடம் இருக்கும் வளங்களை செல்வாக்கு மிக்கவர்களுக்குச் சென்றடையுமாறு உறிஞ்சுகிற வெற்றிடம். குறிப்பாக, இந்த மாற்றம் நிரந்தரமானது.
இந்தியர்களில் எத்தனை பேர் முறைசாராத் தொழில்களில் இருக்கிறார்கள் என்ற மதிப்பீடுகள் மாறுபடலாம்; ஆனால் சுமார் 80%-90% முறைசாராத் தொழில்களில்தான் இருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிப்பதும் செலவு செய்வதும் ரொக்கமாகத்தான். இப்போது ஏற்பட்டுள்ள ரொக்கப் பண வறட்சி, இவர்கள் எல்லாரையும் வாட்டும், மற்றவர்களைவிட மிக அசாதாரணமாக வாட்டும்.
அசாதாரணமான தாக்கம் என்பது வீட்டுக்குள்ளிருந்து துவங்குகிறது. குடிகார, அடித்து உதைக்கிற, பொறுப்பற்ற கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட உழைக்கும் பெண்கள், அவசரத் தேவைகளுக்காக பணத்தை ஒளித்து வைத்திருப்பார்கள். இப்போது அந்தப் பணம் முழுக்கவும் தொலைந்து விட்டது, அல்லது வெளியாகி விட்டது. இரண்டில் எதுவாக இருந்தாலும் சரி, பெண்ணிடம் இருந்த ஒரு ஆயுதம் போய் விட்டது. அவளை சுரண்டுவது இன்னும் எளிதாகிவிட்டது.
ரபி என்பது குளிர்காலத்தில் விதைத்து, வசந்தத்தில் அறுவடை செய்யும் பயிர். நவம்பர் மத்தியில்தான் ரபி பயிருக்கு விதைக்கும் காலம். விவசாயிகள் விதைக்க முடியவில்லை, பயிர்களை விற்க முடியவில்லை. பணத்தாள் நீக்கம் காரணமாக கூட்டுறவு வங்கிகள் அடைபட்டு விட்டதால் அவர்கள் கடன் கொடுப்பவர்களை நாட வேண்டியதாயிற்று. இதற்காக அவர்கள் அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். கடனை திருப்பிச் செலுத்த முடியாது போனால், நிலமும் கைவிட்டுப் போய்விடும்.
சிறிய தொழிற்சாலைகளில் லேஃஆப் விடப்பட்டு கொத்துக் கொத்தாக ஆட்கள் வேலையிழக்கிறார்கள். அவர்களின் நிலையும் இதுதான், சிறிய தொழிற்கூடங்களின் உரிமையாளர்களின் நிலையும் இதுதான். பணத் தேவைக்காக தனியாரிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் பெற வேண்டியதாகிறது, விளைவாக, இருக்கிற சொத்துகளை இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
உணவு, மளிகை, மருத்துவச் செலவு, அவசரச் செலவு என பழைய நோட்டுகளை மாற்ற வேண்டிய ஒவ்வொருவரும் தரகர்களை அணுக வேண்டியிருந்தது. சனிக்கிழமை நான் டேராடூனில் ஒரு சேரியில் இருந்தேன். அந்த சேரியில் சுமார் 300 குடும்பங்கள் இருந்தன. நான் அங்கே இருந்தபோது குறைந்தது ஐந்து பேர் 500 ரூபாய் நோட்டுக்கு 100 ரூபாய் நோட்டு வேண்டுமெனக் கேட்டு சேரியின் தலைவரிடம் வந்தார்கள். அவர் நேர்மையான மனிதர், கமிஷன் ஏதும் வாங்கவில்லை. ஆனால் பணத் தரகர்கள் இதுதான் நேரம் என்று சுரண்டுகிறார்கள். 500 ரூபாய் நோட்டுக்கு 400 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கு 800 ரூபாய். பணத்தை மாற்றிய எவரும் தம்மிடமிருந்த ரூபாயின் மதிப்பில் 20% ஒரே இரவில் இழந்தார்கள்.
