பதினைந்து அபூர்வமான எழுத்தாளர்கள்!

மணியிடம் ஒரு விஷயத்தை ஆர்வத்துடன் சொல்லி முடிப்பேன்.  அவரும் படு சுவாரசியமாகக் கேட்பார்.  முடித்து விட்டு, எப்படி என்பேன்.  ஆஹா ஆஹா என்று ஆஹாகாரம் செய்து விட்டு, லேசாக, இந்த விஷயத்தை ஒன்பதாவது தடவையாகச் சொல்கிறாய் என்பார்.  அடப்பாவி, அதை முதலிலேயே சொல்வதற்கென்ன என்றால் உன் ஆர்வத்தைப் பார்த்தவுடன் சொல்லத் தோன்றவில்லை என்று பதில் வரும்.

அது போல் உங்களிடமும் இதை ஒன்பது முறை சொல்லியிருக்கலாம்.  இப்போது பத்தாவது தடவை.  ஆனால் படு ஆர்வமாகச் சொல்லத் தொடங்குகிறேன்.  மன்னித்து அடியேனைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

என் இருபத்து ஒன்றாவது வயது.  வீட்டின் தாங்க முடியாத வறுமை காரணமாக பி.யூ.சி. (இப்போதைய பனிரண்டாம் வகுப்பு) முடித்த கையோடு தம்பி சுந்தர் விமானப் படையில் சேர்ந்து விட்டான்.  அப்போது அவன் வயது பதினேழு என்பதால் மைனர் என்று விமானப் படையில் நைனாவிடம் கையெழுத்து வாங்கினார்கள்.  அவன் அனுப்பிய பணம் நாங்கள் பட்டினியில் சாகாமல் இருக்க உதவியது.  அம்மாவும் இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள்.  நானும் ஓரிரு பையன்களுக்கு டியூஷன் எடுத்துக் கொண்டிருந்தேன்.  (மாத ஊதியம் ஐந்து ரூபாய்).  ஏதாவது ஒரு வேலைக்குப் போனால்தான் உயிர் தப்ப முடியும்.  தாய் மாமன்களின் சண்டியர் வேலையில் ஈடுபடத் தயக்கம்.  இத்தனை புத்தகங்களைப் படித்து விட்டுக் கள்ளக் கடத்தல் தொழிலும் ஈடுபட முடியாது.  (உண்மையான காரணம், மாட்டினால் கஸ்டம்ஸ்காரர்கள் உடம்பிலிருந்து தோலைக் கழற்றி விடுகிறார்கள் என்று கேள்விப்பட்டதே.)

ஏதாவது வேலைக்குப் போக வேண்டும்.  என்ன வேலை?  கோமுட்டிச் செட்டியாரின் மளிகைக் கடையில் பொட்டலம் மடிக்கவும் மனம் இடம் கொடுக்கவில்லை.  எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் என்று ஒரு பத்திரிகை நாகப்பட்டினம் பஸ் ஸ்டாண்டில் உள்ள பேப்பர் கடையில் விற்பதாக எனக்கு ஸ்டெனோகிராஃபி கற்பித்த அழகி சொன்னாள்.  நைனா வெளிப்பாளையத்தில் இருக்கும் சாமி சாரிடம் எஸ்ஸெஸ்ஸெல்ஸி படித்துக் கொண்டிருந்தார்கள்.  (படித்துக் கொண்டிருந்தார் என்று சொல்வது தஞ்சை மாவட்டத்துக்காரர்களுக்கு வாடா போடா என்று சொல்வது போலாகும்.)  அதாவது, ஈயஸ்ஸெல்ஸி என்ற படிப்பை (அப்போதைய எட்டாங்கிளாஸுக்குப் பெயர் ஈயஸ்ஸெல்ஸி) முடித்து விட்டு ஒன்னாங்கிளாஸுக்கு வாத்தியார் ஆனவர்கள் நைனா.  எஸ்ஸெஸ்ஸெல்ஸியும் பாஸ் செய்தால் இன்னும் கொஞ்சம் ஊதியம் கிடைக்கும்.   வெளிப்பாளையத்திலிருந்து நாகப்பட்டினம் போய் எனக்காக எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் வாங்கி வருவார்கள் நைனா.  பகல் நேரம் பூராவும் பள்ளிக்கூடம்.  (கௌதியா மிடில் ஸ்கூல்).  மாலையில் டியூஷன்.  அப்போதெல்லாம் மாணவர்களின் வீட்டுக்குப் போய் சொல்லிக் கொடுக்க வேண்டும்.  மாணவர்கள் வாத்தியாரின் வீட்டுக்கு வர மாட்டார்கள்.  எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் அப்போது எங்களுக்கு – அதாவது, எனக்கும் என் தங்கை சுமதிக்கும்.  சுமதியும் எஸ்ஸெஸ்ஸெல்ஸி முடித்து விட்டு, அக்காலத்திய வழக்கப்படி தமிழ் இங்கிலீஷ் டைப்பிங் ஹையர் முடித்து விட்டு வேலைக்காக உட்கார்ந்திருந்தது.  பெண்களை அவள் போட்டுப் பேசுவதில்லை எங்கள் குடும்பத்தில்.  சின்னப் பெண்களாக இருந்தால் அது இது.  பெரியவர்களாக இருந்தால் அவுங்க இவுங்க.  தெருக் குழாய்ச் சண்டையில் மட்டுமே பெண்களை அவள் இவள் என்று சொல்வது வழக்கம்.

எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் படித்து கன்னாபின்னாவென்று விண்ணப்பித்தோம்.  விண்ணப்பத்தோடு அனுப்ப போஸ்டல் ஆர்டர் வாங்க சுந்தரின் பணம் உதவியது.  அப்போதெல்லாம் எங்கள் தெருவுக்கு வரும் போஸ்ட்மேன் தான் எங்களின் கடவுள்.  எப்போது இண்டர்வியூ கார்டைக் கொண்டு வருவார் கடவுள்!? அதில் இன்னொரு சிக்கல் இருந்தது.  எங்கள் தெருவின் பெயர்.  கொசத்தெரு.  குயவர்கள் வசிக்கும் தெரு என்றாலும் அதன் வலது பக்கம் தொம்பர்கள் வசித்தனர்.  தெலுங்கு பேசும் பழங்குடி இனத்தவர்.  மலம் அள்ளும் தொழில் செய்தனர்.  கொசத்தெரு என்ற பெயரைப் பார்த்ததுமே எல்லோருக்கும் முகம் சுளிக்கும் என்பதால் நான் அதை ஆங்கிலத்தில் kuya street என்று மாற்றி எல்லா விண்ணப்பத்திலும் அனுப்பித் தொலைத்து விட்டேன்.  அது எங்கள் தபால்காரருக்குப் புரியாமல் பெரும் குழப்பமாகி விட்டது.  இருந்தாலும் கடைசியில் விண்ணப்பப் படிவங்கள் வந்து சேர்ந்தன.  (பூரண விபரத்தை விரைவில் வெளிவர இருக்கும் விரிவாக்கிய எழுதிய எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் காணலாம்.)  தமிழ்நாடு பப்ளிக் சர்விஸ் கமிஷன் விண்ணப்பம்.  அதைப் பூர்த்தி செய்யும் போது சுமதியிடம் உனக்கு எந்தத் துறை வேண்டும் என்று கேட்டேன்.  எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

எங்கள் மாவட்டத்திலேயே அப்போது யாரும் டி.என்.பி.எஸ்.சி. பாஸ் பண்ணியதில்லை.  ஒவ்வொருவரும் ஏழெட்டு அட்டெம்ப்ட் அடித்து ஓய்ந்து போய் மளிகைக்கடைக்குப் பொட்டலம் மடிக்கவோ ஓட்டல் வேலைக்கோ போய்க் கொண்டிருந்தார்கள்.

நான் சுமதியிடம் கேட்டேன். ஏய், எந்த டிபார்ட்மெண்ட் வேணும், யோசித்துச் சொல்.

அக்கவுண்ட்ஸ்.

ஓகே. அக்கவுண்ட்ஸ்.

நான்?  சிறைத் துறை என்று குறிப்பிட்டேன்.  நான் ஒரு எழுத்தாளன்.  எழுத்தாளனுக்குத் தேவை அனுபவம்.  என்னால் சும்னாச்சுக்கும் தி. ஜானகிராமன் மாதிரி காதல் கதை எழுதிக் கொண்டிருக்க முடியாது.  நான் ஜெனேயாக்கும்.  ஆனால் அதற்காகத் திருடிக் கொண்டெல்லாம் இருக்க முடியாது.  எனவே ஷார்ட் கட்டில் போய், அதாவது ஜெயிலில் கிளார்க் வேலை பார்த்து, திருடர்கள் கொலைகாரர்கள் கொள்ளைக்காரர்கள் ரவுடிகள் எல்லோரையும் பேட்டி கண்டு நாவலாக எழுதி தமிழ்நாட்டின் ஜெனேயாக ஆகப் போகிறேனாக்கும் என்றேன்.

சுத்த மெண்டல் என்றார்கள்.  ஜெனே பெயரைச் சொன்னதற்காக அல்ல.  டிஎன்பிஎஸ்சியில் வேலை கிடைத்து விடும் என்று சொன்னதற்காக.

