2.5.2017
(அடியேனைப் பற்றி நண்பர்கள் மற்றும் சக எழுத்தாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டு வாங்கி, அதை ஒரு நூலாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் ஸ்ரீராம். அவருக்கு அப்படித்தான் புதிது புதிதாக யோசனைகள் தோன்றும். அந்தத் திட்டத்தில் முதல் முதலாக வந்த கட்டுரை இது. என் நண்பர் வளனரசு எழுதியது. வளனுக்கு என் அன்பு…)
என்னுடய கல்லூரி முதல் ஆண்டு மிகவும் வறட்சியாக இருந்தது. தஞ்சாவூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்பதாலும் நான் ஒரு கத்தோலிக்கக் குரு மாணவன் என்பதாலும் நண்பர் வட்டம் மிகவும் சிறியது. இந்த நிலையில்தான் தமிழ்தாசன் எனக்கு ஆசிரியராக அறிமுகமானார். ஆரோக்கியதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்தாசன், தஞ்சை மறைமாவட்டத்தைச் சார்ந்த கத்தோலிக்கப் பாதிரியார். பாதிரியார் என்பதனால் பெரிதாக வெள்ளை அங்கி அணிந்து, அன்பே உருவாகி, எப்போதும் பிரசங்கம் செய்துகொண்டிருப்பவராகக் கற்பனை செய்துகொள்ளக்கூடாது. அவர் தன் சொந்த முயற்சியில் ‘கனவு’ என்ற பதிப்பகத்தை நடத்தி பல புரட்சிகரமான சிந்தனைகளை விதைத்து வந்தவர். (அவருடைய ‘கலகத்தின் வார்த்தைகள்’ என்ற மால்கம் எக்ஸ்-இன் இரண்டு நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கது). அவருடைய அறையில் எங்கு நோக்கினும் புத்தகங்கள். அப்போது ஏதேனும் எனக்கு வாசிக்கக் கிடைக்குமா எனக் கேட்டபோது, சாரு நிவேதிதாவின் சில புத்தகங்களை காட்டி, “இந்த ஆளுடைய புத்தகங்களைத் தவிர வேற எது வேண்டுமானாலும் எடுத்துப் படிச்சுக்கோ,” என்றார். ஆச்சரியமாக ஏன் என்று கேட்டபோது, ”உன் வாழ்க்கைல அப்றம் நீயும் தனியா நின்னுகிட்டு பைத்தியம் மாதிரி சண்ட போட்டுக்கிட்டு இருக்கனும்,” என்றார். இப்படித்தான் சாரு நிவேதிதா என்ற பெயர் எனக்கு அறிமுகமானது.
அதன்பின் நண்பன் ஒருவன் மூலமாக ஸீரோ டிகிரி அறிமுகமானது. படித்தால் ஒன்றும் புரியவில்லை; ஆனால் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு. அடுத்த கொஞ்ச நாளில் தேகம். தேகம் நாவல் தந்த போதையை என்னவென்று சொல்ல! அந்த இரு புத்தகங்களின் பாதிப்பால் சாருவின் மற்ற புத்தகங்களை பித்தனாகப் படிக்க ஆரம்பித்தேன். சாருவின் புத்தகங்களைப் படிப்பது ஒரு புதிர்விளையாட்டை விளையாடுவது போன்ற சாகசங்கள் நிறைந்தது. சாருவைப் படிக்க ஆரம்பித்த கொஞ்ச நாளில் உள்ளூர் இலக்கியம் தொடங்கி உலக இலக்கியம் வரை அறிமுகமானது. அதே போல நல்ல இசை, உலக சினிமா, சமையல் என்று சகலமும் என்னைப் பற்றிக்கொண்டன. இப்போதுதான் பிரச்சனைகளும் ஆரம்பமானது. ஒரு Transgressive எழுத்தாளராக சாருவின் போராட்டத்தை நாம் அறிவோம். அவர் எதிர்கொள்ளும் அதே பிரச்சனைகளை அவருடைய வாசகர்களும் எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். ஆனால் அவற்றைப் பிரச்சனைகளாக பார்க்காமல், எதார்த்தமாகப் பார்ப்பதைதான் சாருவின் எழுத்து போதிக்கிறது. (போதனை என்பது சாருவுக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை!) சாருவின் வாசகனாக நான் நிறைய சவால்களை சந்தித்திருக்கிறேன். உதாரணமாக லா.