30.04.2017
பொதுவாக என்னைப் பற்றி பிரச்சினை செய்பவன், வில்லங்கம் என்று பலரும் சொல்வதைக் கேள்வியுற்றிருக்கிறேன். அப்படியெல்லாம் இல்லை என்பது என்னோடு பழகியவர்களுக்குத் தெரியும். மற்றவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்றால், மற்றவர்கள் எனக்குச் செய்யும் வில்லங்கம் பற்றிக் கறாராகச் சொல்லி விடுவேன். இதுதான் மற்றவர்களுக்குப் பிடிப்பதில்லை. சொன்னவுடனே, தங்கள் தவறை உணர்ந்து திருத்திக் கொள்வதற்குப் பதிலாக என்னைத் தங்களின் ஜென்ம விரோதிப் பட்டியலில் சேர்த்து விடுகிறார்கள். எனக்கும் அது பற்றித் துளிக் கவலையும் இல்லை என்பதால் வாழ்க்கை இயல்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. உண்மையில் நான் கறாராகச் சுட்டிக் காட்டும் விஷயங்களுக்கு அவர்கள் எனக்கு பயிற்சிக் கட்டணம் தர வேண்டும். நன்றி சொல்ல வேண்டும். ம். போகட்டும்.
இப்போது ஒரு வில்லங்கம். ஒரு பத்திரிகை. அதில் ஒரு ஆசிரியர். பல உதவி ஆசிரியர்கள். எனக்கு ஆசிரியரும் நண்பர். உதவி ஆசிரியர்கள் ஆருயிர் நண்பர்கள். இந்த நிலையில் ஒரு நண்பர் சாருவிடமிருந்து கட்டுரை வாங்கிப் போடலாமா என்று கேட்க, மற்றொருவர் எதுக்குங்க வம்பு என்று சொல்லுவார். கேட்டுப் போட்டோம்னா எதுனா குறை கண்டு பிடிச்சுத் திட்டுவாரு.
இந்த விஷயத்தை அப்படிப் பார்க்காமல் நான் சொல்லும் குறைகளை நம் அனைவரையும் இன்னும் மேம்படுத்திக் கொள்ள, செழுமைப்படுத்திக் கொள்ள ஏன் உரமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? குறை சொல்வதற்காக ஏன் ஒருவரிடம் பகை கொள்ள வேண்டும்? நான் பயன்படுத்தும் வார்த்தைகள் சற்று கடுமையாகத்தான் இருக்கும். ஜென் குரு என்ன கொஞ்சிக் கொஞ்சியா சொல்லிக் கொடுப்பார்?
சரி, விஷயத்துக்கு வருகிறேன். தடம் ஏப்ரல் இதழில் நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். கேட்டு வாங்கிய கட்டுரை. அக்கட்டுரையோடு என்னுடைய இரண்டு புகைப்படங்களும் உள்ளன. விகடன் புகைப்பட நண்பர் என்னைச் சந்தித்து எடுத்த புகைப்படங்கள்.
சிறு வயதிலிருந்தே என்னைப் புகைப்படம் எடுக்கும் நண்பர்கள் நான் photogenic-ஆக இருப்பதாகவும், photographers’ delight என்றும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பிரபு காளிதாஸ் சொன்னால், ஏதோ நட்புக்காகச் சொல்கிறார் என்று நினைத்துக் கொள்ளலாம். நாற்பது ஆண்டுகளாக அத்தனை பேரும் சொல்கிறார்கள் சொல்கிறார்கள் என்றால் அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நான் தடம் இதழின் இரண்டு புகைப்படங்களிலும் படு ஆபாசமாக வந்திருக்கிறேன். இத்தனை கேவலமான புகைப்படங்களை என் வாழ்வில் கண்டதில்லை. இத்தனைக்கும் தடம் இதழின் மற்ற புகைப்படங்கள் மிகத் தரமானதாக இருக்கின்றன.
முதல் புகைப்படத்தில் கேணத்தனமாக இளித்துக் கொண்டு நிற்கிறேன். பத்து வயதில் நாகூர் பீ சந்துக்கு எதிரே இருந்த போட்டோ ஸ்டுடியோக்காரர் கூட இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்திருப்பார். அது என்ன ஸ்கின் டோன் ஐயா? தமிழ்ப் படங்களில் ஆதிவாசிகளைக் காட்டுவதற்காக நடிகர்களின் மூஞ்சியில் கரியைப் பூசியிருப்பார்கள். அது போல என் உடம்பு பூராவும் புகைப்பட நண்பர் கரி பூசியிருக்கிறார். வெள்ளையை விட கருப்பு நிறம்தான் நல்ல அழகான நிறம். ஆனால் அந்தக் காலத்து நீராவி எஞ்ஜினில் 48 மணி நேரம் பயணம் செய்தால் நம் சருமம் எப்படி ஆகுமோ அப்படி ஆகியிருக்கிறது அந்தப் புகைப்படத்தில். அதிலும் என்னை சிரிக்க வேறு சொல்லியிருக்கிறார் போல, புகைப்பட நிபுணர். உலகிலேயே கொடூரமான சிரிப்பை உதிர்த்திருக்கிறேன். ஏதோ முற்றின பைல்ஸ் பேஷண்டைச் சிரிக்கச் சொன்னால் எப்படிச் சிரிப்பானோ அப்படி ஒரு சிரிப்பு.