சிறிய வணிகர்கள், சாலையோரக் கடைக்காரர்கள், பெட்டிக் கடைக்காரர்கள் போன்றோர் தமது வியாபாரத்தை ஆன்லைன் வர்த்தகத்திடம் இழந்து விட்டார்கள். பே டிஎம் முறையை பயன்படுத்தலாம் என்றால், அதற்கு ஒரு ஸ்மார்ட் போன் தேவை, 10 ஆயிரத்துக்கு மேல் வருமானம் என்றால் டேக்ஸ் இன்பர்மேஷன் எண் தேவை. சிறு வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகள் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
புழக்கத்தில் இருந்த பணம் முழுவதையும் உறிஞ்சி எடுத்துக்கொண்டதால் வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கின்றன. இதன் காரணமாக முதலீடு அதிகரிக்கும் என்கிறார்கள் சிலர். பணப்பற்றாக்குறை என்றால் டிமாண்டே இல்லை என்னும்போது, முதலீடு எப்படி அதிகரிக்கும் என்று தெளிவில்லை.
ஆனால், வட்டி விகிதம் குறைவதால் பயனடையக்கூடிய ஒரு பிரிவு உண்டு – கடன் வாங்கியவர்கள்தான் அவர்கள். எவ்வளவு அதிக கடன் வாங்கினார்களோ அவ்வளவுக்கு லாபம். 2015 மார்ச் கணக்கின்படி, 10 கார்ப்பரேட் நிறுவனங்கள் 7.3 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் கடன் வைத்திருந்தார்கள். வட்டிவகிதம் ஒரு சதவிகிதம் குறைந்தாலும் இந்த ஆண்டு மட்டும் அவர்களுக்கு 7300 கோடி ரூபாய் லாபமாகும். கோடிக்கணக்கான மக்கள் தமது பணத்தைப் பயன்படுத்த முடியாமல் போனதால் மட்டுமே கார்ப்பரேட்களுக்கு இந்த அதிர்ஷடம் கிடைத்திருக்கிறது. பணத்தின் உரிமையாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலனை அதைவிட அதிகமாக கார்ப்பரேட்டுகள்தான் அனுபவிக்கிறார்கள்.
எவ்வளவு நோட்டுகள் வங்கிக்கு வரவில்லையோ அவ்வளவும் கறுப்புப் பணம் என்று சிலர் பேசுகிறார்கள். வங்கியை அணுக வசதி இல்லாதவர்கள், முதியவர்கள், கியூவில் நிற்கும் அளவுக்கு நேரத்தை செலவழிக்க இயலாதவர்கள், முறையான அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆகியோரின் கையிருப்பிலிருந்த பணம் வராது. உதாரணமாக, அடையாள அட்டை இல்லாதவர்களை எடுத்துக்கொள்வோம். இந்திய அரசு தருகிற புள்ளிவிவரங்களின்படி பார்த்தாலும் வயது வந்தவர்களில் 5.8 கோடிப் பேரிடம் ஆதார் அட்டை இல்லை. இவர்களிடம் வேறு அடையாள அட்டையும் இருக்காது, வங்கிக் கணக்கும் இருக்காது என்று உறுதியாகச் சொல்ல்லாம். இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் அவசரச் செலவுக்காக ரொக்கப் பணத்தை வைத்திருக்கும். இதுகுறித்த ஒரு கணக்கெடுப்பில், வருமானத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் 59% பேர் பணத்தை ரொக்கமாக வீட்டிலேயே வைத்திருப்பார்கள் என்று தெரிந்தது. இவர்கள் ஒவ்வொருவரிடமும் மாற்ற முடியாத, வங்கியில் போட முடியாத 2000 ரூபாய் இருந்தது என்றால், அதன் மதிப்பு 11,400 கோடி ஆகும்.