ச.ரா.வின் நூற்றாண்டை லால்குடியில் கொண்டாடத் திட்டமிட்ட போது சாருவின் பெயரை சிறப்புரைக்காகப் பரிந்துரைத்தேன்; அப்போது பலர் என்னிடம், “அந்த ஆள எப்படி சார் புடிச்சிங்க? உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலயா?” என்றார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படிக் கேட்ட யாரும் சாருவைப் படித்தவர்கள் அல்ல; சாருவைப் பற்றிக் கேள்விப்பட்டவர்கள். யாரவது தங்கள் தகப்பனை வேறு யாராவது வசைபாடினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? சாரு என்னுடைய ஞானத்தகப்பன் (அப்பா என்றுதான் கூப்பிடுவேன்) என்றாலும் அவரை வசை பாடும்போது நாம் எதிர்த்துக் கேட்டால் அவ்வளவுதான்! போஜனவாயை கொடுத்து ஆசனவாயைப் புண்ணாக்கிக்கொள்ளும் கதைதான். (அனுபவம் பேசுகிறது!) சாருவின் எழுத்துக்களைத் தனதாக்கிக் கொள்ளும் மனிதன் சராசரி மனிதனாக இருக்க முடியாது. சராசரித்தனம் என்று நான் கூறவருவது யாதெனில், கண்ட இடத்தில் குப்பை போடுவது, கண்ட இடத்தில் எச்சில் உமிழ்வது, நமக்கு அடுத்திருக்கும் மனிதர்களின் சுதந்திரத்தை மதிக்காமல் இருப்பது, இன்ன பிற. இவற்றிலிருந்து ஒதுங்கி வாழும் போது நீங்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள். இந்த சராசரித்தனத்தை ஏற்றுக்கொள்ளாததனால்தான் சாருவும், சாருவின் ‘தீவிர’ வாசகர்களும் புறக்கணிக்கப்படுகின்றனர்.
தனிமை என் வாழ்வின் ஓர் அங்கம். தனிமையைப் போராடி வெல்ல முடியாது. அதை நண்பனாக்கிக் கொண்டால் வாழ்வில் எல்லாமும் நமக்குச் சொந்தமாகிவிடும். தனிமையில்தான் நம்மை நாம் அடையாளம் காண முடியும். தனிமையை நண்பனாக்கும் அந்தச் செயல்முறையைத்தான் சாருவின் எழுத்துக்களில் இருந்து நான் கற்றுக்கொண்டேன். இசையின் வழியாக, நல்ல சினிமாவின் வழியாக நான் தனிமையைக் கடந்து செல்கிறேன். சாருவின் சினிமா ரசனையை கவனிக்கும்போது எனக்கு ப்ளேட்டோ கூறிய குகை மனிதர்கள் என்ற உவமைக்கதை (Analogy of cave) ஞாபகத்துக்கு வந்தபடியே இருக்கும். குகையில் சில மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது முகம் சுவற்றை நோக்கிய வண்ணமும் அவர்கள் கரங்கள் பின்புறம் கட்டப்பட்டதுமாக இருந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்புறம் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் ஏற்படுத்திய நிழல்கள் சுவற்றில் விழுந்து வந்தன. ஆக அந்தக் கட்டுண்ட மனிதர்கள் சுவரில் பார்த்தது வெறும் நிழல்கள்; இந்த மனிதர்கள் வேறெதையும் கண்டவர்கள் இல்லை என்பதனால் அந்த நிழலை மட்டும் உண்மை என்று நம்பியிருந்தனர். அந்தக் கூட்டத்திலிருந்து ஒருவன் எப்படியோ தன்னை விடுவித்துக்கொண்டு குகையை விட்டு வெளியுலகைப் பார்த்துவிட்டு வந்து இவ்வளவு நாள் தம்மினத்தவர் பார்த்தது நிழல் பிம்பங்கள், அவை உண்மையில்லை என்று கூறுவான் என்றால் அதை அவர்கள் நம்பவா போகிறார்கள்? இதுதான் சாருவுக்கும் இந்திய (குறிப்பாக தமிழ்) சினிமாவுக்கும் இடையேயான உறவு.
