எக்ஸைல் (புதிது)

எக்ஸைல் முடித்து விட்டேன்.  மொத்தம் 850 பக்கங்கள்.  ஒரு லட்சத்து அறுபதாயிரம் வார்த்தைகள்.  இன்னும் கடைசி அத்தியாயம் எழுத வேண்டும்.  அதை ஒரு பத்து பக்கங்களில் முடிப்பேன் என்று நினைக்கிறேன்.  எங்கேனும் ஒரு நதிக்கரையில்தான் அதை எழுத வேண்டும்.  இரண்டு நண்பர்களிடம் படிக்கக் கொடுக்க இருக்கிறேன்.  ஒருவர் எனக்குப் பிடித்த இலக்கியவாதி.  இன்னொருவர் இலக்கியவாதி என்று அடையாளத்தை வெறுக்கும் இலக்கியவாதி.  ராஸ லீலாவை விட நன்றாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.  நண்பர்கள் இருவரும் தாங்கள் என்ன நினைத்தாலும் அதை வெளிப்படையாக என்னிடம் சொல்லக் கூடியவர்கள்.  கொஞ்சமும் இரக்கம் காண்பிக்க மாட்டார்கள்.  நான் எழுத எழுதவே மொழிபெயர்ப்பும் நடந்து கொண்டிருந்தது.  2014 ஆரம்பத்தில் ஏதேனும் ஒரு அமெரிக்கப் பதிப்பகத்தின் மூலம் வெளிவரும்.  ஆங்கில மொழிபெயர்ப்பு இந்திய வாசகர்களுக்கானது அல்ல.  ஏனென்றால், தருண் தேஜ்பாலில் நாவல் 4 லட்சம் பிரதிகள் விற்றும் அவரை ஒரு நாவலாசிரியராகவே இந்தியாவில் தெரியவில்லை.  தெஹல்கா ஆசிரியர் என்று மட்டுமே அவர் இந்தியாவில் அறியப் படுகிறார்.

இந்த 850 பக்க எக்ஸைல் தமிழில் வரும்.  ஆனால் ஆங்கிலத்தில் வந்த பிறகுதான் தமிழில் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.  பார்க்கலாம்.  இப்போது பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.  மிகப் பெரிய மௌனம் என்னைச் சூழ்கிறது.  கொஞ்சம் குடிக்கலாம் என்று தோன்றுகிறது.  ஆனால் இந்த வாரம் ஏற்கனவே குடித்து விட்டதால் இன்று வேண்டாம் என்று அதை ரத்து செய்து விட்டேன்.  குடிப்பதிலும் ஒழுங்கு வேண்டும் என்பதை என் நண்பர்களுக்கு இதன் மூலம் நான் வலியுறுத்துகிறேன்.  850 பக்கங்களை டைப் செய்து விட்டுக் கூட என் ஆசையைத் தள்ளிப் போடுகிறேன் என்பதை கவனியுங்கள்.

பிழை திருத்தத்தை முடித்தவுடன் என் நண்பர் Allen Sealy எழுதிய The Trotter-Nama  என்ற தலையணை சைஸ் நாவலைப் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

Comments are closed.