என்னுடைய சருமம் மேட்டுக்குடியைச் சேர்ந்த இருபது வயதுப் பெண்ணின் சருமம் போல் இருக்கும். குதிகால்கள் இரண்டும் குழந்தையின் கன்னங்கள் போல் இருக்கும். தொட்டால் விரல் அப்படியே வழுக்கிக் கொண்டு போகும். சருமத்தை நல்லபடியாகப் பராமரித்தால் உங்கள் சருமமும் இதேபோல் பட்டுப் போல் இருக்கும். காலுக்கு pumice stone, முகத்துக்கு Steam treatment (அதற்காக ஒரு சிறிய மெஷின் இருக்கிறது; அதில் தண்ணீரை ஊற்றி ஸ்விட்ச் போட்டால் அதன் ஆவி முகத்தில் பட்டு முகத்தில் உள்ள கசடெல்லாம் வெளியேறி விடும்), உடம்புக்கு ஸ்டீம் பாத், குளிப்பதற்கு Forrest Essentials-இல் விற்கும் ஸ்ட்ராபெரிச் சாறு போன்றவைதான் அந்தப் பராமரிப்பு. இதை நான் முப்பது ஆண்டுகளாகச் செய்து வருகிறேன். பழத்தால் ஆன ஃபேஷியலும் போட்டுக் கொள்ளலாம்.
இப்படியெல்லாம் ஒரு மதத் தீவிரவாதியைப் போல் என் சருமத்தைப் பராமரித்து வருகிறேன். இந்தப் புகைப்படக்காரர் அதில் கருப்பு மசியைத் தீட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார். ஆகக் கண்றாவியான புகைப்படம் அது.
இரண்டாவது புகைப்படம், ஆபாசத்தின் உச்சம்.
அதில் இருக்கும் நாய் நாகேஸ்வர ராவ் பூங்காவில் வசிக்கும் என் அன்புக்குரிய நாய். அதை தினமும் கொஞ்சுவது என் வாடிக்கை. ஆனால் இந்தப் புகைப்படத்திலோ கொஞ்சுவது போல் பாவனை செய்கிறேன், நடிக்கிறேன். அது எப்படி நடந்திருக்கக் கூடும்? நான் அந்த நாயை அன்புடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் போது, புகைப்படக் கலைஞர் “கொஞ்சம் இங்கே லுக், சார்” என்று சொல்லியிருப்பார். கலைஞர் வடிவமைத்த திருவள்ளுவரைப் போல் இடுப்பைக் கோணி புகைப்படக் கலைஞரைத் திரும்பிப் பார்க்கிறேன். கலைஞர் அதோடு விட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. கொஞ்சம் ஸ்மைல் ப்ளீஸ் சார் என்று வேறு சொல்லி விட்டார் போல. சிரிக்கிறேன். இப்போது திவாகரன் சிரிப்பது போல் போஸ் கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. அடக் கடவுளே! நாகேஸ்வர ராவ் பூங்காவில் அப்போது சர்வதேசப் புகைப்படக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதைத்தான் ’என்னுடைய’ ஆபாசப் புகைப்படத்தின் பின்னணியில் பார்க்கிறீர்கள். அந்தக் கண்காட்சியில் சர்வதேசப் புகழ் பெற்ற கலைஞர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. அப்படிப்பட்ட பின்னணியில் இப்படிப்பட்ட ஆபாசப் புகைப்படம்! என்ன கொடுமை, என்ன ஒரு வன்கலவி! இதே பின்னணியில் பிரபு காளிதாஸ் எப்பேர்ப்பட்ட கலாபூர்வமான புகைப்படங்களை எடுத்திருந்தார் தெரியுமா? அதிலும் நான் ஒரு நாயோடு கொஞ்சும் புகைப்படத்தை ஜெயமோகன் வெகுவாக சிலாகித்திருந்தார்.
புகைப்படம் : பிரபு காளிதாஸ்
மேலே உள்ள படம் இயல்பாக நான் நாயோடு கொஞ்சும் போது எடுத்தது. போஸ் கொடுக்கச் சொல்லி, ஸ்மைல் ப்ளீஸ் சொல்லி எடுத்தது அல்ல.
http://www.jeyamohan.in/95854#.WQYVNX00jIV
”இந்தப்படம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நாய் நம் மூக்கை, உதடுகளை நாவாலும் மூக்காலும் தொடுவதற்கு நாய்மொழியில் ’நீ எனக்குப் பிடித்தமானவன். நாம் நண்பர்கள்’ என்று பொருள். காது பின்னிழுக்கப்பட்டிருப்பது அந்த நாய் அன்பால் உள எழுச்சிகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அதன் வால் சுழன்றுகொண்டே இருக்கும். கண்கள் சற்று நீர்மைகொண்டிருக்கும். மெல்ல முனகும்.”
