சற்று முன்பு தான் என் நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். மோடியின் பாஸிஸ உத்தரவுகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். என்னைப் போலவே அவருக்கும் பசு தெய்வம். பசுவையோ காளையையோ கொல்வதை கற்பனையில் கூட நினைக்க முடியாத மெல்லிதயம் கொண்டவர்கள் நாங்கள். பசுவும் காளையும் எங்களுக்கு எங்கள் அம்மா மாதிரி. அம்மாவை யாராவது கொன்று தின்ன முடியுமா என்றெல்லாம் நாங்கள் கேட்பதுண்டு. ஆனால் எங்களுக்குத்தான் அம்மா. மற்ற பலருக்கு அது உணவு. அப்படியிருக்கும் போது என் நம்பிக்கையை அவர்கள் மீது திணிக்க நாங்கள் யார்? இது பற்றி மகாத்மா பிரமாதமான ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். என்னுடைய மின்னம்பலம் கட்டுரையைப் படிக்கவும்.
மேலும், மாடும் மீனும் ஒன்று அல்ல. மாடு, நாய் போன்ற விலங்குகளுக்கு ஐந்து அறிவு உண்டு. மீனுக்கு ஒரு அறிவுதான். இது பற்றித் தொல்காப்பியர் சூத்திரத்தை எக்ஸைல் நாவலில் எழுதியிருக்கிறேன். உடனே பேச்சு எக்ஸைலுக்குத் தாவியது. நண்பரிடம் எக்ஸைல் படித்தீர்களா என்று கேட்டேன். எனக்குப் புனைகதைகள் படிக்க ஆர்வம் இல்லை; அதிலும் எக்ஸைல் ஆயிரம் பக்கம் இருக்கிறது என்றார் நண்பர்.
எக்ஸைலின் ஆரம்பத்தில் கேசவன் என்று ஒரு யானை வருகிறது. அது ஒரு ரெண்டு பக்கம் இருக்கும். அதைப் படித்து விட்டு நாவலைத் தூக்கிப் போட்டு விடுங்கள். அந்த ரெண்டு பக்கத்தைத்தான் ஆயிரம் பக்கமாக விரித்து எழுதியிருக்கிறேன் என்றேன்.
விளக்கமாகச் சொல்கிறேன். புனைகதைகள் படிக்கும் பழக்கம் இல்லாதவர்களும் எக்ஸைல் நாவலைப் படிக்கலாம். எப்படியென்றால், அதை ஒரு டிக்ஷனரியைப் போல எந்த அத்தியாயத்திலிருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். கடைசியிலிருந்து பின்னால் வரலாம். முன்னாலிருந்து கடைசிக்குப் போகலாம். நடுவிலிருந்து ஆரம்பிக்கலாம். அல்லது, ஆரம்பம் முடிவு என்று எதுவும் இல்லாமல் கண்ணை மூடிக் கொண்டு புத்தகத்தில் கை வைத்து எந்தப் பக்கம் வருகிறதோ அந்தப் பக்கத்தின் அத்தியாயத்தை எடுத்து அந்த அத்தியாயத்தை மட்டும் படித்து விட்டு வைத்து விடலாம். அதாவது, அதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கதை. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு நாவல்.