எனக்கு இலக்கியம் அறிமுகமான பொழுதில் என் நண்பர்கள் திட்டமிட்டு சாருவின் எழுத்துக்களை எனக்குத் தர மறுத்தார்கள். இதுதான் அசல் இலக்கியம் என்று ஜி. நாகராஜன், சுந்தர ராமசாமி, கோணங்கி, ஜெயமோகன் (கொற்றவை) இவர்களின் படைப்புகளைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். இலக்கிய வாசிப்பிற்குப் புதியவன் என்பதால் ஆர்வமாக உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்பேன். ஆனால் அரைமணி நேரத்தில் அத்தனை ஆற்றலும் வற்றிப் போகும். அதற்கு நேர் எதிர் சாருவின் எழுத்துக்கள். யார் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவர் என்ற இலக்கிய பேதங்கள் தெரியாமல் படித்ததால் விழுங்குவதற்கரிய கடப்பாரைகளை விழுங்கியிருக்கிறேன் என்பதைப் பின்னரே புரிந்துகொண்டேன். சாரு எந்தக் குழுவையும் சாராத கலகத்தின் எழுத்தாளன் என்பதையும் அறிந்துகொண்டேன்.
சாருவிடம் நெருக்கமாக இருந்து பார்க்கும்போது ஒரு விஷயம் அப்பட்டமாகத் தெரியும்: அவர் குழந்தை உள்ளம் கொண்டவர். திடீரென ஒட்டு மொத்த மாநிலத்தவர்க்கும் எதிராக நின்று சமர் செய்து கொண்டிருப்பார். அடுத்த கணமே சாதரண ஒரு ஆட்டோ ஓட்டுநரின் கருத்தைத் தூக்கிப்பிடித்து அடித்தட்டு மக்களின் மனோபாவத்தைப் பிரதிபலிப்பார். (இதனாலேயே சாருவை நெருங்கியிருப்பது மிகப் பெரிய சவால்). இந்த குணங்களை அவர் தனக்குத் தானே கட்டமைத்துக் கொண்டவரல்ல; இயல்பிலேயே சாருவிடம் இந்தத் தன்மை இருக்கிறது என்பது மற்றுமொரு ஆச்சரியம்.
ஆத்மன், ப்ரம்மன், அஹம் ப்ரம்மாஸ்மி, தத்வமசி, ப்ரதிபாஷிகா, வ்யவஹாரிகா, பரமார்த்திகா, ஜீவா, ஜடா என்று தன்னைத்தானே ஒரு குறுகிய எல்லைக்குள் அடக்கிக்கொள்கின்றன இந்தியத் தத்துவங்கள். இவற்றால் ஒரு சராசரி இளைஞனைக் கவர முடியுமா? இதிகாசங்களையும் புரணாங்களையும் வேதங்களையும் இன்னும் எத்தனை நாட்களுக்கு மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருப்பது? இவை இப்படி இருக்க, நமது நிலப்பரப்பைத் தாண்டி மேற்குலகில் என்ன நடக்கிறது? இந்தியத் தத்துவங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுழன்று கொண்டிருக்க, மேற்கத்திய தத்துவங்கள் காலந்தோறும் மாற்றத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. சாருவை சரியாக ஒருவர் புரிந்துகொண்டால், இந்திய ஞான மரபையும் மேற்கத்திய தத்துவங்களையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தியத் தத்துவங்கள் ஒரு குறுகிய எல்லைக்குள் செயல்படுவதாக நான் சொல்வதால் மேற்கத்திய தத்துவங்களைத் தூக்கிப்பிடிப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. இவை இரண்டும் வாழ்வைச் செம்மைப்படுத்த இன்றியமையாதவையாக இருக்கின்றன. இவற்றை எப்படி புரிந்துகொள்வது?