சுமதியும் நானும் எழுதினோம்.  ஒரே அட்டெம்ட்டில் இரண்டு பேரும் பாஸ். சுமதிக்கு அக்கவுண்ட்ஸ்.  எனக்கு சிறைத்துறை.  ஆனால் நான் எதிர்பார்த்தது போல் சிறையில் அல்ல. சிறைத்துறைத் தலைவர் அலுவலகத்தில்.

எனக்கு சோதிடம் தெரியாது.  ஆனால் என்னைப் பற்றித் தெரியும்.  என் தகுதி தெரியும்.  அதேபோல் மற்றவரின் தகுதியும் தெரியும்.  ஏ.ஆர். ரஹ்மானின் முதல் பாடலைக் கேட்டு விட்டு, தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியா பூராவும் பிரபலம் ஆகப் போகிறார் என்றேன் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனிடம்.   இன்றும் அவர் அதைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார், எப்படிச் சொன்னீர்கள் எப்படிச் சொன்னீர்கள் என்று.

அதை விட ஆச்சரியம் ஓரான் பாமுக்.  ஓரான் பாமுக்குக்கு நோபல் நிச்சயம் என்று எழுதினேன்.  அமிர்தா பத்திரிகையில்.  பத்திரிகை அச்சில் இருக்கும் போது நோபல் பரிசு அவருக்கு அறிவிக்கப்பட்டது.  அந்த ஆண்டே கிடைக்கும் என்று நானே எதிர்பார்க்கவில்லை.  உலகில் ஆயிரத்தெட்டு எழுத்தாளர்கள் இருக்கும் போது எப்படி ஓரான் பாமுக்கின் பெயரைச் சொன்னேன்?  அதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புதான் அவருக்கு டப்ளின் இம்பாக் விருது கிடைத்திருந்தது.  டப்ளின் கிடைத்தால் நோபலும் கிடைக்கும்.  மேலும், ஓரான் பாமுக்கைப் படித்திருந்தேன்.  நாம் விருது படம் என்று சொல்லவில்லையா, அது போல பாமுக் விருது எழுத்தாளர்.  கிண்டலாகச் சொல்லவில்லை.  நான் எழுதும் ஒரு புனைகதையை அமெரிக்காவில் இருக்கும் ஒருவர் தன்னோடு பிணைத்துக் கொள்ள முடியும் என்றால் அந்த எழுத்துக்கு சர்வதேசப் பரிசு கிடைக்கும்.  அதுதான் ஃபார்முலா.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உயிர்மை விழாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்கு ஒரு சர்வதேசப் பரிசு கிடைக்கும் என்று வீராப்பாகப் பேசினேன்.  மேடையில் அமர்ந்திருந்த தமிழச்சிக்கு ஆச்சரியம்.  என்ன ஒரு தைரியம் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருந்தார்.  கிடைக்கவில்லையானால் அவமானம் இல்லையா என்பது அவர் கவலை.

அடுத்த ஆண்டு Jan Michalski பரிசுக்கு ஸீரோ டிகிரி பரிந்துரை செய்யப்பட்டது.  எஸ்.ரா. தொலைபேசியில் வாழ்த்தினார்.  ”ஸீரோ டிகிரிக்குத்தான் விருது; மற்ற நாவல்களைப் பார்த்தேன்.  ஒன்றும் இதற்குப் பக்கத்தில் வர முடியாது” என்றார்.  என்றாலும் ஒரு ஈரானிய நாவல் விருது பெற்றது.  ஆனாலும் மேடையில் பேசியபடி பரிந்துரைக்கப்பட்டதே போதும்.

இப்போது சொல்கிறேன்.  ராஸ லீலா அல்லது மார்ஜினல் மேன் (எக்ஸைல்) ஆங்கிலத்தில் வெளிவந்தால் இரண்டுக்கும் மிக நிச்சயமாக சர்வதேசப் பரிசுகள் கிடைக்கும்.  இதை அந்தந்த மொழிபெயர்ப்பாளர்கள் குறித்து வைத்துக் கொள்வது நல்லது.  சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் போஸ்ட் ஆஃபீஸ் மற்றும் பெண்கள் நாவல் cult status பெற்றவை.  ஆனால் ராஸ லீலாவுக்கு முன்னால் அந்த இரண்டு நாவல்களுமே ஜுஜுபி.  கிட்டத்தில் கூட வர முடியாது.  என்ன, இரண்டும் இன்னமும் ஆங்கிலத்தில் வரவில்லை.

