கார்ல் மார்க்ஸ்

சிலருக்குத்தான் பெயர் பொருத்தமாக அமைகிறது.  எனக்கு அறிவழகன் என்று பெயர் வைத்தார்கள்.  அறிவும் இல்லை; அழகும் இல்லை.  ஆனால் கார்ல் மார்க்ஸுக்கு பெயர் பொருத்தமாக அமைந்து விட்டது.  எவ்வளவு அறிவாக எழுதியிருக்கிறார் பாருங்கள்.

***
கார்ல் மார்க்ஸ் முகநூலில் எழுதியிருப்பது:

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நடந்துவிடும் என்பதற்கான சமிஞ்ஞைகள் தெரிகின்றன. உடனே அதை விட அதிகமான ஒலியுடன் அற்பக் கூச்சல் ஒன்றும் மேலெழுந்து வருகிறது. அதன் வடிவத்தில் ஒன்றுதான் ‘புத்தகத்துக்கான ப்ரோமோ’ எனும் சத்தம். ஒரு புத்தகத்துக்கான ப்ரோமோவை செய்வது தவறா என்றால் நிச்சயமாக இல்லை. அது செய்யப்பட வேண்டும்தான். வாசிப்பின் மீது அதீத ஒவ்வாமை உள்ள ஒரு சமூகத்தில், வாசிப்பதைப் பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் எழுத்தாளன் தொடர்ந்து பேசவேண்டும்தான். அவன்தான் தனது படைப்பு இயக்கத்தின் கூறுகளில் ஒன்றாக ‘வாசிப்பது’ குறித்தும், அதன் மீதான இந்த சமூகத்தின் ‘மவுடீகம்’ குறித்தும் காத்திரமான கேள்விகளை எழுப்புபவனாக இருக்க முடியும்.

ஆனால் இங்கு ‘எழுத்தாளன்’ என்பவன் யார் என்ற கேள்வி இருக்கிறது. சமூகத்தின் இந்த அவலம் குறித்து சீற்றமடைய அவனுக்கு இருக்க வேண்டிய தார்மீகத் தகுதி என்ன…? அது யாருக்கு இருக்கிறது…? என்ற புரிதலில் இருந்து தான் இந்த கருத்தாக்கத்தை நாம் வரையறுத்துக்கொள்ள முடியும். நம் சூழலில் சாதித்த பல எழுத்தாளர்கள், மிகவும் எளிமையாக அதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அந்த விமர்சன வெளி என்பது முழுக்க முழுக்க சீரிய எழுத்தாளர்களுக்கு அளிக்கப் படவேண்டிய ஒன்று. ஆனால் அத்தகைய இடத்தை அரைவேக்காடுகள் எந்த பிரஞ்ஞையும் இல்லாமல் அபகரிக்கிறார்கள் என்பதும், அதன் மூலம் சூழலை மேலும் மாசுபடுத்துகிறார்கள் என்பதும்தான் இங்கு சொல்ல வருவது. ஒரு சிறுவனை முன்வைத்து இத்தகைய உரையாடல் இங்கு தொடங்கப்பட வேண்டுமா என்று கேட்கலாம். புதிதாக எழுத வருபவன் கைகொள்ள வேண்டிய பொறுப்பு குறித்து பேச இது சரியான சமயம் என்றே நான் கருதுகிறேன். புதிதாக எழுத வருபவன் என்று சொல்கிற போது நான் உட்பட எல்லாருக்குமே பொருந்தும்.

சமூகத்தின் இந்த மவுடீகம் குறித்த தனது ஆதங்கத்தை எல்லா இடங்களிலும் முன் வைத்துக்கொண்டே இருக்கும் எழுத்தாளர் சாரு. இந்தக் கேள்வியை எழுப்பும் தகுதியை அவர் எங்ஙனம் அடைகிறார்? தனது தொடர்ந்த இலக்கியப் பங்களிப்பின் மூலம், குறிப்பிடத்தக்க விழுமியங்களை உருவாக்கி முன்வைத்ததன் வழியாக, பின்னால் எழுத வரும் ஒரு தலைமுறைக்கு சில வரையறைகளை வகுத்துக் காட்டியதன் வழியே அவர் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறார். இப்போது அவரைக் கொண்டாடுகிறேன் என்று சொல்லும் ஒருவன் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? அந்த விழுமியங்களை செரித்துக் கொள்வதன் வழியே அந்த செயல்பாட்டை முன்னெடுப்பதுதான். அவ்வாறு செய்வதை விடுத்து, அவரிடம் இருந்து சில வார்த்தைகளை கடன் வாங்கி வைத்துக்கொண்டு, எல்லாவற்றின் மீதும் கருத்துகளை உதிர்க்க ஒருவன் கூச வேண்டாமா? இது அவர் உருவாக்கிய விழுமியத்துக்கு எதிரான செயல்பாடு இல்லையா? இந்தப் பூஞ்சையான மனநிலைதான் ஒரு எளிய கிண்டலைக் கூட சகித்துக்கொள்ள முடியாத மூர்க்கமாகத் திரிகிறது. இது, ஒரு எழுத்தாளரை ஆதர்ஷமாகக் கொள்ளும் இளம் எழுத்தாளன் மட்டுமல்லாது தீவிர வாசகனுக்கும் பொருந்தும்.