மேற்சொன்ன நஷ்டங்கள் எதிலும் 50 நாட்களில் முன்னேற்றம் வந்து விடாது. நிலத்தை இழந்தது, சேமிப்பு போனது, வேலை இழந்தது, கமிஷன் கொடுத்தது, உணவோ மருந்தோ இல்லாமல் மக்கள் இறந்தது – இதில் எதுவும் திரும்பி வரப்போவதில்லை. இழப்போ லாபமோ நிரந்தரம். மேலும், பணத்தாள் நீக்கத்தின் காரணமாக பெரும்பான்மை மக்களின் பெருமளவிலான செல்வ வளம் இடம் பெயர்ந்தது எந்தவித உற்பத்தி சார் காணமாகவும் அல்ல. இதனால் பயன் பெறுகிறவர்கள் எவரும் அதற்காக ஒரு துரும்பையும்கூட கிள்ளிப்போட்டவர்களும் அல்ல. அவர்கள் வலிமை உள்ளவர்களாக இருப்பதால் அவர்கள் பெருத்த லாபம் அடைகிறார்கள். அடக்குமுறைப் பொருளாதாரம் என்பதற்கு இதைவிடப் பெரிய விளக்கம் இருக்க முடியாது.
பணத்தாள் நீக்கத்தின் ஆதரவாளர்கள், இது வரி ஏய்ப்பைத் தடுக்கும் என்கிறார்கள். ஆனால் இந்த அரசு வரி ஏய்ப்பை குறித்து கவலைப்படும் என்று எதிர்பார்க்க எந்த நியாயமும் இல்லை. இந்தியாவில் மிகப்பெரிய வரி ஏய்ப்பாளர்கள் பெரிய கம்பெனிகள்தான். உதாரணத்துக்கு, நடப்பில் இருக்கிற மிக முக்கியமான பெரிய வரி ஏய்ப்பு வழக்கு வோடஃபோனுக்கு எதிரானது. 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கு. ஆனால், வோடஃபோன் பயன்படுத்தி வந்த சட்டத்தின் ஓட்டையை அடைப்பதற்காக 2012இல் கொண்டு வந்த விதி General Anti-Avoidance Rules செயல்படுத்தப்படவே இல்லை. முந்தைய காங்கிரசும் சரி, 2014இல் வந்த பாஜக அரசும் சரி, இந்த விதிகளை நடைமுறைப்படுத்துவதை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்துள்ளன. 2017 ஏப்ரலுக்கு முந்தைய விவகாரங்களில் இந்த விதி செல்லுபடியாகாது என்று இந்த அரசு இப்போது அறிவித்திருக்கிறது! வரி ஏய்ப்புக்காக தண்டனை விதிப்பது என்பது சூட்கேஸ்களில் பணத்தை வைப்பவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் போலும்!
திடீர் வரி வருவாய் பெருக்கம் – அல்லது ரிசர்வ் வங்கி அரசுக்கு டிவிடென்ட் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் தற்காலிகமாக சில நலத் திட்டங்களை அறிவிக்கச் செய்யலாம். ஆனால் பணத்தாள் நீக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்யக்கூடிய வகையில் பொதுநலத் திட்டங்களில் இந்த அரசு செலவு செய்யாது, செலவு செய்யக்கூடிய அரசியல் நோக்கமும் அதனிடம் கிடையாது. பணத்தாள் நீக்கம் என்பது ஏழைகளுக்கு உதவுவதற்காக வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிரான போர் என சித்திரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியப் பொருளாதாரத்தை இன்னும் ஏற்றத்தாழ்வு கொண்டதாகவே இது மாற்றும். பாதிப்புக்கு ஆளாகும் பெரும்பான்மை மக்கள் சமூகம் இன்னும் அதிக பாதிப்புக்கு ஆளாகும்.
சந்தேகமில்லாமல் இது அதிரடிதான் – ஏழைகள் மீதான மரண அடி.