என்னுடைய வருத்தம், கோபம் எல்லாம் மேலே ஜெயமோகனால் அற்புதமாக வர்ணிக்கப்படுகின்ற ஒரு நாயை அவமானப்படுத்தி விட்டார்களே என்பதுதான். புகைப்படக் கலைஞர் சினிமாவில் வேலை செய்கிறாரா? என்னையும் நாயையும் புகைப்படம் எடுக்கும் போது சினிமா ஷூட்டிங் என்று நினைத்து விட்டாரா? ஒரு அன்பான காட்சியை எப்படி அவரால் நடிப்பாக மலினப்படுத்த முடிந்தது? ஒருவேளை மாணவர் பயிற்சித் திட்டத்தின் கீழ் பயில வந்தவரிடம் என்னை சோதனை எலியாக மாட்டி விட்டு விட்டார்களோ? இவ்வளவு பிரச்சினைக்குப் பேசாமல் குமுதத்தில் என் புகைப்படத்தைப் போடுவது போல் விரல் நகம் சைஸுக்குப் போட்டிருக்கலாமே? ஒரு ஆட்சேபணையும் செய்திருக்க மாட்டேனே? என்னவோ தெரியவில்லை, விகடன் புகைப்பட நண்பர்களுக்கும் எனக்கும் ஒத்தே வர மாட்டேன் என்கிறது. முதலில் என் தியானப் புகைப்படத்தை வெளியிடுகிறேன் என்று கீழேயிருந்து மேல் நோக்கி எடுத்த புகைப்படத்தைப் போட்டார்கள். பொதுவாக கீழேயிருந்து மேல் நோக்கி எடுக்கக் கூடாது. அது ஆபத்தானது. நான் பெண்ணாகவும் இருந்து ஸ்கர்ட்டும் அணிந்திருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
கீழே உள்ளது ஜார்ஜ் பெரக்கின் புகைப்படம்.
மற்றொரு பிரபு காளிதாஸ் புகைப்படம்:
இன்னொரு அபத்தத்தையும் எழுத வேண்டும். கட்டுரையின் தலைப்பு: ”மறக்க இயலாத துயரக் காவியத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்!” இதைப் படித்தவுடன் கோபம் சுர்ரென்று என் மண்டைக்கு ஏறியது. ஏனென்றால், என் உயிரே போனாலும் இத்தனை அபத்தமாக ஒற்றெழுத்தைப் பயன்படுத்த மாட்டேன். அமர காவியம் என்பதைப் போல் துயர காவியம். துயர காவியம். துயர காவியம். துயர காவியம். துயரக் காவியம் அல்ல. துயரக் காவியம் என்பது கர்ண கடூரம். எனக்கு இலக்கணம் தெரியாது. ஆனால் என் தமிழில் இலக்கணப் பிழை இராது. சில சமயங்களில் லயத்துக்காக, ரிதத்துக்காக இலக்கணத்தை மாற்றலாம். மாற்ற வேண்டும். என்னுடைய காமரூப கதைகள் நாவல் தலைப்பு இலக்கணரீதியாகத் தவறுதான். காமரூபக் கதைகள் என்றே வர வேண்டும். ஆனால் என்னுடைய ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வாக்கியமும், வார்த்தைச் சேர்க்கைகளும் வாயால் சொல்லிப் பார்த்த பிறகே உருவாகின்றன. என் எழுத்து ஓர் இசை. என் எழுத்தை நீங்கள் படிக்க மட்டும் அல்ல; பேசியும் கேட்கலாம். என் எழுத்தைக் கேட்டால் செவிகளில் தேன் பாயும்.
துயரக் காவியம்.
துயர காவியம்.
கேட்பதற்கு எது இனிமையாக இருக்கிறது? இந்த இனிமைதான் என் எழுத்தில் இலக்கணப் பிழை இல்லாமல் என்னைக் காத்து அருள்கிறது. தலைப்பைப் பார்த்ததும் நாம் இப்படி எழுத மாட்டோமே என்று நான் தடம் ஆசிரியருக்கு அனுப்பிய மூலத்தைப் பார்த்தேன். ஆஹா, ஆஹா என்று என்னையே பாராட்டிக் கொண்டேன். அதில் நான் துயர காவியம் என்றே எழுதியிருந்தேன்.
எனவே பத்திரிகை ஆசிரியர்களே, என் படைப்பில் ஒரு எழுத்தைக் கூட மாற்றாதீர்கள். கருத்தில் ஒப்புதல் இல்லையெனில் வெளியிட வேண்டாம். நான் உங்கள் மீது என் எழுத்தைத் திணிக்க மாட்டேன். மறுப்பதற்கு உங்களுக்குப் பூரண உரிமை இருக்கிறது. ஆனால் என் மொழியின் லயத்தை, என் மொழியின் இசையைக் கெடுப்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
இந்தக் காரணத்தினால்தான், என்னுடைய பல கட்டுரைகள் இன்னமும் புத்தக வடிவம் பெறாமலேயே இருக்கின்றன. நானேதான் மெய்ப்புத் திருத்தம் செய்ய வேண்டும்.