இப்போது எழுத வரும், சமூக ஊடகங்களைக் கையாளத் தெரிந்த ஒரு எழுத்தாளனுக்கு அவை ஒரு பரந்துபட்ட வெளியை வழங்கியிருக்கின்றன. நுகர்வுக்கு பழகிப் போயிருக்கிற ஒரு சமூகம், புத்தகங்கள் வாங்குவதையும் கவுரவமாக எண்ணத் தொடங்கியிருக்கும் சூழலில், இந்த ப்ரோமோ கூச்சலின் வழியாக சில நூறு புத்தகங்களை கூடுதலாக விற்றுவிடக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது. இத்தகைய கூடுதல் விற்பனை மட்டுமே தம்மை எழுத்தாளன் என்று பலரை நம்பச் செய்கிறது. இந்த சந்தை மனநிலைக்கும், இலக்கியத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், இதைப் பற்றிய விமர்சனங்களைக் கூட ‘தமிழ் நண்டு’ என்றோ ‘நானே எழுதி நானே வைத்துக்கொண்டால் எவன் படிப்பான்; கூவத்தானே வேண்டும்’ என்ற அற்ப விவாதங்களை முன்வைத்தோ மறைத்துக்கொள்ளச் செய்கிறது. இந்த சந்தை மனநிலையை இலக்கியம் என்று நம்பும் ஒரு எழுத்தாளனின் நிலை பரிதாபகரமானது. சுயம் இல்லாதது. சமூக ஊடகங்களை வெற்று வம்புக்கு பயன்படுத்தும் கூட்டம் ஒன்று அவனுடன் சேர்கிறபோது இதன் ஆபத்துகள் கூடுகின்றன.

இத்தகைய விவாதங்களில் அத்தகைய பார்வையாளர்களைப் பங்கேற்கச் செய்வதன் மூலம், வன்முறையாக ஒரு கும்பல் மனநிலை கட்டமைக்கப்படுகிறது. உனது அட்டைப்படம் மிகவும் ‘பிளாஸ்டிக்காக’ இருக்கிறது என்றால், அவ்வாறு விமர்சிப்பவன் ஒரு படைப்பாளி என்கிறபோதும் கூட ‘உன்னை எல்லா இடங்களிலும் வச்சி செய்வேன்…’ என்கிற தன்முனைப்பின் வெறிக் கூச்சலாக மாறுகிறது. இத்தகைய எதிர்வினை, வெற்று அகங்காரத்தில் இருந்து முளைக்கிறது என்கிற அறிவு கூட இல்லை. இது தான் இலக்கியத்தை உள்வாங்கிக்கொள்ளாத பாமரத்தனம். இறுதியாக, விசிலடிக்கும் பொறுக்கி ரசிகர்கள் ஊட்டும் தற்காலிக போதையால் வரும் களிப்பு, இலக்கியம் வழியாக அடையவேண்டிய பண்பாட்டிலிருந்து விலகச் செய்யும் அபத்தத்தை நிகழ்த்துகிறது.

இன்று இளம் எழுத்தாளர்கள் என்று அறியப்படுகிற, சமூக ஊடகங்களை ப்ரோமோ என்ற பெயரில் அடைத்துக்கொள்கிற எனது நண்பர்களை நோக்கி நான் கேட்கிறேன். இங்கு இந்த ஊடக வெளிக்கு வெளியில் இருக்கிற படைப்பாளிகளைக் காட்டிலும் நாம் சாதித்திருப்பது என்ன? மனுஷ்யபுத்திரனைக் கொண்டாடுகிறேன், சாரு நிவேதிதாவைக் கொண்டாடுகிறேன் என்ற சொல்கிறவர்கள் அவர்களது படைப்புலகம் குறித்து உருவாக்கிய உரையாடல்கள் என்ன? செம்ம, தெறி, மாஸ், கொலைவெறி வொர்க் போன்ற உதிரி சொற்களைத் தாண்டி அந்தப் படைப்புகளின் ஆன்மா குறித்தும், அதன் அழகியல் குறித்தும், அதன் இலக்கியப் பெறுமதி குறித்தும் உங்களது பார்வைகளை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் என்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிற, அல்லது தேங்கிப் போயிருக்கிற இலக்கியச் செயல்பாட்டில், அதை முன்னகர்த்தும் எளிய எழுத்தாளர்களின் வெளியை ஆக்கிரமிப்பதை சுரண்டல் என்பதாக ஒரு தீவிர வாசகன் புரிந்துகொள்ள மாட்டானா? இந்த ப்ரோமோ கூச்சலை அவன் குப்பை என்று ஒதுக்க மாட்டானா? ஒரு மூத்த எழுத்தாளன் ‘உன் படைப்பு நன்றாக இருக்கிறது’ என்று நம்மை நோக்கி சொல்வது சொல்வது ஆசி. அது நமது தன்முனைப்புக்கான உரமன்று.

மேலும், தனது புத்தகம் வெளிவரும்போது மட்டும் அதைக் கூவிக் கூவி விற்பது என்பது இலக்கியச் செயல்பாட்டில் வராது. அவ்வாறு நினைத்துக்கொள்வது முன்னோடிகளை அவமதிக்கும் செயல். எழுத்தாளனின் கர்வத்திற்கும், பொறுக்கித் தனத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. தனது ஆதர்சன எழுத்தாளனைக் கொண்டாடுவது என்பது, முதலில் அவன் எழுத்தை உள்வாங்கிக்கொள்வதில் இருக்கிறது. அதை ஆன்மாவுக்குள் அனுமதிப்பதில் இருக்கிறது. அவ்வாறு ஆகும்போதுதான், ஒருவரது செல்ல நாய்க்குட்டியாக இருந்து மற்றவர்களை நோக்கிக் குரைக்கும் ஆபாச மனநிலையில் இருந்து விடுதலையைப் பெற்றுத்தரும். எல்லாப் பெருமிதங்களையும் விட அந்த சுதந்திர உணர்வு பெறுமதி வாய்ந்தது.