கடுமையான மழை பொழிந்து கொண்டிருக்கிறது…

நீங்கள் ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்து பார்த்தால்தான் என் அருமை தெரியும். எல்லா கதை கட்டுரைகளும் போய்ச் சேர்வதற்கு முன்னால் முதல் ஆளாக அனுப்பி விடுவேன். ஆசிரியர்களுக்கு என்னால் எந்த டென்ஷனும் இருக்காது. நேற்று இரண்டு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் அனுப்ப வேண்டும். ஒன்று, உலக சினிமா. இன்னொன்று, ஃப்ரெஞ்ச் தத்துவம். இரண்டொரு நாட்களில் கார்த்திக்கின் திருமணம் இருப்பதால் சில நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்ல வேண்டும். அதில் கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டேன். இதற்கே இன்னும் பத்துப் பதினைந்து முக்கியமான நண்பர்களிடம் சொல்லவில்லை.

இன்று இரண்டு பத்திரிகை ஆசிரியர்களிடமிருந்தும் ஃபோன். ”இதோ எழுதிக் கொண்டேயிருக்கிறேன். இரவுக்குள் வந்து விடும்”. இந்த நிலையில் மும்பை நண்பர் சத்யா ஃபோன் செய்து ஞாயிற்றுக் கிழமை மதியம்தானே கல்யாணம் என்று கேட்டார். கல்யாணம் மும்பையில். நான் பதிலுக்கு, ”ஞாயிற்றுக் கிழமையா கல்யாணம்? நான் உங்களுக்கு அனுப்பின அழைப்பிதழில் பாருங்கள்” என்றேன். நன்றாக மூளையைக் கசக்கி யோசித்த போது ஞாயிற்றுக் கிழமை தான் என்று ஞாபகம் வந்தது. ஆனால் நேரம் குறித்து அழைப்பிதழைத்தான் பார்க்க வேண்டும்.

இப்போதுதான் ஆந்த்ரே ருப்லேவ் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் மாஸ்கோ நோக்கி நடந்து கொண்டிருக்கிறார். கடும் மழை பொழிந்து கொண்டிருக்கிறது.