எனது இரண்டு வருட தத்துவவியல் படிப்பிற்கு முன்னதாகவே சாருவின் எழுத்துக்களின் வழியாக இவை இரண்டும் எனக்கு அறிமுகமாகிவிட்டன. அதனால்தான் சொன்னேன், சாருவை சரியாக ஒருவர் புரிந்துகொண்டால் இந்திய ஞான மரபையும் மேற்கத்திய தத்துவங்களையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். சாருவின் எழுத்தில் எக்ஸிஸ்டென்ஷியலிசம், ஸ்ட்ரக்சுரலிசம், Deconstruction போன்ற பதங்களையும் கிர்க்கேகார்ட், ஜான் பால் சார்த்தர், ஜாக் தெரிதா, மிஷல் ஃபூக்கோ, ரொலான் பார்த், ஜார்ஜ் பத்தாய் போன்ற பெயர்களையும் அடிக்கடி காண முடியும். சாதாரண வாசிப்பில் இயல்பாகக் கடத்தப்படும் இச்சொற்கள் உண்மையில் பல வகையான அறிவுத் தேடல்களுக்கான ஊற்றுக் கண்கள். இந்தத் தத்துவங்களையும் தத்துவவாதிகளையும் ஓரளவிற்கு அறிந்தவன் என்ற முறையில் தைரியமாகச் சொல்வேன், மேற்கண்ட தத்துவங்களும் தத்துவவாதிகளும் உங்கள் வாழ்வை மாற்றிவிடுவார்கள். இந்தப் பின்னணியில் படிக்கப்பட வேண்டிய ஒருவரே சாரு.
இந்தியாவில் மார்க்சியத்திற்குப் பிறகான எந்த மேலைத் தத்துவங்களும் அறிமுகமானதாக தெரியவில்லை. மார்க்சியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு மார்க்சியத்தில் சில மாற்றங்கள் செய்து அவை யாவும் ஒரு தனி மரபாக வளர்த்தெடுக்கப்பட்டது. சாருவை அந்த மரபோடுதான் நாம் பொருத்த முடியும். இயல்பாகவே சாருவின் வாழ்விலும் எழுத்திலும் இந்த தத்துவங்களின் தாக்கத்தைப் பார்க்க முடியும். உதாரணமாக, வாழ்வில் எவற்றைத் தேர்ந்தெடுப்பது என்ற போராட்டத்தை (Struggle of Choice) மையமாகக் கொண்டது எக்ஸிஸ்டென்ஷியலிசம். கொள்கை, கோட்பாடு என்று இயங்காத சாரு அந்தக் கணத்தை அற்புதமாக வாழ்ந்து அடுத்தடுத்த கணத்திற்குத் தாவிச் செல்கிறார். இதனால்தான் சாருவின் எழுத்திலும் அந்த குணத்தைக் காண முடிகிறது என நினைக்கிறேன். கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும் இந்தத் தத்துவம் எந்த அளவிற்குச் சுதந்திரமாக இருக்கிறதோ அதேயளவு பொறுப்புணர்ச்சியும் உடையது. நாம் எடுக்கும் முடிவுகளுக்கு நாம் தான் பொறுப்பு. எனவேதான் இது ஒரு அகப்போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.
சாருவைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவருடன் நட்பு பாராட்டவோ, அவரை நெருங்கவோ தேவையில்லை. அவருடைய எழுத்துக்களை வாசித்தாலே சாருவை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். எழுத்தாளர்களுக்கு சம்பிரதாயமாக இருக்கும் எந்த பிம்பமும் சாருவுக்குக் கிடையாது. தன்னுடைய பின்நவீனத்துவ எழுத்துக்களால் அந்த சம்பிரதாயங்களை எல்லாம் அடித்து நொறுக்கியவர் சாரு. முதல்முறை சாருவை சந்திக்கச் சென்றிருந்தபோது, பெரிய எதிர்பார்ப்புகள் மனதில் இருந்தன. எழுத்தாளர் என்பதால் சட்டென கோபப்பட்டுவிடுவார்; அதனால் நல்லவிதமாக சில வார்த்தைகள் மட்டும் பேசி அவரை நிறைய பேச வைத்து குறிப்புகள் எடுக்கவேண்டுமென நினைத்திருந்தேன். பார்த்தால் நிலைமை அப்படியே தலைகீழாக இருந்தது. எளிமையாக ஒரு வேட்டி உடுத்தி வாசலில் எனக்காகக் காத்திருந்தார். உள்ளே போனதும் மனப்பாடமாக பேச நினைத்திருந்ததைக் கொட்ட ஆரம்பித்தேன். என் பதற்றத்தை தனித்து, “டீ குடிக்கிறீங்களா?” என்றார். இது அடுத்த ஆச்சரியம். சுவையான ஆப்பிள் டீ குடித்த பிறகு நடந்த உரையாடலில் என்னை அதிகமாகப் பேச வைத்து அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது சில வார்த்தைகள் பேசியதோடு சரி. இதுதான் ரொலான் பார்த் எழுத்தாளன் பற்றிச் சொன்ன புகழ் பெற்ற கருத்து என்பதைப் புரிந்துகொள்ள எனக்குப் பல வருடங்கள் ஆயின. இது மட்டுமல்ல; இப்படி எல்லா ஆட்சிபீடங்களையும் நொறுக்கியவர் சாரு.
