http://www.jeyamohan.in/98542#.WR6a1X00jIU
ஆசானிடமிருந்து பாராட்டைப் பெற்றதற்காக பிரபு காளிதாஸுக்கு வாழ்த்துக்கள். மற்றபடி, மேற்கண்ட குறிப்பில் ஒரு விஷயம் என்னைக் கவர்ந்தது. முகநூல் சண்டியர். இது பற்றி நானே பலமுறை பிரபு காளிதாஸிடம் பேசியிருக்கிறேன். என்ன பேசினேன் என்பதன் சுருக்கம்தான் இது. பொதுவாகவே எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படிக்கும் ஒரு வாசகருக்கு அந்த எழுத்தாளர் பற்றி ஒரு பீதியே ஏற்படுகிறது. அந்த பீதியை ஏற்படுத்தாதவர்கள் என க.நா.சு., சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், எஸ். ராமகிருஷ்ணன் என ஒருசிலரையே குறிப்பிடலாம். ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்ற பெயர்கள் பலருக்கும் ஒஸாமா பின் லாடன் பெயரைக் கேட்ட மாதிரிதான் தோன்றும். சில மாதங்களுக்கு முன்பு சங்கீத உலகைச் சேர்ந்த டி.எம். கிருஷ்ணா என்பவர் மக்ஸேஸே என்ற விருதை வாங்கினார். உடனே ஜெயமோகன், சஞ்சய் சுப்ரமணியன் அமர்ந்த நாற்காலியில் உட்கார்வதற்குக் கூட கிருஷ்ணா லாயக்கற்றவர் என்று எழுதினார். எனக்கும் அதே கருத்துதான் என்றாலும் ஜெயமோகன் எழுதினால் கொஞ்சம் உஷ்ணம் அதிகமாகப் பரவுகிறது. உண்மையில் ஜெயமோகனின் வசையை உண்டால் செரிப்பது கடினம். மனோதிடம் இல்லாதவர்கள் ஒரு வாரத்துக்குத் தூங்க முடியாது. என் வசையில் அத்தனை வீர்யமில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் ஜெயமோகனிடம் நேரில் பழகியிருக்கிறீர்களா? நடமாடும் வள்ளலார். அது மட்டுமல்ல. பேசினால் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிப் போகும். எனக்குத் தெரிந்து எஸ்.வி. சேகர், பாஸ்கி அளவுக்கு நகைச்சுவையாகப் பேச ஆள் இல்லை. கார்த்திக் வரவேற்பு முடிந்து எஸ்.வி.சேகரும் நானும் காரில் கிளம்பினோம். நானே உங்களை வீட்டில் விட்டு விட்டுப் போகிறேன் என்றார் சேகர். அவர் வீடும் என் வீடும் பக்கத்துப் பக்கத்துத் தெரு என்பதால் பலமுறை அப்படிச் செய்திருக்கிறார். காரை அவரேதான் ஓட்டுவார். காரை மண்டபத்திலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது சேகரின் நண்பர் ஒருவர் கார் எதிலும் இடிக்காமல் டைரக்ஷன் கொடுக்கிறார். கடைசியில் சல்யூட் அடித்த அவரிடம் நீயும் எவ்வளவோ ஆர்வமா பார்த்தே, கார் இடிச்சுடுமான்னு. இடிக்க முடியல ஸாரி என்று சொல்லி விட்டு எடுத்தார். ஜெயமோகன் இவர்கள் இருவரையும் மிஞ்சி விடுவார். ஒரு தீவிர இலக்கியவாதி இத்தனை நகைச்சுவையாகப் பேசி நான் கேட்டதில்லை. என் எழுத்தைப் படித்து பலரும் அலுவலகம் வீடு என்று பார்க்காமல் வாய் விட்டுச் சிரிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நேர்ப்பேச்சில் நான் அப்படி அல்ல என்றே நினைக்கிறேன். சற்றே சீரியஸ் ஆள் நான். சிரிக்கவே மாட்டேன். ஆனால் எழுத்தில் நெருப்பைக் கக்கும் ஜெயமோகன் நேரில் தேன்.
