அண்ணன் தம்பி சண்டையில் தலைவர் எவ்வளவு மன உளைச்சலை அடைந்திருப்பார் என்று இப்போதுதான் புரிகிறது. கடந்த ஒரு வாரமாக என் பையன்களுக்கு இடையே நடக்கும் அடிதடி சண்டையில் என் மனம் எவ்வளவு வலிக்கிறது தெரியுமா? அண்ணனை விட தம்பி கொஞ்சம் சாந்தமானவன், அறிஞனும் கூட. உன் அண்ணன் தானேடா, கொஞ்சம் விட்டுக் கொடு என்றேன். அந்தப் பொறுக்கியை இப்படி ஆக்கினதே நீ தானே, அதனால் தான் அவனுக்குப் பரிந்து கொண்டு வருகிறாய் என்று எனக்குத் திட்டு.
அண்ணனிடம் பேசினேன். ” உனக்கு அவன் தம்பி என்றாலும் அவன் பெயருக்கு ஏற்றாற்போல் கனவன் டா, அவனிடம் ஏண்டா மல்லுக் கட்டுறே?”
” உனக்குத் தெரியாது அப்பா. அவனுக்கு என் மேல் பொறாமை. அவ்வளவுதான் விஷயம். உன் மேல் நான் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறேன் என்று உனக்குத் தெரியும் இல்லையா? இந்தக் கடலில் விழவா? (எனக்கு நீச்சல் தெரியாது என்று உனக்குத் தெரியும்) ஒரு வார்த்தை சொல். சொல்லி முடிப்பதற்குள் விழுகிறேன். கனவான் வேஷம் போடும் அந்தப் பயலைப் பற்றி மட்டும் என்னிடம் பேசாதே.”
மீண்டும் தம்பியிடம் பேசினேன். உன் அண்ணன் ரொம்ப நல்லவன். அவன் இப்படி ஆனதுக்கே காரணம், அவனுடைய சேர்மானம் சரியில்லை. ஆனால் அதற்கு நான் ஒன்றும் பண்ண முடியாது. அது பெரிய இடம். நீ தான் கொஞ்சம் பொறுத்துப் போக வேண்டும்.
புத்தக விழா முடியட்டும்; எல்லாம் சரியாகி விடும்.