இத்தாலோ கால்வினோவின் If on winter’s night a traveler ஒரு புதுமையான நாவல். நீங்கள் நாவல்தான் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஒரு கட்டத்தில் மறந்து போவீர்கள். பிறகு திடீரென விழிப்பு கிட்டி கதை நகரும். கதையின் போக்கு மீண்டும் உங்களை விழிப்பு நிலையிலிருந்து பழைய போதைக்கு ஆழ்த்தி மீண்டும் எங்கோ ஒரு இடத்தில் உணர்வு நிலை கிடைக்கும். இந்த அற்புதமான நாவலுக்கு இணையான ஒரு நாவல் ’ஸீரோ டிகிரி’. இப்படிக் கூறுவதால் சாருவிடம் கால்வினோவின் தாக்கம் என்று பொருள் இல்லை. கால்வினோவின் எழுத்துக்களைச் செரித்து ரொலான் பார்த்தின் ’எழுத்தாளனின் மரணம்’ என்ற தத்துவத்தை உள்வாங்கிக் கொண்ட ஒருவரால்தான் இப்படிபட்ட ஒரு படைப்பை வழங்க முடியும்.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில் யானைக் கட்டும் மண்டபம்தான் நான் கல்லூரி படிக்கும்போது எனக்கான வாசிக்கும் இடம். கோவிலுக்கு அருகே புத்தகக் கடை இருந்தது. புத்தகத்தை வாங்கிய உடன் மண்டபத்திற்குச் சென்று படிக்க ஆரம்பித்துவிடுவேன். அப்படித்தான் சாருவின் நிறைய புத்தகங்களை வாசித்தேன். அப்படி ஒரு நாள் ராஸ லீலா படித்துக்கொண்டிருந்தபோது கண்கள் தானாக கண்ணீர் சிந்திய வண்ணம் இருந்தது. காரணம், எனது தந்தை ஓர் இருதய நோயாளி. அவரது அறுவை சிகிச்சை சமயத்தில் அவர்பட்ட அத்தனை துன்பங்களும் ராஸ லீலாவில் இருந்தது. இதுதான் Autofiction வகைமையின் வெற்றி. ராஸ லீலா படித்தபோது சார்ல்ஸ் ப்யூக்கோவெஸ்கியின் ’தபால் நிலையம்’ நினைவுக்கு வந்தது. சாருவின் எழுத்துக்களோடு நான் ஒப்பிட்டுள்ள இவ்விரு நூல்களையும் உலகத்தில் யார் படித்தாலும் அவை அந்நியமாக இருக்காது. அதேபோல சாருவின் எழுத்துக்களும் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டால் அப்படித்தான் இருக்கும். “எனது இலக்கு Dublin Impac விருது அல்லது நோபல் விருது,” என்று இந்த மனிதன் கூறுவதெல்லாம் பிதற்றல் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இப்படி எதிர்ப்பின் அடையாளமாக இருக்கும் சாரு ஓர் ஆன்மீகவாதி என்பதை முதலில் என்னாலும் நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் எங்களுடைய முதல் சந்திப்பில் அவர் கூறிய வாசகம் நெஞ்சைவிட்டு இன்னும் நீங்க மறுக்கிறது: “இந்தியா மாதிரியான ஒரு நரகத்தில் வாழும் போது கடவுளின் காலைக் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் இங்கே வாழவே முடியாது.” சாருவின் ஆன்மீகம் மதம் சார்ந்ததல்ல. ஆன்மீகத்தின் அசல் – அதாவது வேறெவற்றாலும் கரை படாத தூய ஆன்மீகம். அதனால்தான் அவரால் யானியின் இசைக்கும் பிஸ்மில்லாகானின் ஷெனாய்க்கும் மனம் லயித்துப் பரவசமடைய முடிகிறது. இன்றைய ஆன்மீகவாதிகள் தங்களுக்கென ஒரு பீடம் அமைத்துக்கொண்டு அதிலிருந்து இறங்க மறுக்கின்றனர். அதிகாரம் அவர்களின் போதை வஸ்துவாக இருக்கிறது. இந்த அதிகாரத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவதுதான் சாருவின் ஆன்மீகம். ஒரு உதாரணம் தருகிறேன். லா.