இப்போது மின்னம்பலம் இதழுக்காக ஜார்ஜ் பத்தாயின் மொத்த புனைகதைகளையும் மீண்டும் ஒருமுறை படித்துக் கொண்டிருக்கிறேன். அப்போது Ken Hollings எழுதிய In the Slaughterhouse of Love என்ற கட்டுரையும் ஜார்ஜ் பத்தாயின் தொகுப்பில் இருந்தது. அது பத்தாய் பற்றி ஹாலிங்ஸ் எழுதிய கட்டுரை.  இதை ஏற்கனவே படித்திருக்கிறோமே என்று கூகிளில் போட்டுப் பார்த்தால் என்னுடைய பெயரும் சேர்ந்து வந்தது.  மை காட்.  ஹாலிங்ஸின் அந்தக் குறிப்பிட்ட கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோளை ராஸ லீலாவில் எழுதியிருக்கிறேன்.  இனிமேல் உலக இலக்கியத்தில் ஜார்ஜ் பத்தாய், கேத்தி ஆக்கர் போன்ற ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தாளர்களை என் பெயரை விட்டு விட்டுப் படிக்க முடியாது என்றே எண்ணுகிறேன்.  உதாரணத்துக்குக் கீழே ஒரு இணைப்பு:

https://uglywords.wordpress.com/2012/03/20/roland-barthes-the-metaphor-of-the-eye/

ஜார்ஜ் பத்தாய் எழுதிய கண்ணின் கதை நாவல் பற்றிய ரொலான் பார்த்தின் கட்டுரையில் என்னுடைய ஸீரோ டிகிரி பற்றிய குறிப்பு அதில் இருக்கிறது.  இப்படியெல்லாம் எழுதுவதைத் தற்பெருமை என்று எடுத்துக் கொண்டால் அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.  தற்பெருமை கெட்ட பண்பு அல்ல.  என் பெயரை மற்றவருக்குச் சொல்லத் தெரியாத போது நானே சொல்லிக் கொள்கிறேன்.  அதில் தவறில்லை.  அகங்காரம்தான் தவறு.  தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் நான் ஒருவன்.  இது தற்பெருமை.  தவறில்லை.  தமிழின் சிறந்த எழுத்தாளர் நானே.  இது அகங்காரம்.  என்னிடம் ஒருபோதும் அகங்காரம் இருக்காது.

இந்தப் பின்னணியில் கீழ்க்காணும் இணைப்பில் உள்ள விஷயத்தை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

http://www.mensxp.com/culture/arts/36811-15-lesser-known-yet-incredible-indian-authors-you-should-read-instead-of-chetan-bhagat-durjoy-dutta.html

மேற்காணும் பட்டியலில் உள்ள பதினைந்து அபூர்வமான எழுத்தாளர்களில் அடியேனையும் சேர்த்திருப்பதற்கு மகிழ்ச்சி.  மற்றொரு மகிழ்ச்சி என்னவென்றால், இந்தப் பட்டியலில் உள்ள பலரையும் நான் படித்திருக்கிறேன்.  அவர்களைப் பற்றிப் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியும் இருக்கிறேன்.  ஆனந்த் பாண்டியன் தன் தகப்பனாரைப் பற்றி எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் ஒரு முக்கியமான ஆவணம்.  மற்றொருவர், அமித் சௌத்ரி.  இந்தியாவில் எனக்கு மிகப் பிடித்த ஒரு எழுத்தாளர் அமித் சௌத்ரி.  அவர் ஒரு இசைக் கலைஞரும் கூட.  அமித் சௌத்ரியோடு என்னுடைய பெயரும் இணைந்து வருவதை என் வாழ்வில் கிடைத்த பெரும் கௌரவமாகக் கருதுகிறேன்.

ஏற்கனவே ஸீரோ டிகிரி இந்தியாவில் எழுதப்பட்ட மிக முக்கியமான 50 நூல்களில் ஒன்றாக ஹார்ப்பர் காலின்ஸ் நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டது.  இப்போது 15 அபூர்வமான எழுத்தாளர்களில் ஒருவராக அடியேன்.  இப்போதும் சொல்கிறேன்.  ராஸ லீலா, மார்ஜினல் மேன் இரண்டோடும் ஒப்பிடும் போது ஸீரோ டிகிரி ரொம்பக் கம்மி.  என்னுடைய ஆகச் சிறந்த விளையாட்டு ராஸ லீலாவும் எக்ஸைலும்.  அந்த இரண்டையும் நான் மரியோ பர்கஸ் யோசாவின் The War of the End of the World, கஸான்ஸாகிஸின் Zorba the Greek, ஹூலியோ கொர்த்தஸாரின் Hopscotch போன்ற all time classics வரிசையில்தான் சேர்ப்பேன்.  துரதிர்ஷ்டம், அவை இன்னமும் ஆங்கிலத்தில் கிடைக்கவில்லை.  இந்த ஆண்டாவது இரண்டும் ஆங்கிலத்தில் வர வேண்டும்