மனுஷ்ய புத்திரனும் அப்படித்தான். தொலைக்காட்சியில் எரிமலை. நேரில் தேன். லக்ஷ்மி சரவணகுமார். முகநூலில் அடிதடி வெட்டுக் குத்து. நேரில் இந்தப் பிள்ளையா அது என்ற பேச்சு. பெண்களின் கதை தனிக் கதை. கார்ல் மார்க்ஸின் புத்தக வெளியீட்டு விழா. கவிதா சொர்ணவல்லி வந்தால் நான் வரவில்லை மார்க்ஸ் என்று சொல்லி விட்டேன். ஏன்? பார்த்தாலே அடித்து விடுவார் போலிருக்கிறதே? பார்த்திருக்கிறீர்களா? இல்லை. ஆனால் பார்த்தாலே அடித்து விடுவார், உங்களுக்குத் தெரியாது. ஐயோ, அது பச்சைப் புள்ளை சாரு. ம்ஹும். ஐயோ, சாமி, நான் வர்லே. பார்த்தாலே அடிச்சுடும் அந்தப் பொண்ணு. கடைசியில் பார்த்தால் கஸ்தூர் பா காந்தி மாதிரி இருக்கிறது அந்தப் பிள்ளை. உதாரணத்துக்காக மன்னித்து விடு கவிதா. வேறு உனக்குப் பிடித்த உதாரணம் கிடைக்கவில்லை. (இன்னொன்று சொன்னால் கவிதா கோவிக்கக் கூடாது. தண்ணியைப் போட்டு விட்டு அடிக்கும் என்று வேறு நினைத்துக் கொண்டிருந்தேன். பார்த்தால், ஆள் கிட்டத்தட்ட நோ ஆனியன் நோ கார்லிக் கேஸ். தண்ணியைத் தொட்டது கூட இல்லியாம். ஏம்மா என அன்போடு கேட்டேன். ஆமா, ஏற்கனவே அப்படித்தான் பேரு வாங்கிருக்கோம். இப்போ அதை வேறு போட்டு டாஸ்மாக் வாசல்ல விழுந்து வச்சா என்னா ஆவுறது?) ஆக, கவிதா சொர்ணவல்லி ஒரு கஸ்தூர் பா காந்தி. இன்னொரு முகநூல் சண்டியர் ஷாலின் மரியா லாரன்ஸ். புரட்சி என்றால் அப்படி ஒரு புரட்சி. ரகளை, அடிதடி. வெட்டுக் குத்து. நேரில்? சாரதா தேவி அம்மையார். அச்சு அசலாக சாரதா தேவிதான். ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் வாழ்க்கைத் துணை. அவ்வளவு சாந்தம். அவ்வளவு மென்மை. அம்மையார் எப்போதாவது தமிழில் பேசினால் மைலாப்பூர் தமிழ். எப்படி இருக்கேள், நன்னா இருக்கேளா. இந்த ரகம். ஐயோ செத்தேன். சாரதா தேவி என்றா சொன்னேன்? இந்து மதத்திலிருந்து உதாரணம் சொன்னால் அம்மையாருக்குக் கெட்ட கோபம் வந்து விடும். எனவே சாரதா தேவி என்பதை மதர் தெரஸா என்று மாற்றி வாசிக்கவும். அம்மையார் ஒரு நடமாடும் மதர் தெரஸா. ஆனால் எழுத்தில் பேண்டிட் குவீன்.
ஒருமுறை ஒரு பத்திரிகை அலுவலகத்துக்குப் போயிருந்தேன். ஒரு ஆள் பம்மிப் பம்மிப் போய்க் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த நண்பரிடம் ஏன் என்ன ஆச்சு என்று கேட்டேன். எல்லாம் உங்களைப் பார்த்துத்தான். அடிச்சுடுவீங்களோன்னு பயம். !!! அடப் பாவிகளா, நான் வள்ளலார் மாதிரி ஐயா. அவருக்குத் தெரியாதுல்ல? மேலும், உங்க எழுத்தைப் பார்த்தா அப்படியா தெரியுது?
இப்போது பிரபு காளிதாஸ் விஷயத்திலும் அதேதான். முகநூல் சண்டியர். நேரில் ராமலிங்க அடிகளார். இதெல்லாம் எழுத்தாளனுக்குக் கிடைத்துள்ள பல சாபங்களில் ஒன்று.
***
எனக்குப் புகைப்படக் கலை பற்றி எதுவும் தெரியாது. ஆனால் பல ஆண்டு அனுபவத்தின் காரணமாக நல்ல படம் எது கெட்ட படம் எது என்று ஓரளவுக்கு அனுமானிக்க முடியும். பிரபு காளிதாஸின் புகைப்படங்கள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை என்று அனுமானித்தேன். ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் அரைப் பக்கமே எனக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் நான் தான் நம் ஊரைப் பற்றி அரைப் பக்கம் எழுதுவது சாத்தியப்படாது என்று அதிகம் எழுதி பிரபுவை விட்டுப் புகைப்படங்களும் எடுக்கச் செய்து அனுப்பினேன். ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் இப்போது பிரபு காளிதாஸின் புகைப்படங்களைக் கொண்டாடுகிறார்கள். அதில் வருவது மூன்று நான்குதானே தவிர நான் அனுப்பி வைப்பது சுமார் இருபது புகைப்படங்கள். அதையெல்லாம் வைத்து லண்டனில் ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கீழே ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவில் வெளிவந்த பிரபு காளிதாஸின் சில புகைப்படங்கள்: