அடியேனைப் பற்றி…

என்னைப் பற்றி என் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள்? என் எழுத்து பற்றி அவர்களின் அபிப்பிராயம் என்ன?  இது பற்றி அவர்கள் எழுதித் தருவதைத் தொகுக்கலாம் என்று டாக்டர் ஸ்ரீராம் ஒரு திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்.  எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன் என்று பலரிடமும் கேட்டிருக்கிறார்.  அவர்களும் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.   இப்போது நீங்கள் பார்க்கும் எஸ்.ரா. இருக்கும் இடம் வேறு.  ரஜினியோடு திருப்பதி வெங்கடஜலபதி சந்நிதியில் எஸ்.ரா.வைப் பார்த்தேன்.  ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் மைலாப்பூரில் உள்ள வி.சி. கார்டன் தெருவில் (சாயிபாபா கோவிலுக்குப் பின்னே) நான் ரேஷ்மாவோடு குடியிருந்த போது அநேகமாக வாரத்தில் இரண்டு முறையாவது வீட்டுக்கு வருவார்.  விடிய விடிய பேசிக் கொண்டிருப்போம்.

ஸ்ரீராம் தொகுக்கும் அந்தத் தொகுப்பு வேலையை நான் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  என் கவனம் எல்லாம் எக்ஸைல் மற்றும் ராஸ லீலா ஆங்கில மொழிபெயர்ப்பில்தான்.  எப்போது முடியும் என்று தெரியாமல் ரொம்ப சஸ்பென்ஸாக உள்ளது.  இரண்டு மொழிபெயர்ப்பாளர்களும் அது பற்றிப் பேச ஆரம்பித்தால் எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.  ஆனால் வேலை நடந்து கொண்டுதான் உள்ளது.  இதற்கிடையில் பிரபு காளிதாஸ் அடியேனைப் பற்றிய கட்டுரை அனுப்பியிருக்கிறார்.  ஸ்ரீராம் அதை எனக்கு அனுப்பினார்.  இன்னும் படிக்கவில்லை.  மரியோ பர்கஸ் யோசாவின் The Discreet Heroவை கீழே வைக்காமல் படித்துக் கொண்டிருக்கிறேன்.  பிரபு அனுப்பிய கட்டுரையை ஒரு ஓட்டம் மேய்ந்ததில் இந்தப் பத்தியைப் படித்துச் சிரித்தேன்.  அந்தப் பத்தி:

”சாருவிடம் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது அவரது நகைச்சுவை உணர்வைத் தான். அவரோடு சுற்றும்போது சொல்லுவார். ’பிரபு, ஒரு இருபது வருஷம் கழிச்சி உங்கள்ட்ட நிச்சயம் எவனாவது கேப்பான். சாருவை நேர்ல பாத்திருக்கியா ? பேசிருக்கியா ?  அவர் என்னல்லாம் பேசுவார் ?’ என்று கேட்டால், ’இலக்கியம் தவிர மற்ற அனைத்தும் பேசுவார்’ என்று சொல்லச்  சொன்னார்.”