ச.ரா.வின் நூற்றாண்டு விழா நடந்த அன்று காலை எங்கள் வீட்டின் சிறிய அறையில் சாரு தரையில் அமர்ந்திருக்கிறார். லா.ச.ரா.வின் புதல்வர் சப்தரிஷியும் கீழே அமர்ந்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் சப்தரிஷி அவர்களுக்கு கால் வலிக்க ஆரம்பித்துவிட்டது. காலை சற்று நீட்டி உட்காரலாம். ஆனால் எதிரில் சாரு உட்கார்ந்திருக்கிறார் என்று தயங்கி இறுதியாக சாருவிடமே தான் காலை கொஞ்சம் நீட்டிக்கொள்ளலாமா எனக் கேட்டுவிட்டார். அப்போது சாரு சொன்ன பதில்தான் ஆன்மீகத்தின் உச்சம் எனச் சொல்கிறேன்: “காலை என் மடியில் வச்சுகோங்க; நான் பிடித்துவிடுகிறேன்,” என்றார். இதைத்தான் லெவினாஸ் தன்னிலிருந்து பிறருக்குக் (From I to other) கடந்து போவது என்றார்.
இந்தக் கட்டுரையை இப்போது மீண்டும் படித்துப் பார்க்கும்போது எனக்கே சலிப்பாக இருக்கிறது. சாருவின் மீதான பாசக்கொதிப்பில் எழுதப்பட்ட கட்டுரையாக உங்களுக்குத் தோன்றலாம். சாருவுடன் எந்த இடத்திலும் முரண்பட்டு நிற்க முடியும்; ஆனால் அதற்கான காரணங்கள் சரியாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். மரண தண்டனை குறித்த சாருவின் பார்வையிலிருந்தும் நான் முரண்படுகின்றேன்.
தன்னுடைய காலத்தில் பிறரால் தன் கருத்துக்கள் புறக்கணிக்கப்படுவதைவிட வதை வேறெதுவுமில்லை. இது நீட்ஷே, பாரதி என்ற பல மாமனிதர்களுக்கு நிகழ்ந்தது. இவர்கள் செய்தது, தான் வாழும் காலத்திற்கு அப்பாற்பட்டு சிந்தித்ததுதான். அதுவும் இந்தியா (குறிப்பாக தமிழகம்) போன்ற பெலிஸ்திய சமுதாயத்தில் இவ்வாறாக வாழ்வது மிகப் பெரிய வதை. இந்த வதையைதான் சாரு ஏற்றுக்கொண்டிருக்கிறார். சாருவைப் பற்றிப் பேசும் போது இந்த விவிலிய வாக்கியம் எப்போதும் நினைவுக்கு வரும். அந்த வாக்கியங்களைக் கொண்டே இக்கட்டுரையையும் நிறைவு செய்ய விரும்புகிறேன்.
“கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியவொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.” (பிலிப்பியர் 2: 6-8)
இங்கே ‘கடவுள்’ என்னும் இடத்தில் பாரம்பரிய எழுத்தாளரின் பிம்பத்தை பொறுத்திக் கொள்க. ‘அடிமை’ என்னும் இடத்தில் இந்திய குடிமகன் என்ற பிம்பத்தை பொறுத்திக் கொள்க. ‘சாவு’ என்னும் இடத்தில் எழுத்தையும் ‘சிலுவைச்சாவு’ என்னும் இடத்தில் Transgressive எழுத்து என்பதாகவும் பொறுத்தி இன்னொரு முறை படித்துப்பார்க்கவும்.